கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா, பிறந்தநாள்
விழா போன்ற சடங்குகளுக்கு செல்பவர்கள் மரியாதைக்காக தங்களால் முடிந்த அளவுக்கு
மொய் எழுதுவது வழக்கம். அது பணமாகவோ அல்லது தங்க நகையாகவோ, வெள்ளி பொருளாகவோ
இருக்கும்.
மொய் வைப்பதற்க்கு காரணம், ஒரு சடங்கு செய்பவன் கடனை வாங்கி
செய்வான். அவன் கடனால் நொடிந்துப்போய்விடக்கூடாது என்பதற்காக சம்மந்தப்பட்ட
குடும்பத்துக்கு நம்முடைய சிறு உதவியாக இது இருக்கட்டும் என்பதற்காக சடங்கில்
கலந்துக்கொள்பவர்கள் செய்யும் உதவியே மொய் வைத்தல் எனச்சொல்லப்பட்டது.
ஆனால் தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில்
எந்த விசேஷமும் இல்லாமல் மொய் விருந்து என்ற ஒன்று தனியாக நடக்கிறது.
ஒருவர் குடும்பத்தில் ஏதோ ஒரு சடங்கு நடைபெறுகிறது என்றால்
அதற்கு அழைப்பின் பேரில் சென்று தங்களது வசதிக்கு ஏற்றாற்போல் மொய் வைத்து விட்டு
வருகின்றனர். சில ஆண்டுகள் பொருத்து தாங்கள் வைத்ததை திருப்பி பெற ஒரு
விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். விருந்தில் பிரியாணி போட்டு தாங்கள் வைத்த
மொழியை திரும்ப பெறுகிறார்கள். ஓரிரு ஆண்டுக்கு முன் சம்மந்தப்பட்டவர் ஆயிரம்
வைத்திருந்தால் இவர் இரண்டாயிரமாக திருப்பி வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத
விதி.
அதற்கு குறைவாக வைத்தால் மரியாதை குறைவு ஏற்பட்டுவிடும்
வாங்குபவருக்கல்ல வைத்தவருக்கு. இதனால் அக்கம் பக்கம் கடனை வாங்கியாவது தங்களுக்கு
வைத்ததை விட இவர்கள் அதிகமாக வைத்து விடுகிறார்கள்.
விஜயகாந்தின் சின்னகவுண்டர் படத்தில் ஒரு காட்சியில் சுகன்யா தன் கடனை அடைக்க மொய் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்வார்.
ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று தகவல் சொல்லிவிட்டு வருவார். குறிப்பிட்ட நாளில்
வந்து சாப்பிட்டுவிட்டு இலைக்கு கீழ் பணம் வைத்துவிட்டு செல்வார்கள். இலையை
எடுத்துவிட்டு பணத்தை எடுத்துக்கொள்வார். இது மரியாதைக்குறைவான செயலாக
பார்க்கப்படும். ஆனால் இன்று அது பெரும் விழாவாக எடுக்கப்படுகிறது.
ஆனால் இப்போது மொய் வசூல் செய்யவே தனியாக விருந்து
வைக்கின்றனர். ஊருக்கு மத்தியில் பந்தல் போட்டு கறி விருந்து ஏற்பாடு செய்து
உறவினர்கள, நண்பர்கள், ஊர்க்காரர்கள் என அழைப்பிதழ் வைத்து வரவைத்து கறி சாப்பாடு
போட்டு மொய் வாங்கிறார்கள். தான் வைத்த பணத்தை திரும்ப பெற மற்றவர்கள் மொய்
விருந்து வைக்கிறார்கள். இந்த பழக்கம் இப்படி பரவி விட்டது.
கடந்த வாரம் பட்டுக்கோட்டை அருகே மொய் விருந்து ஏற்பாடு
செய்துள்ளார் ஒருவர். 5 லட்ச ரூபாய் வரை செலவு செய்து ஆடு, கோழி கறி பிரியாணி என
போட்டு சுமார் 2.5 கோடி ரூபாய் மொய் விருந்தாக பெற்றுள்ளார். அவர்
விருந்துக்கு ஏற்பாடு செய்யும் போதே நான் பலருக்கும் 50 ஆயிரம், 1 லட்சம்ன்னு
வச்சியிருக்கன். எனக்கு அவுங்க இரண்டு மடங்கா திருப்பி வைப்பாங்க என்றும் அவர்
எதிர்பார்த்த்து போலவே செய்து கோடிகளை பெற்றுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஒரு மொய் விருந்து
நடந்துள்ளது. இந்த விருந்துக்கு மனைவியின் உறவினர்கள் வரவில்லை என மனைவியிடம்
சண்டை போட்டுள்ளார். அவர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இப்படி மொய் விருந்தில் கலந்துக்கொள்ள முடியாமல், மொய்
விருந்தால் நஷ்டமடைந்தவர்கள் என பலர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்கள். இப்படி
பலர் தற்கொலை செய்துக்கொண்டும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதை விடாமல்
நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். உதவிக்கு என இருந்தது இப்போது உபத்திரவமாய்
மாறியுள்ளது.
உபத்திரவமாய் மாறிய முறைக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும், அல்லது அதை பகிஷ்கரிக்க வேண்டும்.
பதிலளிநீக்குமொய் விருந்து
பதிலளிநீக்குதேவையா? வேண்டாமா?
சிறந்த பதிவு
தொடருங்கள்!
பைத்தியக்காரர்கள்.
பதிலளிநீக்கு