செவ்வாய், ஏப்ரல் 30, 2013

ஆசிரியர்களுக்கு அரசு வைக்கும் ஆப்பு.



சமீபத்தில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஒரு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள். அதில் ஒரு பள்ளியின் மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெறவில்லையெனில் அந்த வகுப்பு மற்றும் பாடத்திட்டத்துக்கு பொறுப்பான ஆசிரியருக்கு சம்பள உயர்வை தடை செய்ய அரசு ஆலோசிப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. உண்மையில் நல்ல விஷயம்மிது.

தனியார் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் சரியாக பாடம் நடத்தவில்லையெனில் அவரை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். குறைந்த சம்பளம் தரும் அந்த பள்ளிகளே இத்தகைய நடவடிக்கை எடுக்கும் போது அரசு ஊழியராக சேர்ந்தது முதல் தகுதிக்கு மீறி சம்பளம் வாங்குவதோடு அதுவும் பத்தாமல் இன்னும் இன்னும் வேண்டும் என போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் அதற்கான பணியை செய்கிறார்களா என்பதை நாம் சொல்வதை விட அது அவர்களின் மனசாட்சிக்கே தெரியும்.

இன்றைய காலகட்டத்தில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் நூற்றுக்கு ஐம்பது சதவிதம் பேர் சரியாக பாடம் நடத்துவதில்லை, ஆசிரியர் சங்கங்களின் பொறுப்புகளில் உள்ள பெரும்பாலானோர் பள்ளிக்கே போவதில்லை. அதோடு சீனியராக உள்ள ஆசிரியர்கள் ஆசிரியர் பணியை தவிர வட்டிக்கு விடுவது, ரியல் எஸ்டேட் என வேறு பல பணிகளை வேலை நேரத்தில் செய்கிறார்கள் என்பது தான் வெட்ககேடு.

அப்படியே இவர்கள் பள்ளிக்கு போனாலும் பாடம் நடத்துவதில்லை, சந்தேகம் கேட்டால் சொல்வதில்லை, வீட்டில் சிறப்பு வகுப்பு எடுத்து பணம் பிடுங்குவது, பிராக்ட்டிக்கல் மார்க் என பயமுறுத்தி பெண் பிள்ளைகளிடம் தவறாக நடக்க முயல்வது, ஆண் பிள்ளைகளை வீட்டு வேலை செய்ய வைப்பது என நடந்துக்கொள்கின்றனர்.

இப்படி இருந்தால் எந்த மாணவன் தான் படிப்பான். இது ஏதோ கற்பனையாக எழுதுவதில்லை. நிஜம். நகரங்களை விட கிராமப்புறங்களில், மாவட்டத்தின் எல்லையோரங்களில், மலைமேல் உள்ள பள்ளிகள் பலவற்றில் இதுதான் நிலமை.

சமீபத்தில் ஒரு சிறு தகவல் இணையத்தில் பார்த்தேன். பி.எஸ்.என்.எல் சிம்கார்டு வாங்க மாட்டார்கள், அரசு மருத்துவமனையில் வைத்தியம் பார்க்கமாட்டார்கள், அரசு பேருந்தில் பயணம் செல்ல மாட்டார்கள், தன் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்கவைக்க மாட்டார்கள். ஆனால் இவர்களுக்கு அரசாங்க வேலை மட்டும் வேண்டும்.

இவர்கள் பிள்ளைகளை கான்வென்டில் படிக்க வைப்பார்கள். அரசு பள்ளியில் பயிலும் பிள்ளைகளுக்கு கற்று தரமாட்டார்கள். மீறி கேட்டால் சங்கம் என்பார்கள், போராட்டம் நடத்துவார்கள். ஆசிரியர்களுக்கு சரியான கடிவாளத்தை போட அரசு முடிவெடுத்துள்ளது. இதை சரியாக செய்தால் சிறப்பாகயிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக