வெள்ளி, ஜூலை 26, 2013

பொருளாதார புண்ணாக்குகள்.


இந்தியாவில் கிராமபுறத்தில் ஒரு நாளைக்கு 27 ரூபாய்க்கு மேல், நகரத்தில் 33 ரூபாய்க்கு மேல் சாப்பிடுபவர்கள் அல்லது செலவு செய்பவர்கள் ஏழைகள் இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது திட்டக்குழு. பல கட்சிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளன. 

திட்டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்த்தால் 22 ரூபாய்க்கு அம்மா உணவகத்தில் வேண்டுமானால் கோலி குண்டு சைசில் விற்கப்படும் 22 இட்லிகளை வாங்கி உண்ணலாம் அரை வயிறு நிரம்பும் அவ்வளவே. 

50 காசு டீசல் விலை ஏற்றம் நடைபெற்றால் 5 ரூபாய் தோசையில் விலை உயர்த்தப்படுகிறது. தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவனால் ஒரு வேளை உணவைக்கூட வயிறு நிரம்ப உண்ண முடியாத நிலையில் உள்ளான். அப்படியிருக்க 22 ரூபாய்க்கு மேல் சாப்பிடுபவர்கள் இந்தியாவில் பணக்காரர்கள் என்கிறது இந்த அறிக்கை. 


இதன் முடிவுப்படி பார்த்தால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குறைந்துள்ளார்கள் என சுட்டிக்காட்டுயள்ளார்கள் இந்த பொருளாதார அறிஞர் பெருமக்கள். 

தினமும் இரண்டு இட்லி சாப்பிட்டால் அவன் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளான் என அறிவித்து அதன்படி புள்ளி விபரங்களை தயாரித்தால் இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் யாரும் இல்லை என்பது போலாகிவிடும். 

இந்தியாவின் மக்கள் தொகையில் 22 சதவிதம் தான் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளார்களாம். 2004-2005ல் இது 37 சதவிதமான இருந்தது. தற்போது இது குறைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறது அந்த அறிக்கை. 

2004ல் ஒரு கிலோ அரிசி 20 ரூபாய், இன்று 45 ரூபாயை தாண்டி விற்கிறது. 2004ல் ஒரு கிலோ பருப்பு 50 ரூபாய்க்கு விற்றது இன்று 120 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. 2004ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 34 ரூபாய்க்கு விற்றது இன்று 74 ரூபாய்க்கு விற்கிறது. இப்படி குண்டூசி முதல் விமானம் வரை, கருவேப்பிலை முதல் பீசா வரை விலை உயர்ந்துள்ளது. இதை வைத்து பொருளாதார புலிகள் கணக்கிடமாட்டார்களாம். 

2000த்தில் வைக்கப்பட்ட சாப்பிடுவதற்கான அளவு கோலை வைத்து இன்றைய மக்களின் நிலையை கணக்கிடுவார்களாம். என்னங்கடா உங்க கணக்கீடு. இந்த மயிருக்கு நீங்கள் நாட்டில் ஏழையே இல்லை என அறிவித்து விடுங்களேன். 

உலக சுகாதார நிறுவனம் 2007ல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகில் குழந்தைகள் அதிகளவில் நோஞ்சானாக அதாவது ஊட்டசத்து குறைபாடு உள்ளவர்களாக இருக்கும் நாடுகளில் இந்தியா முதல் ஐந்து இடங்களில் உள்ளதாக குறிப்பிடுகிறது. அதாவது 45 சதவிதம் குழந்தைகள். இந்த நிலை இன்றும் அப்படியேத்தான் உள்ளது. 


படிப்பு தந்துவிட்டால் வறுமை ஒழிந்துவிடும் என்கிறார்கள் ஒரு சாரார். படித்தவர்களை கொண்டு வறுமை ஒழிந்தது என்ற கணிப்பும் ஒரு பக்கம்மிருக்கிறது. படித்துவிட்டால் வறுமை ஒழிந்துவிடும் என்பது கற்பனை. 

இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால் விவசாயத்துக்கு நம் அதிகார வர்க்கம் முக்கியத்துவம் தரவேயில்லை. தொழில்துறைக்கும், கணினி துறைக்கும் அதிகார வர்க்கம் தந்த முக்கியத்துவம் விவசாயத்துக்கு தரவேயில்லை. விவசாயத்தல் லாபம்மில்லாமல் மக்கள் கூலிகளாக கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி நகர்ந்தார்கள். தொழில் வளர்ச்சியின் போது அந்த மக்களை வா வா என தன்னோடு அழைத்துக்கொண்டது. மனித உழைப்பு சுரண்டலுக்கு பின் தொழில்துறையில் ஒரு விதமான வளர்ச்சிக்கு வந்தபின் இயந்திரங்களை கொண்டு பணிகள் செய்ய தொடங்கியபோது கூலிகளாக வந்தவர்கள் மீண்டும் பணியில்லாமல் துரத்தப்படும் நிலை. இவர்களால் மீண்டும் கிராமத்துக்கும் செல்ல முடியவில்லை, இவர்களின் வாரிசுகளாலும் விவசாயத்தை செய்ய முடியவில்லை. உணவுக்கு திண்டாட தொடங்கிவிட்டார்கள். 

நூறு நாள் வேலை என்ற ஒன்றை கொண்டு வந்து மக்களை சோம்பேறிகளாக்கியது தான் இந்திய காங்கிரஸ் அரசு செய்த சாதனை. அதை தவிர ஏழை மக்கள் முன்னேற என்ன திட்டத்தை இந்த அரசாங்கம் செய்துள்ளது. தொழில் துறையின் அத்துமீறல், சுற்றுச்சூழல் மாசுபாடு, அரசாங்கத்தின் திட்டமிடா திட்டங்கள் போன்றவை கொஞ்ச நஞ்ச விவசாயத்தையும் அழித்துவிட்டன. இதனால் கிராமங்களில் வாழ்பவர்களை சோம்பேறிகாக உள்ளனர். இதனால் வறுமையில் வாடும் மக்களின் நிலை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை.

உலக அரங்கில் தன்னை வல்லரசாக காட்டிக்கொள்ள நினைக்கும் இந்திய அதிகார வர்க்கம் உண்மையை மறைத்து பொய்யை அறிக்கை வாயிலாக அவிழ்த்து விடுகிறது. இதனால் உலக வங்கியிடம் தேவையான அளவு கடன் கிடைக்கும். கடனை மக்களின் தலையில் சுமத்தவே இந்த அறிக்கைகள் பயன்படும்மே தவிர ஏழையை ஒரு வேளை உணவை நிம்மதியாக உண்ண வைக்க இந்த புள்ளி விவரங்கள் பயன்படாது. 

முதலாளித்துவ அடிமைகள் நம்மை ஆளும் வரை நாம் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். இது போன்ற அபத்தனமான அறிக்கைகளை படிக்கத்தான் வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக