இந்திய ஒன்றியத்தின் தலைநகரான டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து வீசப்பட்ட மாணவிக்கு ஆதரவாக உடனடியாக குற்றவாளிகளுக்கு தண்டனை தர வேண்டும் என மாணவ சமுதாயம் திரண்டுள்ளது. பாராட்ட வேண்டியது. மாணவியின் கொடூர மரணம் கண்டிக்க தக்கது.
நீதி கேட்டு நடு இரவில் பிரதமர் இல்லம் முற்றுகை, பாராளமன்றம் முற்றுகை, ரயில் மறியல், காவலர்களுடன் மோதல் என தினம் தினம் நடு இரவிலும் பிரச்சனை செய்கிறார்கள். உடடியாக பாலியல் குற்றங்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க சட்ட திருத்தம் செய்யுங்கள் என்கிறார்கள்.
இப்படி கேட்பது முட்டாள் தனமாக இல்லையா ?.
இதுயென்ன மீடியாவ நீங்கள் சொல்வதை அப்படியே கேட்டுக்கொண்டு ஒளிபரப்ப. பாலியல் குற்றத்துக்கு தூக்குதண்டனை, மரண தண்டனை தாருங்கள் என கோஷமிட்டால் உடனே தந்துவிட முடியாது. சட்டமியற்ற வேண்டும். சட்டம் இயற்றி அதை நடைமுறைக்கு கொண்டு வர பல படிகள் உண்டு. சட்டம்மியற்ற கமிட்டியுண்டு. அந்த கமிட்டி சட்டவிதிகளை உருவாக்க வேண்டும், அதன்பின் அதில் உள்ள நிறை குறைகள் பற்றி விவாதம் செய்ய வேண்டும். மாநிலங்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். பாராளமன்றத்தன் இரு அவைகளில் அவை விவாதம் செய்ய வேண்டும் அதன்பின் அது சட்டமாக்கப்பட வேண்டும், அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும். இப்படி எத்தனையோ நடை முறைகள் உண்டு.
ஆனால், இன்றே செய், இப்போதே செய் என்பது அவசரத்தின் கோலம். இளைய சமுதாயத்தினருக்கு உணர்ச்சி வேகத்தில் செயல்படுவார்கள். அதனை ஒருமை படுத்த வேண்டியது வயது முதிர்ந்தவர்களின் கடமை. ஆனால் இந்திய தேசத்தில் அதில் லாபம் பார்க்கவே துடிக்கிறார்கள் அரசியல் கட்சியினர்.
உணர்ச்சி கொந்தளிப்பில் நடக்கும் இந்த போராட்த்தில் மட்டுமல்ல கடந்த ஆண்டு ஊழலுக்கு எதிராக டெல்லியில் பெரும் போராட்டம் அன்னஹசாரே, பாபாராம்தேவ் தலைமையில் நடத்தினார்கள். அப்போது நாட்டின் தலைநகரை ஸ்தம்பிக்க வைத்தார்கள். சில வாரம் டெல்லியை பரபரப்பாக வைத்திருந்தார்கள். ஊழலை ஒழிக்க உடனே சட்டம் கொண்டு வரவேண்டும், கறுப்பு பணத்தை மீட்டு வர இப்போதே சட்டமியற்ற வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்து போராடினார்கள்.
இப்போதே நடக்க வேண்டும் என எண்ணி போராடுவது முட்டாள்தனமானது. போராட்டத்தை தூண்டி விடுபவர்களுக்கு வேண்டுமானால் இப்படி செய்வது நன்றாக இருக்கும். உணர்ச்சி வேகத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படுவது இளைய சமுதாயத்துக்கு நல்லதல்ல.
தீர்ப்பை எழுதிவிட்டு அதை நடைமுறைப்படுத்துங்கள் என அரசாங்கத்தை இளைய சமுதாயம் நெருக்குவது அழகல்ல. ஒரு பிரச்சனைக்கு குறிப்பிட்ட கால அளவு தர வேண்டும். அதனை அரசாங்கம் செய்யாவிட்டால் போராட்டம்மென்ன அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் உணர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டு அறிவு பூர்வமாக சிந்தியுங்கள் இளையோர்களே.
வேகம் விவேகமல்ல என்பது சாலை பயணத்துக்கு மட்டுமல்ல........... வாழ்க்கை பயணத்துக்கும் என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்.