வெள்ளி, மே 31, 2013

மாவோயிஸ்ட் அழிப்பு சாத்தியமா?. அரசு செய்வது சரியா ?.



சத்திஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் மாநிலத்தை ஆளும் பி.ஜே.பிக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய பேரணியின் போது சத்திஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், அவரது மகன் தினேஷ், முன்னால் மத்தியமைச்சர் வி.சி.சுக்லா, ஜில்வாஜீடும் என்ற கூலிப்படையை உருவாக்கிய பழங்குடி இனத்தை சேர்ந்த முன்னால் அமைச்சர் மகேந்திரகர்மா இதில் முக்கியமானவர்கள். கார்களில் அடர்ந்த வனப்பகுதி வழியாக இருபதுக்கும் மேற்பட்ட கார்களில் பாதுகாப்பு படையினரின் துணையோடு சென்றபோது சுக்மா மாவட்டம், தர்பாகாட் என்ற காட்டுப்பகுதியில் பெண் மாவோயிஸ்ட்டுகள் கார்களை மடக்கியுள்ளனர். கார்கள் நின்றதும் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் கார்களை நோக்கி வெடிகுண்டை வீசியதோடு துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு சுட்டுள்ளனர். இறுதியியல் மகேந்திரகர்மா உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் சம்பவயிடத்தில் பலியாகினர். நந்தகுமார் படேல், அவரது மகன் தினேஷ் கடத்தி செல்லப்பட்டு காட்டுக்குள் வைத்து கொல்லப்பட்டனர், வி.சி.சுக்லா குண்டு காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட மாவோய்ஸ்ட்டுகள் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், நந்தகுமார் மாநில உள்துறை அமைச்சராக இருந்தபோது எங்களுக்கு எதிராக துணை இராணுவப்படையை ஏவினார் என குற்றம்சாட்டியுள்ளனர். தண்டகாரன்யா பகுதியில் இருந்து துணை இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

சத்திஸ்கரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மிக முக்கிய அரசியல் தலைவர்கள் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற உடன் இந்திய ஒன்றிய அரசு மீண்டும் தவறான முடிவை எடுக்கிறது. அது மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது. அதில் குறிப்பிட தக்கது கோப்ரா படை. 

சத்;திஸ்கர் மாநிலம் பழங்குடி மக்கள் அதிகம் கொண்ட மாநிலம். இவர்கள் வாழும் பகுதிகளில் தாதுக்கள் அதிகம். அதை வெட்டியெடுக்க வேண்டுமென்றால் அந்த பகுதியில் உள்ள மக்களை விரட்டினால் தான் முடியும். அதை பெருமுதலாளிகளின் நிறுவனனங்கள் நேரடியாக இறங்கி செய்ய முடியாது. அந்தப்பணியைத்தான் அரசின் பாதுகாப்பு படையினரும், அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கூலி படையினரும் செய்கின்றனர். 

டாடா, எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள் சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள தண்டவாடா மற்றும் பஸ்தார் மாவட்டத்தில் தாது வெட்டியெடுக்கும் ஒப்பந்தத்தை மாநில அரசோடும், மத்தியரசோடும் செய்துக்கொண்டுள்ளன. இப்படி மாநிலத்தின் பல பகுதிகளை பல பெரு நிறுவனங்கள் ‘குத்தகைக்கு’ எடுத்துள்ளன. இந்த பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களை கொண்டு சிலப்பணிகளை இந்த நிறுவனங்கள் செய்ய தொடங்கின. புpன் மெல்ல மெல்ல பழங்குடி இன மக்கள் வாழும் கிராமங்களை காலி செய்ய வைத்து விரட்ட தொடங்கினர். வேலையில் இருந்தும் துரத்தினர். வுhழ்விடங்களை இழந்தும், வாழ வழியில்லாமல் தவித்த போது தான் பழங்குடியினர்க்கும் - பெருமுதலாளிக்கும் மோதல் தொடங்கின. புழங்குடி இன மக்களை விரட்டினால் தான் தொழில் செய்ய முடியும். 

இந்தயிடத்தில் தான் பெருமுதலாளிகள் அரசாங்கத்திடம் முறையிடுகிறார்கள். முhநில அரசாங்க படைகள் பாதிக்கப்பட்ட மக்களை துரத்த, அவர்கள் பதிலுக்கு தாக்க மோதல் தொடங்கியது. இதனை தேர்தல் பாதையில் நம்பிக்கையில்லாத மாவோயிஸ்ட் அமைப்பின் பல்வேறு பிரிவுகள் பாதிக்கப்பட்ட பழங்குடி இன மக்களுக்கு ஆதரவு தருகிறார்கள். போராட்ட களத்துக்கு வருகிறார்கள். பாதுகாப்பு படைகளை போல இவர்களும் பாதிக்கப்பட்டவர்கள் கையில் ஆயுதங்களை தருகிறார்கள், பயிற்சி தருகிறார்கள், மோதுகிறார்கள். பிரச்சனை பெரியதாக மத்திய பாதுகாப்பு படைகள் களத்துக்கு வருகின்றன. இவர்களும் மக்களை விரட்ட தொடங்கினர். ஈவு இறக்கம்மின்றி தங்கள் உரிமைக்காக போராடியவர்களை சுட்டுக்கொல்கின்றன அரசப்படைகள். இது மனித உரிமையாளர்களால் பிரச்சனையாக்கப்படுகின்றன. 

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக மத்திய – மாநில அரசுகளின் திட்டத்தில் உருவாக்கப்பட்டன கூலிப்படைகள். அதில் முக்கியமானது சல்வா ஜீடும் என்ற அமைப்பு. இதனை மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக உருவாக்கினார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகேந்திரா கர்மா. இந்த படைக்கு பெரு நிறுவன முதலாளிகள் நிதி தந்தனர். மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்பு படையினரை கொண்டு ஆயுதங்கள் தரப்பட்டது. இந்த படை பசுமை வேட்டை என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவான கிராமங்களில் புகுந்து வேட்டை நாய்களை போல மக்களை வேட்டையாட தொடங்கினர். வீடுகளை கொளுத்துவது, பெண்களை பாலியல் வல்லுறுவு செய்வது, இளைஞர்களை கொல்வது என்ற பணியை செய்தனர். இத்தனையும் செய்துவிட்டு அதை மாவோயிஸ்ட்டுகள் மேல் சுமத்துவதை வழக்கமா கொண்டு இருந்தனர். அரசாங்கத்தின் முழு ஆதரவு இருந்தததால் இவர்கள் ஆட்டம் எல்லை மீறியது. பதிக்கப்பட்ட மக்களுக்காக பாதுகாப்பு முகாம் திறக்கிறோம் என அறிவித்த மத்திய – மாநில அரசாங்கங்கள் பழங்குடி இன மக்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து இழுத்து வந்து முகாம்களில் தள்ளினர். முகாம்களுக்கு வெளியே சல்வா ஜீடும் அமைப்பு துப்பாக்கிகளோடு நின்றது. அரசாங்கத்துக்கு எதிரான மனித உரிமை போராளிகள், பத்திரிக்கையாளர்கள், இயக்கங்கள் இந்த அரச கூலிப்படைகளால் மிரட்டப்பட்டனர். 

இந்த அமைப்பால் 2005 முதல் 2007 வரை 644 பழங்குடி கிராமங்களில் இருந்து 50000 பேரின் வாழ்விடங்களை காலி செய்ய வைத்து 20 முகாம்களில் அடைத்து வைத்து ஒருநாளைக்கு 50 ரூபாய் தந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாடோடிகளாக மாறியுள்ளனர். முகாம்களில் அடிப்படை கல்வி கிடையாது, மருத்துவ வசதி சுத்தமாக கிடையாது என்பதை டெல்லியில் இருந்து சென்ற உண்மை அறியும் குழு ஒன்று அறிந்து அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு சல்வா ஜீடும் என்ற அமைப்பிடம்மிருந்து ஆயுதங்கள் கலையப்பட வேண்டும், அரசாங்கங்கள் இது போன்ற அமைப்புகளை நடத்துவது அதிர்ச்சியளிக்கிறது என 2011ல் உத்தரவிட்டது. உத்தரவு வருவதற்க்குள் இவர்கள் செய்த அட்டூழியங்கள் கணக்கில் அடங்கா. 

உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது என்பதற்காக அரசாங்கங்கள் கூலி படைகளை கலைத்துவிடவில்லை. பெயர்களை மாற்றி வேறு பெயர்களில் இயங்க வைத்துள்ளன. சத்திஸ்கர் பாதுகாப்பு துறை, கோயா கமாண்டோ படையை சூர்யா என்ற ரவுடியின் தலைமையில் உருவாக்கி நிதி, ஆயுத உதவியை செய்து வருகின்றன என அந்த மாநில உள்துறை அமைச்சரே 2012ல் வெளிப்படையாக குற்றம்சாட்டிய நிகழ்வு நடந்துள்ளனன. 

2012 ஜீன் 28ந்தேதி பிஜாப்பூர் மாவட்டத்திலுள்ள சர்குகேடா என்ற கிராமத்தை சேர்ந்த குழந்தைகள், ஊர் பெரியவர்கள் என 28 பேரை சுட்டுக்கொன்றது துணை இராணுவப்படை. மாவோயிஸ்ட்டுகளுடனான மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என அறிவித்தார் துணை இராணுவப்படையின் இயக்குநராக இருந்த விஜயகுமார். ஆனால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அப்பாவி கிராமத்து மக்கள் என்பது வெட்ட வெளிச்சமானபோது மத்திய மாநில அரசாங்கங்கள் வாய்மூடி மவுனியாக இருந்தன. நீண்ட போராட்டத்துக்கு பின்பே உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என சத்திஸ்கர் அரசு அறிவித்தது. மாவோயிஸ்ட் தளபதியான கிஷன்ஜீ கொல்லப்பட்டபோது வெற்றி வீரராக தன்னை காட்டிக்கொண்ட விஜயகுமார், அப்பாவி பழங்குடி மக்களை கொன்றதில் அவரது முகமுடி கிழிந்தது. 

தற்போது அரசியல்வாதிகள் மீதான தாக்குதலுக்கு பின் மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க கூடுதல் படையை இறங்கி விட்டுள்ளது மத்தியரசு. மீண்டும் தவறான முடிவை எடுத்துள்ளது. 

மாவோயிஸ்ட்டுகள் என்பவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்களோ, பாகிஸ்தான் போல் ஜிகாத் என்ற பெயரில் இந்தியாவுக்குள் அனுப்பப்பட்டவர்களோ, இந்திய ஒன்றியத்தை சிதைக்க சீனாவால் உருவாக்கப்பட்ட போலி போராளி அமைப்புகளோ அல்ல. அவர்கள் இந்திய அரசால், இந்திய பாதுகாப்பு படைகளால் சிதைக்கப்பட்ட, சின்னப்பின்னமாக்கப்பட்ட, பெருமுதலாளிகளுக்காக விரட்டப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து உருவானவர்கள். 

பெருநிறுவனங்களால் பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனை தீரும் வரை மாவோயிஸ்ட்டுகளை அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது. கொல்ல கொல்ல மீண்டும் வந்துக்கொண்டே தான் இருப்பார்கள். ஏன் எனில் மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ளவர்கள் தங்களுக்கு வசதி வேண்டும் என போராடவில்லை. தங்களது அடிப்படை உரிமைக்காக போராடுகிறார்கள். ஒருவனின் வீட்டையும், நிலத்தை பறிக்கும் போது அவன் வாழ வழியில்லாமல் எதிர்க்கிறான். அவனுக்கு ஏன் வாழ வழியில்லாமல் போனது என்பதை அரசாங்கங்கள் ஆராய வேண்டும். ஆனால் அரசாங்கங்கள் ஆராயாது ஏன் எனில் அதற்கு காரணம் தெரியும். பின் என்ன செய்ய?. அவனுக்கான மாற்று வழிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதைத்தான் செய்ய மறுக்கின்றன அரசாங்கங்கள். மறுக்க காரணம், அரசாங்கங்கள் என்பது மக்களுக்கானதல்ல. பெருநிறுவனங்களுக்கானது, அரசியல்வாதிகளுக்கானது. 

அதனால் இந்த ‘யுத்தம்’ தொடரவே செய்யும். பாதிக்கப்படும் மக்கள் மாவோயிஸ்ட்டுகளாக மாறவே செய்வர். 

சனி, மே 25, 2013

அன்பே அழகானது. – தொடர் கதை. பகுதி – 1.

இணையத்தில் கிடைத்த ஓவியம். ஒவியம் வரைந்தவர்க்கு நன்றி.


வாழ்த்துக்கள்.

சாந்தமும், அமைதியும் குடிகொண்ட பிரபலமான குழந்தை ஏசு மெட்ரிக்குலேஷன் பள்ளி பிரின்ஸ்பல் நாற்பத்தியெட்டு வயது சிஸ்டர் சில்வியா கண் கண்ணாடியை கழட்டி வைத்தபடி சொன்னதும் எதிரே அமர்ந்திருந்த சுதா புன்னகையுடன் நன்றி மேடம் என்றாள்.

எங்க பள்ளியை விட பிரபலமான பள்ளிங்க இங்க இருக்கு. நீங்க நல்லா படிச்சியிருக்கிங்க. உங்க தகுதிக்கு காலேஜ்கள்ளயே நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைக்கும்மே அங்கயெல்லாம் போகாம குறைந்த சம்பளத்துக்கு இங்க டீச்சரா வேலைக்கு சேர என்ன காரணம் ?.

என்னோட சின்ன வயசுல இந்த ஸ்கூல்ல படிக்கனம்ன்னு ஆசை. அப்ப முடியல. இப்ப வேலை பாக்க வேண்டிய நிலை வந்ததும் இங்க சேரனம்ன்னு ஆசைப்பட்டன். விளம்பரத்த பாத்து அப்ளே பண்ணன் என சுதா சொன்னபோது மெல்ல புன்னகைத்த சிஸ்டர் சில்வியா, நீங்க எய்த் டூ டென்த் ஸ்டூடன்ட்க்கு கெமிஸ்ட்ரி க்ளாஸ் எடுங்க.

சரிங்க மேடம்.

தன் இருக்கையில் இருந்து எழுந்த சிஸ்டர் சுதாவிடம் வாங்க என அழைத்தார்.

மேடம் ஒரு நிமிஷம். உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டா தப்பா எடுத்துக்கமாட்டிங்களே ?.

தெரியாததைத்தான் கேள்வியா கேட்பாங்க. அதல என்ன தப்புயிருக்கு. கேளும்மா என்றார் சிரித்தபடியே ?.

ஸ்கூல்ல எல்லாரும் இங்கிலிஷ்ல தான் பேசனம்ன்னு வெளியில சொன்னாங்க. நீங்களே தமிழ்ல பேசறிங்களே.

ஆங்கிலம் கத்து தர்றோம் இல்லன்னு சொல்லல. ஆனாலும் இங்க தாய்மொழிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. வெளிநாட்லயிருந்து வந்த கால்டுவெல் தமிழ் கத்துக்கிட்டு தமிழைப்பத்தி சிறப்பா நூல்கள் எழுதனாரு. ஆப்படியிருக்கும் போது நம்ம மொழிய நாம பேசலன்னா நல்லாயிருக்கும்மா. முதல்ல தாய்மொழிக்கு முக்கியத்துவம், அதுக்கப்பறம் தான் பிறமொழி. மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ங்கறதால இங்கிலிஸ்ல தான் பேசுவாங்கன்னு வெளியில இருக்கறவங்க நினைக்கறாங்க. அப்படியெல்லாம் இல்ல பசங்களுக்கு ஆங்கிலத்த கற்று தர்றோம், தாய் மொழிய உணர வைக்கறோம் என்றவர் போகலாம்மா என கேட்டார் சுதா தலையாட்டியதும் நடக்க தொடங்கினார். அலுவலக வாயிலில் நின்று டேவிட் என அழைத்தார். வந்துட்டன் மேடம் என குரல் தந்தப்படி 40 வயதான டேவிட் பவ்யமாக வந்து நின்றார். சுதா இவர் ஆபிஸ் பியூன் டேவிட் என அறிமுகப்படுத்தியவர், டேவிட் இவுங்க சுதா புது அப்பாய்மெண்ட் 8 டூ 10 கெமிஸ்ட்ரி க்ளாஸ் எடுக்கபோறாங்க. இவுங்களுக்கான டைம்டேபிள் கம்ப்யூட்டர் ரூம்ல இருக்கும் பிரிண்ட் அவுட் வாங்கி வாங்க எனச்சொல்லிவிட்டு நடந்தார்.

ஸ்டாப் ரூம்க்குள் நுழைந்த சிஸ்டரை கண்டு அனைவரும் எழுந்து நின்றனர். தன் பின்னால் நின்ற சுதாவை சுட்டிகாட்டி எம்.எஸ்.சி. எம்.பிஎல் முடிச்சியிருக்காங்க. நம்ம ஸ்கூல்க்கு கெமிஸ்ட்ரி டீச்சரா அப்பாய்மென்ட் பண்ணியிருக்கு. நீங்க இவுங்களுக்கு ஒத்தொழைப்பு தரனும் என்றவர் சுதா பக்கம் திரும்பி இதான் ஸ்டாப் ரூம், டைம் டேபிள் தரச்சொல்றன், போய் உட்காருங்க குட் லக் எனச்சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தார்.

சுதா காலியாக இருந்த இடத்தில் அமர அருகில் இருந்த ஒரு ஆசிரியை ஹாய், ஐயெம் மலாதி. இங்கிலிஷ் டீச்சர் என அறிமுகமானார்.

நீங்க என்ன ஊர் ?.

இதே ஊர் தான் காந்தி நகர்ல இருக்கன்.

எங்க படிச்சிங்க ?.

திருச்சியில எம்.எஸ்.சியும், பெரியார் யுனிவர்சிட்டியில எம்.பில் பண்ணன்.

ஆப்பா என்ன பண்றாரு ?

பிஸ்னஷ் பண்றாரு.

இதுக்கு முன்னாடி எங்கயாவது வேலை பாத்திங்களா?.

இல்ல.

ஏன் ?.

சும்மா தான் எங்கயும் முயற்சி பண்ணல.

மாலதி மேடம் அவுங்க இப்பத்தான் வந்துயிருக்காங்க. அதுக்குள்ள அவுங்கள ஏன் ராக்கிங் பண்றிங்க விடுங்க என ப்ரியா சொல்ல அந்த அறையே சிரிப்பால் அதிர்ந்தது.

ஏன் மேடம் கலாய்க்கறிங்க. புதுசா வந்துயிருக்காங்க. அவுங்களப்பத்தி உங்களுக்கும் தெரியாது. உங்க மனசுல இருக்கற கேள்வியையும் தான் நான் கேட்கறன் தெரிஞ்சிக்கிட்டா பழகா ஈசியா இருக்கும்மில்ல அதுக்குத்தான் கேட்கறன் என்றார்.

நீங்க கேளுங்க மேடம் என சுதா சொன்னதும்

கல்யாணமாகிடுச்சா

என கேட்டதும் சுதா அமைதியாகி சுதாவின் முகம் சுருங்கி கண்ணீல் நீர் கோர்த்தது. இதை பார்த்த மாலதிக்கு சுதா பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.

தொடரும்……………

வெள்ளி, மே 17, 2013

நாமும் சாதி ‘தலைவர்கள்’ தான்.



வன்னியர்கள், தாழ்த்தப்பட்டோர், முக்குலத்தோர், கொங்கு கவுண்டர்கள் என பலப்பல சாதிகளுக்காக இயக்கம் நடத்துபவர்கள், கட்சி நடத்துபவர்கள், சங்கம் நடத்துபவர்கள் யாரும் சாதியை ஒழிக்கவேண்டும் என நடத்தவில்லை. அவர்கள் மட்டுமல்ல ஓட்டு அரசியல் நடத்தும் கட்சிகள் முதல் கம்யூனிஸ்ட்டுகள் வரை சாதியை வைத்து அரசியல் மட்டும்மே செய்கிறார்கள். யாரும் சாதியை ஒழிக்க பாடுபடவில்லை. அவர்களை விடுங்கள். அந்த சாதி தலைவர்களை விட ஒருபடி மேலே நாம் சாதி பித்தர்களாக தான் இருக்கிறோம். 

நாம் யாரும் சாதியை ஒழிக்கவோ, அதனால் ஏற்படும் கொடுமைகளை நிறுத்தவோ குரல் கொடுக்கவில்லை, போராடவில்லை. நாம் ஒவ்வொருவரும் தன் சாதியை மறைத்துக்கொண்டு சாதி பிரச்சனைகளில் சாதிக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். சாதி மறைப்பு என்பது சாதி இல்லை என்று தானே பொருள் என கேட்கலாம்.

அல்ல.

மறைப்பு என்பது நாம் சாதியோடு தான் வாழ்கிறோம் என்பதே பொருள்.

தமிழகத்தில் சாதி பெயரை தன் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ள ஒவ்வொருவரும் தயங்கும், மறுக்கும் இடத்துக்கு கொண்டுவந்தவர் பெரியார். ஆனால் அவரால் சாதியே இல்லாமல் செய்ய முடியாமல் போய்விட்டது. காரணம் அவர் மட்டுமல்ல அவருடன் இருந்த பலரும் சாதியை விட முயற்சிக்கவில்லை என்பதே உண்மை. பெரியார் மறைந்தபின் அவரோடு அவர் வளர்த்த கொள்கைகளும் மறைந்து போயின என்பதே உண்மை. தந்தை பெரியாருக்கு கன்னடன் என முத்திரை குத்தியவர்கள் நாம்.

திராவிட மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மக்களைப்போல, அரசியல்வாதிகளைப்போல, அதிகாரிகரிகளைப்போல நாம் சாதி பெயரை பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்டு சுற்றவில்லை. அதற்காக நம்மிடம் சாதியில்லை என்று அர்த்தம்மில்லை. அவர்கள் வெளிப்படையாக சாதி ரீதியாக செயல்படுகிறார்கள், நாம் மறைமுகமாக சாதியோடு செயல்படுகிறோம்.

கன்னடனும், தெலுங்கனும், மலையாளியும் சாதிகளாய் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என வெளிப்படையாக காட்டிக்கொண்டு மோதிக்கொண்டாலும் அவன் மண்ணுக்கு என்று ஒரு பிரச்சனை வரும் போது சாதியை மறந்துவிடுகிறான். தமிழகத்தில் மண்ணுக்கள்ள மனிதனுக்கே பிரச்சனை என வரும்போது அரசியல்வாதிகள் மட்டுமல்ல நம்மிடமும் சாதி தான் தலைவரித்தாடுகிறது. 

சாதி நம்மிடம்மிருந்து மறையாமல் போனதற்க்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டும் காரணமல்ல நாமும் தான். ஒரு தொகுதியில் எந்த சாதிக்காரன் அதிகமாக இருக்கிறானோ அவனுக்கு கட்சிகள் சீட் தருகிறது. அந்த மக்களும் சாதியையும் பார்த்து தான் ஓட்டு போடுகிறார்கள்.

சாதி சண்டைகள் நடக்கும்போது இந்த காலத்தல போய் என்னடா சாதி பாத்துக்கிட்டு சண்டைய விடுங்கடா என்றும் சாதிக்கட்சிகளை தடை செய்யவேண்டும் என கருத்தாளர்களாய் மாறும் நாம் மாற்று சாதியில் மணம் முடிக்கிறோமா என கேட்டால் இல்லை. ஊருக்கு தான் உபதேசம் நமக்குயில்லை என்ற மனப்பான்மையில் செயல்படுகிறோம்.

அசியல்வாதிகள் சாதியை வளர்க்கிறார்கள், சாதியால் மக்களை பிரித்து வைத்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கிறோம். என் கேள்வி வேற்று சாதியில் திருமண உறவு வைத்துக்கொள்ள கூடாது என எந்த அரசியல்வாதி வந்து நம்மை தடுத்தான். அய்யர் தாலி எடுத்துக்கொடுத்தால் தான் அது கல்யாணம்மாக பதிவு செய்யப்படும் என எந்த அரசியல்வாதி வந்து வகுப்பெடுத்தான். அப்படியாரும் சொல்லவில்லை. எந்த அரசியல்வாதியும் நம்மை தடுப்பதில்லை அவனுக்கு வழி ஏற்படுத்தி தருவதே நாம் தான். கீழ்சாதி மேல்சாதி என அடித்துக்கொள்ளும் போது நமக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்படுகிறது அப்போது அரசியல்வாதிகள் மேல் பழியை போடுகிறோம். படித்த புத்திசாலிகள் முதல் விவசாயம் செய்யும் பாமர விவசாயி வரை மறைமுக சாதி சங்கங்களில் உறுப்பினராக இருக்கிறார்கள்.

சாதியை ஒழிக்க இங்கு யாருக்கும் மனம்மில்லை என்பதே உண்மை. காரணம் நம் ரத்தத்தில் சாதி என்பது ஊறிவிட்டது. ஆயிரம் ஆண்டுகாலமாய் சாதி என்ற மிருகத்திடம் முப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாய் அடிமையாய் வேலை செய்துவருகிறோம். இப்போதும் வேலை செய்கிறோம் மறைமுக வேலைக்காரனாய். அந்த மறைமுக வேலைக்காரன்களை இப்போது நேரடி வேலைக்காரன்களாக்க முயல்கிறார்கள். அதை தடுக்கும் வழி அரசியல்வாதிகளிடம்மோ, அரசாங்கத்திடம்மோ கிடையாது நம்மிடையே தான் உள்ளது. சாதி என்பது குத்தப்பட்ட பச்சையல்ல. பென்சிலால் எழுதப்பட்டது. அதை அழிக்கும் ரப்பர் நம்மிடம் உள்ளது. அதைத்தான் நம் முன்னோர்களும் பயன்படுத்தவில்லை, நாமும் பயன்படுத்த மறுக்கிறோம்.

என்ன செய்ய சாதியில்லை, மதம்மில்லை எனச்சொன்ன தேச தந்தை என அழைக்கப்படும் காந்தியை போல நாமும் கபடதாரியாக உள்ளோம்.

வாழ்க ஜனநாயகம்.