திங்கள், செப்டம்பர் 29, 2014

தவறுக்கு துணை போகும் மீடியாக்கள்.................



மக்கள் நீதித்துறைக்கு அடுத்து ஊடகத்தை தான் அதிகம் நம்புகின்றனர். தங்களது பிரச்சனைகளை, கோரிக்கைகளை அதிகாரிகள், ஆட்சியாளர்கள் கண்டுக்கொள்ளாத போது நம் கோரிக்கையை ஊடகத்திடம் முறையிட்டால் தீர்வு கிடைக்கும் என மக்கள் ஊடகத்தை நம்பி நாடி வருகின்றனர். ஊடகங்கள் தங்களுக்கானது என நம்புகின்றனர். ஊடகங்கள் நமக்கு உண்மையை மட்டுமே சொல்கின்றன என பாமர மக்கள் நம்புகின்றனர்.

இது முற்றிலும் பொய். மக்களின் எதிர்பார்ப்புக்கு நேர் எதிராக ஊடகங்கள் உள்ளது என்பதே நிதர்சன உண்மை. மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வைத்திருக்கவே ஊடகங்கள் விரும்புகின்றன. நேர்மையாக நடக்க வேண்டும் என்ற எண்ணம் 99 சதவித ஊடகங்களுக்கு இப்போது கிடையாது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஊடகத்துக்கும் ஒரு கொள்கையிருக்கிறது. தமிழகம் மட்டும்மல்ல இந்தியா முழுமைக்கும்மே ஒவ்வொரு ஊடக நிறுவனத்துக்கும் ஒரு கொள்கையிருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் தான் செய்திகளை மக்களிடம் கொண்டும் போய் சேர்க்கும்.

உதாரணமாக தேசிய அளவிலான ஆங்கில சேனல்கள் எப்போதும்மே இந்துத்துவா மனோநிலையில் தான் எந்த செய்திகளையும் காணும். தேசியம் பேசும், மாநில கொள்கையை எதிர்க்கும். அதோடு உயர்சாதிகளுக்கு முக்கியத்துவம் தரும். தமிழ்நாடு, பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் பிற்படுத்தபட்ட சமூகத்தின் அரசியல் இயக்கங்களை, கட்சிகளை காலி செய்யவே சாதாரண செய்தியை ஊதி பெரிதாக்கும். உயர்சாதியினர் என சொல்லிக்கொள்பவர்களின் செய்திகளை அமுக்க செய்யும்.

பிராந்திய ஊடகங்கள் அந்தந்த மாநிலத்துக்கு ஏற்றாற்போல் தன் கொள்கைகளை வைத்துக்கொள்ளும். தமிழகத்தில் ஊடகங்களுக்கு கொள்கை உள்ளது. தமிழகத்தில் பெரும்பான்மையான ஊடகங்கள் கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவைகள் அரசியல் கொள்கைகளோடு உள்ளன. ஒவ்வொரு கட்சியும் செய்தித்தாள், தொலைக்காட்சி என வைத்துள்ளன. கட்சியின் கொள்கை, கூட்டணி இதனை பார்த்தே செய்திகளை வெளியிடுகின்றன. இதனால் உண்மைகளை அப்படியே போட்டு மறைக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கு தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

அரசியல் செய்திகளை தான் இரட்ட்டிப்பு செய்கிறார்கள் என்றால் பொதுவான செய்திகளையும் நேர்மையாக ஒளிப்பரப்புவதில்லை. ஊடகத்தில் பணியாற்றும் நான் மதிக்கும் பல மூத்த செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் தங்களது நிஜ முகத்தை தொலைத்து வருவது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த துறையில் பல ஆண்டுகளாக பழுத்தவர்கள், நிறைந்த அனுபவ அறிவு பெற்றவர்கள் சறுக்குவது வேதனையாக இருக்கிறது.

தமிழக முதல்வராக இருப்பவர், ( இருந்தவர் ) ஜெயல்லிதா. அவர் மீது கடந்த காலத்தில் 91–96ல் தமிழக முதல்வராக இருந்தபோது அப்பதவியை பயன்படுத்தி ஊழல் செய்து வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார் என 18 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா அவரது தோழி சசிகலா அன் கோ மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

ஊழல் மூலம் சொத்து குவித்த வழக்கை இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்கிறது சட்டம். ஆனால் இந்த வழக்கை பலப்பல தலைப்புகளில் மனு போட்டு வழக்கை 18 ஆண்டுகளாக இழுத்தடித்த்து. நீதிபதி, அரசு வழக்கறிஞர்களை ஜெ தரப்பு மிரட்டியது என பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. இதையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை தமிழகத்தின் எந்த ஊடகமும். அதையெல்லாம் கூட விட்டுவிடலாம். தீர்ப்பு நாளன்று தமிழக மக்களை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு அதுப்பற்றிய செய்திகளை 24 மணி நேர செய்தி சேனல்களான தினதந்தி, புதியதலைமுறை, ராஜ் டிவி போன்றவை ஒளிப்பரப்பின.

இந்தியாவே இந்த வழக்கின் தீர்ப்பு என்ன என எதிர்பார்த்தது. மற்ற மாநில, தேசிய ஊடகங்களை விட தமிழக ஊடகத்துக்கு தான் இந்த வழக்கின் செய்தியை மக்களிடம் கொண்டும்போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு அதிகம். ஆனால் அதை மறந்தனர்.

புதிய தலைமுறை செய்தியாளர்கள், சொத்து குவிப்பு வழக்கு என சொல்வதை கூட தவிர்த்தது. அவர்களை போலவே தினதந்தி தொலைக்காட்சி ஏதோ, குற்றம்மே செய்யாத ஒருவருக்கு தண்டனை தந்துவிட்டதை போல செய்திகளை கூறியது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தான் ஜெ சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டு, இராண்டல்ல சுமார் 18 ஆண்டுகள் ஒரு வழக்கு நடந்துள்ளது. நூற்றுக்கும் அதிகமான முறை வாய்தாக்கள் வாங்கப்பட்டுள்ளது. இதுப்பற்றியெல்லாம் ஒரு சிறு கண்டனமும் செய்திகளில் பேசவில்லை. இவை இரண்டும் நடுநிலை செய்தி சேனல்கள் என தங்களை நிமிடத்துக்கு ஒருமுறை வெளிக்காட்டிக்கொள்பவர்கள். 


10.45க்கு நீதிமன்றத்துக்கு முதல்வர் என்கிற அதிகாரத்துடன், பந்தாவாக சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுயிருந்த ஸ்பெஷனல் கோர்ட்டுக்கு ஜெ செல்கிறார். தீர்ப்பு ஒத்திவைப்பு, தீர்ப்பு வாசிப்பு, தண்டனை, ஒரு மாநிலத்தின் முதல்வர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பதவி பறிபோகிறது. இதையெல்லாம் ஏதோ ஒரு சாதாரண சாலை விபத்து செய்தியை போல் சொல்லிவிட்டு செல்கின்றனர்.

ஒரு தீர்ப்பை மறைக்க என்ன இருக்கிறது. முதல்வர் பதவி போனபின் பல மணி நேரம் ஒருவரை முதல்வர் முதல்வர் என தமிழக சேனல்கள் சொல்வது எதனால்?, செய்தியாளர்களுக்கு சட்ட நடைமுறை தெரியாத?. செய்தியை மக்களிடம் கொண்டும் போய் சேர்க்கும் செய்தியாளனுக்கு ஒரு தார்மீக கடமை இருக்க வேண்டாமா ?.

குற்றவாளி என அறிவித்த பின்பும், தண்டனை அறிவித்தபின்பும் அதுப்பற்றிய முறையான தகவல்களை கூட மக்களுக்கு சொல்ல தயங்கும் செய்தியாளர்களை, செய்தி சேனல்களை என்னவென்று சொல்வது. அப்படி சொல்ல தயங்குபவர்கள் ஏதாவது அறைகுறை ஆடை நடனத்தை ஒளிப்பரப்பிவிட்டு செய்திக்கு விடுமுறை தந்துவிட வேண்டியதுதானே ?.

தீர்ப்பு நாளன்று தமிழகம் முழுவதும் செய்தி சேனல்கள் எதுவும் தெரியாத வண்ணம் முழுமையாக கட் செய்தன அரசு இயந்திரம். அரசாங்கம் ஊடகத்தை கட்டுப்படுத்துவது எந்த விதத்தில் நியாம். அதிகாரம் கையில் இருப்பதால் அரசாங்கம் அதை திட்டமிட்டே கட் செய்து. கருத்து சுதந்திரத்தை நசுக்கியது. கேபிள் இணைப்பு அரசாங்கத்தின் கைகளில் இருப்பதால் தான் இந்த நிலை. தீர்ப்பை மறைக்க சேனல்களை நிறுத்திட்டாங்க என சாதாரண பொதுமக்கள் வரை பேசினார்கள். ஆனால் சேனல் நிறுவனங்கள் எதுவும் செய்திகளில் இதைப்பற்றி குறிப்பிடவில்லை, கண்டிக்கவில்லை. செய்தியாளர் சங்கங்கள் கூட ஒரு அறிக்கை தரவில்லை.

ஆட்சியாளர்களிடம் மண்டியிட்டு கிடப்பது ஏன் ?. கடந்த திமுக ஆட்சியில் அப்படி கிடையாதே ?.


மத்தியில், மாநிலத்தில் இருந்த திமுகவை துவம்சம் செய்தது ஊடகங்கள் தான். 2ஜீயில் இழப்பு என்பதை ஊடகங்கள் தான் ஊழல் என மக்கள் மத்தியில் பொய்யான தகவலை பரப்பியது. உண்மை தெரிந்தபின்பும் தினமலர், தினமணி போன்றவை இன்றளவும் அப்படியே எழுதி வருகின்றன. அதற்காக மற்ற ஊடகங்கள் மாறிவிட்டன என அர்த்தமல்ல. ஒருசில இதழ்களை தவிர மற்ற எல்லாம்மே அதை ஊழல் என்றே இப்போது வரை பொய்யை மீண்டும் மீண்டும் பரப்புகின்றன. அந்த கட்சி தோற்று அதிகாரத்தில் இல்லாத போதும் பாய்ந்து பிராண்டுகின்றன. விசாரணை தான் நடந்து வருகிறது இன்னும் தீர்ப்பு வரவில்லை. ஆனால் தீர்ப்பு வந்துள்ள சொத்து குவிப்பு வழக்கில் ஏதோ நேற்று வழக்கு போட்டு இன்று தீர்ப்பு வந்தது போல் ஊடகங்கள் செய்திகளை வழங்குகின்றன.

ஊழல் என்பது இந்த சமூகத்தின் இழிவு. ஊழலை ஒழிக்க வேண்டும் என குரல் தருகிறோம். ஆனால் ஊழல் குற்றச்சாட்டில் ஒரு மாநிலத்தின் முதல்வர்க்கு தண்டனை தந்தால் ஊழலுக்கு எதிராக குரல் தரும் ஊடகங்கள் வாய்மூடி மவுனியாக இருக்கின்றன.

இதே தமிழக ஊடகங்கள் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே இயக்கம் தொடங்கியபோது, ஆகா, ஓகோ என முழக்கமிட்டனர்; நாள் முழுவதும், புது தில்லி ஜந்தர் மந்தரில் நடந்த, அனுமதி மறுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை நியாயப்படுத்தி ஒளிபரப்பினர். லாலு பிரசாத் மீது தீர்ப்பு வந்தபோது, ஊழல் செய்தார்; அதனால் அவர் பதவி பறிப்பது சரிதான் என செய்தி வெளியிட்டனர்.
ஆனால்,  இன்று, ஊழல் பணத்தில் சொத்துக்கள் வாங்கப்பட்டது என நீதிபதி கூறி, ஜெயலலிதாவிற்கு தண்டனை அறிவித்தால், இதே ஊடகங்கள், அது பொய் வழக்காமே என்றும், இதைவிட 2ஜி பெரிய வழக்கு அதில் திமுகவிற்கு என்ன பாதகம் வரும் என இன்றே தீர்ப்பு எழுத முற்படுவதும், ஊடகத்தின் யோக்கியதையையும், பார்ப்பன தன்மையையும் தோலுரித்து காட்டுவதாக உள்ளது.

என் கேள்வி ஊடக முதலாளிகளுக்கு வெட்கம் இல்லாமல் இருக்கலாம். வளரும் செய்தியாளர்களுக்கு விவரம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எல்லாம் அறிந்த மூத்த பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள் அமைதியாக இருப்பது எதனால் ?. ஜெ என்ன புனிதமானவரா, குற்றமற்றவறா, ஊழலே செய்யாதவரா ? கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை எத்தனை ஊழல், எத்தனை அலங்கோலமான முட்டாள்தனமான திட்டங்கள். இதைகூட விமர்சிக்க தயங்குகிறீர்கள். அரசாங்கம் மீது, ஆட்சியாளர்கள் (அரசியல்வாதிகள்) மீது மக்கள் நம்பிக்கை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது அவர்கள் நம்புவது நீதித்துறையையும், ஊடகத்தையும்தான். அதை பாழாக்குகிறீர்களே நியாயம்மா?. ஊடகத்துறையில் வளரும் தலைமுறைக்கு மக்களுக்கு நேர்மையான, உண்மை செய்திகளை வழங்குவது எப்படி என கற்று தந்துவிட்டு செல்வீர்களாக.......

5 கருத்துகள்:

  1. நீங்க சொன்னது முற்றிலும் சரி. இந்த ஊடகங்களே இப்படி தான். மதுரையில் திமுக குண்டர்கள் மூன்று பேரின் மரணத்துக்கு காரணமாக இருந்தபோதும் ஊடகங்கள் சக பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டார்கள் என்கிற உணர்வின்றி இப்படி தான் இருந்தாங்க.

    பதிலளிநீக்கு
  2. //ஊடகத்துறையில் வளரும் தலைமுறைக்கு மக்களுக்கு நேர்மையான, உண்மை செய்திகளை வழங்குவது எப்படி என கற்று தந்துவிட்டு செல்வீர்களாக.......//

    நடந்தால் அது அதிசயம்!

    மிகச் சிறந்த ஆய்வு. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  3. எந்த மீடியாக்கள் பற்றி சொல்கிறீர்கள்? 'ஐயோ.. கொல்றாங்க..' அப்படின்னு டப்பிங் வாய்சில் வீடியோ வெளியிட்டார்களே அவர்களையா? எதை பொதுவில் காட்டலாம்.. எதை பொதுவில் காட்டக் கூடாது என்ற வரை முறை எதுவும் இன்றி நித்தியின் வீடியோ வெளியிட்டார்களே.. அந்த மீடியாவா? தர்மபுரி மாணவர் எரிப்பு வழக்கு என்ன ஆனது என்று எந்த பாலோ அப்பும் செய்யாமல் இருக்கிறார்களே.. இந்த மீடியாவா.. மதுரை தினகரன் ஊழியர் எரிப்பு வழக்கு என்ன ஆனது என்று எதுவும் வெளியே வராமல் பார்த்துக் கொள்கிறார்களே அந்த மீடியாவா.. கேஸ் முடியும் முன்னேயே போலீஸ் வீடியோவை ஜெயச்சந்திரர் வழக்கில் வெளியிட்டார்களே.. அந்த மீடியாவா.. இப்போது அந்த கேஸ் ஊத்தி மூடியது எதனால்.. ஏன் என்று எதுவும் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்களே.. அந்த மீடியாவா..

    நம் மீடியா முழுமையாக புரையோடிய ஒன்று..இது இப்போது புதிதாக நடப்பது இல்லை. பற்பல வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக நசிந்த ஒன்று. இதில் நேர்மையை இப்போது எதிர்பார்ப்பது பைத்தியக் காரத்தனம்.. பணத்துக்காகவும் அதில் கிடைக்கும் பவருக்காகவும் நடத்தப் படுகிறது எல்லா .மீடியாக்களும்.

    பதிலளிநீக்கு
  4. nalla sirappaana karuththukkal dravida munetra kazhagaththukkum 2G oozhalukkum vakkaalaththu vaangiyirukka thevaiyillai

    பதிலளிநீக்கு