திங்கள், ஏப்ரல் 16, 2012

2300க்கு விற்ற மாத்திரை 73ரூபாய்க்கு. –மருத்துவ மோசடி.


உலகில் தற்போது புதிய புதிய நோய்கள் வருகின்றன. பன்றி காய்ச்சால், பறவை காய்ச்சலில் இருந்து புற்றுநோய் உட்பட பல நோய்கள் வருகின்றன. இப்படி நோய்கள் அதிகரிக்க காரணம், நமது உணவு முறை மாற்றம், உலகம் மாறுவதால் நமது வாழ்க்கை முறையும் மாற்றம்மடைகிறது அதனால் நோய்களும் அதிகமாகவே வருகின்றன.

நோய் என்னவோ ஏழை, பணக்காரன் என்ற பேதம்மில்லாமல் வருகிறது. ஆனால் சிகிச்சை என்பது வசதி படைத்;தவர்களால் மட்டும்மே பெற முடிகிறது. ஏழைகளால் அந்நோயோடு வாழ மட்டுமே முடிகிறது. சிகிச்சை பெற முடிவதில்லை. அதற்க்கு காரணம் பெரும்பாலான நோய்களுக்கான டெஸ்ட்டுகள், சிகிச்சைகள், மருந்துகள் உதாரணமாக, கர்ப்பணி பெண்களுக்கான மருந்துகள், குழந்தையில்லாத தம்பதிகளுக்கான மருந்துகள், சர்ஜரிக்கான உபகரணங்கள், மருந்துகளின் விலைகள் அதிகமோ அதிகம். இப்படி அதிக விலை வைத்து விற்பனை செய்து பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளை லாபம்மடைகின்றன.

இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததல்ல. பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறியும், பண கொள்முதலுமே மருந்துகளின் விலை உயர்வுக்கு காரணம். உதாரணத்துக்கு ஜெர்மனியை சேர்ந்த பன்னாட்டு மருந்து கம்பெனியான பேயர் நிறுவனம் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கான மருந்தை தயாரித்து விற்பனை செய்கிறது. இந்தியாவில் 120 மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டியின் விலை 2 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய். (ஒரு மாத்திரையின் விலை ரூபாய் 2366.70.) பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவில் கடைவிரித்து, குறைந்த விலையில் விற்க வேண்டிய மருந்துகளை கொள்ளை லாபத்திற்க்கு விற்கின்றன. இதில், ஏழை மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். உயிர் வாழ தேவையான மருந்தை இப்படி விற்பதை கண்டு பல நாடுகளில் உள்ள சிறிய கம்பெனிகள் குறைந்த விலைக்கு மருந்தை தயாரித்து விற்பனை செய்ய அனுமதி கேட்டும் ஆசிய, ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள ஏழ்மையான நாடுகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி தருவதில்லை. இந்திய அரசும் அனுமதி தராமல் போக்கு காட்டுகின்றன. அதற்கு காரணமாக, காப்புரிமை சட்டத்தை காட்டுகின்ற இந்நாடுகள்.


மருந்து கம்பெனிகள் கண்டுபிடித்த மருந்துகளுக்கும், அவை தயாரிக்கும் மருந்துகளுக்கும் காப்புரிமை தரப்பட்டு வந்தன. இந்தியாவில் 1970ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, ஒரு கம்பெனி ஒரு மருந்தை கண்டறிந்தால் அதற்கு மட்டுமே காப்புரிமை. மற்றப்படி அந்த கம்பெனி தயாரிக்கும் மருந்துக்கெல்லாம் இந்தியாவில் காப்புரிமை தர முடியாது. அம்மருந்தை யார் வேண்டுமானாலும் தயாரித்து விற்கலாம் என காப்புரிமை சட்டத்தை மாற்றியமைத்தார். அதன்படி 1978ல் இந்தியாவில் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் விற்கப்படும் மருந்துகளின் விலையை இதுதான் நிர்ணயிருக்கும். 500க்கும் அதிகமான மருந்துகளின் விலையை கண்காணித்து வந்தது. இதனால் மருந்துகளின் விலை மிக குறைவாகவே இருந்தது. இதனை கண்ட உலக சுகாதார நிறுவனமும் இதை பிற நாடுகளும் செயல்படுத்தலாம் என்றன.

ஆனால் 1995க்கு பின் நிலை தலைகீழாக மாறியது. முதலாளித்துவத்தின் கைகளுக்கு உலகம் செல்ல தொடங்கிய பின் இந்த காப்புரிமை விதியை ஏற்றுக்கொள்ளாமல் உலக அரங்கில் பெரிய லாபியே செய்கின்றன மருந்து கம்பெனிகள். இதனால் இந்தியாவில் மருந்துகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் நிறுவனமும் செயல்பட முடியாமல் தவிக்கிறது. முன்பு 500க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலையை நிர்ணயித்த இந்நிறுவனம் தற்போது 50க்கும் குறைவான மருந்துகளின் விலையை நிhணயித்து கண்காணிக்கிறது. இதனால் இந்தியாவில் பல மருந்துகளின் விலைகள் சமீப ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளன. உலக நாடுகள் பலவற்றிலும் இதே நிலை தான்.

இதனை கவனத்தில் கொண்ட உலக சுகாதார நிறுவனம் மற்றும் காப்புரிமை தரும் நிறுவனமும் இணைந்து 2001 ஆம் ஆண்டு கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்ற உலக வணிக அமைப்புகளின் மாநாட்டில், எந்த நாட்டிலாவது காப்புரிமை காரணமாக உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது அதிக விலைக்கு விற்றால் அம்மருந்தை அறிவுசார் காப்புரீமை என்ற விதியின் கீழ் அந்த நாட்டின் மருந்து கம்பெனிகளே அந்த மருந்தை தயாரிக்க அனுமதி அளிக்கலாம் என்று முடிவுசெய்து அறிவித்தது.

ஆனால் பெரும்பாலான நாடுகளின் அரசுகள் அதை செயல்படுத்தவேயில்லை. சமீபத்தில் அதாவது ஒரு மாதத்திற்க்கு முன்பு, இந்தியாவின் ஐதராபாத் நகரில் உள்ள நேட்கோ ஃபார்மா என்ற மருந்து தயாரிப்பு கம்பெனி கல்லீரல் புற்று நோய்க்கான மருந்தை விற்பனை செய்யும் உரிமையை பெற்றுள்ள ஜெர்மனி கம்பெனி விலையை விட 98 சதவிதம் குறைவாக அதே மருந்தை, அதே தரத்தில் அதே 120 மாத்திரையை வெறும் ருபாய் 8,800க்கு (1 மாத்திரையின் விலை 73.35) விற்பனை செய்ய போராடி அனுமதி பெற்றுள்ளது. இப்படி பல உயிர் காக்கும் மருந்துகளை குறைந்த மதிப்பில் விற்பனை செய்ய அனுமதி வழங்க முடியும். ஆனால் அதனை செய்ய இந்திய அதிகார மையம் முன்வருவதில்லை. காரணம் பணம் பணம்.

பன்னாட்டு மருந்து கம்பெனிகள் அந்த அளவுக்கு பணத்தால் அதிகார தலைமைகளை குளிப்பாட்டுகின்றன. இதனால் அவர்களுக்கு ஏற்றாற்போல் செயல்படுகின்றனர். இதனால் உயிர் காக்கும் மருந்துகள் உட்பட பல மருந்துகள் இப்போது விலை அதிகமாகி வருகின்றன. பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் மோசடிகளை கண்டித்தும், இந்திய ஆளும் அரசியல்வாதிகளின் சுயநலத்தை கண்டித்தும், மருந்துகளின் விலையை குறைக்க வேண்டியும், காப்புரிமை பெற்று அதன் காலம் முடியும் தருவாயில் உள்ள மருந்துகளை இனி எல்லா கம்பெனிகளும் தயாரிக்கும் வகையில் கட்டாய தயாரிப்பு அனுமதி வழங்க வேண்டும் என கேட்கின்றனர். ஆனால் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு அதனை சட்டைசெய்ய மறுக்கிறது. அரசின் முடிவை கண்டித்து பல தன்னார்வ அமைப்புகள் போராடி வருகின்றன. நாமும் முடிந்த அளவுக்கு அவர்களோடு கைகோர்த்து போராடுவோம்.

3 கருத்துகள்: