வெள்ளி, மே 17, 2013

நாமும் சாதி ‘தலைவர்கள்’ தான்.வன்னியர்கள், தாழ்த்தப்பட்டோர், முக்குலத்தோர், கொங்கு கவுண்டர்கள் என பலப்பல சாதிகளுக்காக இயக்கம் நடத்துபவர்கள், கட்சி நடத்துபவர்கள், சங்கம் நடத்துபவர்கள் யாரும் சாதியை ஒழிக்கவேண்டும் என நடத்தவில்லை. அவர்கள் மட்டுமல்ல ஓட்டு அரசியல் நடத்தும் கட்சிகள் முதல் கம்யூனிஸ்ட்டுகள் வரை சாதியை வைத்து அரசியல் மட்டும்மே செய்கிறார்கள். யாரும் சாதியை ஒழிக்க பாடுபடவில்லை. அவர்களை விடுங்கள். அந்த சாதி தலைவர்களை விட ஒருபடி மேலே நாம் சாதி பித்தர்களாக தான் இருக்கிறோம். 

நாம் யாரும் சாதியை ஒழிக்கவோ, அதனால் ஏற்படும் கொடுமைகளை நிறுத்தவோ குரல் கொடுக்கவில்லை, போராடவில்லை. நாம் ஒவ்வொருவரும் தன் சாதியை மறைத்துக்கொண்டு சாதி பிரச்சனைகளில் சாதிக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். சாதி மறைப்பு என்பது சாதி இல்லை என்று தானே பொருள் என கேட்கலாம்.

அல்ல.

மறைப்பு என்பது நாம் சாதியோடு தான் வாழ்கிறோம் என்பதே பொருள்.

தமிழகத்தில் சாதி பெயரை தன் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ள ஒவ்வொருவரும் தயங்கும், மறுக்கும் இடத்துக்கு கொண்டுவந்தவர் பெரியார். ஆனால் அவரால் சாதியே இல்லாமல் செய்ய முடியாமல் போய்விட்டது. காரணம் அவர் மட்டுமல்ல அவருடன் இருந்த பலரும் சாதியை விட முயற்சிக்கவில்லை என்பதே உண்மை. பெரியார் மறைந்தபின் அவரோடு அவர் வளர்த்த கொள்கைகளும் மறைந்து போயின என்பதே உண்மை. தந்தை பெரியாருக்கு கன்னடன் என முத்திரை குத்தியவர்கள் நாம்.

திராவிட மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மக்களைப்போல, அரசியல்வாதிகளைப்போல, அதிகாரிகரிகளைப்போல நாம் சாதி பெயரை பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்டு சுற்றவில்லை. அதற்காக நம்மிடம் சாதியில்லை என்று அர்த்தம்மில்லை. அவர்கள் வெளிப்படையாக சாதி ரீதியாக செயல்படுகிறார்கள், நாம் மறைமுகமாக சாதியோடு செயல்படுகிறோம்.

கன்னடனும், தெலுங்கனும், மலையாளியும் சாதிகளாய் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என வெளிப்படையாக காட்டிக்கொண்டு மோதிக்கொண்டாலும் அவன் மண்ணுக்கு என்று ஒரு பிரச்சனை வரும் போது சாதியை மறந்துவிடுகிறான். தமிழகத்தில் மண்ணுக்கள்ள மனிதனுக்கே பிரச்சனை என வரும்போது அரசியல்வாதிகள் மட்டுமல்ல நம்மிடமும் சாதி தான் தலைவரித்தாடுகிறது. 

சாதி நம்மிடம்மிருந்து மறையாமல் போனதற்க்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டும் காரணமல்ல நாமும் தான். ஒரு தொகுதியில் எந்த சாதிக்காரன் அதிகமாக இருக்கிறானோ அவனுக்கு கட்சிகள் சீட் தருகிறது. அந்த மக்களும் சாதியையும் பார்த்து தான் ஓட்டு போடுகிறார்கள்.

சாதி சண்டைகள் நடக்கும்போது இந்த காலத்தல போய் என்னடா சாதி பாத்துக்கிட்டு சண்டைய விடுங்கடா என்றும் சாதிக்கட்சிகளை தடை செய்யவேண்டும் என கருத்தாளர்களாய் மாறும் நாம் மாற்று சாதியில் மணம் முடிக்கிறோமா என கேட்டால் இல்லை. ஊருக்கு தான் உபதேசம் நமக்குயில்லை என்ற மனப்பான்மையில் செயல்படுகிறோம்.

அசியல்வாதிகள் சாதியை வளர்க்கிறார்கள், சாதியால் மக்களை பிரித்து வைத்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கிறோம். என் கேள்வி வேற்று சாதியில் திருமண உறவு வைத்துக்கொள்ள கூடாது என எந்த அரசியல்வாதி வந்து நம்மை தடுத்தான். அய்யர் தாலி எடுத்துக்கொடுத்தால் தான் அது கல்யாணம்மாக பதிவு செய்யப்படும் என எந்த அரசியல்வாதி வந்து வகுப்பெடுத்தான். அப்படியாரும் சொல்லவில்லை. எந்த அரசியல்வாதியும் நம்மை தடுப்பதில்லை அவனுக்கு வழி ஏற்படுத்தி தருவதே நாம் தான். கீழ்சாதி மேல்சாதி என அடித்துக்கொள்ளும் போது நமக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்படுகிறது அப்போது அரசியல்வாதிகள் மேல் பழியை போடுகிறோம். படித்த புத்திசாலிகள் முதல் விவசாயம் செய்யும் பாமர விவசாயி வரை மறைமுக சாதி சங்கங்களில் உறுப்பினராக இருக்கிறார்கள்.

சாதியை ஒழிக்க இங்கு யாருக்கும் மனம்மில்லை என்பதே உண்மை. காரணம் நம் ரத்தத்தில் சாதி என்பது ஊறிவிட்டது. ஆயிரம் ஆண்டுகாலமாய் சாதி என்ற மிருகத்திடம் முப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாய் அடிமையாய் வேலை செய்துவருகிறோம். இப்போதும் வேலை செய்கிறோம் மறைமுக வேலைக்காரனாய். அந்த மறைமுக வேலைக்காரன்களை இப்போது நேரடி வேலைக்காரன்களாக்க முயல்கிறார்கள். அதை தடுக்கும் வழி அரசியல்வாதிகளிடம்மோ, அரசாங்கத்திடம்மோ கிடையாது நம்மிடையே தான் உள்ளது. சாதி என்பது குத்தப்பட்ட பச்சையல்ல. பென்சிலால் எழுதப்பட்டது. அதை அழிக்கும் ரப்பர் நம்மிடம் உள்ளது. அதைத்தான் நம் முன்னோர்களும் பயன்படுத்தவில்லை, நாமும் பயன்படுத்த மறுக்கிறோம்.

என்ன செய்ய சாதியில்லை, மதம்மில்லை எனச்சொன்ன தேச தந்தை என அழைக்கப்படும் காந்தியை போல நாமும் கபடதாரியாக உள்ளோம்.

வாழ்க ஜனநாயகம்.


1 கருத்து:

  1. சபாஷ். நன்கு எழுதியுள்ளீர்கள். இதைத்தான் நானும் சொல்கிறேன். நாம் நன்கு நடிக்க பயிற்சி பெற்றுக்கொண்டு அடுத்தவர்க்கு அறிவுரை சொல்லும் இணயப்புலிகளாக வலம் வருகிறோம்.

    See this also:
    http://www.sivakasikaran.com/2013/02/blog-post_19.html

    பதிலளிநீக்கு