சோபாவில் அமர்ந்திருந்த தேவராஜ், என்னம்மா வேலை எப்படியிருக்கு என தன் மகள் சுதாவிடம் கேட்டதும் நல்ல ஸ்கூல்ப்பா, எல்லாரும் நல்ல பழகறாங்கப்பா.
நீ வேலைக்கு போறது எனக்கு சுத்தமா புடிக்கல. ஏதோ நீ ஆசைப்பட்டியேன்னு தான் அனுப்பி வைக்கறன்.
வீட்ல உட்கார்ந்துக்கிட்டு சும்மா டீவி பாத்துக்கிட்டே இருக்கறது புடிக்கலன்னு தான் வேலைக்கு போறன்ப்பா.
உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அத செய். நீ வேலைக்கு போய் தான் சம்பாதிக்கனும்கிற அவசியம்மில்ல. உனக்கு புடிக்கலன்னா நின்னுடு.
சரிப்பா.
சரிம்மா உனக்கு வண்டி புடிச்சியிருக்கா.
நல்லாயிருக்குப்பா. கறுப்பு கலரா இருந்தா நல்லாயிருந்திருக்கும்.
நீ சொன்னதும் கறுப்பு கலர் தான் கேட்டன். அவன் அது வர்றதுக்கு இரண்டு மாசமாகும்ன்னிட்டான் அதான் சரின்னு ஒயிட் கலர் எடுத்துட்டன். மாத்தறதாயிருந்தா மாத்திக்கலாம்மா.
வேணாம்ப்பா.
போகும்போதும், வரும்போதும் ரோட்ல பொருமையா போம்மா.
சரிப்பா.
சாப்பிட்டியா?
இன்னைக்கு சன்டே தானேப்பா. நான் அப்பறம்மா சாப்பிட்டுக்கறன்.
டைம்க்கு சாப்பிடும்மா. வீணா பழச நெனைச்சி மனச போட்டு கஸ்டப்படுத்திக்காத.
அதெல்லாம் ஒன்னும்மில்லப்பா நீங்க வந்து சாப்பிடுங்க என அழைத்தபடி சோபாவில் அமர்ந்திருந்த சுதா எழ தாத்தா என அழைத்தபடி ஓடி வந்தாள் ஏழு வயது சுவாதி.
வாடா வாடா என் கண்ணு என முகத்தில் புன்னகையுடன் தன் பேத்தியை தூக்கி மடியில் உட்கார வைத்து முத்தமிட்டவர். எங்க போயிருந்திங்கடா செல்லம்?.
சினிமாவுக்கு தாத்தா.
என்ன படத்துக்கு போனிங்க ?
தீ… தீ….. ஆங் தீல ஓடு குமாரு என சொல்ல சுதாவின் அண்ணன் ரமேஷ் சிரித்தபடி அப்பாவின் எதிரில் அமர அவனது மனைவி ரம்யா நின்றபடி சுவாதியின் பதிலை கேட்டு சிரித்தாள்.
வாயாடி எப்படி தப்பு தப்பா சொல்றா பாருங்கப்பா என சுதா அவளை முறைக்க.
நீ தான் வாயாடி அத்தை எனச்சொல்ல
நானா நானா என சுதா அடிக்க கையை ஓங்க தாத்தாவை கட்டி பிடித்துக்கொண்டாள்.
சாப்பிட்டிங்களா என தன் மகனிடமும், மருமகளை பார்த்து தேவராஜ் கேட்க
இன்னும் இல்லப்பா.
சரி வாங்க சேர்ந்தே சாப்பிடலாம்.
நீங்க சாப்பிடுங்கப்பா. நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடறன்.
தாத்தா நானும் சாப்பிட வர்றன் தாத்தா.
நீ வாடா செல்லம் என கொஞ்சியபடி டைனிங் டேபிளுக்கு செல்ல ரமேஷ்சும், ரம்யாவும் தங்களது அறைக்கு சென்றனர்.
உங்கம்மா எங்க சுதா.
பக்கத்து வீட்டு ஆன்டி வீட்டுக்கு போயிருக்காங்கப்பா.
எப்ப பாத்தாலும் கதை பேசறதே உங்கம்மாவுக்கு பொழப்பா போச்சி என்றபடி சாப்பிட அமர்ந்தார். பேத்திக்கு ஊட்டி விட்டபடி தானும் சாப்பிட்டு முடிக்கவும் ரமேஷ் குளித்து உடை மாற்றிக்கொண்டு சாப்பிட வரவும் சரியாக இருந்தது. பின்னாடியே ரம்யாவும் வந்தாள். தேவராஜ் அந்தயிடத்தை விட்டு நகர்ந்ததும் ரம்யா, ரம்யாவிடம் நீயும் வந்துயிருக்கலாம் படம் சூப்பராயிருந்துச்சி.
நீங்க வேற அண்ணி. புதுசா க்ளாஸ் எடுக்கறன்னா கோர்வையா வரல. அதுக்கு ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டு, நோட்ஸ் எடுத்துக்கிட்டு இருக்கன்.
நீ வேலைக்கு போகனும்மா என ரமேஷ் சாப்பிட்டபடி கேட்க.
உன் பொண்டாட்டி போறத கேள்வி கேட்க மாட்டேன்கிறயே.
நான் வேணாம்ன்னு தான் சொன்னன். அப்பாத்தான் கவர்மெண்ட் வேலை. பேங்க் உத்தியோகம்ன்னு ஏதோதோ சொல்லி போக சொல்லிட்டாரு. இவளுக்கு அது ப்ளஸ்சாகி இப்ப நில்லுடீன்னா நிக்கமாட்டேன்கிறா.
நான் வேலைக்கு போறதும் ஒன்னு சும்மாயிருக்கறதும் ஒன்னு தான். நான் மேனேஜரான இந்த ஆறு மாசமா இவருக்கு பர்சனல் லோன் தா, அவருக்கு ஹவுசிங் லோன் தான்னு ஒரே டார்ச்சர் பண்றாரு உங்கண்ணன்.
நீ தந்துட்டு தான் மறுவேலை பாக்கறியாயென்ன என ரமேஷ் கேட்க.
நீங்க அனுப்பற ஆளுங்கள பாத்தா ஒருத்தரும் திருப்பி கட்டறவங்க மாதிரியே தெரியல.
கட்டமாட்டாங்கன்னு நீயா நினைச்சா எப்படி ?.
நீ கேளு சுதா, நாலு நாளைக்கு முன்னாடி இவர் பெயரை சொல்லிக்கிட்டு ஒருத்தர் வந்து சார் அனுப்பி வச்சாரு. ஹவுசிங் லோன் தருவிங்க வாங்கி வரச்சொன்னாருன்னு கேட்டதும் செம டென்ஷனாகிட்டன். போய் அவரை வரச்சொல்லுங்கன்னு சொல்லி அனுப்பனன். அன்னைக்கு மட்டும் இவர் வந்திருந்தாரு. லெப்ட் அன் ரைட் வாங்கியிருப்பன்.
எப்படிண்ணா இன்ஜினியரிங் படிச்ச உன் கூட இப்படி புத்திசாலி ப்ரண்ட்ஸ்களா வச்சியிருக்க என நக்கலடிக்க
அதுயில்லடா, என் ப்ரண்ட் சக்தி புது வீடு கட்ட லோன்க்காக அலைஞ்சிக்கிட்டு இருக்கான். அவன் தன்னோட மச்சானை அனுப்பி பேங்க்குக்கு போ மேனேஜரா பாத்து ரமேஷ் சொன்னாரு, ஹவுசிங் லோன் அப்ளிக்கேஷன் வாங்கி வரச்சொன்னாருன்னு சொல்லு தருவாங்க வாங்கி வாடான்னு சொல்லியிருக்கான். போன புத்திசாலி ஹவுசிங் லோன் வாங்கி வரச்சொன்னாருன்னு கேட்டுயிருக்கான். தப்பு அவன் மேல. இதல நான் ஏதோ தப்பு பண்ண மாதிரி குதிக்கறா. இதுக்கு முன்னாடி இருந்த மேனேஜர், என் பெயரை கேட்டாலே எழுந்து நிப்பாரு அந்தளவுக்கு பிஸ்னஸ் தந்தன். இவ என்னவோ அலட்டிக்கறா. வேலையே தெரியாம பந்தா பண்றா இவ.
ஏது கமிஷன் தந்திங்க அதனால அவர் சலாம் போட்டாரு.
எப்படியோ முடிச்சன். உனக்கு வேணும்னா கேட்டு வாங்கிக்க.
எனக்கு ஒன்னும் வேணாம். உங்க பேரை சொல்லி யாரும் வராமயிருந்தா போதும்.
சாப்பிடற நேரத்தல எதுக்கு சண்டை. சண்டை போடறதாயிருந்தா உங்க ரூம்ல போய் போடுங்க என பொய் கோபத்துடன் சுதா சொன்னதும். இருவரும் அமைதியாக சாப்பிட்டுவிட்டு எழுந்து அவர்களது ரூம்க்கு சென்றனர். அவர்கள் சாப்பிட்ட தட்டை எடுத்து வைத்துவிட்டு சுதா சாப்பிட அமர உள்ளே வந்த காவேரி உங்கப்பா சாப்பிட்டா ?.
ம். நீயும் நானும் தான் சாப்பிடல என்றதும் காவேரி ஒரு தட்டை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தாள். தண்ணீர் டம்பளர் வைக்காம என்ன சாப்பிடறா எனச்சொல்லியடி காவேரி மீண்டும் எழ நீங்க உட்காருங்க அத்தை எனச்சொல்லியபடி கிச்சன்க்குள் சென்ற ரம்யா டம்பளரோடு வந்தாள்.
என்ன படத்துக்கு போனிங்க ?.
தீயா வேலை செய்யனும் குமாரு படத்துக்கு அத்த.
இவளையும் அழைச்சிம் போயிருக்கலாம்மில்ல.
நான் போறப்ப கூப்டன் வரலன்னிட்டா.
வண்டியில உட்கார்ரப்ப நீயும் வாயேன்னு கூப்பிட்டுயிருப்ப என காவேரி கடுப்பாக சொன்னதும் ரம்யா பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
நைட்டே அண்ணீ சொன்னாங்க. நான் தான் வரலன்னு சொன்னம்மா என சுதா சொன்னதும் க்கும் என்றாள் காவேரி.
சிறிது நேரம் அங்கு அமைதி நிலவ. ரம்யா சுதாவுக்கு தெரியாமல் காவேரியின் கையை சீண்டி விட்டு சுதாவுக்கு பின் பக்கமாக போய் கேளுங்க கேளுங்க என சைகை செய்தாள். சாப்பிட்டு முடிக்கட்டும் என காவேரி கண்களாலே சைகை செய்தாள். கை கழுவும் போது சுதா என காவேரி அழைத்ததும் என்னம்மா என்றாள்.
நைட் கேட்டனே என்ன முடிவு செய்துயிருக்க என கேட்டதும் திரும்பி ரம்யாவை முறைத்தாள்.
மதன் தன் அப்பாவுக்கு போன் செய்து ஊருக்கு கிளம்பிக்கிட்டுருக்கன் மதியத்துக்குள்ள வந்துடுவன்ப்பா.
பார்த்து ஜாக்கிரதையா வா.
சரியென்று செல்போன் லைனை கட் செய்தவன் ரஞ்சித்தை அழைத்துக்கொண்டு டூ வீலரில் தன் சொந்த கிராமமான அரசனூரை நோக்கி பறந்தான். 12 மணிக்கெல்லாம் ஊருக்கு போய்விட்டான். மதனின் அப்பா திண்ணையில் அமர்ந்திருந்தார். தாத்தா என்றபடி ரஞ்சித் பைக்கை விட்டு இறங்கி ஓடி அவரை கட்டி பிடித்துக்கொண்டான்.
பழைய காலத்து மாடி வீடு. வீட்டின் முற்றம் முதல் அனைத்தையும் பர்மா தேங்கு தாங்கிக்கொண்டு இருந்தது. விஸ்தாரமான அந்த வீட்டில் மதனின் அப்பா கலிவரதனும், கோதையம்மாள் என்கிற கோதையும் மட்டுமே இருந்தனர். பேரனின் குரல் கேட்டதும் நடக்க முடியவில்லை என போனில் குறைபட்டுக்கொண்ட கோதை ஓட்டமும், நடையுமாக வந்தாள். பாட்டியை பார்த்ததும் ரஞ்சித் அப்படியே தாவினான். பேரனை பிடித்தபடி எப்படிடா இருக்க என தாயின் அன்பு மகனின் மீதே இருந்தது.
நல்லாயிருக்கம்மா.
கால் வலிக்குதுன்ன இப்ப எப்படியிருக்கு.
மருந்து வாங்கி தடவிக்கிட்டு இருக்கன் இப்ப பரவாயில்ல. நீ முதல்ல போய் கை, கால் கழுவிட்டு வந்து சாப்பிடு.
நான் அப்பறம் சாப்பிடறன். நீ குடிக்க தண்ணி எடுத்து வாம்மா என்றபடி உள்ளே நடக்க பேரனை தன் கணவரிடம் தந்துவிட்டு உள்ளே சென்றான் கோதை.
வேலையெல்லாம் எப்படி போகுது என கலிவரதன் கேட்டதும்
நல்லா போய்க்கிட்டு இருக்கு.
அந்த பிரபு, பாண்டியன் எப்படி இருக்கானுங்க.
நல்லாயிருக்காங்க.
கோதை தன் மகனிடம் தண்ணி சொம்பை தந்தபடி, அந்த பிரபு பையன் எப்படிடா இருக்கான்.
நல்லாயிருக்கம்மா.
அவன் பசங்க
நல்லாயிருக்காங்க என்றபோது சமையல்கட்டில் இருந்து குக்கரின் விசில் சத்தம் வர கோதை சமையலறைக்கு சென்றார். நிலத்துக்கா போய்ட்டு வர்றன் என தன் அப்பாவிடம் சொல்லிவிட்டு வெளியே செல்ல முயன்றான்.
நிலத்துக்கு போறவன் இந்த துணியில தான் போவானாடா என கடுப்பான குரலில் கேட்டதும் தன் அறைக்கு சென்று பேன்ட் சர்ட்டை கழட்டிவிட்டு லுங்கி கட்டிக்கொண்டு கிளம்பினான். கலிவரதன் தன் பேரனுடன் விளையாட தொடங்கினார். மதன் தெருவில் இறங்கி நடக்க தொடங்கினான். பத்து வீடு தாண்டியிருப்பான் என்ன மைனரே எப்ப ஊருக்கு வந்த என சைடில் இருந்து குரல் வந்தது. அந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தான். பாக்யராஜ் தன் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தான்.
மைனரு நீயா? நீனாடா ?.
நீ தான் மச்சான்.
கொழுப்புடா உனக்கு. சரி வா நிலத்துக்கா போய்ட்டு வரலாம்.
இப்பத்தான் நெலத்துலயிருந்த வந்தான் நீ போய் வா.
சும்மா துணைக்கு வாடா.
டவுன்லயே இருக்க வேண்டியதானே எதுக்கு ஊரு பக்கம் வந்து உசுர எடுக்கறிங்க என்றபடி எழுந்தவன் உள் பக்கமாக திரும்பி ஏய் இதே வந்துடறன்டீ என கத்திவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் அருகில் வந்தவனிடம் என்னடா இப்படி சலிச்சிக்கற.
ஞாயித்துக்கிழமை மச்சான். நாட்டு கோழி கறி. சூடா, காரத்தோட சாப்பிட்டா ருசியா இருக்கும், நாட்டுகோழி உடம்ப சூடாக்கும் அப்பறம் அத தனிக்க ஆரம்பிக்கனும் என பல்லை காட்டினான்.
பகல்லயே வாடா.
நீ ஏதோ நல்ல புள்ள மாதிரி கேட்கற என்றவனுக்கு பதில் சொல்லாமல் ஒரு வரட்டு புன்னகையை வீசியதும் சுதகரித்தவன் மன்னிச்சிடு மச்சான். அதவிடு ஊர்ல என்ன விசேஷம் என கேட்க பெருசுகளின் அடவாடிகளை சொல்லியபடி வந்தான். மதனின் நிலத்துக்கு வந்திருந்தார்கள். கரும்பு பயிர் வச்சியிருக்காரே வெட்டறதுக்கு ஆள் வருவாங்களாடா ?.
வெட்டி, ஏத்தறது வரை கம்பெனிகாரனே பாத்துக்கறன் அதனால எந்த பிரச்சனையும்மில்ல. அதெல்லாம் கிடக்கட்டும் உங்கப்பா எப்பபாத்தாலும் உன்னைப்பத்தியே தான் பேசறாரு. அவர் சொல்றதத்தான் கேளேண்டா.
எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என மதன் சொல்ல கரும்பு தோட்டத்துக்குள் இருந்து பொங்கிய நெஞ்சோடு, சீமை பசு போல் பார்வதி வெளியே வந்தாள்.
ஏய் மத்தியான நேரத்தல கரும்பு தோட்டத்துக்குள்ளயிருந்த வர்ற என மதன் உரிமையோடு கேட்டான்.
எல்லாம் நீ வந்து தூக்கி விடுவன்னு தான் என டபுள் மீனிங்கில் சொல்ல
எனக்கு நிறைய சோலி கிடக்கு. இதோ இவன் வருவான்.
க்கும். காய்க்கும், பழத்துக்கும் வித்தியாசம் தெரியாத இது வந்து என்ன பண்ண போகுது எனச்சொல்ல கோபமான பாக்யராஜ், கொழுப்புடீ உனக்கு என்றவன் உள்ள என்ன பண்ண அதச்சொல்லு.
மாட்டுக்கு புல்லு புடுங்கி கட்டி வச்சியிருக்கன். தூக்கிவிட ஆள்யில்ல. பேச்சு சத்தம் கேட்டுச்சி வெளியில வந்து கூப்ட்டும் போலாம்ன்னு வந்தன்.
நீ போய் தூக்கிவிட்டுட்டு வாடா என்றதும் பார்வதி முன்னால் நடக்க பாக்யராஜ் பின்னால் சென்றான். ச்சீ கைய எடு என்ற குரல் சன்னமாக கேட்டது. புல் கட்டை தூக்கிக்கொண்டு பார்வதி வெளியே வந்து நான் கிளம்பறன் என மதனிடம் சொல்லிவிட்டு நடந்தாள். அவள என்னடா பண்ண.
ஒன்னும் பண்ணல மச்சான்.
அது சொன்னதுதான் இங்க கேட்டுச்சு. யார் மைனருன்னு இப்ப தெரியுது. அதோட வீட்டுக்காரன் எங்க.
அந்த நாய் இரண்டாவதா ஒன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டான். கோவலத்தல போடான்னு பசங்கள இழுத்துக்கிட்டு ஊரோட வந்துடுச்சி என சொல்லியபடி வந்தான். நெல் வயலுக்கு வந்தோம். அப்படியே சுத்தி பாத்துவிட்டு ஊரை நோக்கி நடந்தோம். பாக்யராஜ் வீடு வந்ததும் வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த பாக்யராஜ் மனைவி எங்களை பார்த்ததும் எழுந்து நின்றது. எப்பண்ணா வந்திங்க ?.
இப்பதாம்மா வந்தன். பசங்க எப்படி இருக்காங்க ?.
நல்லாயிருக்காங்க.
சரி வர்றம்மா ?.
சாப்பிட்டு போங்கண்ணா.
அம்மா சமைச்சி வச்சிட்டு காத்திருப்பாங்க. இன்னோரு நாளைக்கு வந்து சாப்பிடறன். சரிண்ணா. பாக்யராஜ்யிடம் வர்ரண்டா எனச்சொல்லிவிட்டு நகரும் போது அவன் மனைவி பக்கம் திரும்பி, உன் வீட்டுக்காரன் இன்னமும் மைனர் நெனப்புலயே இருக்கான். பாத்து கொஞ்சம் கவனிம்மா.
டேய் நல்லவனே கொஞ்சம் மூடிக்கிட்டு போறயா என கத்தியவனை பார்த்து சிரித்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தேன். வீட்டுக்குள் நுழைந்ததும் முகம் கழுவிட்டு வந்து சாப்பிடுடா என்றார் அம்மா. முகம் கழுவி விட்டு வரும்போது ஊஞ்சலில் பேரனுடன் உட்கார்ந்திருந்தவரை பார்த்து நீங்க சாப்பிட்டிங்களா என கேட்ட மதனிடம் நான் சாப்ட்டுட்டன் நீ சாப்பிடு என்றார். தரையில் சம்மனம் போட்டு அமர்ந்ததும் தட்டு எடுத்து வைத்து பச்சரிசி சாதம், வெள்ளாட்டு கறி குழம்பு என எடுத்து வைத்தார்கள். அம்மாவின் கை பக்குவம் அருமையாக இருந்தது. ரசம் சாப்பிடும் போது அவன் என்ன சாப்பிட்டான்ம்மா.
கறி நாலு துண்டுதாம்ப்பா சாப்பிட்டான். கொஞ்சோண்டு ரசம் சாதம் சாப்பிட்டான் என அம்மா கவலையாக சொன்னதும் போதுமாடா என கேட்டேன்.
வயிறு ரொம்பிடுச்சிப்பா வயிற்றை தட்டி காட்டியபடி.
வாழைப்பழம் இருந்தா தாம்மா என்றதும் உள்ளே சென்று மூன்று பேருக்கும் எடுத்து வந்து தந்தார். கலிவரதன் மடியில் அமர்ந்திருந்த பேரனுக்கு வாழைப்பழத்தை உரித்து ஊட்டிவிட்டுக்கொண்டு இருந்தார். சாப்பிட்ட இடத்தில் இருந்து தள்ளி சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்து பழத்தை சாப்பிட தொடங்கினான் மதன்.
இங்க பார்றா என கலிவரதன் மதனை அழைத்ததும் என்னவென மதன் பார்த்தான். நீ ஒரு துணை வேணாம்ன்னு நினைக்கலாம். ஆனா இவன் சின்ன பையன்.
அதுக்கு என்ன பண்ணனும்கிறிங்க.
சொல்றத கேளுடா.
இரண்டு வருஷமா சொல்றதுத்தான். நீங்க எத்தனை முறை சொன்னாலும் என்னைக்கும் என் முடிவுல எந்த மாற்றமும்மில்ல.
என்னடா பெரிய மயிரு முடிவு. இந்த புள்ளைய அம்மா பாசம் தெரியாம வளர்க்க போறியா ?.
நான் அதிகமாவே பாசத்த காட்டறன்.
நீ காட்டற பாசம் கால் தூசுக்கு சமம். அம்மான்னு ஒருத்தி கூப்பிடறதுக்கு இல்லாம அவன் மனசு என்ன கஸ்டப்படும் தெரியுமா என்றதும் ரஞ்சித்தை பார்த்து கோபமாக உனக்கு அம்மா வேணுமாடா ?.
வேணாம் என தலையாட்டினான்.
போதும்மா. இதான் என் பையன் என பெருமையாக சொன்னதும்.
நீ என்ன லட்சணத்தல புள்ளய வளக்கறன்னு நீ அவன்கிட்ட பேசறதுலயிருந்தே தெரியுது என கோபமாக சொன்னதும் கோதை சமையல் கட்டில் இருந்து வேகமாக வெளியே வந்து தன் கணவரின் அருகே நின்றவள். அவர் சொல்றதத்தான் கொஞ்சம் கேளேம்பா.
என்னால சரியா பாத்துக்க முடியலன்னு சொல்றாருயில்ல. அப்ப நீங்க இரண்டு பேரும் வந்து என்கூட இருந்து இவனை பாத்துக்குங்க.
பெத்த புள்ள நீயே நாங்க சொல்றத கேட்கமாட்டேன்கிற, எடுத்தெறிச்சி பேசற. அப்படியிருக்கும் போது நான் சொல்றத உன் புள்ள எப்படி கேட்பான் என கலிவரதன் கோபமாக கேட்டதும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த மதன் வெறுப்பான குரலில் இப்பயென்ன என்கூட இருக்க முடியாதுயில்ல விடுங்க அவனை நானே பாத்துக்கறன்.
சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கும். இன்னைக்கு உடம்புல தெம்புயிருக்கு ஓடுவ. அவனை பாத்துக்குவ. என்னயமாதிரி வயசானபிறகு என்னப்பண்ணுவங்கறதயும் யோசிச்சிக்க என்றார் கலிவரதன். மதன் அமைதியாக இருக்க மாடு கூட ஒரு முறை அடிச்சா அதுக்கப்பறம் ஒழுங்காயிருக்கும். எருமை மாதிரி என்ன சொன்னாலும் சொரணையில்லாம இருந்தா என்ன அர்த்தம்மோ என்றார் உச்ச கோபத்தில்.
மதன் கோபமாக எழுந்து அறைக்கு சென்றான்.
தொடரும்………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக