திங்கள், அக்டோபர் 14, 2013

பெருகும் பட்டதாரிகள், குறையும் வேலைவாய்ப்புகள்.
தமிழகத்தில் புற்றீசல் போல் கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறையும்  லட்சங்களில் பட்டதாரிகளை உருவாக்கி வெளியே அனுப்புகின்றன. இப்படி லட்சக்கணக்கில் உருவாகி வெளியே வரும் இளைஞர் - இளைஞிகள் யாரும் சுய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணப்பாட்டுக்குள் வருவதில்லை. அதற்கு காரணம்,  கல்வி கூடங்கள் தங்களிடம் கற்கும் இளைஞனை தன்னம்மிக்கை உடையவர்களாக உருவாக்குவதில்லை. அரசாங்க, தனியார் துறைக்களுக்கான இயந்திரங்களாகவே  உருவாக்கி அனுப்புகின்றன. அதனால் தான் அவனது தேடல் அரசாங்க, தனியார் துறை மீது செல்கிறது.

தற்போது தமிழகத்தில், இந்தியாவில், உலகத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதாவது பட்டதாரிகளின் எண்ணிக்கை பெருக்கல் கணக்கில் உயர்ந்தால், வேலைவாய்ப்பு கூட்டல் கணக்கில் தான் உயர்கிறது. தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களிண் எண்ணிக்கை 2012ல் 80 லட்சமாக உள்ளதாம். உலகளவில் 7 கோடிப்பேர் வேலைவாய்ப்பு இல்லாதவர்களாக உள்ளதாக ஐ.நாவின் ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.

வேலை தேடுபவர்கள் உடல் உழைப்பை தர மறுக்கின்றனர். ஒயிட் காலர் ஜாப்பை தான் எதிர்பார்க்கின்றனர். தன் படித்த படிப்புக்கு தகுதியான வேலை வேண்டும் என எண்ணுகின்றனர். அவனின் எண்ணத்துக்கு நேர்மாறான வேலை கிடைத்தால் அதை கவுரவ குறைச்சலாக எண்ணுகிறார்கள். இதனால் இன்று பல தொழில்களில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆட்டோ மொபைல்ஸ், விவசாயம், அதை சார்ந்த தொழில்கள், ஹோட்டல் தொழில்கள், மோட்டார் வாகன தொழில்கள் உட்பட பலவற்றில். பட்டதாரிகள் இந்த வேலைகளை செய்வதை கவுரவ குறைச்சலாக நினைக்கின்றனர். இதைத்தான் தற்போதைய கல்வி முறை கற்று தந்துள்ளது. மேலை நாடுகளில் பெரும்பாலான பணக்கார பிள்ளைகள் ஹோட்டல்களில் பணி புரிந்து தங்களுக்கான பணத்தை சம்பாதித்து அதன் மூலம் செலவு செய்கின்றனர். இந்தியாவில் அந்த நிலையில்லை. படித்துவிட்டுக்கூட அந்த வேலைகளை செய்ய தயங்குகின்றனர்.

சமீபத்தில் இணையத்தில் ஒரு விளம்பரம் காண நேரிட்டது. பரோட்டா மாஸ்டர் தேவை மாதச்சம்பளம் ரூபாய் 18 ஆயிரம், தங்கும் இடம் இலவசம், விடுமுறை உண்டு, தகுதிக்கு ஏற்றாற்போல் கூடுதல் சம்பளமும் உண்டு என்ற விளம்பரம் ஆச்சர்யப்பட வைத்தது. இந்த சம்பளம் இன்றைய சாப்ட்வோர் இன்ஜினியர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகம்.

தனியார் பொறியியல் கல்லூரிகள் பல சாப்ட்வேர் துறையில் பணிகள் கொட்டி கிடக்கிறது என விளம்பரம் செய்கின்றன. லட்சங்களில் நன்கொடை தந்துவிட்டு அதில் சேருகின்றனர். ஆனால் உண்மை நிலையை யாரும் விளங்கிக்கொள்வதில்லை. கடந்த 2010வரை ஐ.டி துறை படு வேகமான வளர்ச்சியை சந்தித்தது. இந்திய இளைஞர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு பணிக்கு சென்றார்கள். இன்றைய எதார்த்த நிலை வேறு. உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு ஒரு புறம். மற்றொரு புறம் பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு, மாறி வரும் டெக்னாலஜிகள் போன்றவற்றால் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது.


உதாரணமாக, சாப்ட்வேர் கம்பெனிகள் இந்தியாவில் தொடங்கிய போது அதற்கு நிறைய ஊழியர்கள் தேவைப்பட்டார்கள். பொறியியல் பட்டதாரிகளுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் இருந்தன. லட்சங்களில் சம்பளம் தந்தார்கள். கடந்த 5 ஆண்டுகளாக அதே கம்பெனிகளுக்கு பணியாளர்கள் தேவை குறைந்துவிட்டது. காரணம் ஏற்கனவே அங்கு வேலை செய்பவர்கள் பணி ஓய்வு பெறவே இன்னும் இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அப்படியிருக்கு புதிய பணியாளர்களை எடுத்து அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள். எந்த ஒரு கம்பெனியும் தொடங்கிய முதல் ஆண்டு ஆயிரம் ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் அதற்கடுத்த வருடம் 800 பேரை தான் வேலைக்கு எடுக்கும், அதற்கடுத்த வருடம் 500, அதற்கடுத்த வருடம் 200. ஆண்டுக்கு நூறு பேரை புதியதாக எடுக்கும். அதற்கு காரணம் பணி மாறுதலில் செல்பவர்கள் இருப்பதால். இதேதான் அரசு துறைகளிலும். கடந்த ஆண்டு 4 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் தங்களது கல்வியை முடித்தார்கள். இதில் ஒரு லட்சம் பேர் கூட வேலைக்கு செல்லவில்லை என்பதே உண்மையான புள்ளி விபரம். அடுத்த வருடம் அதேபோன்று 3 லட்சம் பேர் வேலைக்கு செல்ல முடியாமல் நிற்பார்கள். இது ஆண்டுக்கு ஆண்டு அதிகாிக்கும். தேவை (வேலைவாய்ப்பு) குறைந்துவிட்டது, உற்பத்தி (பட்டதாரிகள்) அதிகரித்துவிட்டது. பொறியியல் மட்டுமல்ல கலை அறிவியல் கல்லூரிகளிலும் இதே நிலை தான்.

ஐ.டி துறை மட்டுமல்ல தொழிற்சாலைகளிலும் இதே நிலை தான். 30 வருடத்துக்கு முன்பு மேலை நாட்டு குளிர்பானமான பெப்ஸியை கையால் உற்பத்தி செய்தார்கள். அப்போது ஒரு நாளைக்கு ஒரு ஊழியர் ஆயிரம் பாட்டில்களை நிரப்பினார். ஆயிரம் பணியாளர்கள் ஒரு நாளைக்கு பத்து லட்சம் பாட்டில்களை விற்பனைக்கு அனுப்பினார்கள். அதே பெப்ஸி கம்பெனி இன்று ஒரு ஒரு நிமிடத்துக்கு 10 ஆயிரம் பாட்டில்களை விற்பனைக்கு வெளியே அனுப்புகின்றன. அப்படியென்றால் அந்த கம்பெனியில் லட்சகணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்களா என கேட்டால் இல்லை. 30 ஆண்டுக்கு முன்பு அந்த கம்பெனியில் ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றினார்கள் தற்போது அந்த கம்பெனியில் 50 பேருக்கும் குறைவானவர்கள் தான் பணியாற்றுகின்றனர். பணியாளர்கள் இல்லை பின் எப்படி இவ்வளவு உற்பத்தி என கேட்டால் அந்தளவுக்கு தொழிற்சாலைகளிலும் இயந்திரத்தன்மை வந்துள்ளது. இதேபோன்று தான் மற்ற துறைகளிலும்.

இதனை மாற்ற முடியாது. அதற்கு பதில் மாற்றத்தை நோக்கி நாம் தான் நகர வேண்டும். கல்வி முறையில் மட்டுமல்ல படித்துவிட்டு சட்டையில் அழுக்கு படியாத வேலைக்கு செல்ல நினைக்கும் இளையோர்களின் மனதில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். படிப்பு என்பது உலக தகவல்களை அறிந்துக்கொள்ளத்தானே தவிர வேலை வாய்ப்புக்கானது அல்ல. சுயதொழில், விவசாயம் உட்பட பல தொழில்களை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.

பொருளாதார மந்த நிலையால் தான் இந்த நிலை என்கின்றனர். பொருளாதாரம் சீரானாலும் ஓரளவு தான் நிலை மாறும்மே தவிர மாற்றப்படி பெரிய மாற்றம் இருக்காது என்பதே நிதர்சனம். இதற்கு அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும், பெருந்தொழில் நிறுவனங்களையும் குற்றம் சாட்டி ஒன்றும் புரியோஜனம்மில்லை. மாற்றத்துக்கான வழியை ஏற்படுத்த வேண்டும். உலக அளவில் குறிப்பாக ஆசியாவில் மக்கள் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, படித்துவிட்டேன் என் தகுதிக்கான வேலையைத்தான் செய்வேன் என்ற முடிவை கைவிட வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் தரும் வேலையை செய்தாலே போதும். ஓரளவு இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும்.

1 கருத்து:

  1. அன்று வெளிநாட்டுக்கு வேலைக்குப் போகிறேன் என்று சென்றனர்
    இப்போதெல்லாம் இங்கிருந்துகொண்டு வெளிநாட்டுக்கு வேலை பார்க்கிறார்கள்

    பதிலளிநீக்கு