சனி, நவம்பர் 09, 2013

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்……மீண்டும் வருவார்கள் ஈழ வியாபாரிகள்.நம்புங்கள் இலை மலர்ந்தால் நிச்சயம் ஈழம் மலரும். இது தான் தமிழ்தேசியவாதிகள் வரும் பாராளமன்ற தேர்தலின் போது வைக்கப்போகும் பிரச்சார வாக்கியம்.

சட்டமன்ற தேர்தலின் போது ‘தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி பழ.நெடுமாறன், விடுதலைப்புலிகளின் புதிய செயல்தளபதி சீமான்’, ( தேர்தலை புறக்கணித்து வை.கோவும் மறைமுகமாக அதிமுகவுக்கு சாதகமாகவே செயல்பட்டார் ) போன்றோர் இலையை மலர வையுங்கள் ஈழம் நிச்சயம் மலரும் எனச்சொல்லி வாக்கு கேட்டார்கள். தமிழ்தேசியவாதிகள் உருவாக்கிய வாக்கியம் தான் அது. இலை மலர்ந்தது. மகிழ்ந்தார்கள் தமிழ் தேசியவாதிகள். சட்டமன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை திட்டியபோது ஈழம் கிடைத்துவிட்டது என பூரித்து போன தலைவர், தளபதிகள் ஜெவுக்கு ‘ஈழத்தாய்’ என பட்டம் தந்து பாராட்டினார்கள்.

இரண்டு ஆண்டுக்கு முன் நெடுமாறன், ஈழத்தாயின் தோழியான சசிகலாவின் கணவர் நடராஜன் மூலம் இலங்கையில் நடந்த ஈழ போருக்கு தமிழகத்தில் நினைவகம் அமைத்தார். அதற்கு பெயர் முற்றம். அதை அமைக்காமல் தடுத்தார் ஈழத்தாய். நெடுமாறன் வாய் திறக்கவில்லை. அமைதியாக இருந்தார். பின் மறைமுக தூதுவிட்டு எங்கள் அரசியல் இதில் தான் உள்ளது என சொல்லி மீண்டும் தடங்கல் வராமல் பணியை தொடங்கினார். இதற்கு செலவான தொகை நடராஜன் பணம் என்பது நாடறிந்த ரகசியம்.

கட்டி முடிக்கப்பட்ட முற்றம் 2013 நவம்பர் 8, 9, 10 தேதிகளில் திறக்கப்பட்டு நிகழ்வுகள் நடத்தப்படும் துரோகிகளுக்கு அழைப்பில்லை என்றார் நெடுமாறன். ஆனால் யாருக்கும் தெரியாமல் கடந்த 6ந்தேதியே முற்றத்தை திறந்துவிட்டார் நெடுமாறன். முற்றம் திறக்கவிடாமல் சிலர் முயற்சிக்கிறார்கள் அதனால் முன்கூட்டியே திறந்தோம் என அறிவித்தார். தடைபோடும் அந்த சிலர் யார் என்பதை அவர் மூச்சுவிடவில்லை. நெடுமாறன் அடிப்பொடிகளோ, மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு என சொல்லிவருகிறது. அவர்கள் திட்டமிட்டு மறைப்பது அந்த சிலரில் ஜெ அரசும் உள்ளது என்பதை. ஜெ அரசு தான் நீதிமன்றம் மூலம் தடுக்க நினைத்தது. கொளத்தூர் மணி அவர்களை கைது செய்து மறைமுகமாக அதனை வெளிப்படுத்தி தங்களது நிலைப்பாட்டை காட்டியது. தமிழகத்தை ஆளும் ஈழத்தாய் நெருக்கடி தருவதால் தான் முன்கூட்டியே திறக்கப்பட்டது என்ற உண்மையை சொல்லாமல் காங்கிரஸ் அரசு பக்கம் கல்லை எறிகிறார்கள். அது தப்பல்ல. காங்கிரஸ்க்கு ஈழ படுகொலையில் மாபெரும் பங்குண்டு. அதேபோல் மத்திய காங்கிரஸ் சொல்வதை செயல்படுத்தும் ஜெ அரசுக்கும் பங்கு உண்டு தானே. அப்படியிருக்க ஜெ பெயரை சொல்லாமல் போவது ஏன் ?.

காரணம், பாராளமன்ற தேர்தல்.

பாராளமன்ற தேர்தலில் ஈழத்தாயை செங்கோட்டையை ஆள வைக்க துடிக்கிறார்கள் இந்த தமிழ்தேசியவாதிகள். தேர்தலில் தாயின் ஈழத்தாய் பிம்பம் உடைந்துவிடக்கூடாது. அதனால் தான் தடை போடும் தாயின் மறுப்பக்கத்தை மறைக்கிறார்கள்.

பிரச்சாரத்துக்கு வரும் அவர்களிடம் சட்டமன்ற தேர்தலின் போது, சட்டமன்ற தேர்தலின்போது இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றீர்கள். இலை தான் மலர்ந்ததே என நீங்கள் கேட்டால் அவர்கள் பதில், பிரச்சாரத்தை நீங்கள் முழுமையாக உள்வாங்கவில்லை. இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொன்னோம். தமிழகத்தில் தானே இலை மலர்ந்துள்ளது. இந்த இலை டெல்லியில் மலர வேண்டும். அப்போது தான் ஈழம் மலரும் அதனால் அம்மாவை பல்லக்கில் உட்கார வைத்து நாம் டெல்லிக்கு அனுப்பினால் அவர் பிரதமராகி இலங்கையை உடைத்து ஈழ நாட்டை பெற்று தருவார் என சொல்வார்கள். நெடுமாறன், வை.கோவுக்கும், சீமானுக்கும் பேச கற்று தர வேண்டுமாயென்ன ?. பொய்யை உண்மையாக பேசுவதில் வல்லவர்கள் அவர்கள்.

நீங்கள் அதை நம்பி வாக்களிக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் தமிழன் இல்லையேல் நீங்கள் துரோகிகள். இந்த தமிழ்தேசியவாதிகள் பாம்பு கொத்தாது என்றால் நீங்கள் நம்ப வேண்டும். மீறி கேள்வி கேட்டால் உங்களை துரோகிகளாக்கிவிடுவார்கள்.

2009ல் ஈழத்தில் போர் நடந்தபோது உலகநாடுகள் ஈழ தமிழனத்துக்கு துரோகம் செய்தபோல தமிழகத்தில் நடமாடும் இன்றளவும் நாங்களே பிரதிநிதிகள் என அறைகூவல் விடுக்கும் பழ.நெடுமாறன், வை.கோ போன்றவர்களுக்கு பெரும் பங்குண்டு. ஆனால் அதை தங்களது வாய்பேச்சு, ஊடகங்கள் மூலமாக திசை திருப்பினார்கள். திமுக அதற்காக காப்பாற்ற போராடியது என அர்த்தமல்ல. மாநில கட்சிகளால் எந்தளவுக்கு இந்த விவகாரத்தில் செயல்பட முடியும் என்பது அரசியலில் கொட்டை போட்ட நெடுமாறன், வை.கோ போன்றவர்களுக்கு தெரியாததல்ல. ஆனாலும் திமுகவை குற்றம் சாட்டினார்கள்.

அவர்களின் நோக்கம் நியாயமாக, ஈழ மக்களுக்காக சிந்திப்பதல்ல. ஈழ பினங்களின் மீது அரசியல் செய்து தங்களுக்கு தோதான அதிமுக மலர வேண்டும் திமுகவை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற வேட்கை தான் காரணம். அதை செய்தார்கள். வென்றார்கள். அதனால் தான் ஜெ அரசு தற்போது நுணுக்கமாக ஈழ தமிழனத்துக்கு எதிராக பல பிரச்சனைகள் செய்தாலும் அதை கண்டும் காணாமல் இருக்கிறார்கள் தமிழ்தேசியவாதிகள்.


அவர்கள் தான் மக்களை சந்திக்க மீண்டும் வரப்போகிறார்கள். இலை மலர்ந்தால் ஈழம் மலரும். அந்த இலை டெல்லியில் மலர வேண்டும். அம்மா பிரதமராக வேண்டும் என கேட்கபோகிறார்கள்.

ஒருவேளை அம்மா பிரதமாராகி ஈழத்தாயை பாரததாய் என வர்ணிக்கும் இந்த நெடுமாறன், வை.கோ, சீமான் வகையறாக்களிடம் ஏன் இன்னும் ஈழம் மலரவில்லையென நீங்கள் கேட்டீர்கள் என்றால், அதற்கு உலக நாடுகளின் ஆதரவு தேவை அதனால் ஐ.நா சபை செயலாளராக பாரத தாயின் போர் படை தளபதி அண்ணன் ஓ.பி.எஸ் சை ஐ.நா சபை செயலாளராக்க அம்மா முடிவு செய்துள்ளார். அவர் ஐ.நா சபை செயலாளரானதும் ஈழம் மலர்ந்துவிடும் என்பார்கள் நாம் கை தட்டி வரவேற்க வேண்டும். இல்லையேல் நீங்கள் தமிழன துரோகிகள் என முத்திரை குத்தப்படுவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக