வெள்ளி, அக்டோபர் 25, 2013

அன்பே அழகானது. – பகுதி 12.



இருள் படிந்த மாலை நேரம் லேசாக மழை பெய்துக்கொண்டு இருந்தது. மதன் வீட்டுக்கு வெளியே பீர் பாட்டில், பிராந்தி, டம்பளர், சோடா, மிக்சர் என டேபிளில் பரப்பி வைத்தபடி ஒரு டம்பளரில் சரக்கு ஊற்றி குடித்துக்கொண்டு இருந்தான். பிரபு டூவீலரை வேகமாக கொண்டு வந்து ஹாலில் நிறுத்தினான். வண்டியை விட்டு இறங்கியபடி மதன் குடிப்பதை ஆச்சர்யமாக பார்த்தபடி அவனை நோக்கி நடந்தபடி குடிக்கறத விட்டுட்டன்னு சொன்ன ?.

தோணுச்சி குடிக்கறன்.

ஹாஸ்பிட்டல் போனன் அங்க சுதாவும், அவுங்க அம்மாவும் இருந்தாங்க. நீ எங்கன்னு கேட்டதும் நேத்து பேசிட்டு வந்தத சொல்லுச்சி. அங்கயே நான் உன் செல்க்கு ட்ரை பண்ணன் சுச் ஆப்ன்னு வந்தது. என்னவோ ஏதோன்னு பயந்துக்கிட்டு வந்தா நீ ஜாலியா உட்கார்ந்து தண்ணியாடிச்சிக்கிட்டு இருக்கற.

லேசான மழை தூரும் போது தண்ணியடிக்கனம்ன்னு ஆசை அதான் செய்துக்கிட்டு இருக்கன் என்றான் மிதமான குரலில்.

விளையாடாத. அங்க உன் பையன் அழுதுக்கிட்டு இருக்கான்ட என்றான் கோபமாக.

இப்ப அதுக்கு என்ன பண்ணச்சொல்ற என மதன் வெறுப்பாக கேட்டதும் பிரபு அமைதியானான்.

அவன் அவுங்க அம்மாக்கூட இருக்க ஆசைப்படறான் அதான் விட்டுட்டு வந்தன்.

அவன் உங்கிட்ட வந்து நான் அம்மாக்கூட தான் இருப்பன்னு சொன்னானா?

சொல்லலனாலும் புரிஞ்சிக்கனும். நான் புரிஞ்சிக்கிட்டன் என நேற்று அவன் போன பின் நடந்ததை சொன்னதும் அமைதியானான். ஃபீர் சாப்பிடறியா ?

இல்ல வேணாம்.

பாக்யராஜ் வந்துயிருக்கான். ஆஸ்பிட்டல்க்கு போயிட்டு வீட்டுக்கு வர்றன்னான். பணம் எடுத்துக்கிட்டு வர்றானாம். இருந்து வாங்கிக்கிட்டு போ.

வர எவ்ளோ நேரமாகும்.

ஒன்னவராகிடும்.

நான் வீட்டுக்கு போய்ட்டு வந்துடறன்.

என்ன ?

குட்டிமாவுக்கு உடம்பு சரியில்ல. ஆஸ்பிட்டல்க்கு அழைச்சிம் போகனும். 7 மணிக்கு அப்பாய்மென்ட். டாக்டரை பாத்துட்டு அவுங்கள வீட்ல விட்டுட்டு வந்துடறன்.

சரி.

வரும்போது இரண்டு ஃபீரும், மூனு பேர் சாப்பிடறதுக்கு ஏதாவது பார்சல் வாங்கிட்டு வா என்றதும் பிரபு தலையாட்டியபடி கிளம்பினான். வண்டி அருகே போனவனிடம் காசுயிருக்காடா? இருக்கு எனச்சொல்லியபடி ஜெர்கினால் உடலை மூடிக்கொண்டு வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

நீ எங்கன்னு கேட்டு ரஞ்சித் அழறான்டா என பிரபு சொல்லிவிட்டு போனது மதனின் இதயத்தை யாரோ ஊசியால் குத்துவதை போல உணர்ந்தான். க்ளாசில் ஊற்றிய சரக்கு அப்படியே இருக்க பாக்யராஜ் வந்து டேய் என உலுக்கிய போது தான் நிகழ்காலத்துக்கு வந்தான்.

உட்கார்றா என்றதும் எதிரே இருந்த ஃசேரில் அமர்ந்த பாக்யராஜ், என்னடா குடிக்கறத விட்டுட்டன்னு சொன்ன இப்பயென்ன திடீர்ன்னு குடிக்கற?.

சும்மாதான்.

யாரும் இல்லாம தனியா இருக்கறது கஸ்டமாத்தான் இருக்கும் மச்சான். அதுக்கு என்னப்பண்றத்து எல்லாம் நீ எடுக்கற தப்பு தப்பான முடிவு தான் காரணம்.

நான் என்னடா தப்பு பண்ணன் ?.

பின்ன அந்தாளு ஏதாவது பேசிட்டு போறான்னு விட்டுட்டு போகாம நீ ஏன் அந்தாளுக்கிட்ட சண்டை போடற.

நானா சண்டைக்கு போறன். பாக்கறப்பயெல்லாம் அந்தாள் ஏதாவது சொல்லி எரிச்சல கிளப்பனா கோபம் வராம என்னச்செய்யும். மாமனாராச்சேன்னு சும்மாயிருக்கறன். வேற யாராவதுயிருந்தா நடக்கறதே வேறாயாயிருக்கும்.

ஆஸ்பிட்டல்ல தங்கச்சியும், அவுங்க அம்மாவும் இருந்தாங்க. உன் பையன் அப்பா எங்க, தாத்தா – பாட்டி எங்கன்னு கேட்டு அழுதான் ஏதோ சொல்லி சமாளிச்சிட்டு வந்தன். நீ தான் கோபத்தல வந்துட்டன்னா. உங்கப்பனும், ஆத்தாளும் எதுக்கு கிளம்பி ஊருக்கு வந்தாங்க.

அவர் கிளம்பனதும் அம்மாவும் கூடவே கிளம்பிட்டாங்க.

ஆமாம் இளம் ஜோடிங்க பிரியவே மாட்டாங்க.

அவரைப்பத்தி தான் தெரியும்மில்ல.

உங்கப்பனை நீங்க தாண்டா மெச்சிக்கனும் என வெறுப்பாக பேசியவனிடம் அதவிட்டுத்தள்ளு இந்தா நீ ஓரு பெக் சாப்பிடு என மதன் ஒரு டம்பளரை தந்ததும் வாங்கி டேபிள் மேல் வைத்தான்.

பிரபு எங்க?

குழந்தைய ஆஸ்பிட்டல்க்கு அழைச்சிம் போயிருக்கான் வந்துடுவான் என்றபடி இன்னோரு டம்பளரில் சரக்கை கையில் எடுத்தபடி அத எடுத்து குடிடா என்றபடி குடிக்க தொடங்கினான். பிரவும் தன் எதிரே இருந்த டம்பளரில் இருந்த சரக்கை எடுத்து குடித்தான் கொஞ்ச நேரத்தில் பிரபுவின் ஃபைக் உள்ளே வந்தது. சரக்கையும், இரவு டிபனையும் எடுத்து வந்து டேபிள் மேல் வைத்தான். பிரபுவும், பாக்யராஜ்யும் நலம் விசாரித்துக்கொண்டனர். பாக்யராஜ் பனியன்க்குள் இருந்து மஞ்சள் பை சுத்திய பணக்கட்டை எடுத்து பிரபுவிடம் தந்தான். பணத்தை வாங்கிக்கொண்டு தேங்ஸ் சொன்ன பிரபு அதை பத்திரப்படுத்துக்கொண்டான்.

மூவரும் சரக்கை முடித்துக்கொண்டு சாப்பிட தொடங்க பாக்யராஜ் மதனிடம், மாப்ள தங்கச்சி பாவம்டா. ஆஸ்பிட்டல்ல என்ன பாத்ததும் அழுதுடுச்சி. அத பார்த்தா பாவம்மாயிருக்கு. உன் மாமனாரை விட்டுத்தள்ளு. நீ அத வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வந்து சந்தோஷமா இருடா. பொண்டாட்டி வீட்லயிருந்தா அது பெரிய சந்தோஷம் மச்சான்.

நானும் தினமும் அதைத்தான் சொல்றன் கேட்கமாட்டேன்கிறான் என பிரபு சொல்ல சாப்பிட்டுக்கொண்டு இருந்த மதன் அப்படியே நிறுத்திவிட்டு அவர்களை பார்க்க இருவரும் அவனை பார்த்தனர். என்னடா என்னவோ நான் தான் அவளை வர வேணாம்ன்னு சொல்றமாதிரி பேசறிங்க. இது அவ வீடு, அவ என் மனைவி எப்ப வேண்ணாலும் வரலாம்.

நீ போய் ஒரு வார்த்தை கூப்பிட்டா வந்துடும் மச்சான் என பாக்யராஜ் தயங்கி தயங்கி சொல்ல.

என்ன மயிருக்கு நான் போய் வான்னு கூப்பிடனும் என கோபமானவன் நானா அவளை வீட்டை விட்டு போன்னு சொன்னன். அவளா போனா. எத்தனை பேர் அவக்கிட்ட உன் வீட்டுக்கு போன்னு சொன்னாங்க. ஆனா அவ எங்கப்பா சொன்னாத்தான் போவன்னு இன்னைய வரைக்கும் இருக்கறா. இப்பவும் அவுங்கப்பன் சொல்றதையே கேட்கறா என கோபத்தில் வெடித்தான் மதன்.

நீ அதுங்கிட்ட வீட்டுக்கு வான்னு கூப்பிடறதுல என்ன உன் கவுரவம் குறைஞ்சி போச்சி. பொண்டாட்டி – புருஷன்க்குள்ள கவுரவம் பாத்தா வேலைக்கு ஆகாது. விட்டுக்கொடுத்து போனாத்தான் குடும்பம் ஓழுங்கா நடக்கும் இல்லன்னா அவ்ளோ தான் என பதிலுக்;கு கோபமாக சொன்னான் பிரபு.

இந்த வெங்காயம் எனக்கும் தெரியும்.

அப்பறம் என்ன மயிருக்கு புடிவாதம்மாயிருக்கற.

இப்பவும் அந்தாளு என்ன சொல்றானோ அதையேத்தான் கேட்கறா. அவ மாறிட்டான்னு தெரிஞ்சா அவளே வந்துடுவா.

அந்தாளு சாகற வரைக்கும் அழுகாச்சி சீனை போட்டு தடுப்பான்.

அவ மனசு மாறி வரவரைக்கும் நான் காத்துக்கிட்டு இருக்கன்.

நீ அந்தாளைப்பத்தி யோசிக்காம அத வீட்டுக்கு வான்னு அழைச்சன்னா வந்துடும். வந்தப்பிறகு பேசி அத மாத்திடு என பாக்யராஜ் சொன்னதும்.

அவ மாறமாட்டாடா.

மாறாதுன்னு நீயா சொல்லாத. எனக்கென்னவோ உம்மேல தான் சந்தேகமாயிருக்கு என லேசாக வார்த்தையில் கோபத்தை காட்டினான்.

என்ன சந்தேகம் ?.

நீ வேற எதையோ சைடுல ஓட்டறன்னு நினைக்கறன் அதனால தான் முதல்ல பொண்டாட்டிய கழட்டி விட்டவன் இப்ப உன் பையனை கழட்டி விட்டுட்டு வந்துயிருக்க என பாக்யராஜ் சொல்ல மதன் கோபமாக அவனை பார்த்தான்.

அவனை எதுக்கு முறைக்கற. அவன் சொல்றதுல என்ன தப்பு.

எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி பேசனா என்னடா அர்த்தம்.

நீ இப்ப பண்ணிட்டு வந்துயிருக்கறத வேற எப்படி எடுத்துக்கறதாம்.

அவ என் உயிர்ங்கறது உங்களுக்கு தெரியாதா ?

இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படியே சொல்லிக்கிட்டு இருப்ப என கேட்ட போதும் அமைதியாக இருந்தான்.

மருத்துவமனையில் சுதா ரஞ்சித்தின் அருகே அமர்ந்திருந்தாள். எதிரே பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தார் தேவராஜ். ஜீஸ் ரெடி செய்துக்கொண்டுருந்தார் காவேரி. நீ எதுக்கும்மா கன்னத்தல கை வச்சிக்கிட்டு உட்கார்ந்துயிருக்கற. இவ்ளோ நாளா புள்ள இல்லாம கஸ்டப்பட்டுக்கிட்டு இருந்த. இப்ப அவனே விட்டுட்டு போய்ட்டான். நீ இனிமே சந்தோஷமா இரும்மா எனச்சொல்ல சுதா பதிலேதும் சொல்லாமல் ரஞ்சித்தை பார்த்துக்கொண்டு இருந்தாள். ரஞ்சித்தும் தன் அம்மாவை பார்த்தபடி படுத்திருந்தான்.

அறையின் கதவை இரண்டு முறை தட்ட உள்ள வாங்க என காவேரி குரல் தர ப்ரியா உள்ளே வந்தாள். எப்படிம்மா இருக்க என காவேரி கேட்டதும் நல்லாயிருக்கம்மா என்றாள். காவேரி தன் கணவரிடம் ப்ரியாவை காட்டி சுதா வேலை பாக்கற ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க என்றாள். தலையாட்டியவர் நல்லா இருக்கியம்மா என கேட்டார்.

நல்லாயிருக்கன் சார் என்றாள் ப்ரியா.

வாங்க மேடம் என சுதா அழைக்க ப்ரியா அவள் அருகில் போய் நின்றவள் ரஞ்சித்திடம் வலிக்குதாப்பா என கேட்க ? எஸ் மிஸ் என்றான் மெல்லிய குரலில்.

தேவராஜ்யின் செல்போன் ரிங்கானது. எடுத்து பேசியவர் நான் ஆபிஸ் வந்துடறன் வந்துடுங்க எனச்சொல்லிவிட்டு போனை கட் செய்தார். சுதாம்மா கொஞ்சம் வேலையிருக்கு நான் போய் பாத்துட்டு வந்துடறன். ஏதாவது வேணும்னா போன் பண்ணும்மா என்றவர். நான் மதிய  சாப்பாட்டுக்கு வர்ற மாட்டன். நீயும் பாப்பாவும் சாப்பிடுங்க நான் சாயந்தரம் வர்றன் என காவேரியிடம் சொன்னவர் ரஞ்சித்தின் படுத்திருந்த கட்டில் அருகே எழுந்து வந்தவர் தாத்தா ஆபிஸ் வரைக்கும் போய்ட்டு வர்றட்டுமா என கேட்க அவன் தலையாட்ட குனிந்து அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றை தந்துவிட்டு வர்றம்மா என ப்ரியாவிடமும் சொல்லிவிட்டு கிளம்பினார்.

அவர் வெளியே போனதும் காவேரி ஜீஸ் இருந்த ஒரு டம்பளரை ப்ரியாவிடம் தர வேணாம்மா குட்டி பையனுக்கு தாங்க என்றாள். அவனுக்கு இருக்கும்மா நீ சாப்பிடு என ஒரு டம்பளரை தந்துவிட்டு இன்னோரு டம்பளரில் ஜீஸ் எடுத்து வந்து சுதாவிடம் தந்து அவனை எழுப்பி உட்காரவச்சி தாம்மா என்றாள்.

அப்போது கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்த நர்ஸ் ஒருவர் டேபிளட் வாங்கிக்கிட்டு அப்படியே கவுண்டர்ல இந்த ஃபில்ல செட்டில் பண்ணிட்டு வந்துடுங்க என்றார். அதை வாங்கியதும் நர்ஸ் வெளியே சென்றுவிட காவேரி அந்த ஃபில்லை டேபிள் மீது வைத்துவிட்டு பாத்ரூம் சென்று கைகழுவிக்கொண்டு வெளியே வந்தவள் சுதாவிடம் நான் போய் ஃபில் கட்டிட்டு வர்றன் நீங்க பேசிக்கிட்டு இருங்க எனச்சொல்லிவிட்டு ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.

ஸ்டீபன் சாரை பிரின்ஸ்பால் மேடம் 15 நாள் லீவுல அனுப்பிட்டாங்க. மாலதி தான் உங்களுக்கு இரண்டு கல்யாணம்மானத மத்தவங்கக்கிட்ட சொல்லியிருக்காங்க. ஸ்டீபன் சார் உங்ககிட்ட அன்டீசன்டா பேசனது பிரச்சனையாகி மேடத்தோட ரூம்ல அடிதடி நடந்தது ஃபாதர்க்கு தெரிஞ்சி சிஸ்டர்க்கிட்ட விசாரிச்சிட்டு ஸ்டீபனை 15 நாள் லீவுல அனுப்பிட்டாரு என்றாள் சுதா அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தாள். கேட்கறன்னு தப்பா எடுத்துக்காதிங்க சுதா. எதுக்காக அவர் ஸ்டீபனை அடிச்சாரு. அவர் யார் ?.

அவர் தான் என்னோட ஹஸ்பென்ட். என்னைப்பத்தி தப்பா பேசனது கேட்டு அடிச்சிட்டாரு என்றாள் தலையை குனிந்தபடி.

ரஞ்சித் அங்க படிச்சது உங்களுக்கு முன்கூட்டியே தெரியும்மா ?.

இல்ல அவர் அங்க வந்தப்ப தான் தெரிஞ்சிக்கிட்டன்.

எத்தனை வருஷமா பிரிஞ்சி இருக்கிங்க ?.

நாலு வருஷமா.

நாலு வருஷமா என அதிர்ச்சியான ப்ரியா நான் கேட்கறன்னு தப்பா எடுத்துக்காதிங்க. என்ன பிரச்சனை உங்களுக்குள்ள எதுக்காக பிரிஞ்சி வாழறிங்க என டம்பளரை டேபிள் மேல் வைத்தபடி ப்ரியா கேட்டதும் சுதா கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். அவளின் மனம் பத்து ஆண்டுகாலம் பின்னோக்கி சென்றது.

தொடரும்………………..

வியாழன், அக்டோபர் 17, 2013

குழந்தை திருமண சட்டமும் இந்தியாவின் போக்கும்.



உலக நாடுகள் ஒவ்வொன்றும் குழந்தை திருமணத்தை ஏதோ ஒரு வகையில் ஊக்குவித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி சிறார் ( 18 வயதுக்கு முடியாமல் ) திருமணங்கள் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இதனால் அந்த பெண் குழந்தைகளின் படிப்பு, திறன் போன்றவை மழுங்கடிக்கப்படுகிறது. இதனை கலைய குழந்தை திருமணத்துக்கு எதிரான சட்டத்தில் கையெழுத்திட்டு குழந்தை திருமணத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா சபையில் பெண்கள் மற்றும் குழந்தை நலன் பிரிவு சட்டம் ஒன்றை கொண்டு வந்து வேண்டுகோள் விடுத்தது. அந்த சட்டத்தை ஆதரித்து ஐ.நாவில் உறுப்பு நாடுகளாக உள்ள 107 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 

குழந்தை திருமணங்கள் அதிகம் நடக்கும் வறுமை நாடுகளான தெற்கு சூடான், எத்தியோப்பியா, ஏமன் போன்ற நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் குழந்தை திருமணங்கள் நடைபெறும் முதல் 10 நாடுகள் பட்டியலில் உள்ள இந்தியாவும், வங்கதேசமும் கையெழுத்திடாமல் முரண்டு பிடித்து வருகின்றன. இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. இந்தியாவில் உள்ள பெண்கள், குழந்தைகள் நல இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. சமூக ஆர்வலர்கள் இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.  

இந்தியாவில் சட்டப்படி பெண்ணுக்கு திருமண வயது 18, ஆணுக்கு 21 என இருக்கும் போது அதை விட குறைவான வயதில் திருமணம் நடப்பதை தான் ஐ.நா சபை எதிர்க்கிறது. அதனால் அந்த சட்டத்தை ஆதரித்து கையெழுத்திட்டு இருக்கலாம்மே என்ற கேள்வி பலதரப்பிலும் எழுப்புகின்றனர். ஆனால் இந்தியாவின் பதில் மவுனம். 

யுனிசெப் உலகில் சிறார் திருமணங்கள் அதிகம் நடக்கும் நாடுகள் என 10 நாடுகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அதில், நைஜர் என்னும் நாட்டில் நடக்கும் திருமணங்களில் 75 சதவிதம் குழந்தை திருமணங்கள். இந்த நாடு முதலிடம். இரண்டாமிடம் மத்திய ஆப்பிரிக்கா, மூன்றாவதுயிடம் 66 சதவிகிதத்துடன் வங்கதேசம், கினியா, மொசம்பிக், தெற்குசூடான் வரிசையில் 47 சதவிகிதத்துடன் இந்தியாவும் முதல் பத்து நாடுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்தியா பற்றி புள்ளிவிவர கணக்குப்படி இந்தியாவில் 2009ல் நடந்த திருமணங்களில் 45 சதவித திருமணங்கள் 18 வயதுக்கு உட்பட்ட சிறார் திருமணம் என்கிறது. அதாவது ஆண்டுக்கு 2.5 கோடி திருமணங்கள் குழந்தை திருமணம். சிறார் திருமணங்கள் இந்தியாவில் பீகார், உத்திரபிரதேசம், ஆந்திராவில் அதிகமாகவும், கேரளா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் குறைவாக உள்ளதாக குறிப்பிடுகிறது. கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், தற்போதைய நிலைப்போலவே குழந்தை திருமணங்கள் நடந்தால் வருங்காலத்தில் தினமும் 39 ஆயிரம் குழந்தை திருமணம் உலகம் முழுவதும் நடக்கும் என்று தெரிவித்துள்ளது. அதில் இந்தியா முதலிடம் பெறும் என்கிறது. 

இந்தியாவில் கிராமபுறங்களை சேர்ந்த படிக்காத ஏழை பெண்கள் தான் திருமண வயதான 18 வயது வருவதற்க்கு முன்பே திருமண பந்தத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகர் புறங்களிலும் குழந்தை திருமணம் உள்ளது. கிராமபுறத்தில் 56 சதவிதமும், நகர்புறத்தில் 44 சதவிகிதமாக உள்ளதாக 2013 அக்டோபர் மாதம் 12ந்தேதி ஐ.நாவில் நடந்த முதல் சர்வதேச பெண் குழந்தைகள் தின கூட்டத்தில் கூறப்பட்டது. 


எதனால் இளம் வயது திருமணங்கள் நடைபெறுகிறது என ஆய்வு செய்தால், ஏழ்மை, கல்வியறிவு இல்லாமை, சாதி, பணம் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியாவில் 60 சதவிதம் மக்கள் ஏழ்மை நிலையில் தான் இன்னமும் உள்ளனர். அவர்களை முன்னேற்ற எவ்வித நடவடிக்கையிலும் இந்த அரசாங்கங்கள் ஈடுபட்டதில்லை. இதனால் ஏழை மக்களால் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முடிவதில்லை. இதனால் சிறு வயதிலேயே ஒருவனை பார்த்து திருமணம் செய்து வைத்து தங்களது கடமை முடிந்துவிட்டதாக கருதுகின்றனர். கல்வியறிவு உள்ள மக்கள் இப்படி செய்வதில்லை என்பதே எதார்த்தாம். 

இந்தியாவில் வடமாநிலங்களில் சிறார் திருமணங்கள் அதிகம் நடக்க காரணம், ஒழுக்கம் என்ற அளவுகோலில் சாதி கட்டுமானத்தில் வெகு சீக்கிரத்தில் அங்கு திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். இது இன்றைய நாகரீக, விஞ்ஞான யுகத்திலும் தொடர்கிறது. இந்த திருமணங்கள் பற்றி ஆராய்ந்தால் அந்த மாநிலத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதியில் தான் அதிகம் நடந்திருப்பதை அறிய முடியும். அதேபோல் இளம் பெண்களை சோதிடத்தை நம்பி திருமணம் செய்துக்கொள்ளும் வழக்கம் உள்ளது. திருமணத்துக்கான பருவ வயது வரும்முன்பே ஏழைகளிடம் பணக்காரர்கள் பணத்தை காட்டி இளம் சிறு பெண்களை திருமணம் செய்துக்கொள்கின்றனர்.

இப்படி சிறார் திருமணங்கள் நடப்பதால் குழந்தை பெறும் போது பெரும் சிக்கலுக்கு உள்ளாகிறார்கள் இளம் பெண்கள். ஐ.நா மக்கள் தொகை ஆய்வு குழு தலைவர் பாபாடுண்டே இதுப்பற்றி ஒரு கூட்டத்தில் பேசும்போது, குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகளின் திறமை வெளிப்படாமலே போய்விடுகிறது, பிரசவ காலங்களில் தாய், சேய் உயிரிழப்பு அதிகரிக்கிறது. 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தை பெறும்போது அந்த குழந்தை அடுத்த 5 ஆண்டுகளில் உடல் சுகவீனத்தால் இறந்துவிடுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அவர் கூறுவது சரியே, உலகில் சத்தான உணவு இல்லாமல் தினமும் 19 ஆயிரம் குழந்தைகள் இறக்கிறது. உலக அளவில் குழந்தை இறப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2011ல் மட்டும் சத்தான உணவு இல்லாமல் 15.5 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் இறந்ததாக கணக்கு சொல்லப்படுகிறது. அதற்கடுத்து நைஜீரியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளன ஒரு ஆய்வு.

குழந்தைகளை தெய்வம் என்கிறிர்கள்........ அந்த தெய்வங்களை ஏன் கொடுமைப்படுத்துகிறிர்கள்........ நீங்கள் வணங்கும் கடவுளை இப்படித்தான் செய்கிறிர்களா ?. 

சிந்தியுங்கள்.........

புதன், அக்டோபர் 16, 2013

உலகில் உணவில்லாமல் 92 கோடி பேர்.



கோடிகளில் புரளும் பணக்காரர்கள் சாப்பிட முடியாமல் விதவிதமான உணவுகளை கால்வாயில் கொட்டுவதும், மற்றொரு புறம் ஒரு வேலை உணவு கூட இல்லாமல் அல்லாடும் மக்கள் என இரு தரப்பும் ஒரு சேர இந்த பூமி பந்தில் வாழ்கின்றனர். உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு கிடைக்க வேண்டும்மென அக்டோபர் 16ந்தேதியை உலக உணவு நாளாக கொண்டாடப்படுகிறது. 1947ல் ஐ.நா அமைப்பில் உணவு மற்றும் வேளாண்மை பிரிவு ஏற்படுத்தப்பட்டது. 1979 முதல் அந்நாளை உலக உணவு தின நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நபர்களை தேர்வு செய்து விருதும் வழங்கப்படுகிறது. விருதின் மதிப்பு 13 கோடி. 

உலக ஆய்வு நிறுவனம் ஒன்று சமீபத்தில் 120 நாடுகளில் ஒரு ஆய்வை மேற்க்கொண்டுள்ளது. அதில், உலகத்தில் 92 கோடியே 22 லட்சம் மக்கள் தினமும் பசியால் வாடுவதாக குறிப்பிட்டுள்ளது. ( ஐ.நா. பொது செயலாளர் பான்கீ மூன் கூட அறிவித்துள்ளார் ). அதில் பட்டினியால் மக்கள் துன்பப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 64வது இடத்தில் உள்ளது. இந்தியாவை விட பாகிஸ்தான், சீனா, இலங்கை போன்ற நாடுகளில் பட்டினி சாவுகள் குறைவு என்கிறது அதே புள்ளி விபரம். உணவு பற்றாக்குறை, சத்தாண உணவு இல்லாமல் உலகத்தில் ஒவ்வொரு 12 நொடிக்கும் ஒரு குழந்தை இறப்பதாகவும் கூறப்படுகிறது. 

எதனால் இந்த நிலை ?.

மேற்கத்திய நாடுகள், வளர்ந்த வல்லரசு நாடுகள் தங்களது நாட்டை தொழில் துறையில் முன்னேற்றின. ஆனால் விவசாய துறையில் வளர்ச்சியடையவில்லை. 1990 சந்தை பொருளாதாரத்திற்க்கு உலகம் திறந்துவிடப்பட்டதும் இந்த நிலை அதிகமானது. எல்லா நாடுகளும் விவசாயத்தை பின்னுக்கு தள்ளி தொழில் துறையில் கவனம் செலுத்தின. மேற்கத்திய நாடுகளைப்பார்த்து இந்தியா உட்பட பல வளரும் நாடுகள் உணவு பொருள் உற்பத்தியை கடந்த ஆண்டுகளில் குறைந்துக்கொண்டு தொழில் துறைக்கு அதிக முக்கியத்துவம் தர தொடங்கியிருந்தன. தொழில் துறை வளர்ந்தது. விவசாயத்துறை படுத்துக்கொண்டது. 

நீண்ட கால திட்டமிடல்களை செய்யும் வளர்ந்த நாடுகள் உணவு பற்றாக்குறை ஏற்பட போகிறது என அறிந்ததும் அதில் இருந்து தப்பிக்க மாற்று வழிகளை செய்தன. உணவு, வேளாண் தொழிலில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள தொடங்கின. அதை அந்த நாடுகளும் ஊக்குவித்தன. பன்னாட்டு நிறுவனங்கள் ஆயிரம், லட்சம் ஏக்கர்களை அரசாங்கங்களிடம் இருந்து குத்தகைக்கு பெற்று அதில் விவசாயம் செய்து அந்த பொருட்களை அவர்கள் விற்பனை செய்ய தொடங்கினர். அதோடு, மூன்றாம் உலக நாடுகளில் நேரடியாக விவசாயம் செய்யாமல் விவசாயத்தை அழிப்பது, விவசாய பொருட்களை வாங்கி இருப்பு வைப்பது போன்றவற்றை செய்ய தொடங்கின பன்னாட்டு கம்பெனிகள். இதனை அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் ஊக்குவித்தன. 

இந்தியா போன்ற சில வளரும் நாடுகளில் நேரடியாக விவசாயம் செய்யாமல் விவசாயிகளிடம் உள்ள உணவு பொருட்களான அரிசி, கோதுமை, சக்கரை, பருப்பு போன்றவற்றை வாங்கி இருப்பு வைத்தன. அதனை ஏற்றுமதி செய்கிறோம் என இந்திய அரசின் வழியாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தன. இதனால் இந்திய அந்நிய செலாவாணி கிடைக்கிறது என சந்தோஷப்பட்டது. இந்தியாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதும் மீண்டும் அதே கோதுமை, அரிசி, சக்கரை போன்றவற்றை இறக்குமதி செய்தன அரசு. இதில் தான் பன்னாட்டு கம்பெனிகளும், அரச அதிகார வர்க்கங்களும் கோடி கோடியாய் கொள்ளையடித்துள்ளனர். 

இந்தியா அமெரிக்காவுக்கு 1 கிலோ கோதுமையை 50 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் உணவு பொருள் பற்றாக்குறை என்ற நிலை வரும்போது அதே அமெரிக்காவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்கிறது. இந்தியா தான் விற்ற அதே கோதுமையை தற்போது 250 ரூபாய் விலை தந்து வாங்குகிறது. இது அரசாங்கங்களுக்கு இடையே நடைபெறும் வியாபாரம் என்றாலும் இதனை செய்வது பன்னாட்டு நிறுவனங்கள் தான். இப்படி செய்து மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தை கொள்ளையடித்துள்ளனர் இரண்டு தரப்பிலும். 

கடந்த 10 ஆண்டுகளாக உணவு பொருட்கள் விலை உயரும். அதற்கு காரணம் கச்சா எண்ணெய் விலையேற்றம் என காரணம் கற்பிக்கப்படும். கச்சா எண்ணெய் விலை உயரும் போதுயெல்லாம் மூன்றாம் உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயரும். இதனால் சங்கிலி தொடர் போல் எல்லா பொருளின் விலையும் உயரும். அதில் முக்கியமானது உணவு பொருட்கள் விலை. வளைகுடா நாடுகள், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் உணவு பொருட்களை தந்துவிட்டு கச்சா எண்ணெய்யை வாங்குகின்றன மேற்கத்திய நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும். இவர்கள் கச்சா எண்ணெய்யை வாங்குவது குதிரை விலைக்கு என்றால், உணவு பொருட்களை விற்பது யானை விலைக்கு. இப்படி அந்த நாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டும் இந்த பன்னாட்டு கம்பெனிகளும், வளர்ந்த நாடுகளும். அந்த கச்சா எண்ணெய்யை தங்களது விரும்பம் போல் விலை வைத்து விற்கின்றனர். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உணவு பொருட்களின் விலை உயரும். விலையை குறைக்க என்ன செய்யும் அரசாங்கங்கள் வெளிநாட்டில் இருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்வார்கள். அப்படி இறக்குமதி செய்யும் போது அவர்கள் குறிப்பிடுவதே விலை. அந்த விலையை நிர்ணயிப்பது பன்னாட்டு கம்பெனிகளும், பன்னாட்டு நிறுவனங்களின் பின்னால் இருக்கும் வளர்ந்த நாடுகளும் தான்.

கச்சா எண்ணெய், உணவு உற்பத்தி, விவசாயம் போன்றவை பன்னாட்டு கம்பெனிகளிடம் இருந்து மாறி சாதாரண மக்களிடம் வரும்போது தான் இந்த நிலை மாற்றம்மடையும். அதோடு, மக்கள் தொகையையும் குறைக்க வேண்டும். இல்லையேல் சில ஆண்டுகளில் உணவு இல்லாமல் 92 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது வருங்காலத்தில் 100 கோடி, 120 கோடி என உயர்ந்துக்கொண்டுத்தான் செல்லும். 

திங்கள், அக்டோபர் 14, 2013

பெருகும் பட்டதாரிகள், குறையும் வேலைவாய்ப்புகள்.




தமிழகத்தில் புற்றீசல் போல் கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறையும்  லட்சங்களில் பட்டதாரிகளை உருவாக்கி வெளியே அனுப்புகின்றன. இப்படி லட்சக்கணக்கில் உருவாகி வெளியே வரும் இளைஞர் - இளைஞிகள் யாரும் சுய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணப்பாட்டுக்குள் வருவதில்லை. அதற்கு காரணம்,  கல்வி கூடங்கள் தங்களிடம் கற்கும் இளைஞனை தன்னம்மிக்கை உடையவர்களாக உருவாக்குவதில்லை. அரசாங்க, தனியார் துறைக்களுக்கான இயந்திரங்களாகவே  உருவாக்கி அனுப்புகின்றன. அதனால் தான் அவனது தேடல் அரசாங்க, தனியார் துறை மீது செல்கிறது.

தற்போது தமிழகத்தில், இந்தியாவில், உலகத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதாவது பட்டதாரிகளின் எண்ணிக்கை பெருக்கல் கணக்கில் உயர்ந்தால், வேலைவாய்ப்பு கூட்டல் கணக்கில் தான் உயர்கிறது. தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களிண் எண்ணிக்கை 2012ல் 80 லட்சமாக உள்ளதாம். உலகளவில் 7 கோடிப்பேர் வேலைவாய்ப்பு இல்லாதவர்களாக உள்ளதாக ஐ.நாவின் ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.

வேலை தேடுபவர்கள் உடல் உழைப்பை தர மறுக்கின்றனர். ஒயிட் காலர் ஜாப்பை தான் எதிர்பார்க்கின்றனர். தன் படித்த படிப்புக்கு தகுதியான வேலை வேண்டும் என எண்ணுகின்றனர். அவனின் எண்ணத்துக்கு நேர்மாறான வேலை கிடைத்தால் அதை கவுரவ குறைச்சலாக எண்ணுகிறார்கள். இதனால் இன்று பல தொழில்களில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆட்டோ மொபைல்ஸ், விவசாயம், அதை சார்ந்த தொழில்கள், ஹோட்டல் தொழில்கள், மோட்டார் வாகன தொழில்கள் உட்பட பலவற்றில். பட்டதாரிகள் இந்த வேலைகளை செய்வதை கவுரவ குறைச்சலாக நினைக்கின்றனர். இதைத்தான் தற்போதைய கல்வி முறை கற்று தந்துள்ளது. மேலை நாடுகளில் பெரும்பாலான பணக்கார பிள்ளைகள் ஹோட்டல்களில் பணி புரிந்து தங்களுக்கான பணத்தை சம்பாதித்து அதன் மூலம் செலவு செய்கின்றனர். இந்தியாவில் அந்த நிலையில்லை. படித்துவிட்டுக்கூட அந்த வேலைகளை செய்ய தயங்குகின்றனர்.

சமீபத்தில் இணையத்தில் ஒரு விளம்பரம் காண நேரிட்டது. பரோட்டா மாஸ்டர் தேவை மாதச்சம்பளம் ரூபாய் 18 ஆயிரம், தங்கும் இடம் இலவசம், விடுமுறை உண்டு, தகுதிக்கு ஏற்றாற்போல் கூடுதல் சம்பளமும் உண்டு என்ற விளம்பரம் ஆச்சர்யப்பட வைத்தது. இந்த சம்பளம் இன்றைய சாப்ட்வோர் இன்ஜினியர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகம்.

தனியார் பொறியியல் கல்லூரிகள் பல சாப்ட்வேர் துறையில் பணிகள் கொட்டி கிடக்கிறது என விளம்பரம் செய்கின்றன. லட்சங்களில் நன்கொடை தந்துவிட்டு அதில் சேருகின்றனர். ஆனால் உண்மை நிலையை யாரும் விளங்கிக்கொள்வதில்லை. கடந்த 2010வரை ஐ.டி துறை படு வேகமான வளர்ச்சியை சந்தித்தது. இந்திய இளைஞர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு பணிக்கு சென்றார்கள். இன்றைய எதார்த்த நிலை வேறு. உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு ஒரு புறம். மற்றொரு புறம் பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு, மாறி வரும் டெக்னாலஜிகள் போன்றவற்றால் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது.


உதாரணமாக, சாப்ட்வேர் கம்பெனிகள் இந்தியாவில் தொடங்கிய போது அதற்கு நிறைய ஊழியர்கள் தேவைப்பட்டார்கள். பொறியியல் பட்டதாரிகளுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் இருந்தன. லட்சங்களில் சம்பளம் தந்தார்கள். கடந்த 5 ஆண்டுகளாக அதே கம்பெனிகளுக்கு பணியாளர்கள் தேவை குறைந்துவிட்டது. காரணம் ஏற்கனவே அங்கு வேலை செய்பவர்கள் பணி ஓய்வு பெறவே இன்னும் இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அப்படியிருக்கு புதிய பணியாளர்களை எடுத்து அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள். எந்த ஒரு கம்பெனியும் தொடங்கிய முதல் ஆண்டு ஆயிரம் ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் அதற்கடுத்த வருடம் 800 பேரை தான் வேலைக்கு எடுக்கும், அதற்கடுத்த வருடம் 500, அதற்கடுத்த வருடம் 200. ஆண்டுக்கு நூறு பேரை புதியதாக எடுக்கும். அதற்கு காரணம் பணி மாறுதலில் செல்பவர்கள் இருப்பதால். இதேதான் அரசு துறைகளிலும். கடந்த ஆண்டு 4 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் தங்களது கல்வியை முடித்தார்கள். இதில் ஒரு லட்சம் பேர் கூட வேலைக்கு செல்லவில்லை என்பதே உண்மையான புள்ளி விபரம். அடுத்த வருடம் அதேபோன்று 3 லட்சம் பேர் வேலைக்கு செல்ல முடியாமல் நிற்பார்கள். இது ஆண்டுக்கு ஆண்டு அதிகாிக்கும். தேவை (வேலைவாய்ப்பு) குறைந்துவிட்டது, உற்பத்தி (பட்டதாரிகள்) அதிகரித்துவிட்டது. பொறியியல் மட்டுமல்ல கலை அறிவியல் கல்லூரிகளிலும் இதே நிலை தான்.

ஐ.டி துறை மட்டுமல்ல தொழிற்சாலைகளிலும் இதே நிலை தான். 30 வருடத்துக்கு முன்பு மேலை நாட்டு குளிர்பானமான பெப்ஸியை கையால் உற்பத்தி செய்தார்கள். அப்போது ஒரு நாளைக்கு ஒரு ஊழியர் ஆயிரம் பாட்டில்களை நிரப்பினார். ஆயிரம் பணியாளர்கள் ஒரு நாளைக்கு பத்து லட்சம் பாட்டில்களை விற்பனைக்கு அனுப்பினார்கள். அதே பெப்ஸி கம்பெனி இன்று ஒரு ஒரு நிமிடத்துக்கு 10 ஆயிரம் பாட்டில்களை விற்பனைக்கு வெளியே அனுப்புகின்றன. அப்படியென்றால் அந்த கம்பெனியில் லட்சகணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்களா என கேட்டால் இல்லை. 30 ஆண்டுக்கு முன்பு அந்த கம்பெனியில் ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றினார்கள் தற்போது அந்த கம்பெனியில் 50 பேருக்கும் குறைவானவர்கள் தான் பணியாற்றுகின்றனர். பணியாளர்கள் இல்லை பின் எப்படி இவ்வளவு உற்பத்தி என கேட்டால் அந்தளவுக்கு தொழிற்சாலைகளிலும் இயந்திரத்தன்மை வந்துள்ளது. இதேபோன்று தான் மற்ற துறைகளிலும்.

இதனை மாற்ற முடியாது. அதற்கு பதில் மாற்றத்தை நோக்கி நாம் தான் நகர வேண்டும். கல்வி முறையில் மட்டுமல்ல படித்துவிட்டு சட்டையில் அழுக்கு படியாத வேலைக்கு செல்ல நினைக்கும் இளையோர்களின் மனதில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். படிப்பு என்பது உலக தகவல்களை அறிந்துக்கொள்ளத்தானே தவிர வேலை வாய்ப்புக்கானது அல்ல. சுயதொழில், விவசாயம் உட்பட பல தொழில்களை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.

பொருளாதார மந்த நிலையால் தான் இந்த நிலை என்கின்றனர். பொருளாதாரம் சீரானாலும் ஓரளவு தான் நிலை மாறும்மே தவிர மாற்றப்படி பெரிய மாற்றம் இருக்காது என்பதே நிதர்சனம். இதற்கு அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும், பெருந்தொழில் நிறுவனங்களையும் குற்றம் சாட்டி ஒன்றும் புரியோஜனம்மில்லை. மாற்றத்துக்கான வழியை ஏற்படுத்த வேண்டும். உலக அளவில் குறிப்பாக ஆசியாவில் மக்கள் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, படித்துவிட்டேன் என் தகுதிக்கான வேலையைத்தான் செய்வேன் என்ற முடிவை கைவிட வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் தரும் வேலையை செய்தாலே போதும். ஓரளவு இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும்.