வியாழன், ஜனவரி 06, 2022

தினம் ஒரு வரலாறு - ஜனவரி 6 – புதுவை விடுதலை வீரர் அரங்கசாமி நாயக்கர்.



இந்தியாவுக்கு இங்கிலாந்திடம்மிருந்து விடுதலை வேண்டும்மென இந்தியர்கள் போராடியபோது, பிரெஞ்ச் நாட்டிடம்மிருந்து புதுவைக்கு விடுதலை வேண்டும்மென புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் பல தலைவர்கள் போராடினார்கள். அதில் முக்கியமானவர் அரங்கசாமி.

புதுவை மாநிலத்தில் உள்ள திருநள்ளாறு அருகிலுள்ள இளையான்குடியில் 1884 பிப்ரவரி 6ந்தேதி பிறந்து வாழ்ந்தவர் அரங்கசாமி. இவரது பூர்வீகம் காஞ்சிபுரம் என கூறப்படுகிறது. அங்கிருந்து இடம் பெயர்ந்து இவரது முன்னோர்கள் புதுவை மாநிலத்தில் தற்போதுள்ள காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் குடியேறியுள்ளார்கள். அந்த பகுதியின் பெரும் நிலக்கிழாராக இருந்துள்ளார். பெரும் நிலக்கிழாராக இருந்தாலும் கூலி விவசாய தொழிலாளர்களுக்கு வேலைக்கு ஏற்ற சரியான கூலி கிடைக்க வேண்டும்மென உழவரங்கம் என்கிற அமைப்பினை தொடங்கி நடத்தினார்.

சுயமரியாதை இயக்கங்களோடு இணைந்து செயலாற்றினார். அனைத்து சாதியினரும் சமம் என்பதில் குறியாக இருந்தவர் தன் வீட்டில் சமபந்தி உணவு என்பதை கடைப்பிடித்தார். 1937ல் உருவாக்கப்பட்ட மகாஜனசபையின் காரைக்கால் தலைவராக செயல்பட்டார். ஆலயங்களில் தலித் மக்கள் நுழைவதற்கு இருந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆலய பிரவேச போராட்டங்கள் நடத்தி கைதானார். திருநள்ளாறு நகரமன்ற தலைவராக மக்களால் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருந்தார். 1934ல் காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தார், அப்படியே பிரெஞ்ச் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த காரைக்கால்க்கு ஜனவரி 16ந்தேதி வந்தார். தனது ஹரிஜன இயக்கத்தின் மூலம் சுற்றுப்பணம் வந்தவருக்கு காரைக்கால் ஹரிஜன் சங்கத்தின் சார்பில் ஆயிரம் ரூபாய் நன்கொடை தந்தார் அரங்கசாமி.

பொதுவுடமை இயக்க தலைவராக இருந்த ஜீவாவை விடுதலைப்போராட்ட காலத்தில் தமிழகத்தில் ஆங்கிலேய காவல்துறை தேடியபோது பிரெஞ்ச் கட்டுப்பாட்டில் இருந்த காரைக்காலில் ரகசியமாக தங்கவைத்து அடைக்கலம் தந்துள்ளார் அரங்கசாமி. பிரெஞ்ச் இந்திய குடியரசு பத்திரிக்கை என்கிற தலைப்பில் ஒரு செய்தி இதழை நண்பர்களோடு இணைந்து நடத்தினார் அரங்கசாமி. அவர் அந்த இதழில் எழுதிய கட்டுரைகள் பிற்காலத்தில் அவரது நண்பர்கள் தொகுத்து குடியரசு தமிழ் ஆரம்ப இலக்கணம் என்கிற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.

60வது வயது நெருங்கிய சமயத்தில் 1943 ஜனவரி 6ந்தேதி மறைந்தார். அரங்கசாமி இறந்து 10 ஆண்டுகளுக்கு பின் 1954 நவம்பர் 1ந்தேதி புதுவை விடுதலைப்பெற்று இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக