சனி, ஆகஸ்ட் 16, 2014

போங்கய்யா நீங்களும் உங்க சுதந்திரமும்............



நேற்று ஆகஸ்ட் 15 தேசப்பற்றாளர்கள் குமுறு குமுறு என வாழ்த்து என்ற பெயரில் தேசப்பற்று பற்றி குமுறியவர்கள் வாழ்த்து சொல்லாதவனையும், சுதந்திரம் ஒரு கேடா என கேட்டவர்களையும் வார்த்தைகளால் கடித்து குதறினார்கள்.

நீங்கள் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என சிலர் என்னிடம் கேட்டார்கள். நான் இந்த தேசத்தில் சுதந்திரமாக வாழ்கிறேன் என உணரவில்லை. அதனால் சொல்லவில்லை.

தேசப்பற்றாளர்களே, நாம் சுதந்திரமாக வாழ்கிறோமா உண்மையை சொல்லுங்கள் பார்க்கலாம். அவர்கள் விதண்டவாத்த்துக்கு வேண்டுமானால் சொல்ல்லாம் வாழ்கிறோம் என்று. அல்லது அவர்கள் வேண்டுமானால் நினைத்துக்கொண்டு இருக்கலாம் சுதந்திரமாக வாழ்கிறோம் என்று. 

சுதந்திரம் தருகிறோம் என்ற பெயரில் ஒரு அடிமையை மற்றொரு அடிமையிடம் கைமாற்றி விட்டுள்ளார்கள் அவ்வளவே. வெளிநாட்டு அடிமையிடமிருந்து உள்நாட்டு அடிமைக்கு கைமாற்றப்பட்டு இப்போது மறைமுகமாக வெளிநாட்டுக்கு அடிமைகளாக விற்கப்படுகிறோம். இல்லையில்லை விற்கப்பட்டுவிட்டோம் என்பதே உண்மை. 

பிரிட்டிஷாரிடம்மிருந்து, இந்த நாட்டுக்கு விடுதலை விடுதலை பெற்று தந்தோம் என ஆட்சியில் அமர்ந்தவர்கள், இப்போது ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள், அதிகார வர்க்கம் எல்லோரும் சேர்ந்து நம்மை அடிமையாகத்தான் வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

நாம் என்ன உணவு உண்ண வேண்டும், என்ன பொருளை பயன்படுத்த வேண்டும், எந்த சேனலை பார்க்க வேண்டும் என்பது வரை எல்லாவற்றையும் தீர்மானிப்பது தனியார் பெரு நிறுவனங்கள் தான். என் உரிமையில் கை வைக்கிறார்கள். பின் எங்கிருக்கிறது சுதந்திரம். 

என் அனுமதியில்லாமல் உலக வங்கியிடம் என்னை அடமானம் வைத்து ஒவ்வொரு தனி மனிதன் பெயரிலும் கடன் வாங்கியுள்ளார்கள் ஆட்சியில் இருப்பவர்கள் இதற்கான அனுமதியை யார் தந்தது. அடிமையின் அனுமதி பெறாமல் அடிமையை அதன் முதலாளி என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். என் பெயரில் என் அனுமதியில்லாமல் கடன் வாங்கியுள்ளார்கள் என்றால் அப்போது நான் அடிமை தானே. 

இரவில் இல்லை பகலிலேயே பெண்கள் நடமாட முடியவில்லை. கொலைகாரன், கொள்ளைக்காரனுக்கு மட்டுமல்ல நம்மை காப்பார்கள் என நினைக்கும் அரசப்படைகளுக்கும் பயப்பட வேண்டிய நிலையில் பெண்கள் மட்டுமல்ல இந்த சமூகம்மே உள்ளது. இதற்கு பெயர் சுதந்திரமா ?.

பாதுகாப்பானது என நினைக்கும் என் வங்கி கணக்கு முதல் செல்போன், மின்னஞ்சல் வரை இந்த அரசாங்கம் கண்காணிக்கிறது அப்பறம் நான் எங்கே சுதந்திரமாக இருப்பதாக உணர்வது.

ஓட்டு பிச்சை கேட்டு வருபவன் ஜெயித்து பதவியில் அமர்ந்தபின் எம்.பி, எம்.எல்.ஏ, தலைவர்கள் என்ற பதவியில் வலம் வருபவர்களிடம் குடிதண்ணீர் வரல என கேட்டால் அடியாள் வைத்து அடிக்கிறார்கள் இதற்கு பெயர் சுதந்திரமா ?.

வாங்கற சம்பளத்துக்கே வேலை செய்யாத 99 சதவித அரசு ஊழியர்கள், வேலை செய்ய என்னிடம் லஞ்சம் கேட்பதை எதிர்த்தால் பணி செய்யும் போது தடுத்தார் என பொய் புகாரை தருகிறார் விசாரணையே நடப்பதில்லை. அந்த அரசு ஊழியனுக்கு நான் அடிமைதானே....

1947க்கு முன்பு இப்படி யாராவது எழுத முடியும்மா, கேள்வி கேட்க முடியும்மா  என தேசபக்தர்கள் குமுறுகிறார்கள். இப்போ மட்டும் என்ன வாழுதாம். ஆட்சியாளர்களை கேள்வி கேட்டால், கிண்டலடித்தால் குண்டர் சட்டம், சைபர் க்ரைம் சட்டம் பாய்கிறது. அப்பறம் எங்கே இருக்கிறது பேச்சு, எழுத்து சுதந்திரம்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த லட்சணத்தில் சுதந்திரமாக வாழ்கிறீர்கள் வாழ்த்து சொல்லுங்கள் என எப்படி கேட்கிறீர்கள் தேசபக்தர்களே...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக