திங்கள், டிசம்பர் 20, 2010

ஸ்பெக்ட்ராமில் கூட்டு விளையாட்டு. திமுகவின் எதிர்காலம்?


மனம் போன போக்கில் 2ஜி ஸ்பெக்ட்ராம் விவகாரம் இந்திய அரசியல் விளையாடிக்கொண்டிருக்கிறது. 3 ஆண்டுக்கு முன் 30 ஆயிரம் கோடி ஊழல் என தவழ்ந்த பிரச்சனை தற்போது 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி என வளர்ந்துள்ளது. இது இன்னும் எந்த அளவுக்கு வளரும் என்பது தெரியவில்லை. இந்த ஊழலில் ஆ.ராசா பலி கடாவானார். விசாரணை ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான் என்ற கிராம பழமொழி ஒன்று உண்டு. அதனால் அரசியல்வாதியான ராசா கோடி கோடியாய் வருமானம் வரும் துறையில் சட்டத்திற்க்கு புறம்பாக வருமானம் பாhக்காமல் இருந்திருக்க மாட்டார். அவருக்கு முன் இருந்தவர்களும் பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். அதை விடுங்கள். அது எந்தளவுக்கு ஊழல் என்பது விசாரணையின் முடிவில் தெரிந்துக்கொள்வோம்.
மற்ற ஊழல்களை விட இந்த 2ஜீ மட்டும் மீடியா, கட்சிகள் என பரவலாக பரபரப்பாக மக்களிடம் இருக்க காரணம் இந்த பிரச்சனையின் பின்னால் உள்ள பெரு முதலாளிகளின் விளையாட்டு.
யாரும் அவ்வளவாக விவாதிக்காத விவகாரம்மிது.
பெருமுதலாளிகள் லாபத்தை பெருக்கவும், எதிரியை அழிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். குறிப்பாக அரசியல்வாதிகளை விட மிக மிக மோசமானவர்கள் இந்த பெரு முதலாளிகள். தங்களை எதிர்ப்பவர்கள் யாராகயிருந்தாலும் கொலைகள் கூட செய்ய தயங்காதவர்கள். பணத்திற்காக கொலை செய்யும் ரவுடிகளிடம் கூட மனிதாபிமானம், இரக்கம் உண்டு. ஆனால் இந்த ஒயிட் காலர் பெரு முதலாளிகள் முற்றிலும் மாறுபட்டவர்கள்.
வியாபார பெரு முதலாளிகள் எப்படி என்பதை உதாரணத்திற்க்கு நம்மவூர் சன் நெட் ஒர்க் கம்பெனியை எடுத்துக்கொள்ளலாம்.
திமுக தலைவர், முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மச்சான் மறைந்த முன்னால் மத்தியமைச்சர் முரசொலி மாறனின் மூத்த மகன் கலாநிதிமாறன், சென்னையில் பூமாலை என்ற வீடியோ லைப்ரரியை தான் முதன் முதலாக 89களில் ஆரம்பித்தார். அப்போது திமுக ஆட்சிக்கட்டிலில் இருந்ததால், தாத்தாவின் அரசியல், அதிகார செல்வாக்கை பயன்படுத்தியதன் விளைவு பூமாலை என்ற வீடியோ கடை சன் என்ற சேட்டிலைட் சேனலாக மாறியது.
தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் தனியார் தொலைக்காட்சி என்ற பெயர், அரசியல் செல்வாக்கு சட்டத்தை மட்டுமல்ல எல்லாவற்றையும் வளைத்தது. 1996 – 2000த்தில் திமுக ஆட்சியில் திமுக என்ற ஆலமரத்தை வைத்து சன் நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் வளர்த்துக்கொண்டார்கள். 10 ஆண்டுகளில் தென்னிந்தியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
முரசொலி மாறன் மாமனுக்கு ஏற்ற மச்சானாக விசுவாசத்துடன் இருந்தார். அவர் மறையும் வரை வியாபாரத்தை குடும்பத்திற்க்குள் காட்டவில்லை. முரசொலி மாறன் மறைந்ததும் அதுவரை திமுக தொண்டர்களுக்கு கூட பரவலாக தெரியாத குங்குமம் பத்திரிக்கையின் பொறுப்பில் இருந்த கலாநிதியின் தம்பி தயாநிதிமாறனை 2004ல் அரசியலுக்குள் இழுத்து எம்.பியாக்கி அதே வேகத்தில் தொலைதொடர்பு துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார் தாத்தா கலைஞர். தயாநிதிமாறன் பதவிக்கு பின் அண்ணன் கலாநிதி மாறனின் சன் குரூப்பின் வேகம், வளர்ச்சி, வருமானம் பலமடங்கானது. முரசொலி மாறன் இருந்தவரை அமைதியாக இருந்த பிள்ளைகள் வருமானம் அதிகமாவதை கணக்கில் கொண்டு சன் பங்கை பிரித்தார்கள். அதில் கலைஞர் – மாறன் குடும்பத்திற்க்குள் கருத்து வேறுபாடு. மாறன் தரப்பு தங்களை ஏமாற்றிவிட்டதாக அழகிரி குமுறியதாக தகவல்கள் வெளியே வந்தன.

பங்கு பிரிப்புக்கு பின் மாறன் பிரதர்ஸ் வேகம் பலமடங்கானது. தினகரன் நாளிதழ், சினிமா, விமான சேவை என பறந்தது. மாநிலத்திலும் திமுகவின் ஆட்சி கட்டிலில் ஏறியது. ஸ்டாலினா – அழகிரியா என தினகரன் கருத்துகணிப்பு நடத்தி அழகிரியின் கோபத்தால் மதுரை தினரகரனில் 3 உயிர்கள் எரிக்கப்பட்டது. அழகிரியை ரவுடி என சன் குரூப் சேனல்கள் அலறின, திமுகவை சேர்ந்த  மத்தியமைச்சரான தயாநிதி, கலைஞருக்கு நெருக்கமாகயிருந்த தமிழக மின் அமைச்சர் ஆற்காட்டாரை செல்போனில் தொடர்பு கொண்டு, அழகிரிய கைது பண்றிங்களா இல்ல உங்க ஆட்சியை டிஸ்மிஸ் பண்ண வைக்கட்டுமா என கேட்க அரண்டு போன அவர் இதுப்பற்றி கலைஞரிடம் அப்படியே சொல்லியுள்ளார். நொந்து போன கலைஞர் தயாநிதியின் அமைச்சர் பதவியை பறித்ததோடு, எம்.பி பதவியை மட்டும் விட்டு வைத்து கட்சியை விட்டு ஓரம் கட்டினார்.
அரசியல் விளையாட்டை கரைத்து குடித்த கலைஞருக்கு தங்களது உலக பணக்கார விளையாட்டை காட்ட ஆரம்பித்தார்கள் பெரு முதலாளிகளான மாறன் பிரதர்ஸ். மீடியா பலத்தை வைத்து தென்னிந்தியாவில் திமுக எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடங்கியவர்கள், நேஷ்னல் அளவில் தங்களது மீடியா நண்பர்களை வைத்து திமுக இமேஜ்ஜை டேமேஜ் ஆக்கினார்கள். தமிழகத்தில் திமுகவை அழிக்க நினைக்கும் மற்ற அரசியல் கட்சிகளை வளர்த்தார்கள். திமுகவின் பரம விரோதியான ஜெ விழாக்கள் சன்னில் லைவ்வாக ஒளிப்பரப்பானது. சன் நிர்வாகத்தை எதிர்த்த வை.கோ சன்க்கு நண்பரானார். திமுகவும் சன் எதிராக சேனல்கள் தொடங்கின. சன் சரிய தொடங்கியது. இதில் அதிக கோபமாகி திமுகவின் இமேஜ்ஜை சன் உடைக்க ஆரம்பித்ததால் இரண்டு தரப்புமே நொந்து போனது. இரண்டு தரப்புக்கும் மீடியேட்டர்களாக இருந்தவர்கள் இரண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க முயன்று வென்றனர். மீண்டும் பங்கு பிரிக்கப்பட்டது. பிரச்சனைகள் முடிந்தன என கலைஞர் குடும்பம் மட்டுமல்ல தமிழகமும் எண்ணியது.
ஆனால் நடந்ததோ, நடப்பதோ வேறு ………………….
மாறன் பிரதர்ஸ் கலைஞர் குடும்பம் ஒன்றிணைந்தாலும் பெரு முதலாளிகளுக்கே உண்டான குரோதம் இவர்களிடம் அப்படியே உள்ளது. தங்களை எதிர்த்தவர்களை அழிக்க களத்தில் வேகத்துடனே இன்றளவும் மறைமுகமாக உள்ளார்கள்.
கலைஞர் டிவி ஆரம்பிக்க ஐடியா தந்த ஜாம்பவான் அமைச்சர் ஆற்காட்டார் இன்று சீண்ட ஆள்யில்லாமல் இருக்கிறார். கலைஞர் டிவியை பிரபலமாக்கி, தமிழகத்தின் இரண்டாவது இடத்தில் சன்னுக்கு போட்டியாக கொண்டு வந்தவரின் கால் எலும்பை உடைத்தார்கள் மாறன் சகோதரர்கள். திமுகவின் இமேஜ்ஜை உடைக்க ஸ்பெக்ட்ராம் விவகாரத்தை தமிழகத்தில் ஊதி ஊதி பெரியதாக்கியது மாறன் குரூப். நேஷ்னல் அளவில் மீடியாவில் அதன் தாக்கம் குறையாமல் பார்த்துக்கொண்ட பெரு முதலாளிகளில் மாறன் குரூப்பும் அடக்கம். இதனால் திமுகவின் இமேஜ் மட்டுமல்ல ஆட்சியே போனால் கூட பரவாயில்லை என்ற எண்ணம் மாறன் குரூப்க்கு. பழைய கணக்கை தீர்த்து திமுக தலைமை தன்னை நம்பியே இருக்க வேண்டும் என்ற எண்ணம்.
இதனால் மாறன் குரூப் நடத்தும், ஸ்பெக்ட்ராம் விவகாரத்தை மட்டும் பார்ப்போம். முதல் முறை எம்.பியானவுடன் தொலைதொடர்புத்துறை அமைச்சராக்கப்பட்டார் தயாநிதிமாறன், அவர் பதவியேற்ற 6வது மாதம் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பிரச்சனையை கிளப்பியது. அதாவது தயாநிதிமாறன் 6 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளார் என ஆதாரத்தோடு அலறியது. அந்த விவகாரம் அப்படியே அமுக்கப்பட்டது.
அதன்பின் ரிலையன்ஸ் டெலிகாம் சர்வீஸ் தயாநிதி மாறன் அமைச்சராகயிருந்த போது அலைவரிசை ஒதுக்கீடு பெற்றது. அதற்கான கமிஷனை பணமாக வாங்காமல் தமிழ்நாடு முழுக்க தங்களும் கேபிள் புதைத்து தர வேண்டும் என டீல் பேசி ஒ.கே செய்ததாக கிசுகிசுக்கப்பட்டது. அதோடு ரிலையன்ஸ்க்கும் டாடா குரூப்புக்கும் ஆகாது. தயாநிதி அமைச்சராகயிருந்தவரை டாடாவை மேலே வர விடாமல் பார்த்துக்கொண்டார். அதேபோல் மிட்டலின் பாரதிடெல்க்கும் சலுகை காட்டியது அதற்கு உண்டான கமிஷனை சேர்களாக வாங்கியது. இப்படி பட்டியல் நீளம். இந்த பதவி பறிக்கப்பட்டு ராசா அமைச்சராக்கப்பட்டதும் ரிலையன்ஸ், ஏர்டெல் என ஒரு சில கம்பெனிகள் கொள்ளையடித்ததை முகாம் தெரியாத, பிரபலமாகாத கம்பெனிகள் கொள்ளையடிக்க வழி ஏற்படுத்தி தந்தார். இதில் டாடாவும் லாபம்மடைந்தன. இதனால் அதிகமான லாபத்தை இழந்த தயாநிதிமாறனால் லாபம்மடைந்த கம்பெனிகள் ராசாவை ஒழிக்க வழி தேடின. முடியவில்லை. குடும்பம் ஒன்று சேர்ந்ததும் தொலை தொடர்பு பதவி தன்னை தேடி வரும் என எண்ணினார். அதுவும் வரவில்லை. இதனால் சன் கம்பெனிக்கு மனதில் வெறுப்பு.

டாடாவை ஒழிக்க நினைத்த அம்பானி சகோதரர்கள், திமுகவை அழிக்க நினைக்கும் மாறன் சகோதரர்கள், லாபத்தை மட்டுமே பார்த்த மிட்டல் குரூப் போன்ற பெரு முதலாளிகள் ஒன்றினைந்தார்கள். ராசாவை ஒழிப்போம் என திட்டம் தீட்டினார்கள். அது தான் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்க்கு காங்கிரஸ்சின் மறைமுக ஆசியுண்டு.
காங்கிரஸ் இதில் இணைய காரணம், இரண்டு தமிழகத்தில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது காளான் ராகுல்காந்தியின் கனவு. அதற்கான களத்தை அமைக்க முயற்சி செய்கிறார். தமிழக அரசியல் வரலாற்றை பொருத்தவரை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இருக்கும் வரை காங்கிரஸ் என்கிற அகில இந்திய பேரியக்கம் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. இதை உணர்ந்தே திமுக என்ற ஆலமரத்தை அசைக்க முயற்சி செய்கிறது காங்கிரஸ். ராகுல் பார்முலா என்ற ஒன்றை வைத்துக்கொண்டு களம்மிறங்குகிறார்கள். பீகாரில் தோற்ற பார்முலா தான் இருந்தும் தமிழகத்தில் இம்பிலிமென்ட் செய்து பார்க்க முயல்கிறது. இரண்டு உலக அளவில் காங்கிரஸ் கட்சியின் மானத்தை கப்பலேற்றிய ஊழல்களில் இருந்து தன் பெயரை காப்பாற்றிக்கொண்டது. அது, காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் காங்கிரஸ் பிரமுகர் நடத்திய ஊழல், ஆதர்ஷ் என்கிற கார்கில் வீரர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் நடந்த ஊழல். அதிலிருந்து தப்பிக்க ஸ்பெக்ட்ராம் ஊழலை பூதகராமக்கியது காங்கிரஸ்.

இவ்வளவு உறுதியாக கூற காரணம், ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் ஆடியோ டேப்கள். கனிமொழி, ஆ.ராசா, நீராராடியா, டாடா என பெரிய பெரிய பெரு முதலாளிகள், அரசியல் வி.ஐ.பிகள் என ஜாம்பவான்களின் மொபைல் பேச்சுகள் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. இதை செய்தது நிச்சயமாக மத்திய அரசின் புலனாய்வு துறைகளாக்கதான் இருக்கும். பதிவு செய்யப்பட்ட ரெக்கார்ட்டுகள் பாதுகாப்பாக இருந்திருக்கும். அதி உயர் பாதுகாப்பில் இருந்த ரெக்கார்டுகள் மீடியாவிடம் வருகிறது என்றால் அரசின் ஆதரவில்லாமல் வெளியே வருவதற்கான சாத்தியம்மில்லை.
இந்த ஆடியோக்கள் திமுகாவை டேமேஜ் செய்யும் விதத்தில் தான் உள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைப்பற்றியோ, அதன் தலைவர்களைப்பற்றியோ, குறிப்பாக சோனியா காந்தி பற்றிய பேச்சுகள் எதையும் காணோம். அப்படியென்றால் என்ன அர்த்தம் திமுகவை அழிக்க வேண்டும் என ஒரு பெரிய மெகா ப்ளான் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்று தானே அர்த்தம்.
 ஈழ தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு யுத்தம் நடத்தி லட்ச கணக்கான மக்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு ஆதரவாக போரை நடத்தியது இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு. துமிழகத்தில் காங்கிரஸ்க்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள், மக்கள் கொதித்து எழுந்தபோது அதை அடக்க தமிழகத்தை ஆண்ட திமுக அரசை பயன்படுத்திக்கொண்டது. முதல்வர் கருணாநிதியும் போராட்டத்தை பிசுபிசுக்க வைத்தார். மக்களின், உணர்வாளர்களின் கோபம் திமுக மீது மையம் கொண்டது. தன் மேல் மையம் கொண்ட கோபத்தை தந்திரத்தோடு திமுக மீது திருப்பி வெற்றி பெற்றது காங்கிரஸ். தற்போது தனக்கும் அதற்க்கும் எந்த சம்மந்தமும்மில்லை என்பதை போல நடந்து கொள்கிறது காங்கிரஸ். 



ஆக காரியம் முடிந்ததும் கை கழுவும் பழக்கம் காங்கிரஸ்க்கு பல காலமாகவே உண்டு. அது சோனியா காலத்திலும் தொடர்கிறது. தற்போது நடக்கும் யுத்தத்தில் காங்கிரஸ், மத்தியரசு, பெரு முதலாளிகள், மீடியாக்கள் ஒருபக்கமும் - திமுக ஒரு பக்கமும்மாக நிற்கிறது.
வெற்றி யாருக்கு என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

1 கருத்து: