ஊடகங்கள் மட்டுமல்ல நாமும்
அரசியல்வாதிகளை பற்றி மோசமாக கமெண்ட் செய்வது என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. ஊரில்
நடக்கும் எல்லா தப்புக்கும் அரசியல்வாதிகளே காரணம் என்ற குற்றம்சாட்டுகிறோம். என்னிடம்
அரசியல்வாதிகள் தப்பானவர்களா எனக்கேட்டால் இருக்கலாம், இல்லாமல்
போகலாம் என பாலமன் சாப்பையா பட்டிமன்ற தீர்ப்பு போல்
நழுவிக்கொள்ள விரும்பவில்லை. நேரடியாகவே பதில் சொல்கிறேன். தப்பானவர்கள் தான்.
அவர்கள் தப்பானவர்கள் எனச்சொன்னப்பின் எதற்காக அதன்பின் பேச வேண்டும்
என நீங்கள் கேட்கலாம். பொறுமையா படியுங்கள். தப்பு செய்தவனை விட
தப்பு செய்ய தூண்டியவனை தான் முதல் குற்றவாளி என்கிறது சட்டம்.
அப்படி பார்த்தால் அரசியல்வாதியை தப்பு செய்ய தூண்டிய, தூண்டும் இந்த சமூகமும்,
மக்களும் தான் முதல் குற்றவாளி.
சமூகமும், நானும் எப்படி குற்றவாளியாவோம் என கேட்கலாம்.
ஒரு வார்டு
கவுன்சிலர்க்கு நிற்கும் வேட்பாளர் நல்லவரா, கெட்டவரா என பார்ப்பதில்லை. எவ்வளவு
காசு தருவார், அவர் எந்த சாதி, எந்த மதம் என்று தான் பார்த்து வாக்களிக்க பழகிவிட்டார் இந்த சமூகத்தில் வாழும் மக்கள். வாக்காளன் வேட்பாளரிடம் என் வார்டுக்கு, என் ஊருக்கு, என் தொகுதிக்கு இது
வேண்டும் என கேட்பதில்லை. எனக்கு என்ன செய்வாய், உனக்கு ஓட்டு போடுவதால் எனக்கு என்ன லாபம் என கேட்கும் குறுகிய மனநிலைக்கு
வந்துவிட்டது இந்த சமூகம்.
அரசியலுக்கு வரும் ஒரு நேர்மையான நபரை மக்கள் ஊக்குவிப்பதில்லை.
சமீபத்திய நாடாளமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளில் உள்ள பணக்கார, பெரும்
முதலாளிகளின் பினாமிகள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்களோடு ஒவ்வொரு தொகுதியிலும் கட்சிகள் சாராத பொதுமக்களில்
இருந்து ஒருவர் சுயேட்சை வேட்பாளராக நின்றுள்ளார். அரசியல்வாதிகளை திட்டும் எத்தனை
பேர் இந்த சுயேட்சைகளுக்கு வாக்களித்துள்ளார்கள் என பார்த்தால் ஏமாற்றம் தான்
மிஞ்சும். இப்போது மட்டுமல்ல கடந்தகால வரலாறும் அப்படித்தான். மக்களுக்காக உழைத்த
காமராஜர் உட்பட பலர் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள் என்பதே எதார்த்தம்.
வாக்கு கேட்டு
வரும் வேட்பாளரிடம், காசு வாங்காமல் ஆரத்தி எடுப்பதில்லை, காசு வாங்காமல் ஓட்டு போடுவதில்லை ?.
பக்கத்து
தெருவில், பக்கத்து வீட்டில் காசு தந்துவிட்டு இவன் வீட்டை தாண்டி சென்றுவிட்டாலே ஏன் எனக்கு
காசு தரவில்லை என அரசியல்வாதியின் வீட்டுக்கு சென்று சண்டைப்போடும் நிலைக்கு தான்
இன்றைய சமூக மக்கள் உள்ளார்கள். ஆனால் இவர்கள் தான் அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறான், கொள்ளையடிக்கிறான் என பேசுகிறார்கள்.
ஏன் அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள் ?, லஞ்சம்
வாங்குகிறார்கள் ?.
ஒரு அரசியல்வாதி
ஒரு ஓட்டுக்கு 100 ரூபாய் தருகிறார். ஒரு வாக்காளனுக்கு வேண்டுமானால் அது ஒரு
சாதாரண தொகையாக இருக்கலாம். வேட்பாளர்க்கு அது பெரிய தொகை. காரணம் அவர் ஒரு
வேட்பாளர்க்கு மட்டும் காசு தரவில்லை. அவரது வார்டு அ நரகம் அ தொகுதிக்கு
தருகிறார். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 2 லட்சம் வாக்குகள் உள்ளது என்றால்
அனைவருக்கும் பணம் தர வேண்டும். ஒரு ஓட்டுக்கு
100 ரூபாய் என்றால் 2 லட்சம் ஓட்டுக்கு 2 கோடி செலவாகிறது. அதன்பின்
செலவுகள் இருக்கிறது. இன்று ஒருவர் எம்.எல்.ஏ தேர்தலில்
நிற்க வேண்டும் என்றால் மிக மிக குறைந்த பட்சம் 5 கோடி தேவை. இப்படி செலவு
செய்யப்படும் தொகையை வட்டியுடன் திருப்பி எடுத்துதான் ஆக வேண்டும். அதற்காக தான்
அந்த அரசியல்வாதி பொறுப்புக்கு வந்தவுடன் ஊழல் செய்கிறார்,
கமிஷன் வாங்கிறார்.
வருவாய்த்துறை,
காவல்துறை, கல்வித்துறை, மின்சார வாரியம் என அனைத்து அரசு துறை ஊழியர்களும் தங்கள்
இடமாறுதலுக்கு அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளிடம் மன்றாடுகள் அவர்கள் பணத்தை
வாங்கிக்கொண்டு இடம்மாறுதல் செய்து தருகிறார்கள். பணம் செலவு செய்து
போஸ்டிங்க்கு வந்த அதிகாரி அந்த பணத்தை எடுக்க பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குகிறார்,
வேலைகளில் ஊழல் செய்கிறார். ஒரு அதிகாரி என்னிடம் லஞ்சம் எப்படி வாங்கலாம், நான் ஓட்டு போட்டு பதவிக்கு வந்த எம்.எல்.ஏ,
எம்.பி, சேர்மன், தலைவர் என்ன செய்யறாங்க. இதை தடுக்ககூடாதா என கேட்கிறார்கள்.
எப்படி தடுக்க
முடியும். எந்த அரசியல்வாதியும் இங்கு சேவை செய்ய வரவில்லை என்பதை புரிந்துக்கொள்ள
வேண்டும். நீங்கள் ஓட்டுக்கு பணம் வாங்கினீர்கள். பணம் தந்த அரசியல்வாதி
சம்பாதிக்க அனைத்திலும் பணம் பார்க்கிறார். லஞ்சம் தந்துவிட்டு இடமாறுதலில் வந்த அதிகாரி செலவு செய்த பணத்தை
எடுக்க செய்ய வேண்டிய வேலைக்கு லஞ்சம் பெறுகிறார்கள். இது ஒரு
சக்கரம். இந்த சக்கரத்தில் சிக்கி சீரழிவது மக்கள் தான். ஊழல்
என்கிற சக்கரத்தை நிறுத்த வேண்டும்மென்றால் முதலில் மக்கள் மாற்றத்தை நோக்கி நகர வேண்டும்.
நியாயமான, ஒழுக்கமான அரசியல்வாதியை
நீங்கள் தேர்வு செய்ய தேவையில்லை. ஏதோ ஒரு குப்பன், சுப்பனுக்கு
காசு வாங்காமல் நீங்கள் வாக்களியுங்கள். அவர் வெற்றி பெறட்டும்.
அதன்பின் நீங்கள், ஏதோ ஒரு சான்றிதழ் வாங்க அரசு அலுவலகத்துக்கு செல்லுங்கள். ஒரு சான்றிதழ்க்காக
மனு அளிக்கிறிர்கள் அவர் செய்து தராமல் காலம் தாழ்த்துகிறாறா ? அரசு அலுவலகங்களில்
மற்றவரை முந்திக்கொண்டு, பொய்யான தகவல்களை தந்து சான்றிதழ் பெறுவதை முதலில் தவிறுங்கள்.
முந்தி வாங்கி செல்ல முயலும் போது தான் ஊழல் உருவாகிறது.
குறிப்பிட்ட நாட்களுக்கு பின்
சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் மனு என்னவானது என கேள்வி கேளுங்கள், முறையான பதில் இல்லையா
மேல் அதிகாரியிடம் முறையிடுங்கள். நடவடிக்கையில்லையா? லஞ்சம் கேட்கிறாறா நீங்கள் தேர்வு
செய்த பிரதிநிதியிடம் முறையிடுங்கள். அப்போது அந்த பிரதிநிதி உங்கள்
குமுறலை கேட்டுதானே ஆக வேண்டும். மக்களுக்காக களம்மிறங்கி வந்துதானே ஆகவேண்டும்.
வரவில்லையெனில் அவரை முற்றுகையிடுங்கள். தப்பு செய்த அதிகாரியை முற்றுகையிடுங்கள்.
இப்படி செய்ய எத்தனை பேருக்கு
தைரியம்மிருக்கிறது. எனக்கு புள்ளை குட்டி இருக்கிறது?, நான் ஏன் எனக்கு சம்மந்தமில்லாத
விவகாரத்தில் தலையிட வேண்டும் என கேட்பவர்களா நீங்கள்?.
இன்று உனக்காக எதற்கு இடதுசாரியினரும்,
மனித உரிமை அமைப்பினர், சில தனிமனிதர்கள் போராடிக்கொண்டு இருக்க வேண்டும். ஏன் அவர்களுக்கு
குடும்பம்மில்லையா?. ஆங்கிலேயனிடம் இந்தியா அடிமைப்பட்டு கிடந்தபோது,
சிவில் தேர்வில் வெற்றி பெற்று உயர் அதிகாரியாக பணியாற்றிய சுபாஷ்சந்திர போஸ் இந்திய
மக்கள் துயரப்படுவதை கண்டு எனக்கென்ன என ஒதுங்கி போகவில்லை. காந்தி வழக்கறிஞராக இருந்திருக்கலாம்
களத்திற்க்கு வந்து எதற்காக போராடினார்? மக்களுக்காக தூக்கு கயிற்றை முத்தமிட்டவன்
பகத்சிங்கும் அவனது தோழர்களும். தனக்கு தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டவன்
வாஞ்சிநாதன். பகுத்தறிவு பெற வேண்டும் என தன் மக்களுக்காக சாகும் வரை மூத்திர பையுடன்
அலைந்தவன் வெண்தாடி கிழவன் பெரியார். மருத்துவர்களே தொட தயங்கும் தொழு நோயாளிகளை அரவணைத்தவர்
அன்னை தெரஸா. இவர்கள் எனக்கேன் வந்தது என ஓதுங்கி சென்றிருந்தால் இந்தியா சுதந்திரம்
அடைந்திருக்காது. இன்று நாம் பேசிக்கொண்டு இருக்கமாட்டோம்.
அநீதியை கண்டு நீ
பொங்கினால் தான் தவறுகள் குறையும். நீ என்றால் நீ மட்டுமல்ல இந்த சமூகம். உன்னிடம் எழுச்சி வராத வரையில் எதையும் மாற்ற முடியாது.
உன் வாக்கை
50க்கும் 100க்கும் விற்ற பின் அந்த அரசியல்வாதியை
விமர்சிக்க என்ன தகுதியிருக்கிறது. மற்றவர்களை விமர்சிக்கும் முன்
முதலில் அதற்கு நாம் தகுதியானவர் தானா என யோசித்து விமர்சியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக