செவ்வாய், பிப்ரவரி 14, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 19.




துளசியண்ணன் காரின் உள்ளே அமர்ந்திருந்தார். எனக்கு ஆனந்த அதிர்ச்சி. 

துளசியண்ணன் பெயரை கேட்டாலே எங்கவூர் மட்டுமல்ல, அக்கம் பக்க ஊரில் காவாளி தனம் பண்ணுபவர்கள் மிரளுவார்கள். யாருக்கும் பயப்படமாட்டார். நான் ஏழாவது படிக்கும் போது ஏரிக்கரை ஓரத்தில் சாராயம் காய்ச்சி லாரி டியூப்களில் நிரப்பி வியாபாரிகளுக்கு அனுப்பி வைப்பார். ஊரில் திருவிழா என்றால் அதிகம் பணம் தருபவராகவும், தெருக்கூத்து செலவு அவருடையதாக இருக்கும். 

அடிக்கடி அப்பாவை காண வீட்டுக்கு வருவார். என்னடா படிக்கற என அக்கறையாக விசாரிப்பார். அப்பாவிடம் மரியாதையாக நின்றே பேசுவார். நான் யார் பிரச்சனைக்கும் போறதில்ல. அவுங்களா வர்றாங்க. தப்பு பண்ணான்னு தெரிஞ்சா நாலு தட்டு தட்டி அனுப்பறன். மத்தப்படி எதுவும்மில்ல. நீங்க என் அப்பா மாதிரி நீங்க எது சொன்னாலும் கேட்டுக்கறன்.

குடிகாரன் இருக்கற வரைக்கும் நீ இந்த தொழிலை விடப்போறதில்ல. நீ விடலாம்னு நினைச்சாலும் போலிஸ்காரன் விடப்போறதில்ல. புலி வாலு புடிச்ச மாதிரி தான். நீ தொழில மட்டும் பாத்தா பிரச்சனையில்ல. ஆனா சுத்துப்பட்டு கிராமத்து பிரச்சனையில தலையிடற. போனவாரம் மளிகை கடைக்காரன் பையன் கைய உடைச்சியிருக்க. அவன் நான் போலிஸ்க்கு போறன் ஊர் நாட்டாமைக்காரங்க என்ன சொல்றிங்கன்னு கேட்கறான். உன்னால பாதிக்கப்பட்டவன்ங்க ஒன்னா சேர்ந்து உனக்கு எதிரா பேசறான் அது உனக்கு நல்லதில்ல. 

ஊர்க்காரங்க தலையிடாதிங்க நாங்க பாத்துக்கறோம்ன்னு பக்கத்து ஊர்க்காரங்க சொல்றாங்க. என்ன பதில் சொல்றது. ஏதாவது ஓன்னுக்கிடக்க ஒன்னு ஆச்சின்னா என்னப்பண்றத்து. குடும்பத்துக்கு நல்லதில்ல. 30 வயசுக்குள்ளாற நிறைய பாத்துட்ட போதும் பிரச்சனையில்லாம வாழ பாரு. கொஞ்ச நாளைக்கு டவுனுல குடியிரு. தொழில் மட்டும் நடக்கட்டும் என சொன்னதை கேட்டு சரிங்கப்பா என கிளம்பியவரிடம், இந்த தொழிலையே நம்பியிருக்காத. பணம் கிணம் சேத்து வச்சியிருந்தா லாரி ஏதாவது வாங்கிப்போடு. பணம் வேணும்ன்னா கேளு தர்றன். இந்த காய்ச்சற வேலைய விட்டுடு பசங்கள நல்லா படிக்க வைக்க பாரு என்றார். 

அதற்கடுத்த சில நாளில் டவுனில் வீடு பாத்துக்கொண்டு போய்விட்டார். வேலூரில் வந்து பாலாற்றில் இருந்து மணல் எடுத்து வியாபாரம் செய்வதாக ஒருமுறை அப்பாவிடம் வந்து சொல்லிவிட்டு போனார். வேறு ஒருவர் மணல் விக்கறதோட சாரயத்தல கலக்கற ஸ்பிரிட்ட ஆந்திராவுல இருந்து ஆளுங்கள வச்சி கடத்திவந்து விக்கறாரு என்றார்கள். 

அவர் தான் காரில் இருந்தார். என்னைப்பார்த்து என்னடா இங்க என்றார். இங்கதான்னே பி.காம் படிக்கறன். செகண்ட் இயர்ண்ணே. 

நம்மவூர்ல முதல் டிகிரி வாங்கப்போறவனாடா நீ. சந்தோஷமா இருக்கு. அப்பா, அம்மாயெல்லாம் சவுக்கியமா?. 

நல்லாயிருக்காங்கண்ணே எனும்போது காரை விட்டு இறங்கியவர். தினமும் வீட்டுக்கு போய்ட்டு வர்றியா ?. 

இல்லண்ணே இங்க தான் ரூம் எடுத்து நானும் இன்னோரு ப்ரண்ட்டும் தங்கியிருக்கறோம் என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே தூரத்தில் நின்றிருந்த நான்கு பேரும் எங்களை நோக்கி வேகவேகமாக வந்தனர். 

செகண்ட் இயர் படிக்கறன்னு சொல்ற. என்ன பாக்கனம்ன்னு தோணலயா? இல்ல உங்கப்பா அங்கயெல்லாம் போககூடாதுன்னு சொன்னாற என பேசியவர் என் பார்வை அவரின் பின்னால் போவதை கண்டு யார் என திரும்பி பார்த்தார். 

அவர் திரும்பியதும் வணக்கம்ணே என்றார்கள் நான்கு பேரும். காலேஜ்ஜாண்ட உங்களுக்கு என்னடா வேலை?. 

இல்லண்ணே அது வந்து என இழுத்தான்கள். 

பொண்ணு மேட்டரா ? பையன் மேட்டரா? 

பையன் மேட்டர்ன்னே. 

காலேஜ் பசங்க விவகாரத்தல உஷாரா இருக்கனும் இல்ல நம்மள காலி பண்ணிடும். 

என்ன விவகாரம் ?. 

இவனை அடிக்கச்சொல்லி ரவி கூப்ட்டு வந்தாண்ணே என என்னை காட்டியதும் துளசியண்ணன் கோபமாகி சொன்னவன் கன்னத்தில் பளார் என அறைந்தார். 

போய் அந்த நாயை கூப்டுக்கிட்டு வா என்றதும் ஒருவன் ஓடினான். 

உனக்கும் அவனுக்கும் என்னடா பிரச்சனை ?. 

நடந்ததை சொல்ல சொல்ல ம் கொட்டி கேட்டுக்கொண்டுயிருந்தார். ரவி வந்து வணக்கம்ண்ணே என கைதூக்கியதும் பளார் என அவனையும் ஒரு அடி போட்டவர். காலேஜ்குள்ள பிரச்சனையானா அடிக்க ஆள் வைப்பியா? 

இல்லண்ணே இல்லண்ணே என்றான். 

இவன் என் தம்பி மாதிரி. இவனை யாராவது தொட்டிங்க ஒழிச்சிடுவன் ஒழிச்சி. அடிக்க கூப்டா யார் என்னன்னு கேட்காம வந்துடுவிங்களாடா என கேட்டதும் நம்ம பையனை ஒருத்தன் அடிச்சான்னதும் வந்துட்டம்ன்னே. 

நைடடு ஜிம்க்கு வந்துடுங்க.

சரிண்ணே எனச்சொல்லிவிட்டு கிளம்பியவுடன் நம்ம பசங்க தான் இனிமே உன் நிழலை கூட தொடமாட்டானுங்க. வீட்டுக்கு வா பேசிக்கலாம் என்றவர் அட்ரஸ் தந்தவர் செலவுக்கு ஏதாவது வேணும்னாலும் கேளுடா. தயங்காத. 

இல்லண்ணா பரவாயில்ல என அவசரமாக மறுத்ததும் உங்கப்பா மாதிரி இருக்காதடா காலம் மாறுது அதுக்கு ஏத்த மாதிரி நீயாவது மாறு என்றவர் காரில் ஏறி கிளம்பினார். 

அவர் போனதும் அப்பாடா தப்பிச்சோம் என நினைக்கும்போதே மச்சான், அவரை உனக்கு தெரியுமாடா என கேட்டபடியே வந்து நின்றான் ஜான். 

எங்க ஊர்க்காரர் தான். ஏன் கேட்கற?. 

அவர் தான் இன்னைக்கி வேலூர்ல பெரிய ரவுடி. நீ பெரிய ஆளுதாண்டா. இத வச்சியே சீனியர் பசங்கள கூட மிரட்டலாம். 

அதெல்லாம் ஒன்னும் வேணாம் வா என திரும்பிய போது தான் அவளை பார்த்து அதிர்ந்து போனேன். தூரத்தில் சைக்கிளில் நின்றபடி இங்கு நடப்பதை பார்த்துவிட்டு நான் பார்ப்பதை கண்டு கிளம்பி போனால் ப்ரியா. 

தொடரும்…………


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக