ஞாயிறு, ஜூலை 22, 2018

ஊரோடு ஒத்துவாழ்ந்தால் இதுதான்.......


திருவண்ணாமலைக்கு மிக அருகில் உள்ள எங்கள் கிராமம் 3 பகுதியாக பிரிந்துள்ளது. கிராமத்துக்கான இடுகாடு என்கிற சுடுகாடு ஊரில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு பாதை கிடையாது. தனி நபர்கள் 5 பேரின் நிலத்தின் மீது எடுத்துச்செல்வது தான் வழக்கம். முழுவதும் விவசாய நிலம். ஆனாலும், யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். அதில் எங்கள் நிலமும் அடக்கம்.

20 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தையாருடன் சேர்ந்த சில முக்கியஸ்தர்கள் ஒன்று சேர்ந்து, சுடுக்காட்டுக்கு ரோடு வேணும் என கோரிக்கை மனு தந்து டி.ஆர்.ஓவை அழைத்து வந்தார்கள். அவர் வந்து சுடுக்காடு வரை நடந்துச்சென்று ஆய்வு செய்தவர் இது தனிநபர்களின் இடம், நில உரிமையாளர்கள் சாலை போட இடம் ஒதுக்கி தந்து கிராம பஞ்சாயத்துக்கு எழுதி தந்தால் தான் ரோடு போட முடியும். அதனால் ஊர் முக்கியஸ்தர்கள் சேர்ந்து சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி முடிவு எடுங்கள் எனச்சொல்லிவிட்டு சென்றார். அதன்பின் 10 ஆண்டுகளாக யாரும் எதுவும் செய்யவில்லை. 2006-2011ல் அமைச்சராக இருந்த தற்போது எம்.எல்.ஏவாகவும் உள்ள எ.வ.வேலுவிடம் முறையிட்டார்கள், தனிநபர்களின் நிலத்தின் வழியே ரோடு போடனும்ன்னா அவுங்க எழுதி தரனும். நிலத்தின் உரிமையாளர்களிடம் ஊர்ல உட்கார்ந்து பேசுங்க, நிதி ஒதுக்கி தர்றன் ரோடு போட்டுக்கலாம் எனச்சொல்லி அனுப்பினார். அப்போதும் யாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை.

என் தந்தை, தாயார் பெயரில் உள்ள 1 ஏக்கர் நிலத்தின் வழியாக சுடுக்காட்டுக்கு செல்கிறார்கள் என்பதால் என்னிடம் வந்து தலைவராக இருந்தவர்கள் கேட்டபோது, நான் இளைஞர் மன்ற தலைவராக இருந்த 2000த்தில் இருந்து இப்போது வரை எல்லோரிடமும் நான் சொல்வது தான். ஊர் வளர்கிறது. ஊரின் ஒரு பகுதியினர் சுடுக்காட்டுக்கு அருகில் உள்ளார்கள், மற்ற இரண்டு பகுதிகள் தூரமாக உள்ளது. அந்த பகுதிகளில் யாராவது இறந்தால் சவத்தை பாடைக்கட்டி 2 கி.மீ தூரம் தூக்கி வரமுடியாது. மக்களும் நடந்து வரமாட்டார்கள். அதனால் சுடுகாட்டுக்கு ரோடு போட முயற்சி செய்யுங்கள், ஊர் பஞ்சாயத்து போடுங்கள், பேசி முடிவு எடுக்கலாம் எனச்சொன்னபோது தலைவர்களாக இருந்தவர்கள் பெரியளவில் முயற்சி எடுக்கவில்லை,

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட தூரம் தூக்கி வர முடியாது என ஏரிக்கரை ஓரம் புதியதாக ஒரு சுடுகாடு உருவாக்கினார்கள். அதை ஏனோ பயன்படுத்த மறுக்கிறார்கள். அப்பகுதி ஊர் முக்கியஸ்தர்கள் ஒத்தொழைப்பு தரவில்லை.

தற்போது விவகாரம் என்னவென தெரியாத 20, 22 வயதான பல இளைஞர்கள், சுடுக்காட்டு பாதையை விவசாயிகள் ஏதோ ஆக்ரமித்து வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு, கடந்த ஓரிரு மாதமாக சவம் வரும்போதுயெல்லாம் ஊருக்குள் வந்து தகராறு செய்வது வாடிக்கையாகவுள்ளது. நான் வண்டியில் தான் சவத்தை எடுத்துச்செல்வேன் என அடம்பிடிக்கின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு சவ ஊர்வலத்தின் போது, ரோடு கிடையாது, நிலத்தில் வண்டி போகாது, தூக்கிக்கிட்டு போங்க எனச்சொன்னபோது, நான்கு சக்கர வாகனத்தின் வழியாகத்தான் சவத்தை கொண்டு செல்வோம் என எங்கள் நிலத்தில் இருந்த வாழை மரங்களை வெட்டிவீசிவிட்டு சென்றனர். 200 மீட்டர்க்கு மேல் வாகனம் செல்ல முடியாமல் தூக்கிக்கொண்டு சென்றனர்.

நேற்று இரவு ஒரு பெண்ணின் சவம் வந்தது. வண்டியில் தான் போவேன் எனச்சொல்ல தூக்கிக்கிட்டு போங்க என நிலத்துக்கு சொந்தக்காரர் ஒருவர் சொல்ல, வழிவிடமாட்டேன்கிறாங்க என விவகாரத்தை திசை திருப்பி சாலை மறியல் செய்தனர். ஆர்.டி.ஓ மற்றும் டி.எஸ்.பி வந்து பேசியபோது, தூக்கி செல்வதை யாரும் தடுக்கவில்லை, வண்டியில் போவதைத்தான் தடுக்கிறோம் என்றார் அந்த விவசாயி. இது தனியார் இடம் அவுங்க இடம் தந்தா தான் பேசி ரோடு போட முடியும் என பிரச்சனை செய்த கிராமத்தாரிடம் விவகாரத்தை முடிக்க இப்போதைக்கு வண்டியோடு போகட்டும் என அனுமதி வாங்கி தந்தபின் விவகாரம் தற்காலிகமாக ஒரு முடிவுக்கு வந்தது.

விவகாரம் இதுதான் என் பத்திரிக்கை நண்பர்களே. பாதிக்கப்படும் 5 விவசாயிகளில் என் தந்தையும் ஒருவர். பிரச்சனை நடக்கிறது வாருங்கள் என உங்களிடம் கூறாததுக்கு காரணம், சக செய்தியாளன் என்கிற முறையில் நான் உங்களை வரவைத்தால் அதையும் தவறாகத்தான் நினைப்பார்கள். அதனால் தான் கூறவில்லை. ( தினகரன் உட்பட சில செய்தித்தாளில் சாலை மறியல் செய்தி வந்துள்ளது, அதில் எழுதப்பட்ட செய்தி 95 சதவிதம் உண்மை)

யாரும் சவத்தை எடுத்துச்செல்ல தடுக்கவில்லை. வாகனத்தில் போவதைத்தான் தடுக்கிறார்கள். ரோடு போடுவதற்கான நிலத்தை வழங்க விவசாயிகள் தயாராகவுள்ளார்கள். அரசோ அல்லது ஊர் நிர்வாகம்மோ கையகப்படுத்தப்படும் நிலத்துக்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றுத்தான் கேட்கிறார்கள். என் தந்தையார் நிலத்தில் இருந்து தோராயமாக 20 சென்ட், மற்றொருவருடைய நிலத்தில் இருந்து 50 சென்ட், இன்னொருவருடையது 10 சென்ட் என போகும் என்பது தோராய கணக்கு. ஏதோ 4 அல்லது 5 சென்ட் என்றாலாவது பணம் வாங்காமலாவது விட்டுவிடலாம்.

பாதிக்கப்படும் விவசாயிக்கு இழப்பீடு வழங்க முயற்சி செய்வோம் என நினைக்காமல் குழுவாக சேர்ந்துவிட்டால் எதையும் சாதித்துவிடலாம் என நினைக்கிறார்கள் ஊரில் குறிப்பிட்ட சிலர். எங்கள் நிலங்களில் அத்துமீறி நுழைகிறார்கள் என நீதிமன்ற தடையாணை வாங்கவோ, போதையில் தகராறு செய்பவர்களிடம் எதிர்த்து சண்டை போடவோ நீண்ட நேரம் ஆகாது. இது ஊருக்குள் ஒருவருக்கொருவரிடம் பகையுணர்வை அதிகப்படுத்தும் என்பதை மறந்துவிடுகிறார்கள். நாளை எங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் இறந்தாலும் அந்த வழியாகத்தான் போகவேண்டும். இதை உணர்ந்துதான் நாங்கள் அமைதியாகவுள்ளோம். இந்த அமைதியை கோழைத்தனம் என நினைக்கிறார்கள் இளைஞர்கள். விவகாரத்தை அறிந்தவர்களும், இளைஞர்களை தவறாக வழி நடத்துவது நீதி, நியாயம் என்பது கிராமங்களிலும் செத்துக்கொண்டு வருகிறது என்பதால் தான்.