செவ்வாய், ஜனவரி 20, 2015

ஆளுக்கு ஏற்றாற்போல் நீதி. - நியாயமா ? நீதிமன்றம்மே நியாயம்மா ?


நீதி தேவதையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டுயிருக்க காரணம், நீதியின் முன்னால் ஏழை, பணக்காரன், அதிகாரத்தில் இருப்பவன் என்ற பாகுபாடு இருக்ககூடாது. நீதி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் என்பதாலே நீதி தேவதையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டுள்ளன என்பார்கள். நீதிதேவதையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டினால் நீதி சரிசமமாய் வழங்கப்பட்டுவிடுமா என்பதை யாரும் கேட்பதில்லை. நீதியை வழங்குவது நீதிதேவதையல்ல. சட்டம் படித்து தேர்வு எழுதிவிட்டு வந்த நீதிபதிகள். ஆசை, பேராசை, மனஉறுதியில்லாத பல நீதிபதிகள் நீதிமன்றத்தில் உள்ளனர். அவர்களின் கண்களை கட்டினால் நீதி தழைக்கும் என்பது என் போன்ற பலரின் கருத்து.

சரி விவகாரத்துக்கு வருவோம்.

இந்தியாவின் பிரபலமான வழக்குகளில் ஒன்று முன்னால் முதல்வர் ஜெயலலிதா அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து குவித்த வழக்கு. அந்த வழக்கு தமிழகத்தில் சரியாக நடக்கவில்லை, சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள் என திமுக பொது செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றம் செல்ல வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு பெங்களுரூவில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீண்ட காலம் விசாரிக்கப்பட்டு இறுதியில் நீதிபதி மைக்கல் டி குன்ஹா, ஜெ, சசிகலா உட்பட 4 பேர் ஊழல் செய்தது ஆவணங்கள் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு, நான்காண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். முதல்வர் பதவியில் இருந்த ஜெவின் பதவி பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன் நடந்து வருகிறது. இதில் அரசு சார்பில் பவானிசிங், குற்றவாளிகள் சார்பில் பிரபல வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடுகிறார்கள்.

இந்த வழக்கில் தங்களை அரசு தரப்புக்கு உதவியாக இருக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மனுதாக்கல் செய்கிறார். நீ யார் மனு தாக்கல் செய்ய, நீதிமன்றத்தை அரசியல் கூடமாக மாற்றாதீர்கள், பவானிசிங் சட்டம் அறிந்தவர், அவர் குற்றவாளிக்கு ஆதரவாக இருக்கமாட்டார், அவருக்கு தெரியாத சட்டம் அன்பழகனுக்கு தெரியும்மா என பாய்ந்து பிராண்டுகிறார்கள் சட்டம் அறிந்த மாண்புமிகு நீதிபதிகள். அவர்கள் கேட்பது தவறில்லை. கேள்வி கேட்கத்தான் அவர்கள் அமர்ந்துள்ளார்கள்.

ஜெ மீதான சொத்து குவிப்பு பற்றியும், தமிழக அரசியல் பற்றியும், ஜெயலலிதா, சசிகலா பற்றியும் அறியாமல் கேள்வி கேட்கிறார்கள் என்பதாலே இந்த கட்டுரை.

மாண்புமிகு நீதிபதி(கள்) அவர்களே,

ஓன்று, இரண்டல்ல மொத்தமாக 19 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கு இந்த வழக்கு. 1991-1996 ஆட்சி காலத்தில் ஜெ முதல்வராக இருக்கும்போதே கவர்னரால் ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என அனுமதி வழங்கப்பட்ட வழக்கு. அதன்பின்பே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற வழிகாட்டுதல்படி விசாரிக்கப்பட்டது. 96ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. ஜெ மீதான வழக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனிநீதிமன்றம் அமைத்து விசாரிக்க தொடங்கினார்கள். 2001ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெ, இந்த வழக்கை நீர்த்து போக வைக்க முயன்றார். அரசு சாட்சிகள் பல்டியடித்தன, அரசு வழக்கறிஞர் குற்றம்சாட்டப்பட்டவருக்கு சாதகமாக வாதங்களை எடுத்து வைத்தார். தமிழகம்மே வேடிக்கை பார்த்தது. அப்போது சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக இருந்த திமுக பொதுசெயலாளர் அன்பழகன், உச்சநீதிமன்றம் சென்று மனுதாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு தனி நீதிமன்றத்தில் தமிழகத்தில் நடந்து வருகிறது. இப்போது தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவிக்கு வந்துள்ளார். இவரின் கீழ்வுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சரியாக செயல்படவில்லை. குற்றவாளிக்கு சாதகமாக செயல்படுகிறது, சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள் என ஆதாரங்களோடு முறையிட்டார். அதன்பின் இந்த வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டன. உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இந்த வழக்கு இன்று வரை நடக்கிறது.


கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு தனிநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பலப்பல பொய்களை ஜெயலலிதா தரப்பிலான வழக்கறிஞர்கள் எடுத்து வைத்தார்கள். உயர்நீதிமன்றமும், கர்நாடகா அரசும் அரசு வழக்கறிஞரை நியமித்தார்கள். அவர்களும் சில நிர்பந்தங்களால் ஜெ தரப்புக்கு சாதகமாக இருந்தார்கள். அதன்பின்பே அன்பழகன் மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று, அரசு வழக்கறிஞர்க்கு உதவியாக தன்னை நியமிக்க வேண்டும் என உத்தரவு பெற்று தன்னை வழக்கில் இணைத்துக்கொண்டார். சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வாசித்து முடிக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடக்கிறது. இதில் அரசு தரப்புக்கு உதவியாக தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என அன்பழகன் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது.

அரசு வழக்கறிஞர் பவானிசிங் தெரியாத சட்டமா என நீதிபதி கேள்வி கேட்கிறார். அவரின் சட்ட அறிவை பற்றி அன்பழகன் தரப்பு புகார் சொல்லவில்லை. அவரின் நியமனம் தவறானது என்கிறது.

கர்நாடகா அரசு தரப்பு, மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞராக ஆஜராக பவானிசிங்கை நாங்கள் நியமிக்கவில்லை என்கிறது. என்னை நியமித்தது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை என்கிறார் பவானிசிங். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அந்த அதிகாரம் இல்லை. அரசு வழக்கறிஞரை கர்நாடகா அரசு தரும் பட்டியல்படி கர்நாடகா உயர்நீதிமன்றம் நியமிக்கும் என்கிறது உச்சநீதிமன்ற உத்தரவு. இதைதான் அன்பழகன் சார்பிலான வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இதை ஏற்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுக்கிறது. பவானிசிங்குக்கு ஆதரவாக நிற்கிறது. பவானிசிங் எப்படிப்பட்ட அரசு வழக்கறிஞர் என்பது அவர் கீழ்கோர்ட்டில் அரசு வழக்கறிஞராக ஆஜரானபோதே “தெரிந்துவிட்டது“.


கடந்த காலத்தில் கர்நாடகாவில் பி.ஜே.பி அரசு இருந்தபோது ஜெ வழக்கு எதிராக வாதாடிய அரசு வழக்கறிஞருக்கு எப்படியெல்லம் கர்நாடகா அரசும், தமிழக அதிகார மையம் தொல்லை கொடுத்தது என்பதை முன்னால் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தனது சமீபத்திய நூலில் விரிவாக பதிவு செய்துள்ளார்.

ஜெ மற்றும் அந்த குரூப்புக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் பலப்பல பொய்களை நீதிமன்றத்தில் எடுத்து சொன்னபோது அரசு வழக்கறிஞர் பவானிசிங் அதை மறுக்காமல் அமைதிகாத்தபோது அரசு வழக்கறிஞர்க்கு உதவிக்கு சென்ற அன்பழகன் வழக்கறிஞர்கள் தான் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சொல்வது பொய் என்பதை நீதிமன்றத்தில் அடிக்கடி ஆவணங்களோடு நிருபித்தனர்.

இப்போதும் மேல்முறையிட்டு மனு விசாரணையின் போது குற்றவாளிகள் தரப்பில் இருந்த நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை மூத்த வழக்கறிஞர்கள் வாதத்தின் போது வைக்கிறார்கள் அதை மவுனமாக கேட்டுக்கொள்கிறார் அரசு வழக்கறிஞர். இதையெல்லாம் பார்த்துவிட்டு தான், திமுக பொது செயலாளர் அன்பழகன் தன்னை அரசு வழக்கறிஞர்க்கு  உதவியாக இருக்க அனுமதிக்க வேண்டும் என கேட்கிறார். அதற்கு சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள் அனுமதி தர வேண்டியவர்கள்.

இப்போது குற்றவாளியாகவும், முன்பு குற்றம்சாட்டப்பட்டவராகவும் இருந்த ஜெயலலிதா, எனக்கு இவர்தான் நீதிபதியாக இருக்க வேண்டும், இவர் தான் அரசு வழக்கறிஞராக இருக்க வேண்டும் என கேட்டு வித்தியாசமாக மனுதாக்கல் செய்தபோது அதை ஏற்றுக்கொண்டு செயல்பட்ட உயர்-உச்சநீதிமன்றங்கள் இப்போது அன்பழகன் அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றுதான் கேட்கிறார் இதற்கு ஏன் மறுக்க வேண்டும். அரசு வழக்கறிஞர் சரியாக செயல்படுகிறாறா என்பதை நீதிமன்றம் கண்காணிக்கவில்லை. அரசு வழக்கறிஞர் சரியாக செயல்பட்டால் அன்பழகன் இந்த வழக்குக்குள் மீண்டும் வருவதற்க்கே வாய்ப்பில்லை. அரசு வழக்கறிஞரின் பணியை நீதிமன்றம் கவனிக்காததால் தான் அதனை திமுக தலைமை கையில் எடுத்தது.

இந்த வழக்கை அரசியலாக பார்க்காதீர்கள் என்கிறார்கள் நீதிபதிகள். ஒன்றை மறந்துவிட்டார்கள் என நினைக்கிறேன். இங்கு எல்லாம்மே அரசியல் தான். குடிக்கும் தண்ணீரில் இருந்து சொத்தால் போடப்படும் மாலை வரை அரசியல் தான். நீதிமன்றத்தில் அரசியல் இல்லை என நீதிபதிகள் வேண்டுமானால் நீதிமன்றத்தில் சொல்லிக்கொள்ளலாம். மற்றப்படி யாரும் சொல்லமாட்டார்கள்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னால் முதல்வர்களான லாலுபிரசாத் யாதவ், சௌத்தாலா போன்றவர்கள் பல மாதங்கள் சிறையில் இருந்தபின்பே வெளியில் வந்தார்கள். ஆனால் அதிகபட்ச அபராதம், நான்காண்டுகள் தண்டனை பெற்ற ஜெ பிணையில் வெகு சுலபமாக பிணையில் வரமுடிந்தது. அதில் அரசியல் இல்லையா?. இல்லையென யாரால் உறுதி தர முடியும். பிணை வழங்கியதில் நீதித்துறையின் பல விதிகள் மீறப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளன உச்சநீதிமன்றத்தில்.

இந்த வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டும்மென்றால் மூன்றாம் தரப்பின் கண்காணிப்பு தேவை. அந்த கண்காணிப்பு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியின் கண்காணிப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் உண்மையை மக்களும் அறிந்துக்கொள்வார்கள்.

உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இருக்க்கூடாதா என கேட்கலாம். இருக்ககூடாது. உச்சநீதிமன்றம் அதிகாரம் இருப்பவர்கள், அதிகாரம் இல்லாதவர்கள், பண பலம் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என பட்டியல் தயாரித்து வழக்கை பார்க்கிறதோ என சந்தேகம் வருகிறது. ( ஜெவுக்கு பிணை வழங்கியபோது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூட வேத்துவிட்டு று மாதிரி கேள்வி கேட்டுயிருந்தார்.) கொலை குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர்க்காக இரவில் உச்சநீதிமன்றம் திறக்கப்படுகிறது, எஸ் பேண்ட் ஊழல் வழக்குகள் ஊத்தி மூடப்படுகிறது. வெகு வேகமாக ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெவுக்காக பிணை வழங்கப்படுகிறது. இவைகளில் வேகம், அக்கறை காட்டும் உச்சநீதிமன்றம் ஆண்டாண்டு காலமாக சாதி துவேஷத்துடன் கோயில் கருவரைக்குள் தாங்கள் மட்டுமே நுழைய முடியும் என சாதியை காட்டி மக்களை ஒதுக்கி வைத்துள்ளனர் பார்ப்பனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான பிராமணர் அல்லாத பிற சாதி இளைஞர்கள் வேதம் கற்றுக்கொண்டு கோயில் கருவரைக்குள் நுழைய முயன்றபோது அடித்து துரத்தினர். இந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கிய உச்சந்தலை குடுமி கூட்டம் அந்த வழக்கு விசாரணைக்கு வர விடாமல் கடந்த 7 ஆண்டுகளாக தடுத்து வருகிறது. இதற்காக எத்தனை எத்தனை போராட்டம் நடத்தப்பட்டது. இந்த வழக்குக்காக சிறு துரும்பையாவுது உச்சநீதிமன்றம் கிள்ளிப்போட்டது உண்டா ?.

சாமான்ய மக்களுக்கான இந்த வழக்கில் குப்புற படுத்துக்கிடக்கும் உச்சநீதிமன்றம் ஊழல் வழக்கை விசாரிக்க வேகம் காட்டுவது எதனால் ?. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வழக்குகள் நம்பர் கூட ஆகாமல் வரிசையில் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் காத்துக்கிடக்கும் நிலையில் ஜெ வழக்குக்கு அதிமுக்கியத்துவம் தருவதில் துவங்குகிறது நீதி ஏழைக்கு ஒருமாதிரியாகவும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியாக வழங்கப்படுகிறது என்ற எண்ணம்.

ஏழைகள் நம்புவது நீதியை தான். அதில் பாகுபாடு வருவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்யக்கூடாது. அவர்கள் தவறு செய்தால் தனக்கு கீழ் இருப்பவர்களை நிர்வாகம் செய்ய முடியாது என மைக்கல் டி குன்ஹா தன் தீர்ப்பில் ஒரு இடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அதையேத்தான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.


நன்றி வாழ்க ஜனநாயகம்……….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக