வெள்ளி, செப்டம்பர் 27, 2013

எனக்கு இந்த ‘பொம்மை’ தான் வேணும்……



இந்தியாவில் எத்தனையோ அரசியல்வாதிகள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்குகள் உள்ளன. அப்படி வழக்கு இல்லாத அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். குறிப்பாக தமிழகத்தில். அப்படியிருக்க ஜெ தன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நூற்றுக்கணக்கான வாய்தாக்கள் வாங்கியுள்ளார். அதற்காக அவர் சொல்லும் காரணங்கள் அற்பத்தனமானவை, நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் வகையில் இருப்பவை. இதை ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையும் கேட்பதில்லை, முதல் தூணான நீதித்துறையும் கேட்பதில்லை. பத்திரிக்கை துறையினர் தான் பயந்து கிடக்கிறார்கள் என்றால் நீதித்துறையினர்க்கு என்ன வந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ மீதான வழக்கென்றால் மயிலிறகால் வருடி தருகிறார்கள்.

1991 – 1996 ஆம் காலகட்டத்தில் அவர் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய காலகட்டம். ( அவர் சொன்னது தான் ) ஆட்சியில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியதாக பின் வந்த திமுக அரசு வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவுப்படி கைது செய்தது. அந்த வழக்கு தமிழக நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் நடத்தி வந்தனர்.

2001ல் மீண்டும் தமிழக முதல்வரனார் ஜெ. முதல்வர் மீதான வழக்கை அவர் ஆட்சியின் கீழ் இயக்கும் காவல்துறை சரியாக நடத்தாது, நீதித்துறையில் குறுக்கீடு இருக்கும் என திமுக பொதுசெயலாளர் பேரா.அன்பழகன் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றியது. கர்நாடகா மாநிலத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. பலப்பல வாய்தாக்களுக்கு பின் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. அரசின் சார்பில் வழக்கறிஞராக இருந்த ஆச்சாரியா என்பவருக்கு வந்த பல வித மிரட்டல்களால் மன உளைச்சளாகி வழக்கில் இருந்து விலகி கொள்வதாக பகிரங்கமாக அறிவித்துவிட்டு அப்போது கர்நாடகாவை ஆண்ட பி.ஜே.பி மீது குற்றம் சாட்டிவிட்டு தன் பதவியை ராஜினாமா செய்தார்.

அரசு வழக்கறிஞராக பவானிசிங் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் ஜெ வழக்கறிஞர்களுடன் சேர்ந்துக்கொண்டு வழக்கை விரைவாக முடிக்க முயல அதற்கு நீதிபதி பாலகிருஷ்ணாவும் ஒப்புக்கொள்கிறார். இதனைத்தான் திமுக தரப்பு தங்கள் கையில் எடுத்துக்கொண்டு உச்சநீதிமன்றம் வரை சென்றது.

உச்சநீதிமன்றத்தில் சின்னப்பிள்ளைகள் மிட்டாய் கேட்டு அடம்பிடிப்பது போல ஜெவும், இப்பயிருக்கற அரசு வழக்கறிஞரே தான் என் தரப்பு வழக்கறிஞர்களை எதிர்த்து வாதாடனும், இப்பயிருக்கற நீதிபதியே தான் வழக்குக்கு தீர்ப்பு தரனும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார். அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விசாரிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில், இன்னார் தான் அரசு வழக்கறிஞராக இருக்க வேண்டும், இந்த நீதிபதி தான் தீர்ப்பை எழுத வேண்டும் என கேட்பானாம் அதை நீதித்துறை விசாரிக்குமாம். இதே கோரிக்கையை ஒரு பிட்பாக்ட் திருடன் எழுப்பினால் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா ?.


இதை அரசியல் கட்சிகள் மட்டுமல்ல பெரும்பான்மையான பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், சட்டத்துறையினர் கூட இதனை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டுள்ளனர்.

இங்கு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நீதி, ஏழைக்கு ஒரு நீதி என்ற நிலையில் தான் நாடு உள்ளது. இந்த சட்டத்தை தான் சாரசரி குடிமக்களை நம்ப சொல்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் சராசரி குடிமகனும் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழந்து வருகிறான்.

இது நிச்சயம் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக