தொலைக்காட்சிகள், எப்.எம்கள் நடத்த கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என மத்தியரசுக்கு
டிராய் ஒரு பரிந்துரை செய்துள்ளது. டிராய் அமைப்பு அதை சொல்கிறது என்றால் பிரஸ் கவுன்சில்
ஆப் இந்தியா செய்திதாள்களுக்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்கின்றன.
ஊடக நிறுவனங்கள் உரிமம் தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பது
குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை டிராய் தலைவர் ராகுல்
குல்லார் 19ந்தேதி வெளியிட்டபின் செய்தியாளர்களிடம், தொலைக்காட்சி, பத்திரிகை நிறுவனங்களை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள், மதச்சார்பு அமைப்புகள், மத்திய மற்றும் மாநில
அரசுகளின் அமைச்சகங்கள், அரசு நிதிபெறும் நிறுவனங்கள்
ஆகியவற்றுக்கு அனுமதி தரக் கூடாது. இந்த அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள்,
துணை நிறுவனங்களுக்கும் ஊடக நிறுவனங்கள் நடத்துவதற்கு தடை
விதிக்க வேண்டும். மேற்கண்ட அமைப்புகள் ஊடக நிறுவனங்களை ஏற்கனவே நடத்திவந்தால்
அதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
தனிநபர்களால் நடத்தப்படும் ஊடக நிறுவனத்தில்
உரிமையாளரின் முதலீட்டு பங்குரிமை 32 சதவீதமாக மட்டுமே
இருக்க வேண்டும். பத்திரிகை, தொலைக்காட்சி
ஆகிய இரண்டையும் ஒரு சேர நடத்திவந்தாலும் இதே அளவு பங்கு உரிமைதான் அளிக்க வேண்டும்.
பத்திரிகை, தொலைக்காட்சி
நிறுவனங்களுக்கென தனியாக ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
இதற்கென தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும். இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச
நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்.
கையூட்டுச் செய்திகளை வெளியிட்டதாக
உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட செய்தியை அளித்த
நபர் மற்றும் ஊடக நிறுவனத்தை தண்டிக்கவும், அபராதம்
விதிக்கவும் கூடிய அதிகாரத்தை இந்த ஆணையத்துக்கு வழங்க வேண்டும். இதன்
உறுப்பினர்களாக ஊடகத் துறைக்குச் சம்பந்தமில்லாதவர்களை நியமிக்க வேண்டும்.
பெரு வணிக நிறுவனங்களால் நடத்தப்படும் ஊடக
நிறுவனங்களின் சில செயல்பாடுகள் தரம் தாழ்ந்துவிட்டன. அந்த நிறுவனங்களின்
ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வியாபார நோக்கில் உள்ளன என்றார் ராகுல் குல்லார்.
அவர் சொல்வதை புறக்கணிக்க முடியாதவை என்பதே உண்மை.
இந்தியாவில் பத்திரிக்கை சுத்திரம் படும்பாட்டை லண்டனில் இருந்து
வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் இதழ் சுத்திர தினத்துக்கு முன்நாள் 2014 ஆகஸ்ட் 14ந்தேதி
ஒரு தலையங்கம் எழுதியுள்ளது. அதில், இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த சமயத்தில் 1975ம் ஆண்டு ஜூன் 25 அன்று நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர்
உடனடியாக பத்திரிகைகள் மீது தணிக்கையை கொண்டு வந்தார். ஒருசில செய்தித்தாள்கள் தவிர பெரும்பாலான செய்தித்தாள்கள்
அரசாங்கத்தின் விதிகளை ஏற்று சரணடைந்தன. பாஜக தலைவர்களில் ஒருவரான அத்வானி கைது
செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அதுப்பற்றி பின்நாளில் அவர் கூறும்போது, நீங்கள் கொஞ்சம் வளைந்து கொடுங்கள் என்றுதான் உங்களை அரசு கேட்டது. ஆனால் நீங்களோ மண்டியிடுவதே உசிதம் என்று தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்றார். மேலும், சமீபத்தில் ஊடக உரிமையாளர்கள், செய்தியாளர்கள் எப்படி செய்திகளைத் தர வேண்டும், தலையங்கம் எப்படி இருக்க வேண்டும் என்று நேரடியாகவே நிர்ப்பந்தம் செய்யத்
தொடங்கிவிட்டார்கள். மிகவும் பிரபலமான பல செய்தியாளர்கள் தங்கள் வேலைகளிலிருந்து
வெளியேற்றப்பட்டு விட்டார்கள் அல்லது தங்கள் மீதான நிர்ப்பந்தத்திற்கு
எதிர்ப்பு தெரிவித்து தாங்களாகவே ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
உண்மையில் இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி எவ்விதமான ஊடக சுதந்திரமும் இந்தியாவில் கிடையாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பேச்சுச் சுதந்திரம் மற்றும்
அதனை வெளிப்படுத்தும் சுதந்திரம் தொடர்பாக 19(1)ஆவது பிரிவின் கீழ் கொடுத்திருக்கும் அதிகாரத்தின் ஒரு விரிவாக்கம்தான். ஆனால்
இப்போது பத்திரிகை சுதந்திரம் இந்திய தேசத்தில் கிடையாது என்கிறது.
பத்திரிக்கை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு என தனியாக ஆணையம்
ஒன்றை அமைக்க வேண்டும் என்கிறது டிராய். பிரஸ் கவுன்ஸில் ஆப் இந்தியா என்பது பத்திரிகைகள் குறித்து மட்டுமே அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது. ஊடகங்கள் தொடர்பாகவும் இதுபோன்றதொரு அமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்கிறது.
ப்ரஸ் கவுன்சில் ஆப் இந்தியா என்ற அமைப்பு உள்ளது. இதன்
தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜீ உள்ளார். தமிழகத்தில்
வெளியாகும் பிரபலமான நக்கீரன் இதழ் மீது ஆட்சியாளர்கள் தொடர் வழக்கு, அலுவலகம்
மீதான ஆளும்கட்சி குண்டர்கள் தாக்குதல் பற்றி புகார் போயும் பத்திரிக்கை
சுதந்திரத்தை காக்க இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் நிறைய
வழக்குகள் அரசாங்கத்தால் பத்திரிக்கைகள் மீது போடப்பட்டுள்ளன என ஒரு பேட்டியில் அவரிடம்
கேட்கப்பட்டதற்க்கு, அதற்கு நான் என்ன செய்ய முடியும் என அலட்சியமாக பதில்
தந்துள்ளார். ஆணையம் அமைத்தால் எப்படி செயல்படும் என்பதற்கு கட்ஜீவின் பதிலே
சான்று. டிராய், ஆணையம் அமைக்க சொல்வதை போல் இப்போது பத்திரிக்கை
நிறுவனங்கள் உள்ள சூழ்நிலையில் இதை செய்ய தொடங்கினால் அரசு நடத்தும் கொள்ளை, ஊழல்,
அதிகார அத்துமீறல் போன்றவை வெளிவரவே வராது.
இப்போது ஊடகங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தின்
கீழ் செல்வதால் பல செய்திகள் மறைக்கப்படும். கார்ப்பரேட் கைகளுக்கு சிக்காத
ஊடகங்கள் உண்மைககைள எழுதும். உண்மைகள் மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டுமானால்
ஊடகங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆணையம் அமைத்தால் அரசாங்கம் ஆணையம் மூலம்
பத்திரிக்கைகளை மிரட்டும்.
கார்ப்பரேட் ஊடகங்கள் செய்திகளை மறைக்காது என சொல்பவர்களா நீங்கள், இதை படியுங்கள்.......... இந்தியாவின் மிகப்பெரிய தனியார் தொழில்துறை
ஜாம்பவானாகத் திகழும் லாப
வெறிக்கொண்ட ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய டி.வி.18 என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை மொத்தமாக
வாங்கியுள்ளது. டி.வி.18 தொலைக்காட்சி நிறுவனத்தின் கீழ் 18 அலைவரிசைகள் இருக்கின்றன. வானொலி, எப்.எம்
போன்றவையும் அதில் அடக்கம். டி.டி.எச் சிஸ்டம் வைத்துள்ளது.
இந்த நிறுவனத்தை சேர்ந்த முதலாளியின் மகன், மும்பையில் குடிபோதையில் கார் ஓட்டி
சாலையில் சென்றவர்கள் மீது மோதி ஒருவர் இறந்த செய்தி அப்படியே அமுக்கப்பட்டது.
மீடியாவுக்கு மீடியா சப்போட். வேறு எந்த பெரிய மீடியாவிலும் வெளியாகவில்லை. சமூக
வளைதளத்தில், கார்ப்பரேட் கம்பெனிகளின் கைகளில் சிக்காத ஏடுகள் தான் அதை
வெளியிட்டன.
அதேபோல் அதிகாரத்தில் இருப்பவர்களின் மனம் நோகாமல் செய்தி
வெளியிடும் முறையை பிரபல செய்தித்தாள்கள், செய்தி இணைய தளங்கள் செய்கின்றன. மும்பையிலிருந்து வெளியாகும் 'டி.என்.ஏ' நாளேடு தன்னுடைய இணையப் பக்கத்தில் ராணா அயூப் என்பவர், பிரதமர் நரேந்திர மோடியால் பா.ஜ.கவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமித் ஷா மீது கொலை உட்பட பல்வேறு கிரிமினல் குற்றங்களுக்காக இப்போதும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று எழுதியிருந்தார். அந்த கட்டுரையை நிர்வாகம் நீக்கியுள்ளது.
அதேபோல் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் பெயிட் நியூஸ் சிஸ்டத்தை
கொண்டுவந்துள்ளது. பணம் தந்தால் நீங்கள் கூறும் தகவல் செய்தியாக வெளியிடப்படும் என
செய்திகளை வெளியிட்டது. இந்த நிலையைப்பற்றி நமது ஜனாதிபதி ஒரு விழாவில்
பேசும்போது, இந்த முறை பத்திரிகை சுதந்திரத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் ஜனநாயகத்திற்கே ஆழமான அச்சுறுத்தல் என்று கூறினார். ஆனால் அதை கண்டுக்கொண்டதாக தெரியவில்லை.
நாட்டில் ஊடகங்களின் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு ஏற்படுத்திடும் முயற்சிகளால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து நமது நாடாளமன்றத்தில் கடந்த 8ந்தேதி ஒரு விவாதம் நடைபெற்றது. இந்த
விவாதத்தில் பேசிய கம்யூனிஸ்ட் எம்.பி ராஜீவ், இந்திய ஊடகங்கள்
கார்ப்பரேட்டுகளின் சொத்துக்களாக மாறியபின்னர் ஜனநாயகத்தின் நான்காவது தூண், வணிகத் தூணாக மாறிவிட்டது என
சாடியுள்ளார்.
அதனால், ஊடகங்கள் மக்களுக்காக உழைக்க
வந்துயிருக்கிறோம் என்பதை உணர்ந்து மககள் விரோத ஆட்சியை மக்களிடம் அம்பலப்படுத்தி ஆட்சி
மன்றத்தில் இருந்து இறக்க மக்களுடன் பயணிக்க வேண்டும், ஊடகங்கள் எப்போதும் மக்கள் பக்கம்
நிற்க வேண்டும்.