வியாழன், ஏப்ரல் 19, 2012

ஈழம் அமைய வாக்கெடுப்பு. – அமெரிக்காவின் ஆட்டம்.




சீனாவின் முத்துமாலையை அறுக்க முயலும் அமெரிக்கா என்ற பதிவை கடந்த மாத இறுதியில் வெளியிட்டுயிருந்தேன். அந்த பதிவில் அமெரிக்காவின் இந்த திட்டத்துக்கு இந்தியா பெரும் உதவியாக இருக்கிறது என சுட்டிக்காட்டியிருந்தோம். அடுத்து அமெரிக்கா, இலங்கையை தன் பக்கம் இழுக்க முயலும் இல்லையேல் அத்தீவை பிரித்து தமிழர்களின் கனவான தனி ஈழம் அமைக்க முயலும் என குறிப்பிட்டுயிருந்தோம். அதுப்படியே கடந்த சில தினங்களாக நிகழ்வுகள் நடைபெற துவங்கியுள்ளன. 

அமெரிக்க ஜனாதிபதியான ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு, சில தினங்களுக்கு முன் ரகசியமாக இலங்கையின் முன்னால் தூதரும், தற்போதைய தெற்காசிய வெளிவிவகாரத்துக்கு பொறுப்பாளருமான ராபர்ட் பிளேக்கை ‘ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு’ சந்தித்து தனி ஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எங்கள் மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள் என்ற கோரிக்கை மனுவை தந்துவிட்டு வந்துள்ளார்கள். அதோடு, அதிகாரபூர்வமற்ற முறையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அம்மையார் ஹிலாரி கிளின்டனையும் சந்தித்தாக செய்தி வெளியாக கொழும்பு அரசியல் வட்டாரம் அதிர்ந்துப்போய்வுள்ளது. 

அமெரிக்கா ஈழம் அமைப்பதற்கான நகர்வை ஆரம்பிக்க காரணம், 

முத்துமாலை திட்டத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இலங்கை தீவு. இந்திய பெருங்கடலில் இலங்கை யார் கைப்பாவையாக உள்ளதோ அவர்ளே உலகின் எஜமானாகள். அதனை யூகித்து தான் இலங்கைக்கு போர் காலத்தில் 60 சதவிதமான உதவிகளை சீனா செய்தது. அதற்கு போட்டியாக இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் உதவின. 

போர் முடிவுற்ற பின் இலங்கை, உதவி செய்த 8 நாடுகளை கழட்டி விட்டுவிட்டு சீனாவோடு அதிக நெருக்கமாயின. இந்தியா வழியாக அமெரிக்கா மிரட்டி பார்த்தும் பலனில்லை. நேரடியாக மிரட்யும் இராஜபக்சே சகோதரர்கள் போக்குகாட்டினர். 

தமிழர்களுக்கு எதிரான போரை நடத்திய இலங்கை இராணுவதளபதி பொன்சேகாவை தன் பக்கம் இழுத்தது அமெரிக்கா. ஜனாதிபதி தேர்தலிலும் நிற்க வைத்தது. உடனே அவரை தேச துரோகி என குற்றம் சாட்டி சிறையில் தள்ளினார்கள் இராஜபக்சே சகோதரர்கள். 

அதன்பின்பே ஐ.நா வழியாக இலங்கை மீது போர்குற்றச்சாட்டை சுமத்த முன்வந்தது அமெரிக்கா. ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டு வரும் முன் சீனாவிடம்மிருந்து பிரிந்து தன் ஆதரவாளராக நடந்துக்கொள்ள வேண்டும், சிறையில் உள்ள பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்த்தது. அதை இராஜபக்சே ஏற்றுக்கொள்ளாமல், இந்தியாவும், சீனாவும் தனக்கு பக்க பலமாக இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அமெரிக்காவை சீண்டி பார்க்க தொடங்கினர் இராஜபக்சே சகோதரர்கள். 

சீனாவை முக்கறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த இந்தியா, அமெரிக்காவின் தீர்மான திட்டத்துக்கு தலையாட்டியது. அமெரிக்கா திட்டப்படி ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வந்தபோது இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. ஏமாந்துபோன இலங்கை இந்தியா தனக்கு ஐ.நாவில் கைகொடுக்கவில்லை என்பதால் இந்தியா மீண்டும் புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி வழங்குகிறது என கருத்து சொன்னது. அடுத்து, கூடங்குளம் விவகாரத்தில் அரசின் கருத்துக்கு எதிர் கருத்துக்கூறி இந்திய அரசிடம் பலமாக வாங்கிகட்டிக்கொண்டது. 

ஐ.நா தீர்மானம் வருங்காலத்தில் பல பிரச்சனைகளை உருவாக்கும் என்பதை இலங்கை நன்கறியும். இருந்தும் சீனாவின் நட்பை அவர்களால் விட முடியவில்லை. சீனாவை மீறி அமெரிக்காவிடம் அடைக்கலம் புகுந்தால் இராஜபக்சே சகோதரர்கள் ஒழிக்கப்படுவார்கள் அதோடு, வருங்கால பிரச்சனைகளின் போது ஐ.நாவில் வீட்டோ அதிகாரம் உள்ள சீனா தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என இராஜபக்சே சகோதரர்கள் நம்புகிறார்கள்.

தொடர்ந்து இலங்கையை அமெரிக்காவும், இந்தியாவும் மறைமுகமாக இராஜதந்திர ரீதியில் மிரட்ட பணிய மறுப்பதால் தான் தான் இறுதியாக, தனி ஈழ வாக்கெடுப்பு என்ற அஸ்திரத்தை கடைசியாக ஏவியுள்ளனர். 

இதன் பின்னும் இராஜபக்சே அன் கோ, இறங்கி வரவில்லையெனில் அடுத்தடுத்த நகர்வுகள் இலங்கைக்கு எதிராக இருக்கும். தனி ஈழம் அமைக்க வழிவகை செய்யப்படும். இந்தியா அதனை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். தற்போதைய நிலையில் சீனாவின் பிடியில் இருந்து இலங்கை விலக சாத்தியமில்லை. அமெரிக்காவின் திட்டம் வெற்றியடைய வாய்ப்பு உண்டு. 

இதனை யூகித்து தான் கலைஞர் ஐ.நாவில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அறிக்கை விட்டுள்ளார். 

12 கருத்துகள்:

  1. நட்சத்திர வாழ்த்துக்கள் முதலில் சொல்லிக்கொள்கிறேன்.

    இலங்கை குறித்த பதிவுகள் இடும்போது ஒரு பாட்டி வடை விற்றாள் தோரணையில் பதிவுகள் இடுவதை தவிர்ப்பது நல்லது.அமெரிக்கா ஒன்றும் இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு அமைத்து தரும் முயற்சியில் இல்லை.இது வரையில் கள நிலையில் அனைவரும் ஒரே நாடு என்ற முறையில் தீர்வுகள் மட்டுமே என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளார்கள்.இதனை இலங்கை அரசு சார்ந்து பல்லவி பாடுபவர்களும்,ஏனைய இலங்கை தமிழ் அமைப்பினரும் கூட அதே நிலைப்பாடுள்ளவர்களாக மட்டுமே காணப்படுகிறார்கள்.புலம்பெயர் தமிழர்கள்,தமிழகத்தில் மட்டுமே ஈழம் குறித்த குரல்கள் ஒலிக்கின்றன.

    ஜனநாயக ரீதியில் பிரபாகரனுக்கு நிகரான வலிமையான தலைமை வட,கிழக்கில் தென்படும் வரை உலக அரசியல் சதுரங்கத்தில் ஈழம் இன்னும் கனவாகவே!

    அமெரிக்கா ராஜபக்சேக்களை ஆட்சி பீடத்திலிருந்து அப்புறப்படுத்துகிறதா என்பதை பொறுத்து இலங்கை அரசியல் களநிலைகள் அமையும்.

    பதிலளிநீக்கு
  2. நான்கு முறை Word verification தட்டச்சு செய்திருக்கிறேன்.இப்படியிருந்தா யார் பின்னூட்டம் போட வருவார்கள்:)

    பதிலளிநீக்கு
  3. எத்தனை மகிழ்ச்சியான செய்தி!
    தங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் மனம் திருப்தி அடையாது.
    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  4. நண்பரின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    எப்போதும் அமெரிக்கா ஈழம் பெற்று தரும் என நான் எழுதியதில்லை. அமெரிக்காவின் தற்போதைய தேவை சீனாவின் முத்துமாலை திட்டத்தை உடைப்பதே. (அதுப்பற்றின பதிவை படியுங்கள்). ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை தகர்க்க முயல்கிறது மேற்கத்திய நாடுகள். அதற்க்கு முதலில் சீனா அமைத்த முத்துமாலை திட்டத்தை உடைக்க வேண்டும். அந்த பணியை செய்கிறது. அவர்களுக்கு இலங்கையை உடைக்க வேண்டும் என்ற ஆவல் இல்லை. இந்திய பெருங்கடலில் குறிப்பாக இலங்கை தீவில் அமெரிக்காவுக்கு இடம் வேண்டும். அதற்கு இலங்கை சீனாவின் பிடியில் இருந்து விலகி வரவேண்டும். வராத பட்சத்தில் ஈழத்தை அமைக்க முயற்சி செய்வோம் என கட்ட முயல்கிறது. இலங்கை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு சாதகமாக முடிவு எடுக்காத பட்சத்தில் ஈழ நாடு உருவாக்குவோம் என்பார்கள். அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன். எந்த இடத்திலும் எந்த பதிவிலும் நான் ஈழத்தமிழர் நலனுக்காக மேற்கத்திய நாடுகள் பாடுபடுகின்றன என நான் சொன்னதில்லை, குறிப்பிட்டதில்லை.

    பதிலளிநீக்கு
  5. முத்துமாலை திட்டம் பற்றிய பதிவையும் படித்தேன்.
    தாங்கள் சொல்வதெல்லாம் புரிகிறது.
    அமெரிக்கவின் சுயநலமோ இந்தியாவின் பழிவாங்கும் [புலிகளை] குணமோ, எது எப்படியோ ஈழத் தமிழினத்திற்கு ஒருவிடிவு பிறக்காதா என்ற ஆதங்கம்தான் தங்கள் பதிவைப் படித்ததும் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
    நல்லது நடக்கிறதோ இல்லையோ, நடக்கும் என்று நம்புவதில் ஒரு அற்ப சந்தோசம்.
    வேறென்ன?

    பதிலளிநீக்கு
  6. பிரியன் நீங்கள் திமுக-காரராக இருக்கலாம். அதுக்காக ஈழ விசயத்தில் கருணாநிதியை பாராட்ட வேண்டாம். அவர் ஆட்சியில் இருந்த போது தான் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அவர் மக்களை ஏமாற்றிய தந்திரங்களை மறந்துவிடவேண்டாம். இந்தியா எவ்வாறு எப்படி ஆதரித்தது என்ன காரணம் என்று உங்களுக்கு உண்மையாகவே தெரியாதா?

    பதிலளிநீக்கு
  7. குறும்பன்க்கு, குற்றம் சாட்டுபவர்கள் எல்லாம் அதிமுககாரர்களா? உண்மையை பேசினால் அவன் திமுககாரனா. சாி இருந்துவிட்டு போகட்டும். கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது ஆட்சியில் இருந்தது திமுக தானே கேட்கிறிர்கள் நியாயம் தான். மறுப்பதிற்கில்லை. திமுக ஆட்சியில் இருந்து இறங்கியிருந்தால் அல்லது இந்திய ஒன்றிய குடியரசுக்கு தந்த ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தால் போர் நின்றுயிருக்குமா என்ன. அப்படி நீங்கள் நினைத்தால் உலக அரசியலை, இலங்கை அரசியலை புரிந்துக்கொள்ளாதவர்கள். இன்று பலரும் அப்படித்தான் திமுக மீது குற்றம் சாட்டுகிறார்கள். இலங்கை சிங்கள அரசு நடத்திய போர்க்கு இந்தியா மட்டும் ஆதரவு தரவில்லை. இன்று ஈழ மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்ற அமெரிக்கா தேசமும் சிங்களத்துக்கு ஆதரவாக தான் நின்றது. இதேபோல் பல நாடுகள். திமுக என்ன காங்கிரஸ கட்சி நினைத்துயிருந்தால் போரை தள்ளி போட்டுயிருக்கலாமே தவிர நிறுத்தியிருக்க முடியாது. தமிழக மக்களை அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பங்குக்கு அரசியல் செய்து மக்களை முட்டாளாக்கின என்பதை நியாயமான உணர்வோடு பேசுபவர்களிடம் கேட்டு அறிந்துக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. நண்பரே!கேள்வியோடு முடித்து விட்டதால் நீங்கள் மறுமொழி சொல்வதைப் பார்ப்பவர்கள் அதானே என்ற சந்தேக குரல் கொள்வார்கள் என்பதாலும் நமக்கு கலைஞர் மாதிரி நினைவாற்றல் குறைவு என்பதால் காலப்போக்கில் அப்போதைய தி.மு.க ஆட்சி அப்பாவி ஆட்சியென்றும் கூட ஆகி விடும்:)

    மூன்று மணி நேர உண்ணாவிரதம்,மழை ஓய்ந்து விட்டது,தூவானம் மட்டுமே,கனிமொழி மற்றும் ஏனைய ராஜினாம கடிதங்கள்,பதவிக்கு மட்டும் டெல்லி,ஈழத்தமிழருக்கு தொடர் கடிதங்கள் இவையனைத்துக்கும் உச்சமாக வை.கோ,நெடுமாறன் விமான நிலையம் போய்விட்டார்கள் என்பதற்காக பார்வதி அம்மாள் விமானதளத்திலிருந்து திருப்பி விடப்பட்டது அனைத்துமே பாவம் தி.மு.கவால் என்ன செய்திருக்க முடியும்?

    இப்போதைய தனி ஈழம் குரல் அப்போது மத்திய அரசின் நிலைப்பாடே தி.மு.கவின் நிலைப்பாடு.அங்கே போரின் அவலங்கள் நிக்ழும் போது இங்கே பதவிக்கான சண்டைகள் நிக்ழ்ந்தன.தி.மு.கவின் தோல்விக்கு ஊழல் மற்றும் ஏனைய காரணங்கள் இருந்தாலும் கூட ஈழப்பிரச்சினையும் கூட ஒரு முக்கிய காரணம்.அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் சிங்கள் ஆதரவுக்கும் தமிழகத்தின் ஈழம் குரலுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சீனாவின் தலையீடு இலங்கையில் என்ற வலைத்தளங்களின் குரல்களையே இப்போது அமெரிக்காவுக்கும,இந்தியாவும் கூட உணர்கின்றன.

    பதிலளிநீக்கு
  9. இரண்டு பேர் word verification நீக்க சொல்லியும் நீங்கள் கேட்பதாயில்லை.அடுத்த முறை உங்களைக் கண்டால் நிச்சயம் விவேக்கின் எஸ்கேப்:)

    பதிலளிநீக்கு
  10. பிரியன் திமுக ஆட்சியில் இருந்தபோது நடந்த தமிழ் இன படுகொலைகளை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதால் தான் திமுகவை குற்றம் சொல்ல வேண்டியுள்ளது. கடிதம் அனுப்பியது, தந்தி அடித்தது, திமுக மத்திய அமைச்சர்கள் விலகல் கடிதம் (திமுக தலைவரிடம் கொடுத்தது), 3 மணி நேர உண்ணாவிரதம் போன்றவை அம்முயற்சிகள் என்று சொல்லமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். பதவி வாங்குவதற்காக காங்கிரசை வளைய வைத்தவர்கள் தமிழ் இன படு கொலைகளை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதை சொல்லவேண்டியதில்லை. தமிழகத்தில் ஈழ இனபடுகொலைகளை வெளியே தெரியாமல் தடுக்கதான் திமுக நடவடிக்கை எடுத்தது.

    எல்லா நாடுகளும் சிங்களத்தை ஆதரித்தன. ஆனால் இந்தியாவின் பங்கு தான் பெரிது. இந்தியாவின் பங்கு மற்றும் தடையற்ற ஆதரவு இல்லாவிட்டால் இன படுகொலை நடந்திருக்காது. மற்றவர்கள் ஆதரவு கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் அதன் பயன் குறைவு. கடல் கண்காணிப்பு, துப்பு, ரேடார், ஆயுதங்கள், பணம், போர் தந்திரங்கள் வழங்கியது, இன படுகொலையை கண்டுகொள்ளாமல் விட்டது என பலவற்றை சொல்லலாம். இதில் கடல் கண்காணிப்பு, துப்பு, இன படுகொலையை கண்டுகொள்ளாமல் விட்டது போன்றவை முக்கியமானவை.

    திமுக ஆட்சியில் இருந்து இறங்கியிருந்தால் அல்லது இந்திய ஒன்றிய குடியரசுக்கு தந்த ஆதரவை விலக்கிக்கொண்டிருந்தால் போர் நின்றிருக்குமா பல தீவிர திமுக்காரர்களின் கூற்றாக உள்ளது. திமுக ஆட்சியில் இருந்து இறங்கத்தேவையில்லை ஆனால் சிங்களத்துக்கு இந்தியாவின் ஆதரவை தடுக்க அது உதவியிருக்கமே. காங்கிரசு ஆதரவு கொடுக்காவிட்டால் அப்போதைய திமுக அரசு கவிழ்ந்திருக்கும் தான் ஆனால் அது மோசம் இல்லை. இந்திய ஒன்றிய குடியரசு கூட்டணியால் தான் செயல்படுகிறது. கூட்டணி கட்சிகளின் பலம் மத்திய அரசுக்கு தேவையாக இக்காலத்திலும் இது போல் பேசுவது நகைப்புக்குரியது. திரிணாமுல் காங்கிரசை நினைச்சிப்பாருங்க. இந்தியாவின் ஆதரவு இல்லையென்றால் தமிழ் இன படுகொலை நிச்சயமாக தடுக்கப்பட்டிருக்கும் (நடந்திருக்காது).

    வேட்டி துண்டு சொல்லாடலை திமுக காரங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை. நடந்தது என்னன்னா வேட்டி போனாலும் பரவாயில்லை துண்டு தான் முக்கியம் அப்படின்னு இல்ல நடந்துகிட்டாங்க. அதுக்கு உலக இலங்கை இந்திய ... அரசிலை உதாரணம் காட்டி துண்டு தான் முக்கியம் அப்படின்னு சொல்லறது புரிந்து கொள்ளக்கூடியதே.
    தமிழக மக்களை எல்லா கட்சிகளும் முட்டாளாக்குகின்றன என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஈழ ஆதரவு விசயத்தில் மதிமுக (வைகோ)வின் நிலைப்பாடு மற்ற கட்சிகள் போல் அல்ல என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  11. //திமுக ஆட்சியில் இருந்து இறங்கியிருந்தால் அல்லது இந்திய ஒன்றிய குடியரசுக்கு தந்த ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தால் போர் நின்றுயிருக்குமா என்ன. அப்படி நீங்கள் நினைத்தால் உலக அரசியலை, இலங்கை அரசியலை புரிந்துக்கொள்ளாதவர்கள்//

    நூறு வீதமும் உண்மை.

    பதிலளிநீக்கு