செவ்வாய், ஜூலை 29, 2014

மரண விருந்தாகும் மொய் விருந்து.



கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா, பிறந்தநாள் விழா போன்ற சடங்குகளுக்கு செல்பவர்கள் மரியாதைக்காக தங்களால் முடிந்த அளவுக்கு மொய் எழுதுவது வழக்கம். அது பணமாகவோ அல்லது தங்க நகையாகவோ, வெள்ளி பொருளாகவோ இருக்கும்.

மொய் வைப்பதற்க்கு காரணம், ஒரு சடங்கு செய்பவன் கடனை வாங்கி செய்வான். அவன் கடனால் நொடிந்துப்போய்விடக்கூடாது என்பதற்காக சம்மந்தப்பட்ட குடும்பத்துக்கு நம்முடைய சிறு உதவியாக இது இருக்கட்டும் என்பதற்காக சடங்கில் கலந்துக்கொள்பவர்கள் செய்யும் உதவியே மொய் வைத்தல் எனச்சொல்லப்பட்டது.

ஆனால் தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் எந்த விசேஷமும் இல்லாமல் மொய் விருந்து என்ற ஒன்று தனியாக நடக்கிறது.

ஒருவர் குடும்பத்தில் ஏதோ ஒரு சடங்கு நடைபெறுகிறது என்றால் அதற்கு அழைப்பின் பேரில் சென்று தங்களது வசதிக்கு ஏற்றாற்போல் மொய் வைத்து விட்டு வருகின்றனர். சில ஆண்டுகள் பொருத்து தாங்கள் வைத்ததை திருப்பி பெற ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். விருந்தில் பிரியாணி போட்டு தாங்கள் வைத்த மொழியை திரும்ப பெறுகிறார்கள். ஓரிரு ஆண்டுக்கு முன் சம்மந்தப்பட்டவர் ஆயிரம் வைத்திருந்தால் இவர் இரண்டாயிரமாக திருப்பி வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

அதற்கு குறைவாக வைத்தால் மரியாதை குறைவு ஏற்பட்டுவிடும் வாங்குபவருக்கல்ல வைத்தவருக்கு. இதனால் அக்கம் பக்கம் கடனை வாங்கியாவது தங்களுக்கு வைத்ததை விட இவர்கள் அதிகமாக வைத்து விடுகிறார்கள்.

விஜயகாந்தின் சின்னகவுண்டர் படத்தில் ஒரு காட்சியில் சுகன்யா தன் கடனை அடைக்க மொய் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்வார். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று தகவல் சொல்லிவிட்டு வருவார். குறிப்பிட்ட நாளில் வந்து சாப்பிட்டுவிட்டு இலைக்கு கீழ் பணம் வைத்துவிட்டு செல்வார்கள். இலையை எடுத்துவிட்டு பணத்தை எடுத்துக்கொள்வார். இது மரியாதைக்குறைவான செயலாக பார்க்கப்படும். ஆனால் இன்று அது பெரும் விழாவாக எடுக்கப்படுகிறது.

ஆனால் இப்போது மொய் வசூல் செய்யவே தனியாக விருந்து வைக்கின்றனர். ஊருக்கு மத்தியில் பந்தல் போட்டு கறி விருந்து ஏற்பாடு செய்து உறவினர்கள, நண்பர்கள், ஊர்க்காரர்கள் என அழைப்பிதழ் வைத்து வரவைத்து கறி சாப்பாடு போட்டு மொய் வாங்கிறார்கள். தான் வைத்த பணத்தை திரும்ப பெற மற்றவர்கள் மொய் விருந்து வைக்கிறார்கள். இந்த பழக்கம் இப்படி பரவி விட்டது.

 










கடந்த வாரம் பட்டுக்கோட்டை அருகே மொய் விருந்து ஏற்பாடு செய்துள்ளார் ஒருவர். 5 லட்ச ரூபாய் வரை செலவு செய்து ஆடு, கோழி கறி பிரியாணி என போட்டு சுமார் 2.5 கோடி ரூபாய் மொய் விருந்தாக பெற்றுள்ளார். அவர் விருந்துக்கு ஏற்பாடு செய்யும் போதே நான் பலருக்கும் 50 ஆயிரம், 1 லட்சம்ன்னு வச்சியிருக்கன். எனக்கு அவுங்க இரண்டு மடங்கா திருப்பி வைப்பாங்க என்றும் அவர் எதிர்பார்த்த்து போலவே செய்து கோடிகளை பெற்றுள்ளார். 

சில வாரங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஒரு மொய் விருந்து நடந்துள்ளது. இந்த விருந்துக்கு மனைவியின் உறவினர்கள் வரவில்லை என மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். அவர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இப்படி மொய் விருந்தில் கலந்துக்கொள்ள முடியாமல், மொய் விருந்தால் நஷ்டமடைந்தவர்கள் என பலர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்கள். இப்படி பலர் தற்கொலை செய்துக்கொண்டும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதை விடாமல் நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். உதவிக்கு என இருந்தது இப்போது உபத்திரவமாய் மாறியுள்ளது.

புதன், ஜூலை 23, 2014

கட்ஜீ உருவாக்கிய சர்ச்சை. யார் அந்த நீதிபதி ?




ஜனநாயகத்தின் நான்காவது தூணான இந்திய ப்ரஸ் கவுன்சில் அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜீ உள்ளார். இவர் கடந்த 20ந்தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் எழுதிய கட்டுரை, அவரது முகநூல் பகுதியில் எழுதிய தொடர் கட்டுரை, டிவிக்கு அளித்த பேட்டியில் நடந்துக்கொண்ட முறை, நேர்காணல் நடத்தியவரின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் எழுந்து போனது போன்றவை நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோ இல்லையோ அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி நாடாளமன்றத்தை முடக்கும் அளவுக்கு போய்வுள்ளது.

கட்ஜி குறிப்பிட்டது, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த மாவட்ட நீதிபதியொருவதை தற்காலிக மெட்ராஸ் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி, பின் நீதிபதி, பின் கர்நாடகா மாநில உயர்நீதி மன்ற நீதிபதியாக நியமிக்க அப்போது மைய அரசில் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் அரசின் பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழகத்தை சேர்ந்த கூட்டணியில் இருந்த பெரிய கட்சி ( திமுக ) எம்.பிகள் மிரட்டி தேவையை நிறைவேற்றிக்கொண்டார்கள். இதற்கு, அந்த காலக்கட்டத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த லகோட்டி, பாலகிருஷ்ணன், சபர்வால் போன்றோர் உடந்தையாக இருந்தார்கள் என்றார்.

இதோடு நிறுத்தியிருந்தால் ஏதோ சொல்றார் என கேட்டுக்கொண்டு போய்யிருக்கலாம். சந்தடி சாக்கில் தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா நீதிமன்ற விவகாரத்தில் தலையிட்டதே கிடையாது. நீதிக்கு தலை வணங்குபவர் என ஒரு பிட்டை போட்டுள்ளார். இந்த வரிகள் தான் கட்ஜியின் நேர்மைக்கு விழுந்த மிகப்பெரிய அடி.

கட்ஜி சொல்வது இருக்கட்டும் நீதிமன்றம் ஒன்றும் புனிதமானதல்ல. நீதிபதிகள் கடவுளும்மள்ள. நீதிபதி நியமனம் என்பது அரசியல் பதவியாகி நீண்ட காலமாகிறது. அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பினால் சட்டம் படித்த யாரும் நீதிபதியாகலாம் என்பது எழுதப்படாத விதி. நீதிபதிகளும் கறுப்பு அங்கி அணிந்த அரசியல்வாதிகளாகி நீண்டகாலமாகிவிட்டது.

பல உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிட்டயர்டுக்கு பின் அரசின் கருணை பார்வை தங்களுக்கு கிடைக்க வேண்டும்மென அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவது அதிகரிக்க தொடங்கிவிட்டது என்பது டீ கடையில் காலையில் பேப்பர் படிக்கும் பாமரன் வரை அறிந்தது தான். அப்படி அரசின் பார்வைக்காக ஏங்கி, அரசின் ஆதரவு கரங்களில் ஏந்திக்கொள்ளப்பட்டவர் கட்ஜி. அவர் தான் இன்று ஒய்வு பெற்ற நீதிபதிகளை பற்றி விமர்சித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விவகாரத்தை இப்போது கிளறுவதே வேடிக்கை. அதிலும் தன்னை யோக்கிய சிகாமணியாகவும், மற்றவர்களை அயோக்கியர்கள் போலவும் பேசுவது கேவலமான செயல்.

நீதித்துறையை திமுக ஆட்டிப்படைத்தது என விமர்சித்தபோது கேப்பில் “நீதி காக்கம் வீராங்கணை“ என ஜெவை புகழ்ந்தது தான் அதில் காமெடி. நீதிமன்றத்தை தனது கால் செருப்பாக நினைப்பவர் ஜெ என்பது நாடறிந்தது. தனக்கு எதிராக தீர்ப்பு எழுதிய நீதிபதி வீட்டுக்கு குடிநீர், மின்சாரம் கட் செய்தது, மற்றொரு நீதிபதியின் மருமகன் மீது கஞ்சா கேஸ் போட்டது, தனது டான்சி தீர்ப்பை விலை கொடுத்து வாங்கியது, தனக்கு எதிராக வாதாடிய சண்முகசுந்தரம் என்ற மூத்த நீதிபதி அடியாட்களை வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியது, தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை சுமார் 15 ஆண்டுக்கும் மேலாக இழுத்தடிப்பது, இந்திய நீதித்துறையில் அதிக முறை வாய்தா வாங்கிய வழக்காக இருப்பது, என் வழக்கை இந்த நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என வித்தியாசமான கோரிக்கையோடு நீதிமன்றம் செல்வது, என் வழக்கை அரசின் சார்பில் இந்த வழக்கறிஞர் தான்  வாதாட வேண்டும் என கேட்பது, தமிழகரசின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் நீதிபதிகளை முட்டாள்கள் போல் நடத்துவது என தொடர்கிறது. அவரை நீதி விவகாரத்தில் தலையிடாதவர் என வர்ணிக்கிறார்.

அது அவரது சொந்த விருப்பம் எனச்சொல்லிவிட்டு விலகி போய்விட முடியாது. ஏன் எனில் ஜனநாயகத்தின் நீதி என்கிற தூணில் நீதிபதியாக இருந்தவர் இப்போது பத்திரிக்கை துறையின் தூணாக இருக்கிறார். இவர் அப்பட்டமாக பொய்யுறைப்பது வேதனையாக இருக்கிறது. சரி அதெல்லாம் இருக்கட்டும்.

கட்ஜி குற்றம் சாட்டும் அந்த உயர்நீதிமன்ற நீதிபதி யார் ?


குற்றச்சாட்டுக்குள்ளனான முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதை மறுத்துள்ளனர். ஆனால் குற்றம்சாட்டப்படும் நபர் உயிருடன் இல்லை. அவர் 2009 அக்டோபர் மாதம் காலமாகிவிட்டார். மறைந்தவர் மீது தான் குற்றம்சாட்டுகிறார்.

அவர் நீதிபதி அசோக்குமார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். பாளையம்கோட்டை, திருச்சியில் படித்தவர். சென்னையில் லா முடித்தவர் வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் வழக்கறிஞராக இருந்தபோது அதாவது 1977 மற்றும் 1980ல் ஜனதா கட்சியின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்தவர்.

பின்னர் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் நீதிபதியாக பதவிக்கு வந்தார். பின் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக இருந்தவர் நிரந்தர நீதிபதியாகி அப்படியே ஆந்திரா மாநில உயர்நீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2009 ஜீலை மாதம் ஓய்வு பெற்றவர். அடுத்த இரண்டு மாதத்தில் இயற்கை எய்தினார்.

இவர் 2006ல் ஜெ ஏவிய போலிஸ் படையால் நள்ளிரவில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் எனச்சொல்லி கைது செய்யப்பட்ட கலைஞரை ரிமாண்ட் செய்தவர் நீதிபதி அசோக்குமார். அதேபோல் சரண்டரான ஸ்டாலினை 15 நாள் ரிமாண்ட் செய்தவர் இதே நீதிபதி தான்.

நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட கலைஞர் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞரை நோக்கி சாட்டை அடிப்போன்ற கேள்விகளை கேட்டதால் ஜெ வுக்கு எதிரியானவர். அவர் மீது தான் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தது. உளவுத்துறை அறிக்கையை மீறி பிரதமரை மிரட்டி உயர்நீதிமன்ற நீதிபதியாக்கினார்கள் என்கிறார். 

எதற்காக இப்போது இந்த பிரச்சனை கிளம்பியது ? 

பதில் நிச்சயம் சில வாரங்களில் தெரிந்துவிடும். 

நம் சந்தேகம்,  மார்கண்டேய கட்ஜீவின் பதவி காலம் முடியப்போகிறது. கடந்த காலத்தில் பி.ஜே.பி மீது குற்றச்சாட்டுகளை சொல்லி எதிர்ப்புகளை சம்பாதித்தார். இப்போது ஆட்சிக்கு வந்திருப்பது பி.ஜே.பி. 

காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டவர்களை தூக்கி எரிந்து வருகிறது மோடி அரசாங்கம். அந்த வகையில் கட்ஜீக்கும் நெருக்கடி வரலாம். தற்போது உள்ள பதவியில் இருந்து இறக்கப்பட்டாலும் வேறு நல்ல பதவியை எதிர்பார்த்து பி.ஜே.பியின் அணுகிரகத்தை எதிர்நோக்கி இப்படி செய்துயிருக்கலாம். 

அல்லது

தமிழகத்தை சேர்ந்த மறைந்த நீதிபதியொருவரை குற்றம்சாட்டி திமுகவை குறிவைத்து பிராண்டுவது, அதிலும் நீதித்துறையை காக்கும் காத்தல் தாய் என ஜெவை வர்ணிப்பதன் மூலம் வேறு ஏதோ ஒன்றை கட்ஜீ ஜெவுக்காக செய்ய நினைக்கிறார். இதற்கான வாய்பு தான் அதிகம்.

செவ்வாய், ஜூலை 01, 2014

கட்டிட விபத்தும் - பலப்பல கேள்விகளும்.






ஒரு விபத்து நடந்தால் தான் நாம் பாடம் கற்றுக்கொள்கிறோம். ஆனால் அந்த பாடத்தை நாம் சரியாக படிப்பதில்லை என்பதே நிஜம். சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் லேசான மழைக்கே இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. நூற்றுக்கணக்கான கட்டிட தொழிலாளர்கள் அதற்குள் சிக்கினர். இதுவரை 28 பேர் இறந்துள்ளதாக அதீகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக இடிபாடுகளை அகற்றினால் தான் இறந்தது எவ்வளவு தொழிலாளர்கள். காயம்பட்டது எவ்வளவு பேர் என்பது தெரியவரும். 

கட்டிடம் இடிப்பட்டு தொழிலாளர்கள் சிக்கினார்கள் என்றதும் மாநில முதல்வர் ஜெ சம்பவயிடத்துக்கு வந்து பார்வையிட்டுவிட்டு இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி அளித்துவிட்டு போனார். சீமாந்திரா மாநில தொழிலாளர்கள் அதிகமாக அதில் சிக்கி இறந்துள்ளனர் என கேள்விப்பட்ட சீமாந்திரா முதல்வர் சந்திரபாபுநாயுடு, சம்வயிடத்துக்கு வந்து பார்வையிட்டுவிட்டு 5 லட்ச ரூபாய் நிதி தந்துள்ளார். உடனே தமிழக முதல்வர் என்னை விட நீ அதிகமா தர்றியா இப்போ பார் உன்னை விட அதிகமா நான் தர்றன் என முடிவு செய்து இறந்தவர்க்கு 7 லட்சம் பிக்ஸ் செய்துள்ளார். இப்படி பிணத்தை வைத்து அரசியல் செய்துக்கொண்டுயிருக்கிறார்கள். 

இவர்கள் அரசியல் ஒருபுறம்மிருக்கட்டும். வெளிப்படையாக, மிக வெளிப்படையாக இந்த கட்டிடம் இடிந்து விழுந்த்தில் விதிமுறைகள் மீறப்பட்டது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால் இதை எதையும் ஆட்சியாளர்கள் கண்டுக்கொள்ளவில்லை, மனித உரிமை பேசுபவர்கள், அரசியல் கட்சிகள் உட்பட எதுவும் ஒரு கட்டத்துக்கு மேல் இதுப்பற்றி பேச மறுக்கிறார்கள். சமத்துவ மக்கள் கட்சி தலைவராக உள்ள எம்.எல்.ஏவும், நடிகருமான சரத்குமார், மின்னல் தாக்கி இந்த கட்டிடம் நொறுங்கி விழுந்துள்ளது என ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார். 

ஜனநாயகத்தின் நான்காம் தூண் எனப்படும் பத்திரிக்கை, மீடியாவும் அரசாங்கத்துக்கு நோகாத படி மயிலிறகால் வருடுவது போல இந்த செய்தியை வெளியிடுகின்றன. இவர்களுக்கு இறந்தவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பது தெரியவில்லையா?, அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை என்பது தெரியாதா ?, இதுப்போன்ற கட்டிட்டங்கள் இன்னும் எத்தனை எத்தனை உள்ளன. அவற்றில் குடியிருக்கும் மக்களின் பாதுகாப்பு பற்றி அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?, விதிமுறையை மீறுபவர்கள், மீற அனுமதிக்கும் அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையென்ன?, இதுப்பற்றி கேள்வி கேட்டுள்ளதா என்றால் இல்லை. இல்லவேயில்லை. 

ஏரிக்கரையின் கால்வாய் பகுதியில் இந்த 11 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு 11 மாடி கட்டிடம் ஒரே நேரத்தில் கட்டப்பட்டுள்ளது. அதில் ஓரு கட்டிடம் தான் இடிந்து விழுந்துள்ளது. இதற்கு காரணம் இடி விழுந்தது என விவகாரத்தை திசை திருப்புகிறார்கள்.
ஏரிக்கரை அருகே சாதாரண வீடு கட்டவே அனுமதியில்லை. அப்படியிருக்க 11 அடுக்கு மாடி வீடு கட்ட அனுமதி தந்தது எப்படி ?, 


சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அனுமதி தந்ததன் பின்னணியென்ன ?. இதற்கு அனுமதி தந்துள்ள நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சரான வைத்தியலிங்கத்துக்கு இதில் என்ன தொடர்பு ?. விதிமுறைகளை மீறி அனுமதி தந்த உயர் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையென்ன ?.

விதிமுறைகளை மீறி லஞ்சம் தந்து அனுமதி பெற்ற கன்ஸ்ட்ரெக்ஷன் கம்பெனி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டால் மட்டும் போதுமா?, தரமற்ற வகையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு நொறுங்கியுள்ளது. இதற்கு முன் இவர்கள் கட்டிய கட்டிடங்களின் தரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தியதா அரசாங்கம் ?

சென்னையின் புறநகர் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் ஆராயப்படுகிறதா?, ஆராயப்படவில்லையெனில் ஏன் ஆராயப்படவில்லை ?, அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையென்ன ? விதிமுறைகளை மீறியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையென்ன ?

கட்டிட இடிபாடுகளில் எவ்வளவு சீமாந்திரா பகுதி தொழிலாளர்கள் சிக்கினார்கள், எத்தனை பேர் இறந்தார்கள் என்பது இதுவரை தெரியாத நிலையில் அவசர அவசரமாக இறந்தவர்களுக்கு 5 லட்சம் சந்திரபாபு நாயுடு அறிவிக்க வேண்டிய அவசியம்மென்ன ?.


இடிந்து விழுந்த கட்டிடத்தை கட்டும் கன்ஸ்ட்ரெக்ஷன் கம்பெனியின் உண்மையான முதலாளி யார் ?

இப்படி பல கேள்விகள் இதில் விடைதெரியால் தொங்கி நிற்கின்றன. யார் இதற்கு பதில் சொல்வது. சொல்ல வேண்டியவர்கள் மவுனமாக இருப்பது எதனால் ?. விசாரணை நடத்தாமலே அதிகாரிகள் தவறு செய்யவில்லை என முதல்வர் ஜெவே பேசுவது எதனால் ? அவர்களை காப்பாற்ற துடிப்பதுயேன் ?.

ஏழை தொழிலாளர்களின் உயிர் என்றால் சாதாரணமா ?. அவர்கள் மனிதர்கள் இல்லையா?, அவர்களுக்கும் குடும்பம் உள்ளது என்பதை எப்படி மறக்கிறீர்கள் ?. 

எப்படியே கட்டிடம் விழுந்துடுச்சி அவுங்க தலையெழுத்து செத்துப்போய்ட்டாங்க. இனிமே பேசனா வந்துடவா போறாங்க. தர்ற நஷ்டயீடு வாங்கிக்கிட்டு போகட்டும் என சொல்லும் மனநிலை நம்மிடம் வந்துவிட்டது. இன்று மற்றவர்களுக்காக குரல் கொடுக்க நாம் தயங்கினால் நாளை நம் பிரச்சனைக்காக யாரும் குரல் தரமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் மக்களே.