புதன், ஏப்ரல் 05, 2017

ஏப்ரல் 3. – செல்போன் உருவான தினம்

அறிந்துக்கொள்வோம்!
தினம் ஒரு வரலாறு!

 ஏப்ரல் 3. – செல்போன் உருவான தினம்

உலகத்தையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்த சாதனம் எதுவென்றால் அது செல்போன் என்கிற கைபேசி. சிறுசு முதல் பெருசு வரை நீக்கமற நிறைந்திருக்கிறது அந்த சாதனம். இந்தியர்கள் சாப்பாடு கூட இல்லாமல் இருந்துவிடுவார்கள் செல்போன் இல்லாமல் இருக்கமாட்டார்கள் போல. அந்தளவுக்கு உடலோடு ஒட்டிய உறுப்பு போல் மாறிவிட்டது செல்போன். உலகத்தில் 10 பில்லியன் பேரிடம் செல்போன் உள்ளதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 

உலகத்தில் முதன் முதலில் தொலைபேசியை கைப்பிடித்தது கிராகாம்பெல். ஆனால், ஒயர் இல்லாத அலைவரிசை மூலம் இயங்கும் பொதுமக்களுக்கான செல்போன் என்கிற கைபேசியை உருவாக்கி அறிமுகப்படுத்தியவர் மார்டின் கூப்பர். இவர் செல்போனின் தந்தை என டெக்னாலஜி உலகத்தால் அழைக்கப்படுபவர். 

செல்போன் உருவான விதம் ?. 

அமெரிக்காவின் சிக்காக்கோ மாகாணத்தில் 1928 டிசம்பர் 26ந்தேதி பிறந்தவர் மார்டின் கூப்பர் . அந்த காலத்திலேயே மின்னனு பொறியியல் உயர் பட்டம் பெற்று மோட்டரோலா நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது அந்த நிறுவனம் இராணுவத்துக்கு பெரிய பெரிய அளவிலான தொலைதொடர்பு சாதனங்களை தயாரித்து தந்துக்கொண்டு இருந்த நிறுவனங்களில் இதுவும் ஒன்று. வேலைக்கு சேர்ந்தபின் தனது நிறுவனத்தில் தயாரிக்கப்படும் அந்த சாதனத்தை பார்த்தவர், அதையே சிறிய அளவில் தயாரித்தால் என்ன என்கிற எண்ணம் உருவாக அதை செயலாக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டார். சில ஆண்டுகள் இடைவெளியில் அதை உருவாக்கியும்விட்டார். அந்த முதல் செல்போனை கைபேசி எனச்சொல்ல கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. செங்கல் எனச்சொல்லலாம். காரணம் அது அந்த வடிவத்தில், அந்த எடையில் தான் இருந்தது. 1 கிலோ எடை, செவ்வக வடிவில் இருந்த அந்த செல்போனில் 30 நிமிடம் பேச 10 மணி நேரம் சார்ஜ் போடப்பட்டுள்ளது.



1973 ஏப்ரல் 3ந்தேதி பொறியாளர் மார்டின் கூப்பர் தான் முதன் முதலில் பொதுமக்களுக்கான கைபேசியில் பேசி நன்றாக செயல்படுவதை உறுதி செய்தார். முதலாம் தலைமுறை அலைவரிசையான அந்த செல்போன் ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் 1979ல் மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். 1983ல் அமெரிக்கா அதன்பின் ஆஸ்த்திரேலியா போன்ற நாட்டு மக்கள் பயன்படுத்தினர். அந்த கைபேசி பெரும் பணக்காரர்கள் மட்டும் தான் ஆரம்பத்தில் பயன்படுத்தியுள்ளனர். இப்போது சொல்லவே வேண்டாம் நமக்கே தெரியும். 

அதற்கடுத்து 2ஜி, 3ஜி, 4ஜி என வந்து நிற்கிறது. உலகத்துக்கு முதல் முதலாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கான செல்போனை அறிமுகப்படுத்திய கூப்பர் பிற்காலத்தில் மோட்டரோலா கம்பெனியின் ஆய்வாக தலைமை பொறியாளர், துணை தலைவர் வரை உயர்ந்தவர், பின்னர் சொந்தமாக தொலைதொடர்பு நிறுவனத்தை தொடங்கி அதை நிர்வகித்து வருகிறார்.

-    ராஜ்ப்ரியன்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக