வெள்ளி, பிப்ரவரி 21, 2014

7 பேர் விடுதலை. அதிரடியா ? அரசியலா ?. - கொஞ்சம் ஆராயுங்கள்.இராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், இராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெ முடிவெடுத்து 110வது விதியின் கீழ் அறிவித்ததை கண்டதும் தமிழ் அமைப்புகள், திராவிட அமைப்புகள், இளைய சமுதாயத்தினரை போல நான் கூட ஜெவை வெகுவாக பாராட்டினேன். ஈழத்தாய் திடீரென கடவுள் அவதாரம் எடுத்துள்ளாரே இதில் ஏதாவது உள்குத்து இருக்குமா என பின்பே யோசிக்க வைத்தது. நிச்சயம் உள்குத்தோடு தான் செய்துள்ளார் என்பது அடுத்தடுத்த தகவல்கள் மூலம் நேரடியாகவே அறிய முடிந்தது. அதில் பலவற்றை வெளிப்படையாக பேச முடியாது என்றாலும். ஓரளவுக்கு விஷயத்தை பொது வெளியில் பகிர்ந்துக்கொள்ளலாம் என்பதாலே இந்த கட்டுரை.

இராஜிவ்காந்தி கொலை வழக்கு தடா சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது. நீதிமன்றத்திலும் மூடிய அறையில் விசாரணை நடத்தி தீர்ப்பு எழுதப்பட்டது. ஒரு கொலை வழக்கில் உலகத்திலேயே முதல் முறையாக அதுவும் ஒரு ஜனநாயக நாட்டில் 26 பேருக்கு தூக்கு என அறிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டில் பலர் விடுதலை செய்யப்பட்டார்கள். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு தூக்கு என்றும், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2009ல் நளினியின் தூக்கு தண்டனை அரசின் கருணையால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மீதி மூவரின் கருணை மனு கிடப்பில் போட்டது மத்தியரசு.

ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நால்வரும் 14 ஆண்டுகள் சிறையில் அடைப்பட்டுவிட்டோம். அதனால் எங்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் என கடந்த 8 ஆண்டுகளாக அரசு மற்றும் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி வந்தனர். மத்திய – மாநில அரசுகள் அதற்கு தடை போட்டு வந்தன. 2011ல் மூவரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்தார். இதனால் மூவரையும் தூக்கில் போட ஜெ அரசின் உத்தரவுப்படி சிறைத்துறை ஏற்பாடுகள் செய்தபோது தமிழ், திராவிட அமைப்புகள், சில கட்சிகள் மற்றும் மாணவர்களிடம் தூக்குக்கு எதிராக பெரும் எழுச்சி ஏற்பட்டது. செங்கொடி என்ற இளம்பெண் தீ குளித்ததால் ‘மனம் மாறிய’ முதல்வர் ஜெ சட்டமன்றத்தில் தூக்கு தண்டனையை தடுக்க தீர்மானம் இயற்றினார். அதேபோல் மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர். வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கருணை மனு நீண்ட காலம் கிடப்பில் இருந்ததால் இவர்களை தூக்கில் போட முடியாது என நீதியரசர் சதாசிவம் தலைமையிலான அமர்வு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. அதோடு, இவர்கள் வழக்கை குற்றவியல் நடைமுறை சட்டப்படி ஆராய்ந்து விடுதலை பற்றி தமிழக அரசே முடிவு செய்யலாம், இதற்காக நீதிமன்றம் வர தேவையில்லை என அறிவித்தது.

தீர்ப்பு மூவருக்கு சாதகமான தீர்ப்பு தான். இதை சரியாக பயன்டுத்தியிருந்தால் முதலில் மூன்று பேரும் பின் 4 பேர் என 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுயிருக்கலாம். ஆனால் முதல்வர் ஜெ அப்படி செய்யவில்லை. அவசரம் அவசரமாக தீர்ப்பு வந்த 24 மணி நேரத்துக்குள் 110 விதியின் கீழ் விடுதலை என்ற செய்தியை சட்டமன்றத்தில் படிக்க குறிப்பு தயார் செய்து அறிவித்துவிட்டார்.


அரசியல் இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது. தீர்ப்பு பற்றிய விவரத்தை தமிழகரசு வாங்கி நிர்வாக ரீதியாக நடவடிக்கை பற்றி ஆராய்ந்து முடிவு எடுத்திருக்க வேண்டும். தீர்ப்பின் நகல் கிடைக்கும் முன்பே அவசரம் அவசரமாக அறிவித்தார்.

அதேபோல் விடுதலை செய்வதற்கு அரசு நடைமுறைப்படி இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி. அமைச்சரவையில் விடுதலை செய்தவற்கான தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பி உத்தரவு பெற்று விடுதலை செய்வது. இரண்டாவது வழி, இது சி.பி.ஐ விசாரணை செய்த வழக்கு என்பதால் மத்திய உள்துறையிடம் கருத்து கேட்டு அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில் ஜெ தேர்வு செய்தது இரண்டாவது வழி. முதல் வழிமுறையின்படி நடந்துக்கொண்டுயிருந்தால் இந்த நிமிடம் அவர்கள் விடுதலையாகி இருப்பார்கள். இரண்டாவது வழியை ஜெ தேர்வு செய்ததன் நோக்கம் இதில் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக தான். அரசியல் செய்யப்பட்டுவிட்டது.

உச்சநீதிமன்றம் தண்டனை குறைப்பு என தீர்ப்பு தந்ததால் அதிருப்தியான மத்திய காங்கிரஸ் அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யும் முடிவில் இருந்தது. ஜெவும் அதை யூகித்தே விடுதலை செய்யறன் என நாம் சொல்லுவோம், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு அதை எதிர்க்கும். விடுதலை செய்கிறேன் என்ற நம் ஆட்சிக்கு தமிழ் மக்கள் மற்றும் உணர்வாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கலாம் அதன் வழியாக ஓட்டு வாங்க பயன்படுத்திக்கலாம் என்ற முடிவிலேயே ஜெ அறிவித்து மத்தியரசுக்கு 3 நாள் கெடு விதித்தார். மத்தியரசும் தடை கேட்டு உச்சநீதிமன்றம் சென்றது. நடைமுறை பின்பற்றாமல் எப்படி அறிவிக்கலாம் என விளக்கம் கேட்டு தடை விதித்துவிட்டது உச்சநீதிமன்றமும். ஜெ நினைத்ததை போல் தமிழர்கள் காங்கிரஸ்சை கரித்துக்கொட்டுகிறாhகள். ஜெ பாராட்டு மழையில் நனைகிறார்.

இதன்பின்னால் இன்னும் சில காரணங்களும் உள்ளன. ஆனாலும் போதும்.

ஜெ அரசியல் செய்யவில்லை என்பவர்கள் கவனத்துக்கு………. சில தகவல்கள்.


வேலூர் சிறையில் உள்ள நளினி உடல் நிலை சரியில்லாத என் தந்தையை பார்த்துக்கொள்ள ஒரு மாதம் பரேல் தேவை என சிறைத்துறைக்கு கோரிக்கை மனு தந்தார். ஜெ அரசு அதை நிராகரித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 15 தினங்களுக்கு முன்பு சிறைத்துறை கண்காணிப்பாளர், அவரை வெளியே விட முடியாது எனச்சொல்லிவிட்டார். சட்டம் ஒழுங்கு காவல்துறை அறிக்கை, அவர் வெளியே சென்றால் சட்டம் ஒழுங்கு சீர் குலைவு ஏற்படும், பாதுகாப்பு தர முடியாது அதனால் வெளியே விட முடியாது என கடமையாக ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இன்னமும் தீர்ப்பு வராமல் நீதிமன்றத்தில் உள்ளது. சிறையில் உள்ளவர்கள் மீது தாயுள்ளம் கொண்டவர் அரசு பரேல் மனுவை எதற்கு கடுமையாக எதிர்க்க வேண்டும் ?. விடுதலை செய்யப்படுவார்கள் என ஜெ அறிவித்துள்ளார். விடுதலை செய்யப்படுதால் சட்டம் ஒழுங்கு சீர் குலைவு ஏற்படாதா?.

முதல்வருக்கு மனமாற்றம் ஏற்பட்டுயிருக்க கூடாதா என வாதாட நினைக்கும் நடுநிலைவாதிகளே கேள்வி கேட்கும் முன் இதை நினைவில் கொள்ளுங்கள்.

காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த இராஜிவ்காந்தி தான் படுகொலை செய்யப்பட்டார். இராஜிவ்காந்தியின் மனைவி சோனியா, மகன் ராகுல் தான் தற்போது மத்திய அரசை நடத்துகிறார்கள். குணவரை, தந்தையை கொலை செய்த குற்றவாளிகள் விடுதலையாக காங்கிரஸ் அரசோ, அவரது குடும்பத்தாரோ எப்படி உதவுவார்கள்?. உதவமாட்டார்கள் என்பது தெருவில் ஓடும் ஐந்தறிவு கொண்ட நாய்க்கு கூட தெரியும். இது தமிழகத்தை ஆளும் முதல்வருக்கு தெரியாதா?. தெரியும். தெரிந்தும் ஏன் தமிழக அரசுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தவில்லை?. பயன்படுத்த கூடாது என்பதால் தான் பயன்படுத்தவில்லை. உண்மையில் அவர்களது விடுதலை மீது அக்கறை கொண்டவராக இருந்தால் மாநில அரசுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியிருப்பார். பயன்படுத்தவில்லை என்பதில் இருந்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

பசியால் உயிர் ஊசலாடும் நிலையில் இருப்பவனுக்கு ஒருவன் ரொட்டி துண்டு தந்தால் அவன் கடவுளாகிவிடுவான். அவன் எதற்காக ரொட்டி துண்டு தருகிறான் என மனம் ஆராய்வதில்லை. அதுதான் தற்போது நடக்கிறது. 

குறிப்பு.

மத்தியரசு, உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றுவிட்டது. அதோடு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றியதை ஏற்றுக்கொள்ளாமல் மறுவிசாரணை கேட்டுள்ளது. தற்போது தமிழக முதல்வர் ஜெவுக்கும் - காங்கிரஸ்சின் மத்திய அரசுக்கும் ஈகோ மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் 7 பேரை அதிரடியாக விடுதலை செய்வார் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக