செவ்வாய், டிசம்பர் 11, 2012

வெள்ளைரவியும் - வெள்ளைதுரையும்.



மறைந்த சாதி தலைவர் ஒருவரின் ஆண்டு அஞ்சலி விழாவுக்காக பாதுகாப்புக்கு சென்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் ரவுடிகள் பிரபு, பாரதி டீமால் குத்தி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் சரண்டரான ரவுடிகள் பிரபு, பாரதி இருவரும் நீதிமன்றம் சென்று வரும் வழியில் தப்பிவிட்டார்கள். வாகன சோதனையின் போது பிடிக்க முயன்றபோது வெட்டவந்தார்கள் தற்காப்புக்காக சுட்டோம் செத்தார்கள் என என்கௌண்டர் செய்யப்பட்டதற்க்கு கதை சொன்னார்கள்.

இந்த என்கௌண்டர் மனித உரிமை மீறல் என மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சனம் செய்ததற்க்கு எஸ்.ஐ கொல்லப்பட்டபோது உங்கள் கண்ணுக்கு மனித உரிமை தெரியவில்லையா?, அவருக்கும் குடும்பம் உள்ளது என்பதை மறந்து விடுகிறீர்களே?, அவரும் மனிதர் தான் என்ற குரல் காவல்துறை தரப்பில் இருந்து கேள்வி எழுப்பியுள்ளனர். நான்காயிரம் மக்கள் இன்பத்தை கெடுக்கும் நான்கு பேரை நான்காயிரம் மக்களின் சந்தோஷத்துக்காக கொல்வது தவறுயில்லை என கருத்து தெரிவிக்கிறார் மானாமதுரை டி.எஸ்.பியும் என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட் என கொண்டாடப்படும் வெள்ளைத்துரை. நீங்கள் ஒருவரை கொன்றீர்கள் நாங்கள் இருவரை போட்டு தள்ளியள்ளோம் என சந்தோஷப்படுகிறார்கள் இன்னும் சில காவலர்கள். 

அவர்கள் கேட்பது நியாயம். தான் சார்ந்த ஒரு துறையின் ஒரு எஸ்.ஐ கொலை செய்யப்பட்டது அவரது குடும்பத்தாரை விட அவரது சக துறை ஊழியர்களுக்கு அதிக வருத்தம்மிருக்கும். பாதுகாப்பு தரும் எங்களுக்கே பாதுகாப்புயில்லையே எங்கள் உயிர்க்கு என்ன பாதுகாப்பு என கேட்கிறார்கள் அவர்கள் கேட்பது நியாயம்.

என் கேள்வி, கொலை செய்தவனை சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்று தந்து அவன் செய்த தவறை உணர்த்தாமல் கொலை செய்தான் அதனால் கொன்றோம் என சொல்வது எந்த விதத்தில் நியாயம். கொலை செய்வதனை கொலை செய்ய காவல்துறை எதற்கு, சட்டம் எதற்க்கு, நீதிமன்றம் எதற்கு?. காவல்துறை மற்ற உள்ளேயும், வெளியேவும் உலாவும் ரவுடிகள் விவகாரத்தில் இப்படித்தான் நடந்துக்கொள்கிறதா?. எத்தனை கொலைக்காரர்கள் தற்போது ஆயுள் தண்டனை கைதிகளாக, தூக்குதண்டனை கைதிகளாக சிறையில் உள்ளார்கள். அதேபோல் சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்று தந்துயிருக்கலாம்மே ஏன் செய்யவில்லை. செய்யாததற்க்கு காரணம் ?


காவல்துறை தங்களது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முயலும் யுக்தி. மக்களுக்கும், ரவுடிகளுக்கும் போலிஸ் என்றால் பயம் இருக்க வேண்டும், யாருக்கும் காவல்துறையை எதிர்க்கும் துணிவு வரக்கூடாது என்பதை உணர்த்தவே என்கௌன்டர் என்ற பெயரில் கொலை செய்துள்ளார்கள். இது மக்கள் மத்தியில் காவல்துறை மீது மக்களுக்கு ஒரு விதமான பயத்தை உருவாக்கும் செயல். இதனால் ரவுடிகளுக்கு வேண்டுமானால் போலிஸ் மீது பயம் வரலாம். ஆனால் மக்களுக்கு பயத்துக்கு பதில் வெறுப்பு நிச்சயமாக வந்துவிடுகிறது. அவர்களை ஒதுக்கி வைக்கும் சூழ்நிலையும், காவல்துறையின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தராத நிலையும் பொதுமக்களிடம் இருக்கிறது. 

பொதுமக்களின் நண்பர்கள் எனச்சொல்லிக்கொண்டு அதிகார வர்க்கத்துக்கு சேவகம் புரியும் விசுவாசியாய் நடந்துக்கொள்ளும் அனேக காவல்துறையினர் காவல்துறையை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடி தங்களது உரிமையை பெற்றுக்கொண்டால் பாராட்டலாம். ஆனால் அதற்க்கு நேர் எதிராக என்கௌன்டர் பெயரில் கொலை செய்வது, அதிகார வர்க்கத்தை துணிவில்லாமல் பொதுமக்களை, வியாபாரிகளை, ரவுடிகளை, திருடர்களை மிரட்டி பணம் பறிக்கும் இவர்கள் தாங்கள் செய்த கொலைகளை நியாயப்படுத்த மக்கள், சந்தோஷம் என கதையளக்க தொடங்கியுள்ளார்கள். 

என்கௌண்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் வெள்ளைரவி, வீரமணி, மணல்மேடு சங்கர் போன்றவர்கள் பணத்துக்காக கட்டைப்பஞ்சாயத்து, கொலைகள் செய்தனர். அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக செய்ததை வெள்ளைதுரை போன்ற சில அதிகாரிகள் காக்கிச்சட்டை போட்டுக்கொண்டு சட்டத்தின் துணையோடு அதேயே செய்கிறார்கள். இவர்களுக்கு பெயர் காவலர்கள். அவர்களுக்கு பெயர் ரவுடிகள்.

நல்ல சட்டம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக