வெள்ளி, செப்டம்பர் 27, 2013

சினிமா விமர்சன விருந்தாளிகள்……சினிமா பாத்தோம்மா போனோம்மான்னு இல்லாம்மா விமர்சனம்ங்கிற பேர்ல அவ டான்ஸ் நல்லாயிருந்தது, அவனுக்கு நடிப்பே வரல என எழுதுவதை கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் சில படங்கள் வெளிவரும் முன்பே இது போன்ற படம் உலகத்தில் வேறு எந்த மொழியிலும் வரவில்லை. தமிழ் சினிமாவில் இது ஒரு மைல் கல் என வருடத்துக்கு நாலு படத்துக்காவுது விமர்சனத்துக்கு சர்டிப்கெட் தருவதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரிலிசுக்கு முன்பே படத்தை பார்க்கும் சினிமா செய்தியாளர்கள் விமர்சனம் எழுதுவது ஓ.கே படத்தை பார்க்காமலே எழுதும் இணைய தள, முகநூல் விமர்சன விருந்தாளிகளை என்னவென்று சொல்வது.

சமீபத்தில் இயக்குநர் ராம் இயக்கிய தங்கமீன்கள் என்ற படம் வந்தது. படம் வருவதற்கு முன்பே ஆஹா ஓஹோ என ஒரே பாராட்டு விழா நடத்தினார்கள் முகநூல் தோழர்கள். இந்த படத்துக்கு தியேட்டர் கிடைக்கல என கிளிசரின் போடாமலே கண்ணீர் விட்டார்கள். இதனாலே நான் இந்தப்படத்தை காணவில்லை. படம் பார்க்காமல் எதையும் சொல்லக்கூடாது அதனால் படம் பற்றி விமர்சனத்தை தவிர்த்துவிடுகிறேன். படம் வந்து ஒருவாரம் கூட ஓடவில்லை.

ஆனால் படம் மாபெரும் வெற்றி, மக்கள் ஆதரவு பெருகி ஆறாக ஓடுகிறது என தொலைக்காட்சி அரங்கில் உட்கார்ந்துக்கொண்டு அதன் இயக்குநர், நடிகர்கள் பேசுவது அபத்தமாக இருக்கிறது. இந்த படம் மட்டுமல்ல தனுஷ்சின் மரியான், பாரதிராஜாவின் அன்னக்கொடி, ஹரிதாஸ், மிஷ்கினின் நந்தலாலா, விக்ரம் நடித்த ஒரு படம் என சில படங்கள் வந்த வேகத்தில் பெட்டிக்குள் போனது. இந்த படங்கள் பிற தேசத்து படங்களின் தழுவல், நழுவல், வழுவல் என இணையத்தில் சொன்னார்கள். சிலர் பாராட்டினார்கள்.

விமர்சக விருந்தாளிகள் பாராட்டுவதை விட ரசிகன் ரசித்து பாராட்ட வேண்டும். விமர்சக விருந்தாளிகள் பாராட்டும் இலக்கிய படத்தை பணம் தந்து படத்தை பார்க்கும் ரசிகன் பாராட்டுவதில்லை என்பதே எதார்த்தம். தற்போதைய ரசிகனுக்கு நாட்டை காக்கும் படம்மோ, அறிவுரை சொல்கிற, சென்டிமெண்டை பிழிந்து ஊத்துக்கிற படம்மோ, பில்டப் படம்மோ தேவையில்லை. அவனுக்கு தேவை காதல், நண்பர்கள், காமெடி, ஜாலி இதுதான். அவன் கேட்பதை தந்தாலே போதும். அதை விட்டுவிட்டு தங்கள் மேதாவி தனத்தை காட்ட ‘இலக்கிய, கலை தரத்தில்’ படம் எடுப்பது, சோகத்தில் நெஞ்சை நக்கும் திரைப்படங்களை எடுத்து வெளியிடுவதை ரசிகன் தற்போது பார்ப்பதில்லை, ரசிப்பதில்லை. அந்த ரசனைக்கான கூட்டம் குறைந்துவிட்டது. 80களில் பாசத்தை பற்றி படம் எடுத்தார்கள் ஓடியது. 90களுக்கு பின் காதல் படம் தான் ஓடுகிறது. இப்போது காமெடி கலந்த காதல். கண்ணா லட்டு திண்ண ஆசையா, தேசிங்கு ராஜா, யாயா, கேடிபில்லா கில்லாடி ரங்கா, சூதுகவ்வும், எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

அந்த பாதையில் போவதைவிட்டுவிட்டு நான் சினிமாவில் மறுமலர்ச்சி ஏற்படுத்த போகிறேன் என எழுந்தவர்கள் எல்லாம் குப்புற விழுந்துக்கிடக்கிறார்கள். இயக்குநர் ஹரி, சுந்தர்.சி, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற மசாலா பட இயக்குநர்கள் இன்னும் 10 வருடத்துக்கு சினிமாவில் இருப்பார்கள். ராம், மிஷ்கின், அமீர் போன்றவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. இவர்களை சினிமா விமர்சகர்கள் வேண்டுமானால் பாராட்டிக்கொண்டே இருக்கலாம். ரசிகன் ??????????????

மாற்று சினிமா, மாற்று கதை வரவேண்டாம் என சொல்லவில்லை. அதற்கான தளம் இன்னும் தமிழகத்தில் உருவாகவில்லை என்பதே எதார்த்தம். இயக்குநர்கள் மாற்று சினிமா, மாற்று கதை என்பதை சிறிய பட்ஜெட்டில் இயக்க முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதையும் தங்களது சொந்த காசில் எடுக்க வேண்டும். அடுத்தவன் காசில் எடுக்ககூடாது. அடுத்தவன் காசில் படத்தை எடுத்து அந்த தயாரிப்பாளரை ஓட்டான்டியாக்கி தெருவில் நிற்க வைத்த இயக்குநர்கள் பலர் சினிமாவில் உள்ளார்கள்.


சேரனின் மாயகண்ணாடி, ஷங்கரின் பாய்ஸ், ரஜினியின் பாபா, தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு, மிஷ்கினின் நந்தலாலா, ஹரிதாஸ், மரியான், ராமின் தங்கமீன்கள் போன்றவை கதை நன்றாக இருந்தாலும் 100 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கி படம் பார்க்கும் ரசிகன் அது தேவையில்லை என ஓரம் கட்டிவிட்டான். ஆனால் இதனை ஆராதிக்கும் இலக்கிய விஞ்ஞானிகள், அவர்களை பாராட்ட கிளம்பிவிடுகிறார்கள். நீங்க இதேமாதிரி படம் எடுக்கனும் என பாராட்டு மழையில் நனைத்து விடுகிறார்கள். அந்த படத்தை எடுத்த தயாரிப்பாளரின் கதி அதோகதி. ஆதை அவர்கள் சொல்வதில்லை. இவர்களின் இலக்கிய பசிக்கு ஏதோ ஒரு தயாரிப்பாளன் சொத்து, சுகங்களை இழக்கிறான் என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள் அல்லது மறைத்துவிடுகிறார்கள். மாற்று சினிமா பற்றி பேசும் இந்த இலக்கிய விஞ்ஞானிகளும் பணம் போட்டு படம் எடுப்பதில்லை என்பதால் அவர்கள் இயக்குநர்களை ஊக்குவிக்கதான் செய்வார்கள்.

ஜனரஞ்சகமான கதை தான் தேவை. தங்கமீன்கள் படம் எடுத்த தயாரிப்பாளர் துண்டை தலையில் போட்டுக்கொண்டு இருப்பார் என்பது நிஜம். தங்கமீன்கள் மட்டுமல்ல ‘இலக்கிய, மாற்று சிந்தனை’ என விமர்சனம் வைக்கப்பட்ட படங்களின் தயாரிப்பாளருக்கு இதுதான் நிலைமை. அந்த வரிசையில் மிஷ்கினின் ‘ஓநாயும், ஆட்டுக்குட்டியும்’ என்ற தலைப்பில் ஒரு படம் வெளிவந்துள்ளது. இதையும் இலக்கிய விஞ்ஞானிகள் பாராட்டு பத்திரம் படம் வெளிவரும் முன்பே வெளியிட்டுவிட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக