உலக நாடுகள் ஒவ்வொன்றும் குழந்தை திருமணத்தை ஏதோ ஒரு வகையில் ஊக்குவித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி சிறார் ( 18 வயதுக்கு முடியாமல் ) திருமணங்கள் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இதனால் அந்த பெண் குழந்தைகளின் படிப்பு, திறன் போன்றவை மழுங்கடிக்கப்படுகிறது. இதனை கலைய குழந்தை திருமணத்துக்கு எதிரான சட்டத்தில் கையெழுத்திட்டு குழந்தை திருமணத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா சபையில் பெண்கள் மற்றும் குழந்தை நலன் பிரிவு சட்டம் ஒன்றை கொண்டு வந்து வேண்டுகோள் விடுத்தது. அந்த சட்டத்தை ஆதரித்து ஐ.நாவில் உறுப்பு நாடுகளாக உள்ள 107 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
குழந்தை திருமணங்கள் அதிகம் நடக்கும் வறுமை நாடுகளான தெற்கு சூடான், எத்தியோப்பியா, ஏமன் போன்ற நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் குழந்தை திருமணங்கள் நடைபெறும் முதல் 10 நாடுகள் பட்டியலில் உள்ள இந்தியாவும், வங்கதேசமும் கையெழுத்திடாமல் முரண்டு பிடித்து வருகின்றன. இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. இந்தியாவில் உள்ள பெண்கள், குழந்தைகள் நல இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. சமூக ஆர்வலர்கள் இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் சட்டப்படி பெண்ணுக்கு திருமண வயது 18, ஆணுக்கு 21 என இருக்கும் போது அதை விட குறைவான வயதில் திருமணம் நடப்பதை தான் ஐ.நா சபை எதிர்க்கிறது. அதனால் அந்த சட்டத்தை ஆதரித்து கையெழுத்திட்டு இருக்கலாம்மே என்ற கேள்வி பலதரப்பிலும் எழுப்புகின்றனர். ஆனால் இந்தியாவின் பதில் மவுனம்.
யுனிசெப் உலகில் சிறார் திருமணங்கள் அதிகம் நடக்கும் நாடுகள் என 10 நாடுகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அதில், நைஜர் என்னும் நாட்டில் நடக்கும் திருமணங்களில் 75 சதவிதம் குழந்தை திருமணங்கள். இந்த நாடு முதலிடம். இரண்டாமிடம் மத்திய ஆப்பிரிக்கா, மூன்றாவதுயிடம் 66 சதவிகிதத்துடன் வங்கதேசம், கினியா, மொசம்பிக், தெற்குசூடான் வரிசையில் 47 சதவிகிதத்துடன் இந்தியாவும் முதல் பத்து நாடுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்தியா பற்றி புள்ளிவிவர கணக்குப்படி இந்தியாவில் 2009ல் நடந்த திருமணங்களில் 45 சதவித திருமணங்கள் 18 வயதுக்கு உட்பட்ட சிறார் திருமணம் என்கிறது. அதாவது ஆண்டுக்கு 2.5 கோடி திருமணங்கள் குழந்தை திருமணம். சிறார் திருமணங்கள் இந்தியாவில் பீகார், உத்திரபிரதேசம், ஆந்திராவில் அதிகமாகவும், கேரளா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் குறைவாக உள்ளதாக குறிப்பிடுகிறது. கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், தற்போதைய நிலைப்போலவே குழந்தை திருமணங்கள் நடந்தால் வருங்காலத்தில் தினமும் 39 ஆயிரம் குழந்தை திருமணம் உலகம் முழுவதும் நடக்கும் என்று தெரிவித்துள்ளது. அதில் இந்தியா முதலிடம் பெறும் என்கிறது.
இந்தியாவில் கிராமபுறங்களை சேர்ந்த படிக்காத ஏழை பெண்கள் தான் திருமண வயதான 18 வயது வருவதற்க்கு முன்பே திருமண பந்தத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகர் புறங்களிலும் குழந்தை திருமணம் உள்ளது. கிராமபுறத்தில் 56 சதவிதமும், நகர்புறத்தில் 44 சதவிகிதமாக உள்ளதாக 2013 அக்டோபர் மாதம் 12ந்தேதி ஐ.நாவில் நடந்த முதல் சர்வதேச பெண் குழந்தைகள் தின கூட்டத்தில் கூறப்பட்டது.
எதனால் இளம் வயது திருமணங்கள் நடைபெறுகிறது என ஆய்வு செய்தால், ஏழ்மை, கல்வியறிவு இல்லாமை, சாதி, பணம் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியாவில் 60 சதவிதம் மக்கள் ஏழ்மை நிலையில் தான் இன்னமும் உள்ளனர். அவர்களை முன்னேற்ற எவ்வித நடவடிக்கையிலும் இந்த அரசாங்கங்கள் ஈடுபட்டதில்லை. இதனால் ஏழை மக்களால் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முடிவதில்லை. இதனால் சிறு வயதிலேயே ஒருவனை பார்த்து திருமணம் செய்து வைத்து தங்களது கடமை முடிந்துவிட்டதாக கருதுகின்றனர். கல்வியறிவு உள்ள மக்கள் இப்படி செய்வதில்லை என்பதே எதார்த்தாம்.
இந்தியாவில் வடமாநிலங்களில் சிறார் திருமணங்கள் அதிகம் நடக்க காரணம், ஒழுக்கம் என்ற அளவுகோலில் சாதி கட்டுமானத்தில் வெகு சீக்கிரத்தில் அங்கு திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். இது இன்றைய நாகரீக, விஞ்ஞான யுகத்திலும் தொடர்கிறது. இந்த திருமணங்கள் பற்றி ஆராய்ந்தால் அந்த மாநிலத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதியில் தான் அதிகம் நடந்திருப்பதை அறிய முடியும். அதேபோல் இளம் பெண்களை சோதிடத்தை நம்பி திருமணம் செய்துக்கொள்ளும் வழக்கம் உள்ளது. திருமணத்துக்கான பருவ வயது வரும்முன்பே ஏழைகளிடம் பணக்காரர்கள் பணத்தை காட்டி இளம் சிறு பெண்களை திருமணம் செய்துக்கொள்கின்றனர்.
இப்படி சிறார் திருமணங்கள் நடப்பதால் குழந்தை பெறும் போது பெரும் சிக்கலுக்கு உள்ளாகிறார்கள் இளம் பெண்கள். ஐ.நா மக்கள் தொகை ஆய்வு குழு தலைவர் பாபாடுண்டே இதுப்பற்றி ஒரு கூட்டத்தில் பேசும்போது, குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகளின் திறமை வெளிப்படாமலே போய்விடுகிறது, பிரசவ காலங்களில் தாய், சேய் உயிரிழப்பு அதிகரிக்கிறது. 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தை பெறும்போது அந்த குழந்தை அடுத்த 5 ஆண்டுகளில் உடல் சுகவீனத்தால் இறந்துவிடுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுவது சரியே, உலகில் சத்தான உணவு இல்லாமல் தினமும் 19 ஆயிரம் குழந்தைகள் இறக்கிறது. உலக அளவில் குழந்தை இறப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2011ல் மட்டும் சத்தான உணவு இல்லாமல் 15.5 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் இறந்ததாக கணக்கு சொல்லப்படுகிறது. அதற்கடுத்து நைஜீரியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளன ஒரு ஆய்வு.
குழந்தைகளை தெய்வம் என்கிறிர்கள்........ அந்த தெய்வங்களை ஏன் கொடுமைப்படுத்துகிறிர்கள்........ நீங்கள் வணங்கும் கடவுளை இப்படித்தான் செய்கிறிர்களா ?.
சிந்தியுங்கள்.........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக