திங்கள், அக்டோபர் 29, 2012

இணையத்திலும் யுத்தம்.
இன்றைய நவீன யுகத்தில் இணையத்தில் சமூக வளை தளம் வழியாக தனிநபர்கள் மீதான தாக்குதல்கள் அதிகமாக நடந்து வருகின்றன. ஓவ்வொரு காலக்கட்டத்திலும் அந்தந்த காலச்சூழ்நிலைக்கு ஏற்ப இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தபடிதான் உள்ளன. வழிகள் தான் வௌ;வேறு. பண்டைய காலங்களில் மன்னர்கள் மற்றொரு நாட்டின் மீது படையெடுக்க செல்லும் முன் அந்த நாட்டு மக்களிடம் ஒவ்வொரு மன்னனும் தன் ஆட்சியில் நாட்டில் பாலும் தேனும் ஒடுகிறது, மக்கள் சுபிக்ஷமாக வாழ்கிறார்கள் என ஒற்றர்கள் மூலம் தகவல் பரப்புவார்கள். 

ஹிட்லர் நேச நாடுகள் மீது படையெடுக்கும் முன் ஜெர்மனி பற்றி ஆஹா ஓஹோ என தகவல் பரப்பினார். ஹிட்லர்க்கு எதிர்ப்பாக நேச நாடுகளும் பிரச்சாரம் செய்தன. சீனா திபெத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்க்கு முன் திபெத் அரசியல், மத அமைப்பு பற்றி எதிர்மறை விமர்சனத்தை சீன அரசு செய்தது. கடந்த 50 ஆண்டுகளாக பிடல்காஸ்ட்ரோ பற்றி எதிர்மறை செய்திகளை பரப்பிக்கொண்டு தான் இருக்கிறது அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இப்படி காலம் காலமாக வந்த பழக்கம் தான் டெக்னாலஜி யுகத்தில் இணைய தளம் வழியாக அதிகமாக பரப்பப்படுகிறது. ஆனால் அது தனி மனித தாக்குதல், குரோதம், விரோதம் போன்றவற்றை தீர்த்துக்கொள்ளும் இடமாக மாறியுள்ளது. 

ஈழ மக்கள் மீது இலங்கை இராணுவம் நடத்திய கொடூர யுத்தத்தை பேசுவதற்க்கு பதில், ஈழ மக்களின் துயரங்களை உலக அளவில் கொண்டு செல்வதற்க்கு பதில் இவர் துரோகி, அவர் துரோகி என எழுதியது தான் அதிகம். தமிழகத்தில் சமூக வளைத்தளத்தில் இங்குதான் தொடங்கின தனிநபர் மீதான தாக்குதல். அதிலும் வெட்ககேடு, ரொம்ப மட்டமான கருத்துகள் தான் அந்த பதிவுகளில் இடம்பெற தொடங்கின. சமூக வளைதளங்களில் யாராவது ஒருவரை தாக்கி பதிவிட்டால் அதற்கு அவரை சார்ந்தவர்களோ அல்லது அவரோ பதில் பதிவு செய்தால் இன, மொழி, பாலியல் துரோகிகளாக்கப்பட்டார்கள். 

தனி நபர் மீதான தாக்குதல்கள் தொடக்கமும் இப்படித்தான். திக, திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் மாற்று கட்சி தலைவர்களை வார்த்தைகளில் கண்ணியம்மில்லாமல் தாக்க தொடங்கினர். அதிலும் திமுக தலைவர் கலைஞர், அவரது குடும்பம் உச்சகட்ட விமர்சனத்துக்கு ஆளானது. அதற்கு அடுத்த இடம் ஜெ. 

கலைஞர் டுவிட்டர், பேஸ்புக் உறுப்பினரானபோது அவரது முகப்பு பக்கம் சென்று மோசமாக கமெண்ட் இட்டார்கள். இதனை தொடங்கி வைத்தவர்கள் யார் என்றால் நான் கவனித்த வரை சீமான் தம்பிகள், தமிழர் பற்றாளர் என்பவர்கள் தான். கலைஞர், காங்கிரஸ் எதிர்ப்பு கருத்துக்களை ஆதார பூர்வமாக பதிவிடாமல் அநாகரிக வார்த்தைகளில் பதிவிட தொடங்கினார்கள். திமுக உடன்பிறப்புகளும் வசவு மொழியில் பதிலடி தர அநாகரீகத்தின் உச்சத்தை இரண்டு தரப்புமே தொட்டார்கள். கருத்தை கருத்தியல் ரீதியாக எதிர்க்கொள்ளாமல் ஒருவரை மற்றொருவர் தாக்க தொடங்கி சமூக வளைதளம் பக்கம் வரவே வெறுப்பாக்கும் அளவுக்கு போனது. 

உடன்பிறப்புகள் இணையத்தில் இப்படி பேசுவது தவறு என இணையத்தில் இயங்கும் திமுக, திகவின் அறிவு ஜீவிகள் உடன்பிறப்புகளுக்கு அறிவுரையை திரும்ப திரும்ப சொன்னப்பின் அவர்கள் குறைத்துக்கொண்டார்கள். ஆனால் அதே அறிவுரையை சீமான் தம்பிகளுக்கு சொல்லித்தரத்தான் யாரும்மில்லை. 

அரசியலில் மட்டுமல்ல சினிமாத்துறையினரையும் தாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. நடிகர் விஜய் பற்றி அஜித் ரசிகர்களும், அஜித் பற்றி விஜய் ரசிர்களும் கில்மாவாக விமர்சனம் செய்கிறார்கள். இது சிம்பு – ஜீவா, நயன்தாரா, அசின், த்ரிஷா என சினிமா உலகில் யாரையும் விட்டு வைக்கவில்லை. இலக்கிய உலகிலும் அப்படியே. மானுஷ்யபுத்திரன், சாருநிவேதா, ஜெயமோகன், ஷோபாசக்தி, குட்டிரேவதி என பலரும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்கள். விமர்சனம் செய்கிறார்கள். 

இப்படி அநாகரிக் யுத்தம் ஒரு புறம் நடந்தாலும் மற்றொரு புறம் நல் கருத்துக்களுக்காக பல குழுக்கள் இயங்கி வருகின்றன. அதில் உள்ளவர்கள்  கருத்தை கருத்தாக எதிர்கொள்கிறார்கள். இதேபோல் மற்றவர்கள் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். 

இணையம் கட்டற்ற சுதந்திரத்தை தருகிறது. ஆனால் அதனை பெரும்பாலானோர் தவறாகவே பயன்படுத்துகின்றனர். இணையத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் நல் விதமாக பயன்டுத்த வேண்டும் என எண்ணினால் மட்டுமே இந்த யுத்தத்தை நிறுத்த முடியும். 

இந்த இணைய யுத்தத்தை நிறுத்த நீண்ட காலம் பிடிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக