செவ்வாய், பிப்ரவரி 19, 2013

இத்தாலியில் இருந்து மீண்டும் ஒரு ஊழல் பூகம்பம்.

மாடல் விமானம்.


30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இத்தாலியின் பெயர் இந்தியாவில் ஊழல் விவகாரத்தில் செய்தியாகியுள்ளது. இந்திய அரசு ஜனாதிபதி, பிரதமர், இராணுவ தளபதி என மிக மிக முக்கிய இந்திய அரசின் பிரமுகர்கள் பயணம் செய்ய விமானங்கள் வாங்க முடிவு செய்தது. அதற்கான உலகலாவிய டெண்டர் பாதுகாப்பு பிரிவால் விடப்பட்டது. டெண்டரில் விதிமுறைகளுக்கு உட்பட்டுயிருந்த ரஷ்யா, இத்தாலி, அமெரிக்காவை சேர்ந்த 3 நிறுவனங்கள் போட்டி போட்டன. இதில் இத்தாலியின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட் என்ற நிறுவனம் ஒப்பந்தத்தை பெற்றது. இந்த நிறுவனத்தில் இத்தாலிய அரசும் ஒரு பங்குதாரார். 12 விமானங்களுக்கான மதிப்பு 3546 கோடி. இதில் 10 பர்சன்ட் விமானத்தை வாங்க முடிவு செய்யும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு லஞ்சமாக தரப்பட்டுள்ளது.

கடந்த 2012 பிப்ரவரி மாதம்மே லஞ்சம் தந்து ஒப்பந்தத்தை பெற்ற நிறுவனம் என இத்தாலிய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டது. இது இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய போது அந்த செய்தி ஆதாரமற்றது என விசாரணையில் தெரியவந்துள்ளதாக அறிவித்தது இந்திய அரசு.

இத்தாலிய அரசு மக்களை ஏமாற்ற விரும்பாமல் மூடி மறைக்காமல், பத்திரிக்கை செய்தியின் விரிவான விசாரணை நடத்தியது. அதில் ஒப்பந்தம் பெற 370 கோடி என டீல் பேசப்பட்டுள்ளது. அதில் 200 கோடி தரப்பட்டுவிட்டது என்பதை கண்டறிந்தது. 2013 பிப்ரவரி மாதம் லஞ்சம் தந்ததாக அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தலைவர் கியுசெப் ஒர்சி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் புரோக்கராக செயல்பட்டு பணத்தை ‘கை’ மாற்றிவிட்டவர் லண்டனில் குடியிருக்கும் கிறிஸ்டியன் மைக்கல். இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளது இத்தாலிய புலனாய்வுத்துறை. நீதிமன்றத்தில் இவர்கள் யாருக்கு லஞ்சம் தந்தார்கள் என்பதை குறிப்பிட்டுள்ளது.

அதில் இந்திய விமான்படையின் தலைமை தளபதியாக அப்போது இருந்த எஸ்.பி.தியாகிக்கு அவரது உறவினர்கள் ஜீலி, தோக்ஸா, சந்தீப்தியாகி மூலம் தரப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 200 கோடி தரப்பட்டு விட்டன என 64 பக்க குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இப்போதும் இந்திய அரசு, இத்தாலிய அரசு தகவல்கள் எதுவும் தரவில்லை என்கிறது. எஸ்.பி. தியாகி பொய்யான குற்றச்சாட்டு என்கிறார். எதிர்கட்சிகள், மீடீயாக்களின் நெருக்கடியில் மத்தியரசு சி.பி.ஐ அதிகாரிகள் குழு ஒன்றை விசாரணை விபரங்களை கேட்டு இத்தாலிக்கு அனுப்பியுள்ளது.

முன்பு போபர்ஸ் நிறுவனத்தில் இருந்து ஆயுதம் வாங்கியபோது கமிஷன் கைமாறியுள்ளது என செய்தி வந்தபோது இந்தியாவில் பெரும் சலசலப்பு எழுந்தது. அப்போதும் இதேபோல் தான் இந்திய அரசு சொன்னது. முழுமையான விசாரணையில் உண்மை வெளிவந்தது.

ஓட்டாவியோ குவ்ரோச்சி இந்த பெயர் இந்திய அரசியல் தெரிந்தவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. இந்தியாவை ஆளும் இத்தாலியில் பிறந்த சோனியாவின் உறவினர், நண்பர் என அறியப்பட்டவர். சோனியாவின் கணவர் ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது 1984ல் இராணுவத்துக்காக இத்தாலியை சேர்ந்த போபர்ஸ் நிறுவனத்திடம்மிருந்து பீரங்கிகள் வாங்கியதில் 64 கோடி லஞ்சம் வாங்கியதாக ராஜிவ்காந்தி மீது குற்றச்சாட்டு எழுந்து. இதனை எழுப்பியவர் அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் வி.பி.சிங் அவர்கள். அதோடு சுவீடன் நாட்டை சேர்ந்த ஒரு பன்னாட்டு வானொலி ஊழல் நடந்ததை செய்தியாக வெளியிட்டது. இந்தியாவின் சி.பி.ஐ இவ்வழக்கை விசாரிக்க தொடங்கியது. இதனால் 1989ல் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் புறக்கணித்தனர். லஞ்சம் வாங்கிய பணத்தை ராஜிவ்காந்தி சுவிஸ் வங்கியில் போட்டு வைத்த ஆதாரங்கள் எல்லாம் வெளியாகின. ராஜிவ்காந்தி மறைந்தும் போனார்.

ஆனால் வழக்கு மட்டும் முடிக்கப்படவில்லை. இதில் புரோக்கராக செயல்பட்ட ஒட்டாவியோ குவ்ரோச்சி சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டு, அவரது வங்கி கணக்குகள், பாஸ்போட் போன்றவை முடக்கப்பட்டன. பின் அவர் சிறையில் இருந்து வெளிவந்து வழக்கு நடக்கும்போதே தன்னுடைய இத்தாலி நாட்டுக்கு போய்விட்டார். சட்ட அமைச்சக ஆசியுடன் வங்கி கணக்கை ரிலிஸ் செய்துக்கொண்டார். தற்போது அந்த போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கு கடலின் ஆழத்துக்கு போய்விட்டன.

இப்போது ஹெலிகாப்டர் வாங்குவதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக இப்போதும் விற்ற நாடான இத்தாலி தான் கண்டறிந்துள்ளதே தவிர வாங்கிய நாடான இந்தியா அப்படி நடைபெறவேயில்லை என சாதித்தது. உண்மைகள் வெளிவரத்தொடங்கியப்பின் சமாளிக்க தொடங்கியுள்ளது. ஆக காலவெள்ளத்தில் இந்த வழக்கும் காற்றில் கரையும் கரும்புகையை போக கரையும்மே தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை.

ஏன் எனில் இங்கு அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் - அதிகாரிகள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப்போல. அதனால் ஒருவருக்கொருவர் விட்டுதரப்போவதில்லை.

வாழ்க அதிகார வர்கத்துக்கான அரசாங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக