வியாழன், ஏப்ரல் 25, 2013

தங்கம் ஏற்படுத்தும் சேதாரம்.



தங்கத்தின் விலையில் படுவேகமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த வீழ்ச்சி தொடரும் என்ற பொருளாதார நிபுணர்களின் தகவல் ஒரு சாராருக்கு பதட்டத்தையும், மற்றொரு சாராருக்கு மகிழ்ச்சியையும் வாரி வழங்குகிறது.

எதனால் இந்த வீழ்ச்சி என பார்க்கும் முன்.

உலகில் தங்கம் பயன்படுத்தும் நாடுகளில் இந்திய மக்கள் மிக முக்கிய இடத்தில் நங்கூரம்மிட்டு அமர்ந்துள்ளார்கள். அதற்கு காரணம், நம் இரத்தத்தில், ஜீன்களில் தங்கம் மீதான மோகத்தை கலந்து வைத்துவிட்டார்கள். அதிலும் ஆண்களைவிட பெண்கள் இரத்தத்தில் அதிகமாகவே கலந்து வைத்துள்ளார்கள். அதனால் தான் தங்க நகைகள் பயன்பாட்டில் இந்தியா முன்னனியில் உள்ளது.

இப்படி நாம் தங்கத்தை பயன்படுத்தினாலும் தங்கத்துக்கான விலையை இந்தியா நிர்ணயிப்பதில்லை. காரணம் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது தென்ஆப்ரிக்கா, கனடா போன்ற நாடுகள் தான். உலகில் தென்னாப்பரிக்காவில் தான் 50 சதவிதத்துக்கும் மேலான தங்க சுரங்கள் உள்ளன. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதற்கடுத்த இடத்தில் கனடா உள்ளது. இந்தியாவில் தங்கம் வெட்டும் சுரங்கங்கள் சில உள்ளன. அது அரசு வசம் உள்ளன.

உலகளவில் தங்கம் வெட்டியெடுக்கும் பணி 60 சதவிதத்துக்கும் மேலாக தனியார் நிறுவனங்கள் வசம் உள்ளன. அதனால் தங்க விலை நிர்ணயம் என்பது தனியார் நிறுவனங்களின் கைகளிலேயே உள்ளது. விலை நிர்ணயம் செய்ய உலகளவில் அதற்கென தனி அமைப்பு உள்ளது.

வோல்டு கோல்டு கவுன்சில் என்பது அதன் பெயராகும். இது 1987ல் தொடங்கப்பட்டது. உலக தங்க கவுன்சிலின் துணை தலைவர் தமிழகத்தை சேர்ந்த சிவராம் என்பது குறிப்பிடதக்கது. இதில் 23 நாடுகளின் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. இங்கிருந்து தான் லண்டன் கோல்ட் பிக்சிங் என்ற பெயரில் தங்கத்தின் விலை நிர்ணயிருக்கப்படுகிறது. உலகின் முக்கிய ஐந்து தங்க விற்பனை நிறுவனங்கள் ஒன்று கூடி தங்கத்திற்கான அன்றைய விலையை அறிவிக்கின்றன. அதன்படி விற்பனை நடக்கின்றன.

உலகில் ஆண்டு தோறும் வெட்டியெடுக்கப்படும் மொத்த தங்கத்தில் 24 சதவிதம் இந்தியாவுக்குள் வருகிறது. அதாவது இந்தியாவில் ஆண்டு தோறும் 800 டன் தங்கம் விற்பனையாகிறதாம். அதில் 45 சதவிதத்தை தென்னிந்தியர்கள் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி 557 டன் தங்கம் கையிருப்பு வைத்துள்ளது. ஆனால் இந்திய மக்களிடம் மட்டும் 18 ஆயிரம் டன் தங்கம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. உலக நாடுகளிடம் கையிருப்பில் உள்ள மொத்த தங்கத்தின் அளவு 31,695 டன்னாகும். ( மக்களிடம்மல்ல )

2004க்கு பின் ஏறிக்கொண்டேயிருந்த தங்கத்தின் விலை திடீரென குறைய காரணம் ?


மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, இஸ்லாமிய நாடுகளில் நடந்த உள்நாட்டு கலவரம், போர், ஆட்சி மாற்றம் போன்றவற்றால் பெரும் முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்தவற்க்கு பதில் தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்தனர். இதனால் தங்கம், வெள்ளி விலை சர்சர்ரென ஏறிக்கொண்டு வந்தது.

தற்போது மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக உயர தொடங்கியுள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் லாபத்தில் தங்களது தங்க முதலீடுகளை திரும்ப பெற்றுக்கொண்டு அதனை வேறு பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்கின்றனர். இதனாலும் சர்வதேச அளவில் தங்கம், வெள்ளி போன்றவற்றின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அதோடு, சர்வதேச தங்கத்தை வெட்டி எடுக்கும் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துக்கொண்டன. அதில் குறிப்பிடதக்கது உலகின் முன்னணி தங்கம் வெட்டியெடுக்கும் நிறுவனமான பாரிக் கோல்ட் கார்ப்பரேசன். இதனால் தங்கத்தின் பற்றாக்குறையால் விலை உயர்ந்தது. விலை உயர்வால் உலகில் தங்கம் அதிகமாக வாங்கும் சீனா, இந்திய மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்துக்கொண்டனர். இந்தியாவின் நிதித்துறை தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது. சீனா பொருளாதாரம் தள்ளாட்டத்தின் தொடக்கத்தில் இருப்பதால் தங்கம் வாங்குவதை குறைத்துக்கொண்டது. இதனால் தங்கம் மார்க்கெட் படுத்துக்கொண்டது.

அதைவிட முக்கியம் ஐரோப்பிய நாடுகள் சில விழ்ந்து கிடக்கும் தங்களது பொருளாதாரத்தை சீர்படுத்த தங்கள் கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்துவிட்டன. அதில் முன்னணியில் இருப்பது குட்டி நாடான சைப்ரஸ். அதன்பின் ஸ்லோவினியா, ஹங்கேரி, போர்ச்சுக்கல், இத்தாலி, கிரிஸ், அயர்லாந்து போன்ற நாடுகள் தங்களது கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்று உலக வங்கி மற்றும் பிற நாடுகளிடம் உள்ள கடனை அடைக்க விருப்பதாக தகவல் பரவியுள்ளது.

இத்தனைக்கும் சைப்ரஸ் நாட்டிடம் கையிருப்பில் உள்ள தங்கம் 14 டன். சைப்ரஸ் நாடு விற்க போகிறது என்பதனாலே தங்கம் விலை படு வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இத்தாலி அரசிடம் 2400 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. இவை மூன்றில் ஒரு பங்கை விற்பனை செய்வதாக அறிவித்தாலே தங்கத்தின் விலையில் இன்னும் சரிவு ஏற்படும் என்பது நிஜம்.

கட்டுரை எழுதும் போது சர்வதேச சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் (31.10கிராம்) 1347 டாலர். இதுவே கடந்த பிப்ரவரி மாதம் 1900 டாலராக இருந்துள்ளது.

விலை குறைகிறதே என தங்கம் ஆசைப்பட்டவர்கள் நகைக்கடைகளில் போய் குவிகிறார்கள். பொருளாதார ஆய்வாளர்கள் இந்த விலை வீழ்ச்சி ஆரம்பம் தான். இதனை பார்த்து மக்கள் விலை குறைந்துள்ளதே என தங்கம் வாங்குவார்கள் இதனால் கொஞ்சம் விலை உயரும். உண்மை நிலவரம் என்னவென்றால் தொடர்ந்து தங்கத்தின் விலை சரியும். அதனால் பொறுமையாக படிப்படியாக தங்கம் வாங்குங்கள் என்கிறார்கள். அதாவது பவுனுக்கு 16 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை விலை குறையும் என்கிறார்கள். அதனால் தங்கம் தற்போதைக்கு சேதாரத்தை மட்டும்மே தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக