12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டது.
2013 – 2014 கல்வியாண்டில் தேர்வு எழுதிய மாணவ – மாணவிகளில் 8,21,671
எழுதியுள்ளனர். இதில் 7,44,698 பேர் தேர்வாகியுள்ளனர். 90.6 சதவிதமாக உள்ளது. திருவண்ணாமலை
மாவட்டம் தேர்வு எழுதிய 25,367 பேரில் 18,874 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
74.4 சதவிதம் பெற்று தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத்தில் கடைசி
மாவட்டம் என்ற பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
இந்த முறை மட்டுமல்ல கடந்த காலங்களிலும் இதே நிலையில் தான்
இந்த மாவட்டம் உள்ளது.
2010 – 2011ல் தேர்வு எழுதியவர்கள் 24,424 பேர், தேர்ச்சி
பெற்றவர்கள் 18,692 பேர். தேர்ச்சி பெறாதவர்கள் 5,732 பேர். 76.53 சதவிதம்.
2011 – 2012ல் தேர்வு எழுதியவர்கள் 25,252 பேர், தேர்ச்சி
பெற்றவர்கள் 19,591 பேர். தேர்ச்சி பெறாதவர்கள் 5,661 பேர். 77.58 சதவிதம்.
2012 – 2013ல் தேர்வு எழுதியவர்கள் 26,425 பேர், தேர்ச்சி
பெற்றவர்கள் 18,474 பேர். தேர்ச்சி பெறாதவர்கள் 7,951 பேர். 69.91 சதவிதம்.
இதில் இன்னேன்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. கடந்த 2012 –
2013ல் தேர்வு எழுதியவர்களை விட இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்கள் குறைவு. கடந்த
ஆண்டு 26,425 பேர் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 25,367 பேர் தான் தேர்வு
எழுதியுள்ளார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1058 பேர் குறைவு என்பதை கவனிக்க
வேண்டும்.
என்ன பிரச்சனை ?, யாரால் தேர்வு சதவிதம் குறைகிறது ?.
ஆசிரியர்
ஆசிரியைகள்.
திருவண்ணாமலை மாவட்டம் முழுக்க முழுக்க கிராமங்களை
உள்ளடக்கிய மாவட்டம். திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யார் போன்ற நகர பகுதிகள்
இருந்தாலும் இவைகள் அளவில் வெகு சிறியது. இதுதான் இந்த ஆசிரியர்களுக்கு சவுகரியமாக
உள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு இவர்கள் பணியாற்ற
செல்வதேயில்லை. அது தங்களுக்கு இழுக்கு என நினைக்கிறார்கள். அதனால் இடமாறுதல்
வாங்கிக்கொண்டு நகரம் அல்லது அதன் அருகில் உள்ள பகுதிகளில் வேலை பார்க்கவே விரும்புகின்றனர்.
அதற்கு ஏற்றாற்போல் ஆயிரங்களை செலவ செய்து இடமாறுதல் பெறுகிறார்கள்.
அதையும் மீறி ஜவ்வாதுமலை, மேல்செங்கம், தானிப்பாடி,
மாவட்டத்தின் எல்லையில் உள்ள வந்தவாசி, செய்யார் பகுதிகளுக்கு பணி நியம்
செய்யப்பட்டால் ஆசிரியர் – ஆசிரியைகள் செல்வதேயில்லை. தங்களுக்கு பதில் அந்த பகுதியில் ஆசிரியர்
பயிற்சி முடித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்களை தங்களுக்கு பதில் நியமித்து 5
ஆயிரம் தந்துவிடுகின்றனர். வாரத்துக்கு ஒருமுறை சென்று வருகை பதிவேட்டில் மொத்தமாக
கையெழுத்துவிட்டு வந்துவிடுகிறார்கள். அப்படியும் இல்லையா. தலைமை ஆசிரியருடன்
அல்லது அங்குள்ள பிற ஆசிரியருடன் ஒப்பந்தம். நீ ஒரு வாரம், நான் ஒரு வாரம் என லீவு
எடுத்துக்கொள்வது ஆனால் வருகை பதிவு முழுவதும் கையெழுத்துடுவது என வாழ்கின்றனர்.
இவர்களை சி.இ.ஒ, டி.இ.இ.ஓ கேட்டால் அவர்கள் மீது ஏதாவது குற்றம் சொல்லி கொடி பிடிப்பது,
போராட்டம் நடத்துவது.
இதுப்பற்றி ஆசிரியர் தரப்பினரிடம் பேசினால், பல
பள்ளிகளில் கணக்கு, இயற்பியல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. அதனால்
அந்தப்பாடத்தை நடத்தாததால் பசங்க பெயிலாகறாங்க என்கிறார்கள். அப்படியென்றால்
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என போராட்டம் நடத்த வேண்டியதுதானே. 6 மாதத்துக்கு
ஒருமுறை சம்பளம் பற்றவில்லை, டி.ஏ வரவில்லை, அரியர் போடவில்லை என போராட்டம்
நடத்தும் ஆசிரியர் அமைப்புகள் பள்ளிகளில் தேவையான ஆசிரியர்களை நியமியுங்கள் என
போராட்டம் நடத்துங்களேன் ஏன் நடத்துவதில்லை. காரணம் சுயநலம். படிச்சா என்கென்ன
படிக்காட்டி எனக்கென்ன எனக்கு சம்பளம் வருது என அரசு பள்ளி ஆசிரியர்கள் சென்று
விடுகிறார்கள். பாதிக்கப்படுவது என்னவோ மாணவ – மாணவிகள் தான்.
ஆசிரியர்கள் திருந்த வழி. முதலில் அவர்களுக்கான
சம்பளத்தில் கை வைக்க வேண்டும். நிச்சயமாக இப்போது ஆசிரியர்கள் வாங்கும் சம்பளம்
வெகு அதிகம். தனியார் பள்ளி ஆசிரியர்களை பாருங்கள் 5 ஆயிரத்துக்கும் 10
ஆயிரத்துக்கும் ஸ்பெஷல் க்ளாஸ் வரை எடுக்கிறார்கள். அவர்களும் தான்
உழைக்கிறார்கள். மாணவன் தேர்ச்சி பெறவில்லையெனில் சம்மந்தப்பட்ட ஆசிரியரை உண்டு
இல்லையென செய்துவிடுகிறார்கள். இதை அரசு அதிகாரிகளால் செய்ய முடிவதில்லை அதனால்
வரும் பிரச்சனை.
ஆசிரியர்கள் மட்டும் தான் காரணம்மா என்றால் இல்லை
பெற்றோர்களும் அவர்களின் பிள்ளைகளுக்கும் பங்கு உண்டு.
15 வருடத்துக்கு முன்பு தன் மகளை பள்ளியில்
ஆசிரியரிடம் ஒப்படைக்கும் போது, படிக்கல எதிர்த்து பேசறான்னா கண்ணு ரெண்டையும்
விட்டுட்டு தோலை உறிச்சி எடுத்துடுங்க சார் எனச்சொல்லி ஒப்படைத்துவிட்டு
வருவார்கள். இன்றோ பள்ளியில் இருந்து வரும் பையன் அப்பா சார் திட்டினார்ப்பா
எனச்சொன்னால் ஏன் திட்டனாரு என விசாரிப்பதில்லை உடனே வாத்தியாருடன் சண்டை போட படை
பரிவாரங்களுடன் கிளம்பிவிடுகிறார்கள்.
அரசாங்கமும் அதற்கு ஏற்றாற்போல் பையனை திட்டினால்,
அடித்தால் தண்டனை என சட்டம் இயற்றி வைத்துள்ளது. இதை சில மாணவர்கள் எந்தளவுக்கு
தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றால் ஆசிரியர் ஆசிரியைகளை சாதி
ரீதியாக, பாலியல் ரீதியாக மிரட்டுவது. எதிர்த்தால் அடிச்சார், திட்டினார் என
புகார் தருவதில் போய் நிற்கிறது. இதனால் பையனை அடிக்கவோ, திட்டவோ பயந்துக்கொண்டு
எப்படியாவது கெட்டுப்போ என விட்டுவிடுகின்றனர் ஆசிரியர்கள்.
அதோடு, படிக்கும் காலத்தில் சினிமா நடிகர் நடிகைக்கு
பேனர் வைப்பது, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு தினங்களுக்கு போஸ்டர் அடிப்பது,
டாஸ்மாக் பக்கம் ஒதுங்குவது, இரவு 12 மணி வரை ஊர் சுற்றுவது, செல்போனில் எந்த
நேரமும் பேசிக்கொண்டு இருப்பது என பள்ளி படிக்கும் காலத்திலேயே தடம் மாறுகின்றனர்.
இதை தன் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் கேட்பதில்லை.
வீட்டுக்கு அடங்காத பையன் ஊருக்கு அடங்குவான்
என்பார்கள் கிராமங்களில். ஆனால் ஊருக்கும் அடங்குவதில்லை. ஊர் பெரியவர்கள் யாராவது
கேட்டால் வயது வித்தியாசம்மில்லாமல் வீட்டுக்கே சென்று திட்டுவது, மிரட்டுவது என
சினிமாவை பார்த்து சீரழிந்துள்ளார்கள். அதையும் மீறி தப்பு செய்யும் மாணவர்களை
படிக்கற வயசுல என்னடாயிது என யாராவது நாலு அடிப்போட்டடால் என் பையனை அடிக்க நீ
யாரு என அப்பன், ஆத்தாவில் இருந்து வெளியூரில் உள்ள சொந்தக்காரன் வரை கட்டையை
தூக்கிக்கொண்டு வந்து விடுகிறார்கள். இதனால் ஊரில் இருப்பவர்களும் எக்கேடு கெட்டு
போகட்டும் என தான் உண்டு, தன் வேலை உண்டு என போய்விடுகிறார்கள்.
இப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் யாரும்மே பொறுப்புயில்லாமல் உள்ளார்கள் என்பதே என் குற்றச்சாட்டு.
மாவட்டத்தை முதல் 5 இடங்களுக்குள் கொண்டு வர
வேண்டும்மென்றால் ஆசிரியர்கள் மட்டுமல்ல பெற்றோர்கள், பிள்ளைகள் ஒத்தொழைக்க
வேண்டும். தனியார் பள்ளிகள் குறைந்த அரசு பள்ளிகள் நிறைந்த தென்மாவட்டங்கள்,
டெல்டா மாவட்டங்கள் வெகுவாய் தேர்ச்சி பெறுகின்றன. அங்கு இருப்பவர்களும்
ஆசிரியர்கள் தான், இதே போன்ற மக்கள் தான் வாழ்கிறார்கள். அவர்கள் தங்களது பொறுப்பு
உணர்ந்து நடப்பதை போல நாமும் இங்கு நடந்துக்கொண்டு சுயநலத்தை தூக்கி போட்டுவிட்டு
பொது நலத்தோடு உழைத்தால் வெற்றி பெற முடியும்.........
வணக்கம்
பதிலளிநீக்குதகவலை மிக நன்றாக கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-