திங்கள், மே 19, 2014

திமுகவில் மாற்றம் தேவை. மக்களை நோக்கி பயணப்படுங்கள்.




2014 நாடாளமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக தோல்வியை சந்தித்துள்ளது. தனித்து நின்ற ஆளும் அதிமுக கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சாதி கட்சியாக உள்ள பாமக கூட ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு வங்கியே இல்லாத பி.ஜே.பி ஒரு கூட்டணியை உருவாக்கி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தை பல முறை ஆண்ட திமுக ஓரே ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. திமுகவுக்கு இது புதியது ஒன்றுமல்ல. கடந்த காலங்களில் பலமுறை இதே நிலையை திமுக சந்தித்துள்ளது. அப்போது தார்மீக பொறுப்பேற்று திமுக தலைவரோ, பொதுச்செயலாளரோ, பொருளாளரோ பதவி விலகவில்லை. ஆனால் இந்த தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று திமுக பொருளாளரும், கட்சியின் அடுத்த தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்து திமுக தலைவர் கலைஞரிடம் கடிதம் தந்துள்ளதாக கூறப்படுகிறது. வேட்பாளர் தேர்வு, பிரச்சார யுக்தி போன்றவற்றை முன்னின்று செய்ததால் தன் ராஜினாமா முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் முடிவை தலைவர் ஏற்கட்டும், ஏற்காமல் போகட்டும்.

எனக்கு தெரிந்து இந்த முடிவை எடுக்க வேண்டியது திமுகவின் மாவட்ட நிர்வாகிகள் தான். திமுக மாவட்ட செயலாளர்கள் தங்களது பணியை இந்த தேர்தலில் ஒழுங்காக செய்தார்களா என கேட்டால் நிச்சயமாக கிடையாது. ஆளும் கட்சியை கண்டு பயந்தனர் என்பதே உண்மை. மாவட்ட செயலாளர்கள் மட்டுமல்ல நகர, ஒ.செ கூட பயந்து தேர்தல் பணியை செய்யவில்லை. இதற்கு காரணம் அவர்கள் சேர்த்துவைத்துள்ள சொத்துகளை காப்பாற்றிக்கொள்ள, தங்கள் மீதுள்ள பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்ள, தங்களது தொழில்கள் பிரச்சனை இல்லாமல் நடக்க ஆளும் அதிமுகவை கண்டு பம்மினார்கள்.

திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கான பணிகளை ஆளும்கட்சியை எதிர்த்து தொண்டர்கள், நிர்வாகிகள் ஒரு காலத்தில் செய்தார்கள், கட்சியை வளர்த்தார்கள். ஆனால் தற்போதைய நிர்வாகிகள் ஆட்சியில் இருந்தபோதும் மக்கள் நலனில் கவனம் செலுத்தவில்லை, கட்சி பணிகளையும் செய்யவில்லை. ஆட்சியில் இல்லாத போதும் அதேநிலை தான். ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, பைனான்ஸ், கல்வி வியாபாரம் என தங்களது தொழில்களில் கவனம் செலுத்துகின்றனர். இதில் வரும் பிரச்சனைகளில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளவே கட்சியில் இருக்கிறார்களே தவிர கட்சி வளர்ச்சி பெற வேண்டும் என்றோ, மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என தற்போதைய திமுக நிர்வாகிகள் செயல்படவில்லை.

தற்போது பொறுப்பில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகள் மேல்மட்ட நிர்வாகிகளை மிரட்டுகிறார்கள் அந்தளவுக்கு கட்சி நிர்வாகம் உள்ளது. கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட தலைமையின் பேச்சை கேட்பதில்லை. தான்தோன்றி தனமாக நடந்துக்கொள்கிறார்கள். நாங்களே கட்சி என்கிறார்கள். மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர்களாகிவிட்டார்கள். ந.செ, ஓ.செ குறுநில மன்னர்களின் தளபதிகளாக உள்ளார்கள். திமுகவின் நிர்வாகிகள் யாரும் மக்களுடன் நெருக்கமாகயில்லை. ஏசி கார்கள், ஏசி அறைகள் என சொகுசாக கட்சி அலுவலகங்களில் அமர்ந்துக்கொண்டு கட்சியை நடத்துகிறார்கள். கட்சி தொண்டனே இவர்களை காண வேண்டும்மென்றால் 2 அடுக்கு ஜால்ராக்களை தாண்டி செல்ல வேண்டும் என்ற நிலையில் தான் பெரும்பாலான கட்சி நிர்வாகிகளின் அலுவலகங்கள், இல்லங்கள் உள்ளது. கட்சிக்காரனுக்கே அந்த நிலை என்றால் பொதுமக்களின் நிலையை நினைத்துபாருங்கள்.

2011 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின் இளைஞர் அணிக்கு நிர்வாகிகள் தேர்வு செய்தார் ஸ்டாலின். அவர்கள் யார்? தற்போதும் கட்சியில் கோலோச்சும் பிரமுகர்களின் பிள்ளைகள். புதிய இளம் பெண்கள், இளைஞர்கள் கட்சிக்குள் வரவில்லை. கொஞ்ச நஞ்ச புதிய முகங்கள் 95 சதவிதம் பேரை பதவிக்கு கொண்டுவரவில்லை. இளைஞர் அணி பதவிகளிலும் வாரிசு நடைமுறையே மாவட்டம், நகரம், ஒன்றிய பகுதிகளில் அதிகமாக உள்ளது. இவைகளை மாற்ற வேண்டும். கட்சியில் புது ரத்தம் பாய்ச்ச வேண்டும், பணத்துக்கு, வாரிசுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் களத்தில் இறங்கி உழைப்பவனுக்கு பதவி தர வேண்டும். நிர்வாகிகள் மக்களோடு நெருங்கி உறவாட வேண்டும்.

திமுகவின் சட்ட திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். மா.செ அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். துணை செயலாளர் பதவிகளை அதிகரிக்க வேண்டும். மாவட்டங்களை பிரித்து புதிய மா.செகளை நியமிக்க வேண்டும். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் போது பணத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் மக்கள் செல்வாக்கு உள்ளவர்களாக இருக்க வேண்டும், மக்களுடன் நெருங்கி பழகும் நபராக இருக்க வேண்டும். மக்களிடம் நல்ல பெயர் உள்ளவர்களுக்கு தேர்தல் களத்தில் சீட் தரும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். 



நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்னை ஒன்றும் செய்ய முடியாது என திமிறாக திரியும் நிர்வாகிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும். பிரச்சனையில் சிக்கும் நிர்வாகிகள் உண்மையில் தவறு செய்திருந்தால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் அவர்கள் செல்லாக்காசுகள் என்பதை உணர்த்த வேண்டும். கட்சி தான் அவர்களுக்கு பாதுகாப்பே தவிர அவர்கள் கட்சிக்கு பாதுகாப்பல்ல.

மாவட்ட அளவில் உள்ள கட்சியின் தொண்டரணி, இளைஞரணி, மகளிரணி, ஆதிதிராவிடர் நலக்குழு, நெசவாளர் அணி, தொ.மு.ச, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணியில் இருப்பவர்கள் கட்சி வரலாற்றை, தியாகத்தை அறிந்திருக்கவில்லை. தங்கள் அணி எப்போது உருவாக்கப்பட்டது என்ற தகவல் கூட தெரியாமல் உள்ளார்கள். இதுப்பற்றி முதலில் நிர்வாகிகள் தெரிந்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள கட்சிகளில் கொள்கையுள்ள கட்சியென்றால் அது திமுக தான். ஆனால், திராவிட இயக்க கொள்கை பற்றி நிர்வாகிகளே அறிந்திருக்கவில்லை. இடஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்கள் தான் தற்போது இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். இன்றைய படித்த இளைஞர்களுக்கு, படிக்கும் இளைஞர்கள் 80 சதவிதம் பேர் இடஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்கள். ஆனால் அவர்கள் தான் இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறார்கள். திமுகவில் உள்ள இன்றைய இளைஞரணியினருக்கு இட ஒதுக்கீட்டுக்காக போராடும் இயக்கம், தமிழத்தில் இடஒதுக்கீடு தந்த இயக்கம் என்பது கூட தெரிந்திருக்கவில்லை.

செய்திதாள்களை படித்துவிட்டு திமுக மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை நம்புகிறார்கள் தொண்டர்கள். மீடியா திமுக மீது காட்டும் செய்தி வன்முறை பற்றி அறியாமல் இருக்கிறார்கள். திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலடி தர முடியாமல் உள்ளார்கள். இதற்கு காரணம் திமுக வரலாறு, தியாகம், செயல்திட்டம் தெரியாமல் இருப்பதே.

இன்று இளைஞர்கள், பெண்களிடம் அதிகம் வெறுப்பை சம்பாதிக்கும் கட்சியாக திமுக உள்ளது. அந்த நிலை மாற வேண்டும். அப்போது தான் திமுக சரிவில் இருந்து மீள முடியும். ஜெவின் தவறுகளால் ஆட்சியை பிடிக்கும் நிலையை எப்போதும் எதிர்பார்த்துக்கொண்டு கூட்டணிக்கு அலையக்கூடாது. இன்றைய இளைய சமுதாயத்தினரிடத்தில் பெரும் சக்தியாக வளர வேண்டும். அதை செய்யவில்லை என்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வந்த நிலை திமுகவுக்கு எதிர்காலத்தில் வந்துவிடும் ஜாக்கிரதை.

3 கருத்துகள்:

  1. வணக்கம்
    சரியாக சொன்னீர்கள்.... இருந்தாலும் மக்களின் தீர்ப்பு. சரியாகத்தான் கொடுத்தார்கள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் பீனிக்ஸ் மாதிரி வரும்

    பதிலளிநீக்கு
  3. மக்களின் தீர்ப்பு. சரியாகத்தான்

    பதிலளிநீக்கு