வியாழன், மே 26, 2011

பத்திரிக்கையுலக பிதாமகன் மரணம்.


சின்னக்குத்தூசி - பத்திரிக்கையுலகின் பிதாமகன். தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக திருமணமே செய்துக்கொள்ளாத மனிதர். வாழ்நாள் முழுவதும் எழுத்து, எழுந்து என இறக்கும்போதும் எழுத்தை பற்றியே எண்ணிய அற்புத மனிதர். துக்கடா பத்திரிக்கையில் வேலை கிடைத்தாலே ஏகபோகமாக அலட்டல் விட்டு, மந்திரிகளையே மிரட்டுபவர்களுக்கு மத்தியில் தமிழகத்தின் முதல்வராக 5 முறையிருந்த கலைஞர் கருணாநிதியுடன் நெருக்கமாகவும், பல அமைச்சர்களை ஆட்டி வைக்கும் வல்லமை இருந்தும் கர்வம், பந்தா போன்றவற்றை தன்னிடம் அண்ட விடாதவர். வேள்ளை வேட்டி சட்டையில் எளிமையாக வாழ்ந்தார்.

பத்திரிகைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே அரசு சார்பில் விட்டுமனை வாங்கும் செய்தியாளர்களுக்கு மத்தியில் சொந்த வீடோ, நிலமோ இல்லாமல் 4 வெள்ளை வேட்டி-சட்டையுடன் மதிப்பிற்க்குரிய ஆசிரியர் அண்ணன் நக்கீரன் கோபால் அரவணைப்பில் வாழ்ந்துவந்தார். அவரின் வாழ்நாளில் யாரிடமும் தனக்கென உதவி என போய் நிற்காதவர். தேடி வரும் இளம் செய்தியாளர்களுக்கு வழிகாட்டியாய் இருந்த கலங்கரை விளக்கம் அவர்.

திருவாரூரில் 1934 ஜீன் 15ந்தேதி ராமநாதன் - கமலா அம்மையார்க்கு மகனாக பிறந்தார். திருவாரூாில் புகழ்பெற்ற தியாகராஜர் என்ற கடவுளின் பெயரை தனது மகனுக்கு வைத்து உச்சி முகர்ந்தனர் பெற்றோர். பிறப்பால் பிராமணராக இருந்தாலும் கடவுள் எதிர்ப்பு கொள்கையில் தீவிரம் காட்டினார். இதனால் படிக்கும் போதே திராவிட இயக்கத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு திராவிட கருத்துக்களை உள் மனதில் நிரப்பிக்கொண்டவர்.  இதனாலயே அந்நாளைய திராவிட கழக முன்னோடிகளுக்கு தியாகராஜனை நிரம்ப பிடிக்கும்.


திருவாரூர் திராவிட கழக முன்னோடிகள் மூலம் பெரியாரை சந்தித்தார். தியாகராஜனின் ஆசைப்படி அவரை தன்னுடைய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு சில பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றினார்.

அப்போது திமுகவில் இருந்த ஈ.வி.கே.சம்பத் தியாகராஜனை அழைத்து தன்னுடைய வார இதழ்க்கு பொறுப்பாசிரியராக்கினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். பின்னர் சம்பத் தமிழ் தேசிய கட்சி தொடங்கியபோது அவருடனே சென்றார். சம்பத், தன்னுடைய தமிழ்செய்தி வார, தின தாளில் தியாகராஜனை, பொறுப்பாசிரியராக்கினார். தனி இயக்கம் கண்ட சம்பத் பின்னாளில் காங்கிரஸ்சில் இணைந்தபோது அவரின் செய்தி நிறுவனத்தில் இருந்து வெளியே வந்து காமராஜர் நடத்திய நவசக்தியில் தலையங்க ஆசிரியராக பணியாற்றினார். பெரியாருடன் குத்தூசி குருசாமி என ஒருவர் இருந்தார். அவரின் எழுத்துக்கள் ஆங்கிலேயனை வெறுப்பேற்றும், பார்ப்பனர்களை வெறி கொள்ள வைக்கும் அளவுக்கு தீவிரமாக இருக்கும். அவரைப்போலவே எழுதியதால் தியாகரான் சின்னக்குத்தூசியானார்.


இவர் எழுதாத பத்திரிக்கைகளே இல்லை என சொல்லும் அளவுக்கு எழுதி குவித்தார். முரசொலி, நக்கீரன், ஜீனியர்விகடன், தாமரை என இவர் பல பத்திரிக்கைகளில் பலப்பல புனைப்பெயர்களில் அரசியல் கட்டுரைகள் அழுத்தமான ஆதாரங்களுடன் எழுதினார். இவர் வைக்கும் ஆதாரங்களை, மேற்கோள்களை சந்தேகம் கொள்ளவோ, ஆராயவோ முடியாது அந்தளவுக்கு அதில் உறுதியிருக்கும்.

இவரின் அரசியல் விமர்சனங்கள் சாட்டையடியாக இருக்கும். அரசியல் கட்சிகளின், தமிழகத்தின் பிரபலமான தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை நடுநிலைமையோடு பதிவு செய்ய ஆசைப்படுபவர்களுக்கு வழிகாட்டியாய், ஆசானாய் இருந்து கற்று தந்தவர். வளரும் செய்தியாளர்களின் சரணாலயம் அவர். அவரால் வளர்ந்து இன்று பத்திரிக்கையாளராய் மின்னுபவர்கள் அனேகமானோர் உள்ளனர். அவரின் எழுத்து நடையை கண்டு இவரைப்போல் நம்மால் எழுத முடியவில்லையே என மற்ற எழுத்தாளர்களை ஆதங்கபட வைத்தது.


கொள்கைக்காக தான் எழுத்துப்பணியே என்பார். முரசொலியில் பணியாற்றியபோது இந்துத்துவா கட்சியான பி.ஜே.பிக்கு ஆதரவாக எழுதுங்கள் என்ற போது கலைஞருடன் கோவித்துக்கொண்டு முரசொலியை விட்டு வெளியே வந்தவர். சில ஆண்டுகளுக்கு பின்னர் ஜெ வின் கைது நடவடிக்கையால் மீண்டும் முரசொலிக்கு போனார். அந்த 5 ஆண்டுகாலம் தன் எழுத்தாற்றலால் ஜெவை நாறடித்தார்.

தன்னுடைய எழுத்தை திராவிட கொள்கைக்காக அர்ப்பணித்துக்கொண்ட எழுத்துலக மன்னன் அவர். அவரின் எழுத்துக்கள் திமுகவை ஆதரிப்பதாக சொல்லப்படும். இதனாலயே அவரை திமுக சார்ப்பானவராக முத்திரை குத்தினார்கள் திராவிடத்தின் பகைவர்கள். உண்மையில் அவரின் எழுத்துக்கள் திராவிட கொள்கையை ஆதரிப்பதாகவே இருந்தன. பெரியாரை ஏற்றுக்கொண்டு அவரின் கொள்கையின் பால் வாழ்ந்து மரணித்துள்ளார்.

கடைசி காலகட்டத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு மேன்சனில் 10க்கு 10 அறையில் பேப்பர்களுடன் பேப்பராக, புத்தகங்களுடன் புத்தகமாக வாழ்ந்தார். 60 ஆண்டுகால அரசியல், சமுக வரலாற்றை, தலைவர்களின் வாழக்கையை நுணுக்கமாக கேட்பவர்களுக்கு தேதி, ஆண்டுவாரியாக எடுத்துரைப்பார்.


அப்படிப்பட்டவர் கடந்த 22ந்தேதி பில்ரோத் மருத்துவமனையில் மரணமடைந்தார். இந்த பிதாமகன் உடல் இறுதியஞ்சலிக்காக நக்கீரன் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. கலைஞர், வீரமணி, நல்லக்கண்ணு, ஸ்டாலின், கோபண்ணா, தொல்.திருமா, சுப.வீ என ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர். அண்ணன் உயர்திரு மரியாதைக்குரிய. நக்கீரன்கோபால் தலைமையில் நக்கீரன் குடும்பத்தினர், மற்ற பத்திரிக்கை சகோதரர்கள், அரசியல் கட்சியினர் இடுகாடு வரை சென்று அந்த பத்திரிக்கையுலக பிதாமகனை திரும்பி வர முடியாத இடத்திற்க்கு அனுப்பிவைத்துவிட்டு வந்தனர். இந்த பிதாமகன் இடத்தை நிரப்ப இன்று வேறுயாரும்மில்லை என்பதே உண்மை. அவருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக