செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014

வரலாறுகளை தேடி பதிவு செய்வோம்...............



திருவண்ணாமலையில் நடந்த நீதிமன்ற வளாகம் திறப்பு விழாவில் பேசிய இந்த மண்ணை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசராக உள்ள கிருபானந்தம் அவர்கள், இந்த மாவட்டத்தில் பிறந்த மாமேதைகளை நாம் மறந்துவிட்டோம். நம்மவர் தானே என கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டோம். நாம் அதற்காக வெட்கப்பட வேண்டும். இதை சொல்ல எனக்கு முழு உரிமை இருக்கிறது. இந்த மண்ணில் பிறந்த மாமேதைகள் சாதனை புரிந்தவர்கள். அவர்கள்,

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இரண்டாவது இந்திய தலைமை நீதிபதியாக வந்தவர் இந்த மண்ணை சேர்ந்த பதஞ்சலி சாஸ்திரி. சென்னையில் சி.பி.ராமசாமி ரோடு இருக்கிறது. அந்த ராமசாமி திருவாரூர் சமஸ்தானத்தின் ஜவானாக இருந்தவர். அவர் சேத்பட்டை சேர்ந்தவர்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மன்னர்களால் கூட கட்டி முடிக்கப்படாமல் இருந்த ஒரு பெரிய கோபுரத்தை கட்டி முடித்த ஜீயர் செய்யார் முக்கூரில் பிறந்து, வளர்ந்தவர். புகழ்பெற்ற மருத்துவர் ரங்கபாஷ்யம் இந்த மண்ணில் பிறந்தவர். இப்படி பலர் இந்த மண்ணில் பிறந்து பெருமைப்படுத்தினர். இங்கு பிறந்ததுக்கு நாம் பெருமைப்பட வேண்டும் என்றார்.

அவர் பேசியது கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் குறிப்பிட்டவர்களில் யாரையும் நான் அறிந்திருக்கவில்லை, நண்பர்கள் வட்டாரத்தில் பேசியபோது அவர்களும் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. மூன்றாண்டுக்கு முன் நம் ஊரில் தியாகி அண்ணாமலை மேல்நிலைப்பள்ளி, தியாகி அண்ணாமலை நகர் என இருக்கிறதே யார் இந்த தியாகி அண்ணாமலை என அவரது வரலாற்றை தேடிய போது, அவர் வரலாறு எங்கும் கிடைக்கவில்லை.

இவ்வளவு பிரபலமானவர்கள் பற்றி அவர்கள் பிறந்த மண்ணில் அந்த வரலாற்றை பதிவு செய்து வைக்கவேயில்லை. அவர்களது வரலாற்றை புத்தகமாக்கி அடுத்த தலைமுறையினர் அறிந்துக்கொள்ள வைக்காமல் செய்த்து யார் தவறு என்பது புரியவில்லை. இது நிச்சயம் வெட்கப்படவேண்டிய விஷயம்.

அதனால் நான் நண்பர்களுடன் இணைந்து வரலாறுகளை தேடலாம் என முடிவு செய்துள்ளேன். வாரத்தில் ஒருநாள் விடுமுறை நாளை இதற்காக ஒதுக்கி நம் மண்ணை சார்ந்தவர்களின் வரலாறுகளை தேடி அதை தொகுத்து வைக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. அந்த தகவல்களை கொண்டு புத்தகமாக்க பொருளதார தடை உள்ளது. அதனால் இப்போதைக்கு அதை புத்தகமாக்கும் எண்ணம் சிறிதும்மில்லை. அதற்கு பதில் அதை சேகரிக்க, பாதுகாக்க, வெளிப்படுத்த இணையதளம் என்ற மாபெரும் சக்தி நம்மிடம் உள்ளது. தொகுத்து அதில் பதிவேற்றம் செய்யலாம் என்ற எண்ணம் உள்ளது. என்றாவது ஒருநாள் அதை புத்தகமாக வெளியிட முயற்சி செய்தால் இதில் ஈடுபடுபவர்களின் ஒப்புதலுடன் அவர்களுக்கு தந்து உதவலாம் என்ற எண்ணமும் உள்ளது.  

இங்கு நிறைய நண்பர்கள் உள்ளீர்கள். நிறைய படிப்பவர்கள், தகவல் தெரிந்தவர்கள், ஆவணங்கள் வைத்திருப்பவர்கள், அவர்களின் குடும்பத்தார் பற்றி தகவல்களை வைத்திருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் ஈடுபட போவது யார், யார் என்ற விவரத்தை பதிவு செய்தால். அவர்களை கொண்டு ஒரு குழு அமைத்து இதை செய்யலாம்.

நம் மண்ணின் வரலாற்றை பதிவு செய்து வைக்க ஆர்வமாக இருப்பவர்கள் ஆர்வத்துடன் வாருங்கள். வாரத்தில் ஒருநாள் சில மணி நேரங்களை ஒதுக்கி பணி செய்வோம். நம் மண்ணின் வரலாற்றை பறைசாற்றுவோம்.

நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக