வெள்ளி, பிப்ரவரி 24, 2012

காவல்துறையின் கொலைவெறி.



தங்களது இயலாமையை வெட்டவெளிச்சமாக காட்டியுள்ளது தமிழக காவல்துறை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழக தலைநகரான சென்னையில் பரோடா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் பட்டபகலில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தனர் கொள்ளையர்கள். திருப்பூரில் ஜாய் ஆலுக்காஸ் தங்க நகை விற்பனையகத்தில் இரவில் ஓட்டை போட்டு 14 கோடி மதிப்பிளான தங்கத்தை கொள்ளையடித்து போய்வுள்ளார்கள். இது மட்டுமல்ல தமிழகத்தின் ஒவ்வொரு நகரத்திலும் சிறியதும், பெரியதும்மாக கொள்ளை தமிழகத்தில் தொடர் கொள்ளையாக மாறியுள்ளன. 

இதில் எதிலும்மே கொள்ளையர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு காரணம் இரண்டு. ஒன்று, காவல்துறை எதிர்கட்சிகள் மீதும், அதிகாரத்தில் உள்ள ஆளுங்கட்சி தலைமைக்கு வேண்டாதவர்கள் மீது பொய் வழக்கு புனைந்து தலைமையிடம் சபாஷ் வாங்குவதில் முனைப்பாக உள்ளனர். இரண்டாவது காவலர்களை விட கொள்ளையர்கள் அதீத புத்திசாலிகளாக இருக்கிறார்கள். 

20ந்தேதி சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நடந்த 14 லட்சம் கொள்ளையில் 5 பேர் ஈடுபட்டதாக காவல்துறை கூறியது. 22ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் வீட்டில் இருந்த கொள்ளையர்களை என்கவுன்டர் செய்தது. அவர்களை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் எங்களை நோக்கி சுட்டதால் பதில் தாக்குதலில் அவர்கள் உயிர் இழந்துள்ளார்கள் என எப்போதும் போல் காவல்துறை திரைக்கதை, வசனம் பேசியது. ஆனாலும் இறந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் தானா என்பதில் பெருத்த சந்தேகம் உள்ளது. 

காரணம், 20ந்தேதி கொள்ளை நடந்தது. 22ந்தேதி மதியம் கொள்ளையர்கள் இவனாக இருக்கலாம் என ஒருவனின் புகைப்படம் வெளியிடப்பட்டது. 22ந்தேதி நள்ளிரவு புகைப்படம் வெளியிடப்பட்டவன், அவனோடு சேர்ந்து நான்கு பேர் என 5 பேர் சுட்டுக்கொள்ளபட்டு உள்ளார்கள். 


நமக்கு ஏற்படும் சந்தேகங்கள். 

1. வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இருந்தவன் வங்கிகளுக்கு சென்று நோட்டம் விட்டான் இதேபாருங்கள் வீடியோ ஆதாரம் என காட்டப்பட்டது. ஒருவன் பல வங்கிக்கு போனால் அவன் கொள்ளையடிக்க தான் போனான் என காவல்துறை எதை வைத்து முடிவுக்கு வந்தது?. 
2. குற்றவாளியின் புகைப்படம் வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் அவன் தங்கியிருந்த வீடு பற்றி தகவல் தங்களுக்கு வந்தது எனக்கூறும் காவல்துறை. அவன் தான் அங்கு தங்கியிருக்கிறான் என்பதை எப்படி உறுதி செய்தது?. அப்படியே உறுதி செய்திருந்தாலும் அவனுடன் இருப்பவர்கள் தான் கொள்ளையடித்தார்கள் என்று எந்த வகையில் உறுதி செய்தது. 
3. அவர்கள் தான் கொள்ளையடித்தார்கள் என வைத்துக்கொண்டாலும் அவர்களை உயிருடன் பிடிக்க வழியே இல்லையா?. மயக்க மருந்து புகை அடித்திருந்தால் மயங்கியிருப்பார்கள் அவர்களை பிடித்து அவனுடன் வந்தவர்கள் யார், யார் என்பதை விசாரித்து கண்டறிந்திருக்கலாமே?. 
4. இதையெல்லாம் எதையும் காவல்துறை செய்யவில்லை என்பதால் ஏற்படும் மிகப்பெரிய சந்தேகம். அவர்கள் உண்மையிலேயே கொள்ளையர்கள் தானா ? அல்லது அப்பாவிகளா ?. 

இவை எதற்குமே தமிழக காவல்துறையிடம்மிருந்து உருப்படியான பதில் கிடைக்கப்போவதில்லை.

தமிழக காவல்துறை தனது கையாலாகாத தனத்தை மறைக்க ஒரே நேரத்தில் 5பேரை என்கெவுண்டர் செய்துள்ளது. ஒரு குற்றவாளியை சுட்டுக்கொல்ல இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது?. இவர்கள் சட்டத்தையும், மக்களையும் காக்க வந்தார்களா இல்லை திருடுபவனை, கொள்ளையடிப்பவனை, ரேப் செய்பவனை கொல்ல வந்தார்களா?. 

திருடுபவன், கொள்ளையடிப்பவனை கொல்ல வேண்டும்மென்றால் இவர்கள் பாதுகாப்பு தரும் அதிகாரத்தில் உள்ளவர்களை தான் முதலில் கொன்றுயிருக்க வேண்டும். அவர்களை அப்படி செய்ய இவர்களுக்கு தைாியம் இருக்கிறதா?. 

லட்சங்களில் கொள்ளையடிப்பவனை கொல்லும் இவர்கள் வீரர்களா?. கோழைகள். இவர்கள் மக்களை காக்க வந்த வீரர்களள்ள. தங்களை காத்துக்கொள்ள, மக்களை ஏமாற்ற, அதிகாரத்தில் உள்ளவர்களின் கால்களை நக்கி பிழைப்பவர்கள். 

இவர்கள் என்ன சொன்னாலும் கேட்கமாட்டார்கள். காரணம், நாம் வாழ்வது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கான ‘ஜனநாயக நாட்டில்’. 

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 19.




துளசியண்ணன் காரின் உள்ளே அமர்ந்திருந்தார். எனக்கு ஆனந்த அதிர்ச்சி. 

துளசியண்ணன் பெயரை கேட்டாலே எங்கவூர் மட்டுமல்ல, அக்கம் பக்க ஊரில் காவாளி தனம் பண்ணுபவர்கள் மிரளுவார்கள். யாருக்கும் பயப்படமாட்டார். நான் ஏழாவது படிக்கும் போது ஏரிக்கரை ஓரத்தில் சாராயம் காய்ச்சி லாரி டியூப்களில் நிரப்பி வியாபாரிகளுக்கு அனுப்பி வைப்பார். ஊரில் திருவிழா என்றால் அதிகம் பணம் தருபவராகவும், தெருக்கூத்து செலவு அவருடையதாக இருக்கும். 

அடிக்கடி அப்பாவை காண வீட்டுக்கு வருவார். என்னடா படிக்கற என அக்கறையாக விசாரிப்பார். அப்பாவிடம் மரியாதையாக நின்றே பேசுவார். நான் யார் பிரச்சனைக்கும் போறதில்ல. அவுங்களா வர்றாங்க. தப்பு பண்ணான்னு தெரிஞ்சா நாலு தட்டு தட்டி அனுப்பறன். மத்தப்படி எதுவும்மில்ல. நீங்க என் அப்பா மாதிரி நீங்க எது சொன்னாலும் கேட்டுக்கறன்.

குடிகாரன் இருக்கற வரைக்கும் நீ இந்த தொழிலை விடப்போறதில்ல. நீ விடலாம்னு நினைச்சாலும் போலிஸ்காரன் விடப்போறதில்ல. புலி வாலு புடிச்ச மாதிரி தான். நீ தொழில மட்டும் பாத்தா பிரச்சனையில்ல. ஆனா சுத்துப்பட்டு கிராமத்து பிரச்சனையில தலையிடற. போனவாரம் மளிகை கடைக்காரன் பையன் கைய உடைச்சியிருக்க. அவன் நான் போலிஸ்க்கு போறன் ஊர் நாட்டாமைக்காரங்க என்ன சொல்றிங்கன்னு கேட்கறான். உன்னால பாதிக்கப்பட்டவன்ங்க ஒன்னா சேர்ந்து உனக்கு எதிரா பேசறான் அது உனக்கு நல்லதில்ல. 

ஊர்க்காரங்க தலையிடாதிங்க நாங்க பாத்துக்கறோம்ன்னு பக்கத்து ஊர்க்காரங்க சொல்றாங்க. என்ன பதில் சொல்றது. ஏதாவது ஓன்னுக்கிடக்க ஒன்னு ஆச்சின்னா என்னப்பண்றத்து. குடும்பத்துக்கு நல்லதில்ல. 30 வயசுக்குள்ளாற நிறைய பாத்துட்ட போதும் பிரச்சனையில்லாம வாழ பாரு. கொஞ்ச நாளைக்கு டவுனுல குடியிரு. தொழில் மட்டும் நடக்கட்டும் என சொன்னதை கேட்டு சரிங்கப்பா என கிளம்பியவரிடம், இந்த தொழிலையே நம்பியிருக்காத. பணம் கிணம் சேத்து வச்சியிருந்தா லாரி ஏதாவது வாங்கிப்போடு. பணம் வேணும்ன்னா கேளு தர்றன். இந்த காய்ச்சற வேலைய விட்டுடு பசங்கள நல்லா படிக்க வைக்க பாரு என்றார். 

அதற்கடுத்த சில நாளில் டவுனில் வீடு பாத்துக்கொண்டு போய்விட்டார். வேலூரில் வந்து பாலாற்றில் இருந்து மணல் எடுத்து வியாபாரம் செய்வதாக ஒருமுறை அப்பாவிடம் வந்து சொல்லிவிட்டு போனார். வேறு ஒருவர் மணல் விக்கறதோட சாரயத்தல கலக்கற ஸ்பிரிட்ட ஆந்திராவுல இருந்து ஆளுங்கள வச்சி கடத்திவந்து விக்கறாரு என்றார்கள். 

அவர் தான் காரில் இருந்தார். என்னைப்பார்த்து என்னடா இங்க என்றார். இங்கதான்னே பி.காம் படிக்கறன். செகண்ட் இயர்ண்ணே. 

நம்மவூர்ல முதல் டிகிரி வாங்கப்போறவனாடா நீ. சந்தோஷமா இருக்கு. அப்பா, அம்மாயெல்லாம் சவுக்கியமா?. 

நல்லாயிருக்காங்கண்ணே எனும்போது காரை விட்டு இறங்கியவர். தினமும் வீட்டுக்கு போய்ட்டு வர்றியா ?. 

இல்லண்ணே இங்க தான் ரூம் எடுத்து நானும் இன்னோரு ப்ரண்ட்டும் தங்கியிருக்கறோம் என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே தூரத்தில் நின்றிருந்த நான்கு பேரும் எங்களை நோக்கி வேகவேகமாக வந்தனர். 

செகண்ட் இயர் படிக்கறன்னு சொல்ற. என்ன பாக்கனம்ன்னு தோணலயா? இல்ல உங்கப்பா அங்கயெல்லாம் போககூடாதுன்னு சொன்னாற என பேசியவர் என் பார்வை அவரின் பின்னால் போவதை கண்டு யார் என திரும்பி பார்த்தார். 

அவர் திரும்பியதும் வணக்கம்ணே என்றார்கள் நான்கு பேரும். காலேஜ்ஜாண்ட உங்களுக்கு என்னடா வேலை?. 

இல்லண்ணே அது வந்து என இழுத்தான்கள். 

பொண்ணு மேட்டரா ? பையன் மேட்டரா? 

பையன் மேட்டர்ன்னே. 

காலேஜ் பசங்க விவகாரத்தல உஷாரா இருக்கனும் இல்ல நம்மள காலி பண்ணிடும். 

என்ன விவகாரம் ?. 

இவனை அடிக்கச்சொல்லி ரவி கூப்ட்டு வந்தாண்ணே என என்னை காட்டியதும் துளசியண்ணன் கோபமாகி சொன்னவன் கன்னத்தில் பளார் என அறைந்தார். 

போய் அந்த நாயை கூப்டுக்கிட்டு வா என்றதும் ஒருவன் ஓடினான். 

உனக்கும் அவனுக்கும் என்னடா பிரச்சனை ?. 

நடந்ததை சொல்ல சொல்ல ம் கொட்டி கேட்டுக்கொண்டுயிருந்தார். ரவி வந்து வணக்கம்ண்ணே என கைதூக்கியதும் பளார் என அவனையும் ஒரு அடி போட்டவர். காலேஜ்குள்ள பிரச்சனையானா அடிக்க ஆள் வைப்பியா? 

இல்லண்ணே இல்லண்ணே என்றான். 

இவன் என் தம்பி மாதிரி. இவனை யாராவது தொட்டிங்க ஒழிச்சிடுவன் ஒழிச்சி. அடிக்க கூப்டா யார் என்னன்னு கேட்காம வந்துடுவிங்களாடா என கேட்டதும் நம்ம பையனை ஒருத்தன் அடிச்சான்னதும் வந்துட்டம்ன்னே. 

நைடடு ஜிம்க்கு வந்துடுங்க.

சரிண்ணே எனச்சொல்லிவிட்டு கிளம்பியவுடன் நம்ம பசங்க தான் இனிமே உன் நிழலை கூட தொடமாட்டானுங்க. வீட்டுக்கு வா பேசிக்கலாம் என்றவர் அட்ரஸ் தந்தவர் செலவுக்கு ஏதாவது வேணும்னாலும் கேளுடா. தயங்காத. 

இல்லண்ணா பரவாயில்ல என அவசரமாக மறுத்ததும் உங்கப்பா மாதிரி இருக்காதடா காலம் மாறுது அதுக்கு ஏத்த மாதிரி நீயாவது மாறு என்றவர் காரில் ஏறி கிளம்பினார். 

அவர் போனதும் அப்பாடா தப்பிச்சோம் என நினைக்கும்போதே மச்சான், அவரை உனக்கு தெரியுமாடா என கேட்டபடியே வந்து நின்றான் ஜான். 

எங்க ஊர்க்காரர் தான். ஏன் கேட்கற?. 

அவர் தான் இன்னைக்கி வேலூர்ல பெரிய ரவுடி. நீ பெரிய ஆளுதாண்டா. இத வச்சியே சீனியர் பசங்கள கூட மிரட்டலாம். 

அதெல்லாம் ஒன்னும் வேணாம் வா என திரும்பிய போது தான் அவளை பார்த்து அதிர்ந்து போனேன். தூரத்தில் சைக்கிளில் நின்றபடி இங்கு நடப்பதை பார்த்துவிட்டு நான் பார்ப்பதை கண்டு கிளம்பி போனால் ப்ரியா. 

தொடரும்…………


ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 18.




படிக்க வர்றிங்களா இல்லை சண்டை போட வர்றிங்களா? அடிச்சிக்கறவனுங்க வெளியில போய் அடிச்சிக்கிட்டு சாகுங்க. காலேஜ்க்குள்ள வந்து ஏன் எங்க உயிர வாங்கறிங்க. எதாவது ஆகியிருந்தா எவன்டா பதில் சொல்றது. இனிமே காலேஜ் சண்டை போட்டாலோ, உங்க மேல வேற ஏதாவது புகார் வந்துச்சின்னா இங்க மட்டும்மில்ல, வேற எங்கயும் படிக்க முடியாதபடி செய்துடுவன் ஜாக்கிரதை. இனிமே தப்பு பண்ண மாட்;டோம்ன்னு எழுதி தந்துட்டு போங்க என இட்லராக மாறி பரேடு எடுத்தார் பிரின்ஸ்பால். 

மன்னிப்பு கடிதம் எழுதி தந்துவிட்டு வெளியே வந்ததும் உன்ன விடமாட்டன்டா என்றான் ரவி. 

புடுங்கிடுவாரு. போடா என்றேன். 

லஞ்ச் டைமில் புங்கமரத்தின் கீழ்தான் அமர்ந்திருந்தோம். கோபமாக வந்த ப்ரியா சொன்னா கேட்டாதானே. அவனைப்போய் எதுக்கு அடிச்ச. 

நீ மட்டும் வந்து இழுக்கல அவன் கையை உடைச்சியிருப்பன். 

எதுக்கு உனக்கு இவ்ளோ கோபம். 

ஒழுங்கா சொன்னன் கேட்கல. ராங்கா பேசனான் கோபம் வந்துடுச்சி. 

கோபம் வந்தா கைல நான் கட்டன கயிற பாரு, என்னை நினைன்னு சொன்னன்யில்ல. 

அதனால தான் போகும்போதே கயித்த கோயில்லயே அறுத்து போட்டுட்டன்.

இவனை புடிக்கப்போய் எனக்கு தான் அடிவிழுந்துச்சி என்றான் ஜான். 

உன்ன எவன் மயிற குறுக்க வரச்சொன்னது. 

டேய் சும்மா இருடா. நீ அவனை அடிச்சிட்ட. அவன் உன்ன அடிச்சான். இதோட விட்டா பரவாயில்ல. அவன் மோசமான கேங்க் பசங்களோட இருக்கான். அவனுங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோ தான். 

ஏய் அவன் ப்ரியாவ டீ போட்டு பேசுவான். கேட்டுக்க சொல்றியா?. அவன் யாரா கூப்டு வந்தாலும் கவலையில்ல. வரட்டும் பாத்துக்கறன். 

என்னடா இப்படி சொல்றான் என ப்ரியா அதிர. 

இவன் கிடக்கறான் டுபுக்கு. நீ சாப்பிட்டயா?

இல்ல. 

போய் சாப்பிடு. நாங்க வெளியில பாய் கடைக்கு போய் சாப்டுட்டு வர்றோம் எனச்சொல்லிவிட்டு நடந்தபடியே அதும் முன்னாடி போய் சொல்றியேடா. பைத்தியமாடா நீ. 

உண்மையை தானே சொன்னன். 

வெங்காயத்த சொன்ன. 

மச்சான், வயித்துலயே குத்திட்டாண்டா வலி உயிர் போகுதுடா என்றபடியே பாய் கடையில் சாப்பிட்டுவிட்டு காலேஜ்க்கு வந்திருந்தோம்.  வழியில் என்னை பார்த்து முறைப்பதாகவே இருந்தான் ஜான். 
அடுத்த சில நாளில் தேர்வு தொடங்கியது. கடைசி நாள் பரிச்சையன்று ஒரு போன் நம்பரை தந்த ப்ரியா. அடிக்கடி பக்கத்து வீட்ல போய் போன் பேசறது கஸ்டமாயிருந்ததால வீட்டுக்கு லேண்ட்லைன் போன் அப்பா வாங்கிட்டாரு. இதான் நம்பர். ஊருக்கு போனதும் கால் பண்ணு என்றாள். 

ஊருக்கு வந்து சேர்ந்து பசங்களுடன் சுத்தவே நேரம் சரியாக இருந்தது. முத்து, கல்யாணத்துக்கு கூட வரல வீட்டுக்கு வாயேண்டா என்றான். 

வரண்டா எனச்சொல்லிவிட்டு சுற்ற தொடங்கினோம். வாரத்தில் ஒருநாள் ப்ரியாவுக்கும் போன் பண்ணி பேச நாள் போனதே தெரியவில்லை. 

மீண்டும் காலேஜ் போனபோது, ஒரே சந்தோஷம். ஆளாளுக்கு கை கொடுத்துக்கொண்டு பேசிக்கொண்டுயிருந்தோம். 

ப்ரியா நாங்கள் நிற்க்கும் இடத்திற்க்கு அருகே வந்தவள் சார் எங்கள மறந்தாச்சோ என்றாள் என்னைப்பார்த்து. 

சப்ப பிகரா இருக்கே. உனக்கு தெரிஞ்சவங்களா ஜான். 

நான் பிகரா என அடித்தவள். எப்படா ஊருக்கு வந்த?. 

நேத்து.

ஏன் ஃபோன் பண்ணல. 

ரூம் கிளின் பண்ணன். 

ஈவ்னிங் வீட்டுக்கு வா எனச்சொல்லிவிட்டு கிளம்பினால். 

அப்போது தான் கவனித்தேன் ரவி எங்கள் பின்னால் நின்று என்னை சுட்டிக்காட்டி அவனுடன் இருந்த சிலரிடம் ஏதோ சொல்லிக்கொண்டுயிருந்தான். அவர்களை இதற்கு முன் காலேஜ்ஜில் பார்த்ததில்லை. 

அவன்கள் ஜிம்முக்கு செல்பவர்கள் என்பது உடம்பை பார்க்கும் போதே தெரிந்தது. மனம் திக் என்றது. மனதில் ஒரத்தில் வர்றது வரட்டும் பாத்துக்கலாம் இருந்தேன். அவன்கள் கிளம்பி போவதும் தெரிந்தது. 

வகுப்புக்கு வந்தும் நம்மை அடிக்கச்சொல்லியிருப்பானா இல்ல மிரட்ட சொல்லியிருப்பானா என மனம் யோசனையிலேயே இருந்தது. சாயந்தரம் காலேஜ்ஜை விட்டு கிளம்பும்போது அவன்களை கண்டேன். காலேஜ் வெளி கேட்க்கு சற்று தள்ளி நின்றிருந்தனர். அன்னைக்குன்னு பாத்து காலேஜ் பீஸ் கட்ட போயிருந்ததால் லேட்டாகி நான் மட்டுமே அப்போது வெளியே வந்திருந்தேன். 

நான்கு பேர் நின்றிருந்தான்கள். தம்மடித்துக்கொண்டு தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தவன்கள் என்னை பார்த்ததும் பேச்சை நிறுத்திவிட்டு தம்மை கீழே போட்டுவிட்டு என்னை முறைத்தபடி நின்றனர். 

மனம் திக் திக் என வேகவேகமாகவே துடித்தது. இவனுங்ககிட்ட மாட்டனா சட்னியாகிடுவோம் அதனால இப்படியே ஓடிப்போயிடலாம்மா என எண்ண தோன்றியது. ஓடனா வந்து புடிச்சி அடிச்சானுங்கன்னா என்ன பண்றத்து. வேற வழியும்மில்ல என்ன பண்றத்து என எண்ணம்போது மனம் நடுங்க ஆரம்பித்தது. 

வீரப்பா அன்னைக்கி பேசிட்டோம் என்ன பண்ணலாம் என யோசிக்கும் போதே. வேகவேகமாக வந்த ஒரு ஆம்னி கார் என்னருகே பிரேக்கடித்து நின்றது. சர்ரென அதன் கதவு திறக்கப்பட்டது. 

தொடரும்………….

வியாழன், பிப்ரவரி 09, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 17.




மச்சான் எக்ஸாம் வருது என்ன எழுதறதுன்னே தெரியலடா. 

நேத்து தான் காலேஜ் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு. அதுக்குள்ள எக்ஸாம் வருதா. சரிவிடு பாத்துக்கலாம். 

ஓன்னும் படிக்கல. பாத்துக்கலாம்மாம். 

விடுடா. எழுதனாலும், எழுதாட்டாலும் செகன்ட் இயர் போறது உறுதி. அதனால கவலைப்படாத. அரியர் வைக்காம பாஸ் பண்றவன் நாசமா தான் போவான்னு சொன்னாங்க. டேய் படிக்கலங்கறதுக்காக இப்படி வாய்க்கு வந்தத பேசாத என்றான் ஜான். 

சரிவிடு நான் போய் ப்ரியாவ பாத்துட்டு வர்றன்.  

ஏதோ பத்து நாளைக்கு அப்பறம் பாக்க போற மாதிரி சொல்ற. இந்த ஒரு வருஷமா உங்க அலப்பறைய தான் தாங்க முடியலயே. ஊங்கக்கிட்ட லவ் பண்றவங்க கெட்டாங்கடா. என்னத்த பேசறிங்கன்னே தெரியல. 

அதான் மச்சான் நட்பு. 

அப்ப நாங்கயென்ன உனக்கு விரோதியா?. 

மூடிக்கிட்டு இரு வந்துடறன் எனச்சொல்லிவிட்டு ப்ரியாவின் வகுப்புக்கு போனபோது சீரியஸாக எதையோ எழுதிக்கொண்டுயிருந்தாள். 

என்ன மேடம், லவ் லட்டரா? யார் அந்த இளிச்சவாயன். 

நீ அடிவாங்கப்போற. நோட்ஸ் எடுக்கறன்டா. 

எதுக்கு வரச்சொன்ன?. 

இரு. 

சொல்லு சீக்கிரம் போகனும். 

சார் என்ன கலெக்டர் உத்தியோகமா பாக்கறாரு?. 

அதிலடம்மா, வர்றப்ப தாவணியில ஒரு ஃபிகர பாத்தன். 

திரும்ப போய் அவளை ஜொள்ளு விடப்போற?. 

இஇஇஇஇஇஇ. வாய மூடு பல்லு வெளக்கியிருக்கன்னு தெரியுது. 

நாளைக்கு கோயிலுக்கு போலாம்ன்னு சொல்றதுக்கு தான் வரச்சொன்னன். 

சரி. ஓ.கே வந்துடறன் எனச்சொல்லிவிட்டு வெளியே வரும்போது வராண்டாவில் நின்றிருந்த அந்த உருவம் என்னை முறைப்பது கவனிக்காமலே கடந்து வந்திருந்தேன். 

மறுநாள் காலை நான், ப்ரியா, ஜான் மூவரும் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிரகாரத்தில் உட்காரும்போது. ஏன் ப்ரியா உம்முன்னு இருக்க என ஜான் தான் கேட்டான். 

ஓன்னும்மில்லடா. க்ளாஸ்ல ஒரு சின்ன பிரச்சனை. 

பிரச்சனையா என்ன என நான் பதட்டமானதும் 

ஏய் பெருசா ஒன்னும்மில்ல. பக்கத்து க்ளாஸ்ல ஒருத்தன் டீஸ் பண்றான். கீதா மூலமா லட்டர் தந்துவிடறான். 

அவன் லட்டர் தந்தா இவ வாங்கி வருவாளா என ஜான் பல்லை கடிக்க. 

அவளை மிரட்டியிருக்கான் அதுக்கு பயந்து வாங்கி வந்துயிருக்கா. 

அவன் பேர்யென்ன ?. 

ரவி. 

உனக்கெல்லாம் போய் ஒருத்தன் லவ் லட்டர் தர்றான் பாரு. அவனைச்சொல்லனும். 

ஏய் என்னடா பேசற என ஜான் முறைக்க ?. 

காலேஜ் லைப்ல இதெல்லாம் சகஜம்டா. அவன்க்கிட்ட பேசிக்கலாம் விடு என கிளம்பி காலேஜ்க்கு வந்தோம். வருத்தத்தோடு அவள் க்ளாஸ்க்கு போவது தெரிந்தது. 

அவன் பேர் ரவி தானேடா. 

ம். 

நீ இரு அவனை நான் பாத்துட்டு வந்துடறன் எனச்சொல்லிவிட்டு ப்ரியாவின் கள்hஸ்க்கு பக்கத்து க்ளாஸ் முன் நின்றிருந்த பசங்களிடம் பாஸ் இங்க ரவி யாரு?. 

அதோ அவன் தான் என ஒருவனை கைகாட்டினான். 

பந்தாவாக நின்றுக்கொண்டிருந்தான். ரவி ?. 

நான் தான். 

என்ன பாஸ் ப்ரியாவுக்கு லவ் லட்டர் தர்றிங்களாம். டீஸ் பண்றிங்களாமே நியாயமா?. 

உன்னை முதல்ல உதைக்கனும் எப்ப பாத்தாலும் நீயென்ன அவளோட சுத்திக்கிட்டுயிருக்கற முறைப்பாகவே கேட்டான். 

ப்ரண்ட் பாஸ். 

ஒரு மயிரூம் தேவையில்ல. இன்னையிலயிருந்து அவளை பாக்கறத நிறுத்திடு. எங்கயாவது அவளோட உன்னை பாத்தன் ஒழிச்சிடுவன். நான் லவ் லட்டர் தந்தா உங்கிட்ட வந்து சொல்றாளா அவ. இன்னைக்கு மட்டும் என் லவ்வ ஏத்துக்காமயிருக்கட்டும் அவளை என பல்லை கடிக்கும் போதே. அவன் வாய் மீது ஓங்கி குத்தினேன். 

தொடரும்…………..

புதன், பிப்ரவரி 08, 2012

சட்டமன்றமும்....... வீடியோவும்........


சட்டமன்றத்தில் ஆளும்கட்சி - எதிர்கட்சி நடந்திய வார்த்தை மோதல், அதன்பின் வெளியே ஏட்டிக்கு போட்டி வார்த்தை யுத்தத்தில் விஜயகாந்த் ஒரு நியாயமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அது பெரும்பாலும் விவாதிக்காமலே போய்விட்டது.

அதாவது நான் சட்டமன்றத்தில் நாக்கை கடித்தேன், கையை ஆட்டி எச்சரித்தேன் என்பதையே திரும்ப திரும்ப ஒளிப்பரப்புகிறார்கள். ஆனால் ஆளும்கட்சியினர் பேசியதை திட்டமிட்டே எடிட் செய்துள்ளார்கள் என குற்றம் சாட்டிய விஜயகாந்த், நாடாளமன்றத்தின் மாநிலங்களவை, மக்களவையில் நடைபெறும் கூட்டத்தினை லைவ்வாக ஒளிப்பரப்புவது போல தமிழக சட்டமன்ற கூட்டத்தை லைவ்வாக தூர்தர்ஷன் ஒளிப்பரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

நியாயமான கோரிக்கை.

இன்று தமிழகத்தில் கட்சிக்கு ஒரு சேனல், நாளிதழ் உருவாகி விட்டது. கட்சி தொடங்கும் முன் சேனலும், செய்தித்தாளும் தொடங்க திட்டம் தீட்டி விடுகிறார்கள். அதன்பின்பே கட்சி தொடங்குகிறார்கள். அதில் தங்களது கட்சிக்கு வேண்டப்பட்ட செய்திகளையே வெளியிடுகிறார்கள். ஒரு பொது செய்தியில் கூட மக்கள் பார்வைக்கு விவகாரத்தை முழுமையாக கொண்டும் போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்மில்லாமல். தங்களது மன நலன், சாதி நலன், கூட்டணி நலன், அரசியல் நலன் சார்ந்தே செய்திகளை வெளியிடுகிறார்கள். இது தான் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான ஊடகங்களின் நிலையாக உள்ளது.

சட்டமன்ற நிகழ்வை கூட அப்படித்தான் காட்டினார்கள். விஜயகாந்த் எழுந்து விரல் நீட்டி மிரட்டுவது, காக்கை கடிப்பது போன்ற வீடியோ பதிவே மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பப்பட்டது. ஆனால் எதனால் அவர் அப்படி நடந்துக்கொண்டார். விஜயகாந்த் ‘மிரட்டுவத’ற்க்கு முன் அமைச்சர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை ஆளும்கட்சி தொலைக்காட்சியும் ஒளிப்பரப்பவில்லை, எதிர்கட்சி தொலைக்காட்சிகளும் காட்டவில்லை. காரணம், அந்த வீடியோ எதுவும் சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி எடுத்ததில்லை என்பதே எதார்த்த நிலை.

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை தமிழ்நாடு திரைபட பயிற்சி கல்லூரியின் மாணவர்கள் எடுப்பதாக கூறப்படுகிறது. சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக அவர்கள் பதிவு செய்து அதனை அதிகாரிகளிடம் தருவார்கள். அதில் ஆளும்கட்சி சேனல் ஒளிப்பரப்ப வேண்டிய கிளிப்பிங்ஸ், எதிர்கட்சி சேனல்கள் ஒளிப்பரப்ப வேண்டிய கிளிப்பிங்ஸ், கூட்டணி கட்சிகள் ஒளிப்பரப்ப வேண்டிய கிளிப்பிங் என வகை வகையாய் தயார் செய்யப்பட்டு அந்த சி.டிக்கள் அரசின் ஊடகத்துறை வாயிலாக சேனல்களுக்கும், செய்திதாள்களுக்கும் அனுப்பப்படும்.

இதனால் ஆளும்கட்சி என்ன நினைக்கிறதோ அதுதான் செய்தியாக மக்கள் மன்றத்துக்கு வருகிறது. இதனால் சட்டமன்றத்தின் உள்ளே என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரியாமலே போய்விடுகிறது.

இதை மாற்ற ஒரேவழி விஜயகாந்த் கேட்பதை போல, நேரடி ஒளிப்பரப்பு இருக்கட்டும். இதன் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட எம்.ல்.ஏகள் சட்டமன்றத்தில் மக்களுக்காக பேசுகிறார்களா?, தொகுதி பிரச்சனை பற்றி உண்மையை பேசுகிறார்களா?, பக்கத்தில் கதையடித்துக்கொண்டு இருக்கிறார்களா?, தூங்குகிறார்களா? இல்லை சட்டமன்றத்துக்கே வராமல் கடுக்காய் தருகிறார்களா? என்பதை மக்கள் நேரடியாக அறிந்துக்கொள்ள முடியும்.

அதோடு, சட்டமன்றத்தில் அடித்துக்கொண்டால் யார் முதலில் அடித்தது, அதிகம் அடிவாங்கியது யார்?, கையால் அடித்துக்கொண்டார்களா? இல்லை உருட்டு கட்டை, சைக்கிள் செயின் கொண்டும்போய் மோதிக்கொண்டார்களா என்பதை நாம் நேரடி ஒளிப்பரப்பில் கண்டு மக்களே ஒரு முடிவு எடுக்கலாம்.

ஆனால் அதை செய்யத்தான் தயங்குகிறார்கள்.


கர்நாடகாவில் சட்டமன்ற நிகழ்வுகளை தனியார் தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிப்பரப்பும் நிலை உள்ளது. பிப்ரவரி 7ந்தேதி சட்டமன்றத்தில் விவாதம் நடந்துக்கொண்டு இருந்தது. அப்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த பி.ஜே.பியின் கூட்டுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் சவாதி விவாதத்தை கவனிக்காமல் தன் கையில் இருந்த செல்போன் மூலம் மும்மரமாக எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். அடிக்கடி திரும்பி திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் செல்போனிலேயே கவனமாக இருந்துள்ளார். அந்த செல்போனை அடிக்கடி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பட்டீல், சுற்றுச்சூழல் மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் கிருஷ்ணா பாலிமர் ஆகியோர் எட்டி எட்டி பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.

விவாதத்தை கவனிக்காமல் தங்களது செல்போன்களை சீரியசாக பார்த்துக்கொண்டு இருந்ததை மாடத்தில் மேலிருந்து கவனித்த தனியார் சேனல் நிருபர் ஒருவர் அப்படி என்னத்த பாக்கறாங்க என தனது வீடியோ கேமரா வழியாக சூம் செய்தபோது செல்போன் மூலம் ஒரு வெப்சைட்டில் இருந்து ஒரு வீடியோவை டவுன்லோட் செய்துள்ளனர். அந்த வீடியோவில் கறுப்பு புடவை அணிந்த பெண்மணி தனது உடைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்க……………. அந்த வீடியோ, இன்னோரு வீடியோ என 15 நிமிடம் மூன்று அமைச்சர்களும் அதை கண்டு ரசித்துள்ளனர். இதனை அப்படியே ரெக்கார்ட் செய்துக்கொண்டது அந்த கேமரா. அப்பறம்மென்ன  இரவு எக்ஸ்குளுசிவ் செய்தியாக ஒளிப்பரப்பானது. இதனை கண்டு கர்நாடகாவே அதிர 8ந்தேதி பி.ஜே.பி தலைமை அந்த அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்தது.

அங்கு ஒரு நியாயமான செய்தி சேனல் இருந்து மக்கள் மன்றத்திற்க்கு அமைச்சர்களின் யோக்கியதையை கொண்டு வந்துள்ளது. அது தமிழகத்தில் இல்லை என்பதால் தான் நேரடி ஒளிப்பரப்பை தமிழக மக்கள் நீண்ட நாட்களாக கேட்கிறார்கள். விஜயகாந்த் அதை வழிமொழிந்துள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு மக்கள் சவால் விடுகிறார்கள். நேரடி ஒளிப்பரப்பு கொண்டு வர தமிழக கட்சிகளே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவே உங்களுக்கு தைரியம் உள்ளதா?.

திங்கள், பிப்ரவரி 06, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 16.




பெரிய இவன் மாதிரி பேசறான். தெருவுல போறவனுக்கு செலவு பண்ற மாதிரி ஓசி அதுயிதுங்கறான். எவளாவது ஈன்னு இளிச்சிக்கிட்டு வந்தா செலவு பண்ற நாய் ப்ரண்ட்ஸ்க்கு செலவு பண்ண இப்படி யோசிக்குது. என்ன கேவலமா பேசறான் என எண்ணியபடி இருக்க நேரம் போனதே தெரியவில்லை 

கோபமாக ரூம்க்கு வந்த ரமேஷ் ஏன்டா இப்படி பண்ண?. 

போய் கதவ திறடா என கோபம் குறையாமல் சொல்ல என்னை வெறுப்பாக பார்த்துவிட்டு போனவன். பொண்ணுங்க பயந்துடுச்சிங்க. ப்ரியா கண் கலங்கிடுச்சி. எதுக்கு காரணமேயில்லாம கத்தன என கேட்டபடியே கதவை திறந்து லைட் போட்டான். 

துணியை மாத்தியபடியே நான் தான் கைய விடுன்னு சொல்றன் கேட்காம கைய பிடிச்சிக்கிட்டு பில் தராம தடுத்தா என்ன பண்றத்து. 

அது சரி ஜான் தானே ட்ரீட் தர்றான்னு சொன்ன. அப்பறம் எதுக்கு நீ பில் தந்தா?. 

சும்மா தான். 

அவன் ஏதாவது சொன்னான. அதெல்லாம் ஒன்னும்மில்ல என்னை தனியா விடு. 

ரூம் வாசலில் நிழலாடுவதை கண்டு திரும்பி பார்த்தேன். ஜான் நின்றிருந்தான். 

நான் கோபமாக முகத்தை திருப்பிக்கொண்டேன். 

ரமேஷ், அவனை பார்த்து நீ என்னடா வீட்டுக்கு போகாம இங்க வந்துயிருக்க. 

அமைதியாக என்னை பார்த்த ஜான் மச்சான்….

நீ தயவு செய்து பேசாத. அப்பறம் நமக்குள்ள சண்டை தான் வரும். வீண் பிரச்சனை வேணாம் நீ கிளம்பு. 

நான் சொல்றத கொஞ்சம் கேளுடா. 

நான் எதையும் கேட்க விரும்பல. நீ கிளம்புடா என கோபமாக பேச எதுவும் சொல்லாமல் கிளம்பிவிட்டான். 

நான் பெட்ஷீட்டை எடுத்து முகம் வரை மூடிக்கொண்டு படுத்தேன். தேவையில்லாம கத்திட்டமோ என உள் மனம் கேள்வி கேட்டது. அவன் அப்படி சொன்னது மட்டும் சரியா என எதிர்வாதமும் புரிந்தது. ஜான் மேல கோபப்படறது சரி. சம்மந்தமேயில்லாம எதுக்கு ப்ரியாவ திட்டனும். அதுவும் வாடீ, போடீன்னு, மத்த பொண்ணுங்க என்ன நினைக்குதுங்களோ என மனம் குழப்பத்தில் தவிக்க தூங்கிப்போயிருந்தேன். 

காலையில் எழுந்தபோது மணி எட்டாகியிருந்தது. துணி மாத்திக்கொண்டுயிருந்த ரமேஷ் சீக்கிரம் குளிச்சிட்டு வாடா டைம்மாகிடுச்சி. தூங்கி எழுந்தும் மனம் பாராமாகவேயிருந்தது. 

நீ முன்னாடி போ நான் வர்றன். அவன் திரும்பி பார்த்துவிட்டு தலைவார தொடங்கினான். எழுந்து பாத்ரூம்க்குள் போனேன். சீக்கிரம் வாடா நான் போய்க்கிட்டுயிருக்கன். 

ரூம்க்குள் வந்து தலையை துவட்டியபடி பார்த்தேன். தோசை சுட்டு வைத்திருந்தான். சாப்பிட்டுவிட்டு ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு நடக்க தொடங்கினேன். வகுப்புக்குள் சென்றபோது மணி பத்தரையாகியிருந்தது. 

துரை வர்ற டைம் இதுதானா என நக்கல் அடித்த எக்னாமிக்ஸ் புரபஸர். அடுத்த க்ளாஸ்க்கு வா என்றார். வெளியே வந்தேன். எப்போதும் அமரும் அந்த புங்க மர பெஞ்ச்சில் வந்து அமர்ந்தேன். நேற்று நடந்த சம்பவத்தின் பாரம் கொஞ்சம் மனதில் குறைந்தது போல்யிருந்தது.  

அடுத்த க்ளாஸ்க்கு பெல் அடிக்க வகுப்பை நோக்கி நடந்தேன். வராண்டாவில் ப்ரியா என் எதிரே வந்தாள். நிறுத்தி ஸாரி கேட்கலாம் என எண்ணும்போதே வேகவேகமாக முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு என்னை கடந்து வேகவேகமாக போனால். கோபம் குறையல போல என எண்ணியபடி நான் வகுப்புக்கு வந்து கடைசி பெஞ்ச்சில் போய் உட்கார்ந்ததும் ஜான் திரும்பி ஸாரி மச்சான் என்றான். அவன் குரலை கேட்டதும் மீண்டும் கடுப்பாகி எழுந்து வெளியே வந்தேன். 

எங்கு போவது என தெரியாமல் ரூம்க்கே திரும்பிவிட்டேன். ரூம்மை திறந்து தரையில் உட்கார்ந்தேன். நாயீ இவனால அவளை திட்டி அவளும் பேசாம போறா என எண்ணியபடி அப்படியே படுத்து தூங்கியும் போயிருந்தேன். மதியம் இரண்டு மணி வாக்கில் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது திறந்திருந்த கதகை தட்டியபடி நின்றிருந்தாள் ப்ரியா. 

என்ன வேணும், யார் ரூம்ம காட்டனது. 

என்ன பிரச்சனை. எதுக்கு காலேஜ் வந்துட்டு திரும்பி வந்த?. 

அது என் இஸ்டம். அதை நீ கேட்காத. 

நான் கேட்காம வேற யார் கேட்பாங்க. 

வீணா கோபத்தை கிளப்பாம இங்கிருந்து போய்டு. கோபம் வந்தா என்ன பேசறன்னு எனக்கே தெரியாது.

நீ பேசனதத்தான் நேத்தோ கேட்டனே. 

கேட்டயில்ல கிளம்பு. 

உனக்கும் ஜான்க்கும் என்ன பிரச்சனை ?. 

அத உங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம்மில்ல. 

சொன்னா பிரச்சனைய தீர்த்துவைப்பன். 

நாட்டாமை பண்ற வேலையெல்லாம் வேணாம். எங்க பிரச்சனைய நாங்க பாத்துக்கறோம். நீ கிளம்பு. 

அப்ப நீ என்னை நம்பல. 

ஆமாம். கிளம்பு. 

எதுவும் பேசாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். 

இங்க நின்ன எனக்கு கோபம் வரும். கிளம்பு. 

………………

ஏய் கிளம்புங்கறன்யில்ல. கிளம்பாள் நின்றிருக்க கடுப்பாகி போடீ முதல்ல என கத்தியதும் படியிறங்கினாள். அவள் போன சில நிமிடங்களில் தயா, அகிலன், ரமேஷ் மூவரும் வந்து கட்டிலில் அமர ஜான் மட்டும் வாசலில் நின்றுக்கொண்டிருந்தான். 

அவன்களை பார்த்துவிட்டு தரையை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். 

என்னடா ஆச்சி. நல்லா தானே எல்லாரும் பேசிக்கிட்டுயிருந்தோம். அப்பறம் என்ன பிரச்சனை என கேட்டான் தயா. 

நான் அமைதியாக இருந்ததை பார்த்து ஸாரி மச்சான் நான் அப்படி சொல்லியிருக்க கூடாது மன்னிச்சிடுடா என்றான் ஜான். 

என் முன்னால நிக்காத போய்டு. பேசறத பேசிடுவாரு. அப்பறம் ஸாரி, பூரிம்பாரு அத நாங்க கேட்டுக்கனும். நாங்க என்ன சூடு சொறனை இல்லாதவங்கள?. என்னையென்ன சூடு, சொறனையில்லாமலா வளத்து விட்டுயிருக்காங்க. 

அப்படி என்னத்தாண்டா சொன்னான் என கேட்டான் அகிலன். 

அத அவன்க்கிட்டயே கேளு. 

ஜான் பேசியதை தடுமாற்றத்துடன் சொன்னதும். 

உடனே தயா, அவன் கோபத்தல நியாயம்மிருக்குடா. நாங்க எங்க ஜோடியோட வந்தோம். நீ, அகிலன், ப்ரியா அதோட தோழிங்க இரண்டு பேர்ன்னு மொத்தம் பத்து பேராயிடுச்சி. இவ்ளோ பேர் சாப்டதுக்கு பில் தரனம்ன்னு நினைக்கும் போது யாருக்கு தான் கோபம் வராது. அவனாயிருக்கவே உன்ன மட்டும் திட்டனான். நானாயிருந்தா கேவலமா எல்லாரையும் திட்டியிருப்பன்.  

ஏய் நிறுத்துடா. காசுயில்லன்னு சொல்லியிருந்தா ஷேர் பண்ணியிருக்கலாம். அதுக்கு இப்படியா பேசறது என கேட்டான் அகிலன். 

விடுங்கடா. அவன் ரூட் விடற பொண்ணு இருந்தா ஈன்னு இளிச்சிக்கிட்டு செலவு பண்ணியிருப்பான். யாரும் இல்லைங்கறதால இவுங்களுக்கு எதுக்கு செலவு செய்யனம்ன்னு கடுப்புல சொல்லியிருப்பான் விடுடா இதப்போய் பெருசா எடுத்துக்கிட்டு என்றான் ரமேஷ். 

நான் பேச்சை மாற்றும் விதமாக எனக்கு பசிக்குது. நீங்க சாப்டிங்களா?.

நக்கல்டா. காலேஜ் விட்டதும் உன்ன பாக்க கிளம்பனோம். ப்ரியா வழியில பாத்து நீ எங்கன்னு கேட்டுச்சி ரூம்ல இருப்பான்னு சொன்னோம். நானும் வரன்னு வந்துச்சி. நீ போய் பேசிட்டு வான்னு அனுப்பிட்டு நாங்;க கீழ வெயிட் பண்ணோம். நீ கத்தனது கீழ இருந்த எங்களுக்கு கேட்டுச்சி என்றான் ரமேஷ். 

ஓன்னாதானே வந்திங்க. அப்பறம் என்ன அவளை மட்டும் தனியா அனுப்பிவச்சிங்க. 

பர்சனலா ஏதாவது பேசுவிங்கன்னு தான் என அகிலன் இழுத்தான். 

அதுங்கிட்ட பர்சனலா பேசறதுக்கு எதுவும் கிடையாது. 

சரி. பசிக்குது. சமைச்சிடறன்டா இங்கயே சாப்பிட்டலாம் என்றபடி எழுந்தேன். ஜான் தலையை தொங்கப்போட்டபடி இவ்வளவு நேரமும் வெளியவே நின்றிருந்தான். என்ன சார் இங்க சாப்பிடறிங்களா? இல்ல வீட்டுக்கு போறிங்களா?. 

இங்கயே சாப்பிடறன். 

அப்பறம் எதுக்கு வெளியில நிக்கற ?

உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தான். 

என்னடா நடத்தனாங்க.

அறுத்தானுங்க மச்சான் என்றான் தயா. பின் ஏதோதோ பேச தொடங்கினோம். 1 மணி நேரத்தில் சாப்பாடு தயாராக சாப்பிட்டுவிட்டு கேரம் போர்டு ஆட தொடங்கினோம். இரவு தான் மூவரும் வீட்டுக்கு கிளம்பினான்கள். மச்சான் தம் வாங்கிட்டு வந்துடறன்டா என போனான். 

ஜான் மட்டும் தயங்கி தயங்கி, நீ ப்ரியாவ அதிகமா திட்டிட்டடா. பாவம் நேத்தும் அழுதுக்கிட்டே போச்சி, இன்னைக்கும் அழுதுக்கிட்டே போச்சி. 

இப்ப அதுக்கு என்னங்கற?. 

பதில் பேசாமல் நான் கிளம்பறன் எனச்சொல்லிவிட்டு போனான். நேத்து திட்டனது சரி, இன்னைக்கு எதுக்கு தேவையில்லாம அத திட்டனும். கோவம் வந்தா என்ன பேசறன்னு தெரியறதில்ல காலையில முதல்ல அதுங்கிட்ட ஸாரி கேட்கனும் என எண்ணியபடி தூங்கிப்போயிருந்தேன். 

மறுநாள் காலேஜ் போனதும் ப்ரியாவை தான் தேடி அவளது வகுப்புக்கு போனபோது அவளது தோழிகள் அவ இன்னும் வரல என்றார்கள். மதியம் போனேன் என்னைப்பார்த்தவள் திரும்பிக்கொண்டாள். பேச விருப்பம்மில்ல என திரும்பி வந்து க்ளாஸ்சில் அமர்ந்தாலும் வகுப்பிலும் சரியாக மனம் ஒட்டவில்லை. ஜான் என்னடாச்சி என்றான். 

நீ பேசாத ?. 

ஏய் அதான் மன்னிப்பு கேட்டுட்டனே என்றான் வெறுப்பான குரலில். 

நான் மன்னிச்சன்னு சொல்லலயே. 

தப்பா பேசிட்டன் மன்னிச்சிடுன்னு கால்ல விழட்டுமா?. அமைதியாக அவனை பார்த்தேன். அவன் மீதான கோபத்தை விட என்மீது ப்ரியா வெறுப்பில் இருக்கிறாளே என்பதே அதிகமாக மனதை ஆக்ரமித்திருந்தது. காலேஜ் முடிந்ததும் அவளை பார்க்க போனேன். க்ளாஸ் ரூம்மே காலியாக இருந்தது. 

ரூம்க்கு வந்து மொட்டை மாடியில் நின்றிருந்தேன். எப்படி அவளை சமாதானம் செய்யலாம் என யோசித்துக்கொண்டுயிருந்தேன். ரூம்க்கு வந்த ஜான் உங்கிட்ட பேசனும் வாடா வெளியில போலாம்.

எனக்கு வேலையிருக்கு. 

என்ன புடுங்கற வேலையிருக்கு என்றவன். ரமேஷ்சையும் கிளம்ப சொன்னான். 

பைக்கை மக்கான் பகுதியில் இருந்த அந்த ஒயின்ஸ் வாசலில் நிறுத்தினான். இங்க எதுக்குடா கூப்ட்டு வந்தான் என கோபமாக கேட்டதும் எதையும் காதில் வாங்காமல் போய் கிங் பிஷர் பீரும், பக்கத்தில் இருந்த பாய் கடையில் சிக்கன் வாங்கி வந்து ரமேஷ்சிடம் தந்துவிட்டு வண்டியை எடுத்தான். கோட்டையின் மதில் சுவர் ஓரமாக நிறுத்தியவன் நான் சொன்னது தப்பு தாண்டா. ஏன் சொன்னன்னு தெரியுமா?. 

நான் குடிக்கறது தெரிஞ்சி எங்கப்பா சுத்தமா காசு தர்றத நிறுத்திட்டாரு. எங்கம்மாக்கிட்ட நைசா பேசி காசு வாங்கிக்கிட்டு வர்றன். அதயும் ஒரு வாராம தரக்கூடாதுன்னு சொல்லி நிறுத்திட்டாரு. தம்மடிக்க கூட காசுயில்லாம திரியறன். நீ திடீர்ன்னு நான் ட்ரீட் தருவான்னு சிக்கவச்சிட்ட. எனக்கு எப்படியிருக்கும். நான் காசுயில்லாம வேற ஒருத்தர்க்கிட்ட 500 ரூபா கடன் வாங்கி வந்தான். நீ என்னடான்னா நான்வெஜ்ன்னா தான் வருவங்கற. தப்பி தவறி எல்லாரும் ஒ.கே சொல்லியிருந்தா என் நிலைமை என்னவாயிருக்கும் யோசிச்சி பாத்தியா?.

நீ காசுயில்லைங்கறத முதல்லயே சொல்லியிருக்கனும். சொல்லாதது உன் தப்பு.

இவர்க்கிட்ட மட்டும் காசு கொட்டிகிடக்கு. உங்கப்பா அனுப்பற 2 அயிரத்த வச்சிக்கிட்டு காலத்த ஓட்டற. பணம்மில்லன்னு இவர்க்கிட்ட சொன்னதும் அப்படியே எடுத்து குடுப்பாரு.

இப்ப மட்டும் குடிச்சிட்டு போறியே உங்கப்பா கேட்கமாட்டாறா?.

சனி, ஞாயிறு லீவுங்கறதால வீட்ல எல்லாரும் வேளாங்கண்ணி போயிருக்காங்க. வீட்ல நான் மட்டும் தான். நீ திட்டனயா மனசு சரியில்ல அதான் மனசுல இருக்கறத சொல்லலாம்ன்னு அழைச்சி வந்தன் என்றான்.

சரக்கு வாங்கனதுக்கு பதிலா கடனை திருப்பி தந்துயிருக்கலாம்மில்ல?.

ஹோட்டல்ல நீ பில் தந்ததும் வாங்கன கடனை திருப்பி தந்துடலாம்ன்னு தான் பாத்தன் மச்சான். ஆனா கடன் கேட்டப்ப ஏதோ லட்ச கணக்குள கேட்ட மாதிரி அட்வைஸ்சா பொழிஞ்சான் நாதாரி. அவன் கடனை திருப்பி வாங்க நாயா அலைய விடனம்ன்னு முடிவு பண்ணிட்டன் எனச்சொல்லியபடி பாட்டிலை ஓப்பன் செய்து தந்தான்.

அடுத்த இரண்டு நாளும் ஜான் வீட்டில் டிவி பார்ப்பது, சாப்பிடுவது என பொழுது ஓடியது. அதற்கடுத்த நாள் காலை, காலேஜ்ஜில் புங்க மர பெஞ்சில் அமர்ந்திருந்தேன்.

அடுத்து ஒருவாரமாக ப்ரியாவை பார்க்க முடியவில்லை. அன்றுதான் காலேஜ்க்குள் நுழையும்போது அவளை பார்த்தேன். சைக்கிள் ஸ்டான்டில் சைக்கிளை நிறுத்திவிட்டு வந்துக்கொண்டிருந்தாள்.

என்னைப்பார்த்தவள் வேறு பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டு போனவளை நெருங்கியதும் நின்றவள். என் மேல கோபமா இருப்பன்னு தெரியும். அவன் பேசனது அந்த மாதிரி அதனால கோபம். கோபத்தல என்ன பேசறதுன்னு தெரியாம உன்ன திட்டிட்டன் ஸாரி என்றதும் பளார் என கன்னத்தில் அடித்தவள் எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு வேகமாக போனாள்.

காலேஜ்க்குள் அடிவாங்கிய அவமானம் உடம்பெல்லாம் எரிந்தது. நற நறவென பல்லை கடித்தபடி அப்படியே நின்றிருந்தேன். சில பெண்கள் அதை பார்த்துவிட்டு என்னை கேவலமாக பார்த்தபடி போயினர்.

கோபமாகவே க்ளாஸ்க்குள் நுழைந்ததும் வா மச்சான் என்றான் ஜான். வகுப்பு ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. மதியம் வந்திருந்தது. எதுக்கு அடிச்சா? எவ்ளோ கொழுப்புயிருந்தா இப்படி பண்ணியிருப்பா என மனம் அதிலே தான் சுற்றி வந்தது. லஞ்ச் டைமில் அவள் வகுப்புக்கு தான் போனேன். ஆள்யில்லை. சாயந்தரம் பாத்துக்கலாம் என இருந்தேன். சாயந்தரமும் க்ளாஸ்சில் இல்லை. இரவெல்லாம் தூக்கமேயில்லை. மனதில் கோபம் குறையாமலே இருந்தது. காலையில் எழுந்து சீக்கிரமாக காலேஜ்க்கு வந்த நான் வகுப்புக்கு செல்லாமல் எப்போதும் அமரும் அந்த பெஞ்ச்சில் அமர்ந்திருந்தேன்.

ப்ரியா வருவதை பார்த்துவிட்டு வாடீ வா என்னையா அடிக்கற, உன்ன இன்னைக்கு ஒழிச்சடறன் என கருவிக்கொண்டு அமர்ந்திருந்தேன். சைக்கிளை நிறுத்திவிட்டு வந்தவள் நான் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு அருகே வந்து, நோட்டை பக்கத்தில் வைத்துவிட்டு நோட்டுக்குள் இருந்து எதையோ எடுத்து வலது கையில் கட்ட தொடங்கினாள்.

கறுப்பு கயிற்றை கட்டிவிட்டு கோபம் வரும்போது இந்த கயித்தை தொட்டுப்பாரு எல்லாம் சரியாகிடும்ன்னு எனச்சொல்லிவிட்டு நோட்டை எடுத்துக்கொண்டு திரும்பினால்.

நில்லு.

திரும்பியவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரைவிட்டேன். நான் அன்னைக்கு உன்ன திட்டனதுக்கு நிஜமாவே வருத்தப்பட்டன். அதுக்காக தான் உங்கிட்ட ஸாரி கேட்டன். அது புடிக்கலன்னா நீ என்னை பதிலுக்கு திட்டியிருக்கலாம். அதவிட்டுட்டு என்னை அடிச்சி அசிங்கப்படுத்தனதுக்கு தான் இந்த அடி என பேசியதை கேட்டு அழுகையோடு நின்றுக்கொண்டிருந்தாள்.

அவளின் கண்ணீல் நீரை பார்த்ததும் திடீரென மனம் இறங்கியது. திரும்பவும் அவசரப்பட்டுட்டமோ என எண்ணியபடி ஸாரி கேட்டுடலாம் என நினைத்து தயங்கி தயங்கி ஸாரி ப்ரியா என்றேன்.

பளார்ரென கன்னத்தில் விழுந்தது அடி.

அன்னைக்கு நான் அடிச்சது, இப்ப அடிச்சது என்னை நீ அடிச்சியேங்கறதுக்காக இல்ல. எங்கிட்ட ஸாரி கேட்டயே அதுக்காக தான்.

என்னன்னு தெரியல. உம்மேல எனக்கு இனம் புரியாத பாசம், அன்பு மனசுலயிருக்கு. உனக்கு என்னை திட்டறதுக்கும், அடிக்கறதுக்கும் உரிமையிருக்கு. ஆனா ஸாரி, மன்னிச்சிடுன்னு கேட்கறதுக்கு உரிமையில்ல. நான் என்ன தெருவுல போறவள இடிச்சிட்டமேன்னு ஸாரி சொல்றதுக்கு. உன் ப்ரண்ட். உன் நல்லது கெட்டதுல பங்கு எடுத்துக்கனம்ன்னு நினைக்கறன். நீ அப்படி நினைச்சா, உன்மையிலயே என் மேல அக்கறையிருக்குன்னா இனிமே ஸாரி கேட்காத எனச்சொல்லிவிட்டு கண்ணை துடைத்துக்கொண்டு வகுப்பை நோக்கி நடந்தாள்.

அவள் பேசியதை கேட்டு அதிர்ந்து போய்விட்டேன். இவளுக்கு நான் என்ன செய்துவிட்டேன். பார்த்து, பேசி பழகி சில நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் அன்பு, பாசம்ங்கறா, என்னை அடிக்கற உரிமையிருக்கு நீ என் நண்பன்டாங்கறா. அவளை நாம் தான் புரிந்துக்கொள்ளாமல் விட்டுவிட்டோமோ. ட்ரையின் நட்பு போல் இவளை நினைத்தது தவறோ என மனதில் கேள்விகள்.

மதியம் அவளை பார்க்க க்ளாஸ்க்கு போயிருந்தேன். க்ளாஸ் ரூம் பூட்டியிருந்தது. அடத்த இரண்டு நாட்களும் அவள் காலேஜ் வரவில்லை.

ஜானிடம் ஏண்டா ப்ரியா வரல.

நானும் உங்கூட தானே இருக்கன். எனக்கு என்ன தெரியும்?.

அமைதியாக இருந்ததை கண்டவன் தேவியும் அதுவும் பக்கத்து பக்கத்து வீடுதான். க்ளாஸ் முடிஞ்சி அவுங்க வீட்டுக்கு போய் தேவிக்கிட்ட கேட்டா சொல்லும் என்றான்.

தேவி வீட்டுக்கு நாமதான் இதுக்கு முன்னாடி போனதில்லயே.

ஆமாம் பெரிய ஜார்ஜ்புஷ் வீட்டுக்கு போறோம். பயந்துக்கிட்டே போறதுக்கு வாடா பாத்துக்கலாம்.

சாயந்தரம் தேவி வீட்டு காலிங்பெல் அடித்ததும் தேவியே வந்து கதவு திறந்தவள் ஆச்சர்யமாகி ஏய் வாங்கடா என சந்தோஷத்தில் அம்மா என் ப்ரண்ட்ஸ் வந்திருக்காங்க என கூச்சலிட்டாள். உள்ளிருந்து வந்தவர்கள் வாங்கப்பா என்றார்கள்.

வர்றோம்மா என்றதும் எங்களை அறிமுகப்படுத்தி வைத்தாள். குடும்பத்தை பற்றி விசாரித்தவர்கள் டீ போட்டு எடுத்து வர்றன் என உள்ளே போனார்.

அதிசயமா இருக்குடா நீங்க வீட்டுக்கு வந்தது. இப்பவாவுது வீட்டுக்கு வரனம்ன்னு தோனுச்சே என்றவளிடம் ப்ரியாவை பத்தி எப்படி கேட்பது என தயங்கிக்கொண்டே இருந்ததை கவனித்தவள்.

என்னப்பா ஒருமாதிரியா இருக்க என கேட்டாள்.

ஓன்னும்மில்ல எனும்போதே தேவி அம்மா டீ கொண்டு வர வாங்கி குடிக்க ஆரம்பித்தோம்.

ம்மா. இவுங்க நம்ம ப்ரியாக்கூட தான் படிக்கறாங்க. அவ வீட்டுக்கும் கூட்டிட்டு போய் காட்டிட்டுட்டு வர்றன் என சொல்லிவிட்டு அழைத்தும் போனாள்.

வீடு சிறியது தான் வீட்டின் முன் இருந்த புங்கமர, வேப்பமர காற்றும், மல்லிப்பூ வாசனை நாசியை துளைத்தது. கதவு திறந்தேயிருந்தது.

ஆன்டி என அழைத்தபடி தேவி முன்னே போனால். வாடீயெம்மா என்ற குரல் வர வாசலில் தயங்கி நின்றோம். சமையல் கட்டில் இருந்து ஜன்னல் வழியாக எங்களைப்பார்த்தவர் உள்ள வாங்கப்பா என ஹாலுக்குள் வந்தவர் உட்கார வைத்தார்.

இதல யாருப்பா ராஜா?.

எடுத்ததுமே இந்த கேள்வி கேட்டதும் புரியாமல் நான்தாம்மா.

உன்னப்பத்தி நிறைய சொல்லியிருக்கறா. அவளுக்கும் உனக்கும் என்ன சண்டை என அடுத்த அஸ்திரத்தை எய்தபோது அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை.

இரண்டு நாளா அவ சரியாவே சாப்பிடல. கேட்டதுக்கு நீ அவளை திட்டிட்டன்னு சொன்னா அதான் கேட்டன். நீ எப்படியும் வருவன்னு சொல்லிக்கிட்டேயிருந்தா. இப்பத்தான் அவுங்க அப்பா வரச்சொன்னாருன்னு போனா வந்துடுவா. டீயா? காபியா? ஏன கடகடவென பேசினார்கள்.

இப்பத்தான் ப்ரியா வீட்ல சாப்ட்டோம். கொஞ்ச நேரமாகட்டும் என்றதும் அப்ப சுவீட்டாவது சாப்பிடுங்க. இல்ல இருக்கட்டுமா ?.

அவுங்கயெல்லாம் நம்ம வீட்ல சாப்பிடமாட்டாங்க என்றபடி உள்ளே வந்தாள்.

அய்யோ டைம்மாகிடுச்சே நான் போய் பால் வாங்கி வந்துடறன் ஸ்வீட் எடுத்து வை என ப்ரியா அம்மா சொல்லிவிட்டு பால் கிண்ணத்துடன் வெளியே போனார்.

லூசா நீ. சண்டைபோட்டதெல்லாம் வீட்ல சொல்லிவச்சியிருக்கற.

நான் எங்கம்மாக்கிட்ட எதையும் மறைச்சதில்ல.

நான் அடிச்சத, நீ என்னை அடிச்சதக்கூட சொன்னீயாக்கும்?.

மறந்துட்டன் சொல்லிடறன்.

உடனே ஜான், இது எப்படா நடந்துச்சி. சொல்லவேயில்ல.

போஸ்டர் அடிச்சி ஒட்டறன்.

இவன்க்கிட்ட சொல்லியிருந்த மைக், செட் வாடகைக்கு எடுத்து ஊர் முழுக்க பரப்பியிருப்பான் என ஜான் கிண்டலடிக்க. நீ மட்டும் யோக்கியமா?. நீ லட்டர் எழுதி ஜனாதிபதிக்கே தகவல் சொல்லியிருப்ப. நீ என்னைப்பாத்து சொல்ற.

ஏய் நிறுத்துங்க உங்க சண்டைய என்றபடி. ஆமாம் எதுக்கு இரண்டு நாளா காலேஜ் வரல?.

உன்ன வீட்டுக்கு வர வைக்கனம்ன்னு தான் லீவு போட்டன்.

அய்ய மூஞ்ச பாரு.

எம் மூஞ்சி நல்லா தான் இருக்கு.

இரண்டு பேரும் அடிவாங்கப்போறிங்க பாரு என கோரஸாக தேவியும், ஜானும் சொல்ல. சைலண்டானோம்.

தொடரும்…………


சுகமான சுமைகள்.......... பகுதி 15


சனி, பிப்ரவரி 04, 2012

திண்டாட்டத்தில் திமுக................




திமுகவின் பொதுக்குழு, செயற்குழுவில் களோபரம் என்பது ஒன்றும் புதியதல்ல. ஈ.வி.கே.சம்பத், எம்.ஜி.ஆர், வை.கோ போன்ற சிலர் திமுகவை விட்டு வெளியேறும் போது ஏதாவது ஒரு கலகத்தை உருவாக்கிவிட்டு தான் போவார்கள். காராசாரமாக, அடிதடி வரை கூட அது போய்வுள்ளது. இது ஜனநாய கட்சி அப்படித்தான் இருக்கும். 

ஆனால் தற்போது நடக்கும் சண்டை வெளியே போவதற்காக நடப்பதல்ல. உள்ளேயே கலகத்தை உருவாக்கி பதவியை பிடிக்க நடக்கும் சண்டை. இந்த சண்டையில் ஈடுபட்டுயிருப்பவர்கள் கழகத்தை கடந்த 50 ஆண்டுகாலமாக சோதனைகளை சாதனையாக்கி இயக்கத்தை வழிநடத்தி வரும் கலைஞரின் பிள்ளைகள் தான் தற்போது அடித்துக்கொண்டு தங்களுக்குள் கோஷ்டியை உருவாக்கிக்கொண்டு இயக்கத்தை கரையான்போல் அரித்துக்கொண்டுயிருக்கிறார்கள். 

திமுகவுக்கு தலைமை தாங்கப்போகிறவர் கலைஞர்க்கு பின் மு.க.ஸ்டாலின் என்பது கழகம் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் அறிந்ததே. அவர் கலைஞரின் பிள்ளை என்பதற்காக மட்டுமல்ல. கழகத்திற்கான அவரது உழைப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. கலைஞர்க்கு அடுத்து தமிழ்நாட்டில் ஸ்டாலின் கால் படாத கிராமங்கள் இல்லை எனக்கூறும் அளவுக்கு கட்சிக்காக வலம் வருபவர். இன்றும் சிறைச்சாலை செல்வது முதல் போராட்டத்துக்கு தலைமை தாங்குவது வரை முன்னணியில் நிற்க்கிறார் பதவிக்கு வருவதில் மட்டும் பின் தங்கியே இருந்தார். இன்று இயக்கத்தில் தலைவர் தேர்தல் நடத்தினாலும் தொண்டர்களின் ஏகபோக ஆதரவு ஸ்டாலின்க்கு கிடைக்கும். அவர் தலைவர் பதவிக்கு ஆசைப்படுவதில் தவறில்லை. 

ஆனால் ஸ்டாலின்க்கு போட்டியாக கட்சியில் முக்கிய பதவிக்கு ஆசைப்படும் அழகிரி, கனிமொழி அப்படியல்ல. கலைஞரின் மகன் என்ற பந்தாவையும், பின்னணியையம் கொண்டு கட்சிக்குள் வந்தவர் அழகிரி. மதுரையை மையமாக கொண்டு முரசொலி இதழை கவனித்துக்கொள்ள சென்றவர் படிப்படியாக கட்சி விவகாரங்களில் மூக்கை நுழைத்து முத்த தலைவர்களை இழிவு படுத்தியவர். இவரின் தொல்லைகளால் கட்சியினர் அதிகம் பாதிக்கப்பட்டனர். 

அதேவேலையில், தென்மாவட்டங்களில் கட்சி வளர்ச்சிக்காக உழைத்தார் மறுக்க முடியாது. மற்றப்படி அவர் இயக்கத்துக்காக இதுவரை எந்த தியாகமும் செய்ததில்லை அப்பன் பதவி தம்பிக்கு போகிறதே என்பதற்காக தனக்கும் பதவி வேண்டும்மென வீம்புக்கு தென்மாவட்ட அமைப்பு செயலாளர் பதவி வாங்கினார். எம்.பி சீட் வாங்கி மத்தியமைச்சராகியுள்ளார். திமுக தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலில் இருக்கும்போது வீரவசனம் பேசிய அழகிரி ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வாரன பின் அவரின் நடவடிக்கை கண்டு பயந்து பதுங்கி கிடக்கிறார் அஞ்சநெஞ்சன். 

அந்த குடும்பத்துக்காறங்க மட்டும் தான் பதவிக்கு வரனுமா? ஏன் பொண்ணு வரக்கூடாதா என இராஜாத்தியம்மாளின் சக்களத்தி சண்டையால் கனிமொழி பதவிக்கு கொண்டு வரப்பட்டார். ஸ்பெக்டராம் ஊழல் விவகாரத்தில் சிறைச்சென்றார். அவரால் கட்சிக்கு கிடைத்தது?. கலைஞர் தொலைக்காட்சி குழுமம் மட்டும் தான். அதை தவிர வேறில்லை. இவர்கள் இருவரும் அடுத்த தலைவர் பதவிக்கு ஆசைப்படுவது எந்த விதத்தில் நியாயம்?. 

கட்சியில் ஒரு மாற்றத்தை கொண்டு வர நினைக்கும் போது இவர்கள் பின்னால் இருப்பவர்கள் தான் எதிர்க்கிறார்கள். தலைமையை எதிர்த்து கேள்வி கேட்டு வீரபாண்டி ஆறுமுகம் கர்ஜிக்கிறார் இதை காணும் போது உண்மையான ஜனநாயகம் திமுகவில் இருப்பதை கண்டு மகிழ்ச்சிக்கொள்ள வேண்டியுள்ளது. இது தமிழகத்தில் மற்ற கட்சிகளிடத்தில் இல்லை. அதற்காக மாவட்ட செயலாளர்கள் 3 முறைக்கு மேல் பதவியில் இருக்கக்கூடாது என்ற விதி தவறானது என வீரபாண்டிஆறுமுகம் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

காரணம், கட்சி தொடங்கிய போது ஒருவர் மாவட்ட செயலாளராக இருப்பார். அவர் இறந்தபின் அவரது பிள்ளை வருவார். அவன்போன பின் அவனது பிள்ளையிருக்கும். கட்சி பதவியில் தான் அப்படியென்றால் எம்.எல்.ஏ சீட், எம்.பி சீட் முதல் கவுன்சிலர் பதவி வரை இதே நிலை திமுகவில் மட்டுமே நீடிக்கிறது. அமைச்சராக, சேர்மனாக இருப்பவர்கள் கூட அந்த ஐந்து ஆண்டு காலத்திற்க்கு தங்களது கட்சி பதவியை விட்டு விலகி இருக்க மறுக்கிறார்கள். இப்படியிருந்தால் எப்படி கட்சி வளரும். 

ஸ்டாலின் தற்போது மாவட்டந்தோறும் சென்று இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார். நான் கேட்கும் கேள்வி?. இளைஞர் அணியில் இருப்பவர்களில் ஒருவரை அதற்க்குண்டான பதவிக்கு கொண்டு வருகிறிர்கள். நிச்சயம் ஏற்றுக்கொள்ள கூடியது. அதே நேரத்தில், நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் முன் கட்சியில் புதிய இளைஞர்களை சேர்த்துள்ளீர்களா?. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞர்களை கட்சியில் சேர்க்கும் பணியை திமுக செய்யவில்லை என்பதே எதார்த்தம். 

அதிமுக இளம்பெண் - இளைஞர் பாசறை ஆரம்பித்தபோது கொத்து கொத்தாக போய் சேர்ந்தார்கள். அதேபோல் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோதும் அதில் தன்னை இணைத்துக்கொண்டார்கள். கட்சி பதவிகள் கிடைத்தது. கடந்த சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலின் போது திமுகவுக்கு களப்பணியாற்ற இளைஞர்கள் இல்லை என்பதே எதார்த்தம்.  

அதிமுகவில் இருந்து வந்தவர்களை வாங்க வாங்க என அழைத்து பதவிகள் தந்து, காலம்காலமாக கட்சிக்கு கஸ்டப்பட்டவனை நடுத்தெருவில் நிறுத்தும் பணியை ஸ்டாலின் செய்வதால் தான் கட்சிக்காரன் அழகிரி பின்னால் போகிறான் இதை முதலில் ஸ்டாலின் உணர்ந்துக்கொள்ள வேண்டும். 

அதேபோல் கட்சியில் மாற்றம் என்பது படிப்படியாக செய்யவேண்டியது. இந்த நிமிடம் வரை பதவியில் இருப்பவர்கள் தான் அதிகம் சம்பாதித்து மூட்டை கட்டி வைத்துள்ளார்கள். இவர்கள் தான் வரும் ஐந்து ஆண்டு காலத்திற்க்கு செலவு செய்யவேண்டும். புதியதாக கட்சியில் சேர்க்கப்படும் இளைஞர்களுக்கு திமுகவின் வரலாற்றை கற்று தர வேண்டும். 

ஏன் இதைக்கூறுகிறேன் என்றால். பொறுப்பு தர இளைஞர் அணியினருடன் ஸ்டாலின் நடத்தும் நேர்காணல்களில், இளைஞர் அணியின் அமைப்பாளர் யார் என்ற கேள்விக்கே பதில் தெரியவில்லை. இவர்களுக்கு எங்கிருந்து வரலாறு தெரியபோகிறது. கட்சி என்பது பதவிக்கானது மட்டுமல்ல, போராட்டத்துக்குமானது, மக்களுக்குமானது என்பதை உணர்த்த வேண்டும். அப்போது தான் வளர்ச்சியை நோக்கி வீர நடை போட முடியும். 

ஸ்டாலின்க்கு பொறுப்பு தருவதில் ஆகட்டும், கட்சியை சீரமைப்பு செய்வதிலாகட்டும் தயக்கம் காட்ட கூடாது. தயங்கினால் வருங்காலம் இருண்டகாலமாகி விடும். 


புத்திரர்கள் மீதான பாசத்தில் தவிக்கும் கலைஞர் உறுதியான முடிவு எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறார். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் இயக்கத்துக்கே இழப்புகள்..........

வெள்ளி, பிப்ரவரி 03, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 15.




என்னடா மச்சான் சினிமா அதுக்கு புடிக்காதுன்ன அதுவும் தேவிக்கிட்ட நீ போடீங்குது என்னடா நடந்துச்சி உங்களுக்குள்ள என காலேஜ் மதியமே முடிந்தாலும் வீட்டுக்கு போகாமல் ரூம்க்கு வந்து கேட்டுக்கொண்டுயிருந்தான். 

சும்மா சொன்னான். அதுவும் திடீர்ன்னு நான் வரலன்னு சொல்லுதுன்னா அதுக்கு நான் என்ன பண்றத்து. 

இல்ல நீ எதையோ மறைக்கற.

உங்கிட்ட எதையாவது மறைச்சியிருக்கறனா. சத்தியமா ஒன்னும் மறைக்கலடா. வேணும்ன்னா நாளைக்கு அதுங்கிட்டயே ஏன் படத்துக்கு போகலன்னு கேட்டு சொல்றன் என்றதும் சமாதானமாகி சென்றான். இரவு முழுவதும் நாம சொன்னதுக்காக போகலயா? உண்மையாலுமே போக புடிக்கலயா என மனதிற்க்குள் கேள்வி எழுந்தது. 

காலை எழுந்ததும் சீக்கிரமாக கிளம்பி காலேஜ் புறப்பட இருடா மச்சான் நானும் வர்றன் என்ற ரமேஷ்சிடம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் முன்னாடி போறன் நீ பின்னாடி வா எனச்சொல்லிவிட்டு வந்தோன். அவளுக்காக நேற்று அமர்ந்திருந்த அதே சிமெண்ட் பெஞ்ச்சில் காத்துயிருந்தேன். 

மச்சான் என கையாட்டியபடி ஜான் வந்து அருகில் அமர்ந்தான். 

என்னடா சீக்கிரம் வந்துயிருக்க?.

நீ தான் நேத்து என்னை கேள்வி மேல கேள்வி கேட்டயில்ல. ப்ரியாக்கிட்ட கேட்டு பதில் சொல்றன் எனும் போதே சைக்கிள் ஸ்டாண்டில் இருந்து ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டு வந்தவள் எங்களை பார்த்துவிட்டு உடன் வந்தவளை அனுப்பிவிட்டு எங்களை நோக்கி வந்தாள். 

மச்சான் நீ எதுவும் கேட்காத நான் கேட்கறன். 

என்ன கேட்கப்போற. ஏடாகூடமா ஏதாவது கேட்டு பிரச்சனையாக்கிடாதா. ப்ரியா அருகில் வந்து ஹாய் என்றாள். காலேஜ் வந்திருக்கிங்க மழை வரப்போகுது பாரு. 

மழை வந்தா சந்தோஷம் தானே. போதும்டா என தோளை அழுத்தி பிடித்த ஜான். 

முதல்ல நான் கேட்கற கேள்விக்கு பதில் சொல்லு. நேத்து சினிமாவுக்கு போறன்னு தானே நீயும், தேவியும் சொன்னிங்க. கிளம்பறப்ப இவன் உனக்கு சினிமாவே புடிக்காதுன்னான். நீயும் நான் வரலன்னிட்ட. இவனை கேட்டா சும்மா சொன்னன்டாங்கறான். எதுக்கு நீ சினிமாவுக்கு போகல. நேத்து நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டிங்க. அகிலனை கேட்டா அது என்ன மிரட்டுச்சி அதனால வந்துட்டன் அவுங்க இரண்டு பேரும் தான் பேசிக்கிட்டு இருந்தான்கிறான். என்ன பேசனிங்கங்கற உண்மை எனக்கு தெரியனும். 

நீ ஒன்னும் தெரிஞ்சிக்க வேணாம். வாய மூடு. 

டேய் கம்முனு இருடா.

உனக்கு தெரியாதுன்னிட்ட. விடு நான் அதுங்கிட்டதானே கேட்கறன்.  

அப்படியா. என் மேல இருக்கற அக்கறையில படம் புடிக்காதுன்னு சொன்னதால நான் சினிமாவுக்கு போகல என சூடான ப்ரியா. இப்ப இங்கயிருந்து போறியா அடிவாங்கறியா என்றாள். 

கத்திரிக்காய் முத்தனா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகனும் அப்ப பாத்துக்கறன் என எழுந்து நடந்தான். 

அழுவி போன குப்பைக்கும் போகும் அதையும் தெரிஞ்சிக்க என்றாள். 

அவனை எதுக்கு திட்டற. 

லூசு மாதிரி கேள்வி கேட்டா திட்டாம என்ன செய்வாங்களாம். 

சரி நேத்து நீ ஏன் படத்துக்கு போகல?.

உண்மையாலுமே போக விருப்பம்மில்ல என்றவள் வகுப்பை நோக்கி சென்றுக்கொண்டிருந்த இரண்டு பெண்களை கைகாட்டி அழைத்தாள். அவள்கள் அருகே வந்ததும் இவளுங்க என் கிளாஸ் ப்ரெண்ட்ஸ். அவ சவிதா, இவ கீதா என்றவள் என்னை அறிமுகப்படுத்தினாள். எம்பேரு ஜான் என பின்னால் இருந்து குரல் வந்தது. திரும்பிபார்த்தபோது, 5 அடி தூரத்தில் சிரித்துக்கொண்டு நின்றிருந்தான். எனக்கும் ப்ரியாவுக்கும் சண்டை அதனால தான் என்னை அறிமுகப்படுத்தல. நானும் இவனும் திக் பிரண்ட்ஸ், ஒரே க்ளாஸ் என்றான். 

சார் ரொமான்ஸ் மன்னன். ஜாக்கிரதைப்பா என ப்ரியா தன் நண்பிகளிடம் சொல்ல. 

சும்மா சொல்றாங்க. நான் என் மச்சானை போல நல்லவன் என நெருங்கி வந்து என் தோள் மேல் கைவைத்தான். 

நான் நல்லவன்னு எப்படா உங்கிட்ட சொன்னன். 

மச்சான் விளையாடாதடா. நாமயெல்லாம் ப்ரண்ட்ஸாகியிருக்கோம் ட்ரீட்டெல்லாம் கிடையாதா ?. 

இதுக்கெல்லாம்மா ட்ரீட்டு என கீதா ஆச்சர்யமானால். 

பொண்ணுங்க ஒருத்தனை பார்த்து சிரிச்சாலே அவன்க்கிட்ட ட்ரீட் கேட்கற ஆளுங்க நாங்க. இரண்டு டீம் ஒன்னாயிருக்கு ட்ரீட் இல்லன்னா எப்படி. 

ஆமாம். இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் டீம்மு ஒன்னாயிருக்கோம். போட டேய் என்றேன். 

பாய்ஸ்சும் கேள்ஸ்சும் ப்ரண்ட்ஸ்ஸாகறதுன்னா சும்மாவா என ஜான் திருப்பி கேட்டான். 

நீ சொல்றதும் கரெக்ட் தான் மச்சான். ஈவ்னிங் பார்ட்டி நிச்சயம் செலவெல்லாம் ஜான்து என்றதும் மூன்று பெண்களும் கோரஸாக ஒ.கே சொல்லி சிரித்தனர். ஜான் என்னை கடுப்பாக முறைக்கவும் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது. 

லஞ்ச் டைமில் என்ன மச்சான் இப்படி பண்ணிட்ட என கேட்க உடன் இருந்த தயா, ரமேஷ்;, அகிலனும் என்னடா என கேட்டார்கள். 

நம்ம ஜான் ஈவ்னிங் ட்ரீட் தர்றான் என சொன்னதும். 

எதுக்குடா என அகிலன் ஆர்வமாக. 

நடந்ததை சொன்னதும் அப்பாடா நைட் சமைக்கற வேலை மிச்சம் என்றான் ரமேஷ். 

நீங்களுமாடா என ஜான் டென்ஷனாக. 

வா மச்சான் யார்க்கு செலவு பண்ற. உன் நண்பன்களுக்கு தானேடா என தயா பிட்டை போட. 

காசுயில்லடா.

அமெரிக்காகாரன் இலங்கையை பாத்து பயப்படுறான்னு சொல்லு நம்பறன். உன்கிட்ட காசுயில்லன்னு சொன்னா நம்பமாட்டன் என்றேன். 

செலவுக்குன்னே வாங்கடா என புலம்பியபடி வந்தான். 

மாலை 6மணிக்கு வேலூர் கோட்டை பூங்காவில் அங்காங்கே சிலர் அமர்ந்து பேசிக்கொண்டுயிருந்தனர். ஜான், ரமேஷ், நான், தயா, அகிலன்னும் பூங்கா வெளியே காத்திருக்க மூன்று பெண்களும் சைக்கிளில் வந்தனர். தயாவையும், ரமேஷ்சையும் அறிமுகப்படுத்தியபின். எந்த ஹோட்டலுக்கு போலாம் என ப்ரியா கேட்டாள். ஒவ்வொரு பேராக அலசப்பட்டு கடைசியில் சுரபி என முடிவானது. 

எனக்கு நான்வெஜ் தான் வேணும். 

டேய் சும்மாயிருடா என முறைத்தான் ஜான். 

வெஜ்டேரியன் போகலாம் என ப்ரியா சொல்ல மற்ற பெண்களும் அதற்கு தலையாட்டினர். 

ஒருவழியாக ஒத்துக்கொண்டு கிளம்ப இருங்கடா போகலாம் என தயா நிறுத்தினான். 

ஏண்டா?. 

இருடா சொல்றன். 2 நிமிடம் என்பது 20 நிமிடமாக போயிடலாம் போயிடலாம் என்றானே தவிர கிளம்பவில்லை. 

டேய் இவனுங்க ரெண்டு பேரும் அவுங்க ஆளுங்கள வரச்சொல்லியிருப்பானுங்க. அதான் நிக்கறானுங்க என்றதும் 

மச்சான் எப்படிடா இவ்ளோ கரெக்டா சொல்ற என்றான் ரமேஷ். 

கடுப்பாக என்னைப்பார்த்தான் ஜானிடம் கெஸ்ல சொன்னன். அதுக்கு எதுக்குடா என்னை முறைக்கற என்றேன் கடுப்புடன். ஜான் முகத்தை திருப்பிக்கொண்டான். 

சொன்னது போலவே அந்த இரண்டு பெண்களும் வந்தனர். ரமேஷ் அருகே வந்த பெண்ணை காட்டி இவுங்க சத்தியா என்றான். தயாவோ இவுங்க மீனா என்றான். அறிமுகப்படலம் முடிந்ததும். சைக்கிளில் தான் கிளம்பினோம். 

மயிரு மாதிரி எல்லார்க்கிட்டயும் சொல்லிட்ட இப்ப இவ்ளோ பேர்க்கு எப்படி பில் தர்றது காசுயென்ன மரத்தலயா காய்க்குது என சைக்கிளில் வரும்போதே என்னிடம் கோபப்பட்டுக்கொண்டு வந்தான். 

ஏய் அவனுங்க அழைச்சி வர்றானுங்க. அதுக்கு என்னப்பண்றத்து. 

நீ ஒன்னும் சொல்ல வேணாம் மூடிக்கிட்டு வா?.  

டேய் சும்மா பேசாத ட்ரீட் கேட்ட. நீ தருவன்னு நான் ஜாலியா சொன்னன். நீ அப்பவே முடியாதுன்னு சொல்லியிருக்கனும். இப்ப வந்து என் மேல கோபப்பட்டா என்னடா நியாயம். 

எல்லார்க்கும் ஓசியில வாங்கி தர்றதுக்கா எங்கப்பன் என்னை பெத்து விட்டுயிருக்கான் என்றதும் கடுப்பாகி அவனை முறைத்தேன். சைலண்டாக ஹோட்டலுக்குள் போய் 10 பேரும் ஒரே டேபிளில் அமர்ந்தோம். தோசை, சோளாபூரி, இட்லி என ஆளாளுக்கு ஆர்டர் தந்தனர். நான் அமைதியாக இருந்ததை பார்த்து உனக்கு என்னப்பா என்றார்கள் முதல்ல இரண்டு இட்லி தாங்க என்றேன். 

ஜாலியாக பேசியபடி சாப்பிட்டு கொண்டிருக்க எனக்கோ ஜான் சொன்ன வார்த்தைகள் மனதை நெருடிக்கொண்டேயிருந்தன. மற்றவர்கள் முன் அதைக்காட்டிக்கொள்ளாமல் போலியாக முகத்தில் சிரிப்பை வரவைத்துக்கொண்டு பேசிக்கொண்டுயிருந்தேன். ஜான் என் அருகில் அமர்ந்திருந்தும் அவனும் என்னிடம் பேசவில்லை, நானும் அவனிடம் பேசவில்லை. 

சாப்பிட்டு முடித்ததும் பில் கொண்டு வரும்போதே சர்வர்க்கு கண் சைகையிலேயே பில்லை என்னிடம் கொண்டு வா என்றேன். அவன் கொண்டு வந்து வைக்க பில் பார்த்தேன் 460 ரூபாய் என இருந்தது. பாக்கெட்டில் இருந்த 100 ரூபாய் தாள்கள் ஐந்தை எடுத்து வைத்தேன். 

ஏய் இருடா என்றான் ஜான். 

ட்ரீட் ஜான் தர்றான்னு தானேடா சொன்ன நீ எதுக்கு காசு தர என கேட்டான் அகிலன். 

யார் தந்தா என்னடா. 

இல்ல நான் இத ஒத்துக்க மாட்டான் என காசை பிடுங்க ப்ரியா கையை பிடித்தாள்.  

விடு ப்ரியா. 

முடியாது. 

ஏய்………… அறிவில்ல. விடுடீ. பெரிய இவளா நீ என கத்த ப்ரியாவே அதிர்ந்து போனாள். மற்றவர்களும் அதே நிலையில் இருக்க அவளது கையை தட்டிவிட்டு காசை தந்து நீங்க போங்கண்ணே என சர்வரை அனுப்பிவிட்டு வேகவேகமாக ஹோட்டலை விட்டு வெளியே வந்தேன்.