திங்கள், அக்டோபர் 29, 2012

இணையத்திலும் யுத்தம்.




இன்றைய நவீன யுகத்தில் இணையத்தில் சமூக வளை தளம் வழியாக தனிநபர்கள் மீதான தாக்குதல்கள் அதிகமாக நடந்து வருகின்றன. ஓவ்வொரு காலக்கட்டத்திலும் அந்தந்த காலச்சூழ்நிலைக்கு ஏற்ப இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தபடிதான் உள்ளன. வழிகள் தான் வௌ;வேறு. பண்டைய காலங்களில் மன்னர்கள் மற்றொரு நாட்டின் மீது படையெடுக்க செல்லும் முன் அந்த நாட்டு மக்களிடம் ஒவ்வொரு மன்னனும் தன் ஆட்சியில் நாட்டில் பாலும் தேனும் ஒடுகிறது, மக்கள் சுபிக்ஷமாக வாழ்கிறார்கள் என ஒற்றர்கள் மூலம் தகவல் பரப்புவார்கள். 

ஹிட்லர் நேச நாடுகள் மீது படையெடுக்கும் முன் ஜெர்மனி பற்றி ஆஹா ஓஹோ என தகவல் பரப்பினார். ஹிட்லர்க்கு எதிர்ப்பாக நேச நாடுகளும் பிரச்சாரம் செய்தன. சீனா திபெத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்க்கு முன் திபெத் அரசியல், மத அமைப்பு பற்றி எதிர்மறை விமர்சனத்தை சீன அரசு செய்தது. கடந்த 50 ஆண்டுகளாக பிடல்காஸ்ட்ரோ பற்றி எதிர்மறை செய்திகளை பரப்பிக்கொண்டு தான் இருக்கிறது அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இப்படி காலம் காலமாக வந்த பழக்கம் தான் டெக்னாலஜி யுகத்தில் இணைய தளம் வழியாக அதிகமாக பரப்பப்படுகிறது. ஆனால் அது தனி மனித தாக்குதல், குரோதம், விரோதம் போன்றவற்றை தீர்த்துக்கொள்ளும் இடமாக மாறியுள்ளது. 

ஈழ மக்கள் மீது இலங்கை இராணுவம் நடத்திய கொடூர யுத்தத்தை பேசுவதற்க்கு பதில், ஈழ மக்களின் துயரங்களை உலக அளவில் கொண்டு செல்வதற்க்கு பதில் இவர் துரோகி, அவர் துரோகி என எழுதியது தான் அதிகம். தமிழகத்தில் சமூக வளைத்தளத்தில் இங்குதான் தொடங்கின தனிநபர் மீதான தாக்குதல். அதிலும் வெட்ககேடு, ரொம்ப மட்டமான கருத்துகள் தான் அந்த பதிவுகளில் இடம்பெற தொடங்கின. சமூக வளைதளங்களில் யாராவது ஒருவரை தாக்கி பதிவிட்டால் அதற்கு அவரை சார்ந்தவர்களோ அல்லது அவரோ பதில் பதிவு செய்தால் இன, மொழி, பாலியல் துரோகிகளாக்கப்பட்டார்கள். 

தனி நபர் மீதான தாக்குதல்கள் தொடக்கமும் இப்படித்தான். திக, திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் மாற்று கட்சி தலைவர்களை வார்த்தைகளில் கண்ணியம்மில்லாமல் தாக்க தொடங்கினர். அதிலும் திமுக தலைவர் கலைஞர், அவரது குடும்பம் உச்சகட்ட விமர்சனத்துக்கு ஆளானது. அதற்கு அடுத்த இடம் ஜெ. 

கலைஞர் டுவிட்டர், பேஸ்புக் உறுப்பினரானபோது அவரது முகப்பு பக்கம் சென்று மோசமாக கமெண்ட் இட்டார்கள். இதனை தொடங்கி வைத்தவர்கள் யார் என்றால் நான் கவனித்த வரை சீமான் தம்பிகள், தமிழர் பற்றாளர் என்பவர்கள் தான். கலைஞர், காங்கிரஸ் எதிர்ப்பு கருத்துக்களை ஆதார பூர்வமாக பதிவிடாமல் அநாகரிக வார்த்தைகளில் பதிவிட தொடங்கினார்கள். திமுக உடன்பிறப்புகளும் வசவு மொழியில் பதிலடி தர அநாகரீகத்தின் உச்சத்தை இரண்டு தரப்புமே தொட்டார்கள். கருத்தை கருத்தியல் ரீதியாக எதிர்க்கொள்ளாமல் ஒருவரை மற்றொருவர் தாக்க தொடங்கி சமூக வளைதளம் பக்கம் வரவே வெறுப்பாக்கும் அளவுக்கு போனது. 

உடன்பிறப்புகள் இணையத்தில் இப்படி பேசுவது தவறு என இணையத்தில் இயங்கும் திமுக, திகவின் அறிவு ஜீவிகள் உடன்பிறப்புகளுக்கு அறிவுரையை திரும்ப திரும்ப சொன்னப்பின் அவர்கள் குறைத்துக்கொண்டார்கள். ஆனால் அதே அறிவுரையை சீமான் தம்பிகளுக்கு சொல்லித்தரத்தான் யாரும்மில்லை. 

அரசியலில் மட்டுமல்ல சினிமாத்துறையினரையும் தாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. நடிகர் விஜய் பற்றி அஜித் ரசிகர்களும், அஜித் பற்றி விஜய் ரசிர்களும் கில்மாவாக விமர்சனம் செய்கிறார்கள். இது சிம்பு – ஜீவா, நயன்தாரா, அசின், த்ரிஷா என சினிமா உலகில் யாரையும் விட்டு வைக்கவில்லை. இலக்கிய உலகிலும் அப்படியே. மானுஷ்யபுத்திரன், சாருநிவேதா, ஜெயமோகன், ஷோபாசக்தி, குட்டிரேவதி என பலரும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்கள். விமர்சனம் செய்கிறார்கள். 

இப்படி அநாகரிக் யுத்தம் ஒரு புறம் நடந்தாலும் மற்றொரு புறம் நல் கருத்துக்களுக்காக பல குழுக்கள் இயங்கி வருகின்றன. அதில் உள்ளவர்கள்  கருத்தை கருத்தாக எதிர்கொள்கிறார்கள். இதேபோல் மற்றவர்கள் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். 

இணையம் கட்டற்ற சுதந்திரத்தை தருகிறது. ஆனால் அதனை பெரும்பாலானோர் தவறாகவே பயன்படுத்துகின்றனர். இணையத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் நல் விதமாக பயன்டுத்த வேண்டும் என எண்ணினால் மட்டுமே இந்த யுத்தத்தை நிறுத்த முடியும். 

இந்த இணைய யுத்தத்தை நிறுத்த நீண்ட காலம் பிடிக்கும்.

ஞாயிறு, அக்டோபர் 28, 2012

பாடகி சின்மாயும் இணையமும்.




சில தினங்களுக்கு முன்பு வரை சின்மாயியை தெரியுமா என கேட்டுயிருந்தால் அவுங்க எந்த நாட்டுக்காரங்க என கேட்டுயிருப்பேன். இப்போது சின்மாயி பெண் சுதந்திரத்தை காக்க வந்த ‘போராளி’யாக அடையாளப்படுத்துகிறார். 

சில தினங்களுக்கு முன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் சென்று என்னை இணையத்தில், சமூக வளைத்தளத்தில் பாலியல், சாதி ரீதியாக மோசமாக சித்தரிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என புகார் வாசித்தார். அவரது புகாரை வாங்கிய காவல்துறை அவர் குற்றம் சாட்டிய சிலரை கைது செய்து சிறைக்கு அனுப்பிவிட்டது. குற்றவாளியாக்கப்பட்டவர் நான் தவறு செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும். காரணம் நம் சட்டம் அப்படி. 

என்ன பிரச்சனை என இணையத்தில் சமூக வளைத்தளங்களில் தீவிரமாக தேடியபோது இரண்டு தரப்பும்மே அவரவர் கருத்தை மட்டும்மே பதிவு செய்திருந்தார்கள். அவரவர் எழுத்து அவரவர்க்கு நியாயமே. 


கைது செய்யப்பட்டவர்கள் தரப்போ, தமிழக மீனவர்களுக்காக இணையத்தில் குழு ஆரம்பித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தோம். அதில் தொடங்கியது எங்கள் மோதல் அநாகரிகமாக எதுவும் கருத்து கூறவில்லை. மற்றவர்கள் கூறுவதை என் கருத்தாக எடுத்துக்கொள்வது மிக தவறு என்றுள்ளார்கள். 

அய்யங்கார் வம்சத்தில் பிறந்ததாக குறிப்பிடும் சின்மாயி. இடஒதுக்கீடு, இராணுவத்தால் மீனவன் சுட்டுக்கொலை, சாதி வெறி போன்றவற்றை முன்வைத்து சமூக வளைதளங்கில் எனது கருத்துக்களை பதிவிடுகிறேன் அதில் மற்றவர்கள் கருத்தோடு மாறுப்பட்டுயிருப்பதால் என்னை மோசமாக விமர்சிக்கிறார்கள் என்றுள்ளார். 

சின்மாயி இடஒதுக்கீட்டை எதிர்த்து பதிவிடுகிறார். அப்போது இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் மீனவர்களுக்காக சிலர் குழு ஆரம்பித்து இணைய தள பிரச்சாரம் செய்கிறார்கள். அப்போது சின்மாயிடம் கருத்து கேட்டுள்ளார்கள். அவர் நாங்கள் (பிராமின்) மீன் சாப்பிடமாட்டோம். மீனை கொல்பவனை இராணுவம் கொல்கிறது அதில் என்ன தவறு. மீனவனுக்காக பரிதாபப்படுபவர்கள் மீனுக்காக பரிதாப்படவேண்டும். மீனும் உயிர்தானே. நான் மீனுக்காக பரிதாப்படுகிறேன் என பதிவிட பிரச்சனை சூடாகிறது. 

இதற்கு குழுவில் உள்ளவர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள். இதில் கருத்து மோதல் வருகிறது. சின்மாயி கருத்தோடு அனைவரும் ஒத்துபோக வேண்டும் என்பதில்லை. ஆனால் தன் கருத்தோடு மற்றவர்கள் ஒத்து போக வேண்டும்மென எதிர்பார்க்கிறார். அது நடக்கவில்லை. விமர்சனங்கள் இரண்டு தரப்பிலும்மே எல்லை மீற தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில் சின்மாயி அவர் எழுதிய விமர்சனங்களை அழித்து விட்டு அவருக்கு எதிராக வந்த கருத்துக்களை காப்பி செய்து அதை தனியாக சேமித்து வைத்து என்னை பாலியல் ரீதியாக வார்த்தைகளில் துன்புறுத்துகிறார்கள் என சிலர் மீது புகார் தந்து கண்ணீர் விட அதனை கண்டு ஆணாதிக்கம் இணையத்திலும்மா, இங்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா, சுதந்திரம்மில்லையா என கேட்க வைத்துவிட்டது. 

சின்மாயி பிறந்த சாதி, அவருக்குள்ள சினிமா பிரபலம், அவரது அழகு, அவர் சார்ந்துள்ள சமூக அதிகாரம், அவற்றையெல்லாம் விட அவர் பெண் என்பதால் அவர் நினைத்ததை செய்ய வைத்துள்ளது. 

இதில் காவல்துறை எடுத்தோம், கவிழ்த்தோம் என செய்தது முட்டாள்தனம். இன்றளவும் தமிழக காவல்துறைக்கு சைபர் கிரைம்மில் போதிய அனுபவமில்லாமையால் தடுமாறுகிறது. அப்படியிருக்க சின்மாயி தந்த ஆதாரத்தை கொண்டு எப்படி நடவடிக்கை எடுத்தார்கள் என புரியவில்லை. சின்மாயி தந்த புகார் உண்மையா இதில் முதலில் யார் தவறு செய்தது என விசாரணை செய்துயிருக்கலாம். அப்படி செய்ததாக தெரியவில்லை. 

இணையத்தில் இன்றைய டெக்னாலஜி யுகத்தில் கருத்துக்கள், புகைப்படம், ஆடியோ, வீடியோ போன்றவற்றை இருப்பதை இல்லாததை போலவும், இல்லாததை இருப்பதை போலவும் உருவாக்குவது மிக மிக சுலபம். அப்படியிருக்க தீர ஆராயாமல் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். ஓன்று மட்டும் நிச்சயம் சின்மாயி தவறாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இப்படியும் நடவடிக்கை எடுக்கலாம் என்பதை இணையத்தில் புழங்கும் பெண்களுக்கு கற்று தந்துள்ளார். இதனை அவர்கள் தவறாக பயன்படுத்தாமல் உண்மையாகவே பாதிக்கப்பட்டால் இச்சட்டப்படி அனுகலாம். 

சமூகவளைத்தளத்தில் இயங்கும் பெண்கள் (ஆண்களும்) நீங்கள் பதிவிடும் ஒரு கருத்துக்கு நியாயமான முறையில் எதிர்வினை வந்தால் அவர்களுடன் விவாதியுங்கள். நியாயமற்றதாக இருந்தால் விவாதிக்காதீர்கள். 

தனிப்பட்ட விரோத தாக்குதல் நடத்தினால் சொல்லி புரியவைங்கள். திருந்தவில்லை தாக்குதல் உச்சத்துக்கு சென்றால் அந்த கருத்துக்களை சேமித்து வைத்து பின் நடவடிக்கைக்கு முயலுங்கள். (சின்மாயி போன்று நடந்துக்கொள்ளாதிர்கள். ஏன் எனில் சின்மாயி – எதிர்வினை ஆற்றியவர்கள் இரண்டு தரப்பும்மே சமாதான உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.)

ஒருவர் உங்களை அநாவசியமாக அருவருக்கதக்க கருத்துக்களை பதிவிட்டு உங்களை தொந்தரவு செய்தால் அவரை ப்ளாக் செய்துவிடுங்கள். பிரச்சனை முடிந்தது. 

இணையம் வழியாக நாம் பதிவிடும் கருத்துக்களை இந்த உலகம்மே கண்டுக்கொண்டுயிருக்கிறது. நீங்கள் இடும் பதிவுகள், கருத்துக்கள், எதிர்வினைகள் தான் நீங்கள் யார், எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம்மிட்டு காட்டும் அதனால் அதனையும் கவனத்தில் வையுங்கள். 

அறிஞர் அண்ணா குறிப்பிடுவதை போல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு செயல்படுங்கள். இணையத்தை நல்லதுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். 

சனி, அக்டோபர் 20, 2012

இல்லாமை……….. இயலாமை என்ற கப்ஸா.




தினமணியில் ஒர் தலையங்கம் வந்துள்ளது. அதாவது தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டால் அங்காங்கு போராட்டம், மின் நிலையம் முற்றுகை என பொதுமக்கள், அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன. மின்சார தட்டுப்பாடு அரசின் இயலாமையால் வந்ததல்ல. இல்லாமையால் வறுவது என ‘அவாள்’ ஆட்சிக்கு ஆதரவாக ஒர் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. 

கட்டுரையாளரின் தனிப்பட்ட விருப்பம் என்பது வேறு, ஒரு பத்திரிக்கை ஆசிரியரின் விருப்பம் என்பது வேறு. பத்திரிக்கை ஆசிரியரின் நிலைப்பாடு என்பது மக்களுக்கானதாக, நேர்மையின் பக்கமாக, அலசி ஆராயும் தன்மையோடு இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இருக்ககூடாது. ஆனால் இல்லாமை இயலாமை கட்டுரை முழுக்க முழுக்க பூசி மெழுகும் தன்மையில் எழுதப்பட்டது. 

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து தற்போது அதிகபட்சம் 18 மணி நேர மின்சார துண்டிப்பு உள்ளது. மீதியுள்ள 6 மணி நேர மின்சாரத்தையும் என்பது ஒழுங்காக தருவதில்லை. 1 மணி நேரம், அரை மணி நேரம் என தருகிறார்கள். இது இல்லாமையால் வந்ததில்லை. இயலாமையால் வந்தது. நிர்வாகம் நடத்த தெரியாததால், பண ஆசையால் வந்தது. கடந்த திமுக ஆட்சியின் போது மின்பற்றாக்குறை ஏற்பட தொடங்கியதும் மத்தியதொகுப்பில் இருந்து கேட்டு வாங்கினார்கள். அதோடு, தனியாரிடம் வாங்கினார்கள். புதிய திட்டங்களை தீட்டினார்கள். 

ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் மத்தியதொகுப்பில் இருந்து மின்சாரம் கேட்டுயிருக்க வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட திட்டங்களை விரைந்து முடிக்க செய்திருக்கவேண்டும், தனியாரிடம் வாங்கியிருக்க வேண்டும் இதை எதையும் ஜெ செய்யவில்லை என்பதை ஏனோ தினமணி சுட்டிக்காட்ட மறுக்கிறது. 

அதோடு, மத்தியரசு தர மறுக்கிறது என்கிற போக்கிலும், கடந்த திமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்பதை போல குற்றம் சாட்டுகிறது. மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கேட்டால் நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பக்கத்து மாநிலங்களுக்கு தரப்படுகிறது. அதை குறைத்து தான் நமக்கு ஒரளவு தருவார்கள். அடுத்ததாக கடந்த காலங்களில் போடப்பட்ட திட்டங்கள் என்னவானது என தினமணி கேட்கவில்லை. கேட்டால் அம்மையார் கோவித்துக்கொள்வார் என்ற பயம்மா? அல்லது இன பாசமா? என தெரியவில்லை. 

கடந்த கால திட்டங்களை நடைமுறைப்படுத்த அம்மையார் தயாரில்லை. அதோடு, தனியாரிடம் வாங்கி எவ்வளவு நாளைக்கு குறைந்த விலைக்கு மின்சாரம் தரமுடியும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது தினமணி. கடந்த 15 ஆண்டுகளாக 30 சதவித மின்சாரம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கி தான் தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்குகிறது. அப்படியிருக்க தினமணி சப்பைகட்டு கட்ட தேவையில்லை. 

அரசு நிறுவனங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மின் உற்பத்தியில்லை என்றதும் தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு அதிக விலை கேட்கிறார்கள். அதை தருகிறது அரசு. அதை குறைக்க வழி செய்வதில்லை காரணம், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு செல்லும் கமிஷன். அதோடு, அணல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி இறக்குமதியில் நடக்கும் ஊழல் போன்றவற்றால் தான் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது எதனையும் சுட்டிக்காட்ட மறுக்கிறார்கள். ஆக மின்தட்டுப்பாடு இல்லாமையால் வந்ததல்ல. இயாலாமையால் தான் மக்கள் இந்த துன்பத்துக்கு ஆளாகியுள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டுங்கள்.