ஈழத்துக்காக திமுக எதுவும்மே செய்யவில்லையா?, வை.கோ, நெடுமாறன், சீமான், தமிழ்தேசியவாதிகள், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் குற்றம் சாட்டுவது போல திமுக ஈழ துரோக கட்சியா?, டெசோ நடத்துவது நாடகாமா?, இலங்கையில் போர் நடத்தியது இந்தியா என்றால் எதனால் ?, போரில் இலங்கை வெற்றி பெற்றது எப்படி ?, போர் குற்றவாளியான இலங்கைக்கு இந்தியா உட்பட மற்ற நாடுகள் ஆதரவு தருவது ஏன் ஏன் என இப்படி பல கேள்விகள் உள்ளன. அதற்கான விடையாக இந்த கட்டுரை இருக்கும் என்ற நம்பிக்கையில் எழுதப்படும் கட்டுரையிது.
ஈழ விவகாரம் இன்று நேற்று தொடங்கியதல்ல. சுமார் 100 ஆண்டுகளாக நடக்கும் போராட்டம். 1980க்கு பின் ஈழப்போராட்டம் உச்சத்துக்கு வருவதற்க்கு முன்பே ஈழ விவகாரத்தில் திக, திமுக போன்றவை கவனம் செலுத்தியிருந்தன. போராட்டங்கள் நடத்தியிருந்தன. விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் அடித்தளம் அமைத்து தந்தவர்களே திமுகவினரும், திராவிட கழகத்தினரும் தான். அதன்பின் தான் நெடுமாறன் உட்பட மற்றவர்கள். 83க்கு ஜீலை கலவரத்துக்கு பின் ஈழ விவகாரம் இந்திய – தமிழக அரசியல் சூழலில் சிக்கியது. 1990 வரை ஈழப்போராட்டத்துக்கு தமிழக மக்கள் பெருமளவில் ஆதரவு தந்தார்கள். வட இந்திய தலைவர்களும் அது தமிழ் இனத்துக்கான போராட்;டம் என்பதில் உறுதியான ஆதரவு தந்தனர். காரணம் அப்போது தொடங்கப்பட்ட டெசோ. காலப்போக்கில் நிலைமை மாறியது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு என்ற காரணத்தை காட்டி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் நடந்த இராஜிவ்காந்தி படுகொலையில் திமுக மீதே எல்லா பழியும் சுமத்தப்பட்டன. மக்களும் அதை நம்பி படு தோல்வியை தந்தனர். திமுக இனி இல்லை என்ற நிலையை எதிரிகள் உருவாக்கினார்கள். அதிலிருந்து மீண்ட கழகம் ஈழ விவகாரத்தில் தன் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டது. 2006ல் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பிரிகேடியர் தமிழ்செல்வன் சிங்கள இராணுவ குண்டுவீச்சில் கொல்லப்பட்டார். அப்போது முதல்வராக இருந்த கலைஞர் விடுத்த இறங்கல் அறிக்கையை பார்த்து கொதித்துப்போய் காங்கிரஸ்சும், அதிமுகசும் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. அப்போது எந்த ஈழ ஆதரவு இயக்கங்களும் கலைஞர்க்கு முட்டு கொடுக்கவில்லை.
2008ல் ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோதும், 2009ல் தமிழினத்தை சிங்களம் அழித்தபோதும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒரு கட்சி என்ன செய்ய முடியும்மோ அதை செய்தது. இருந்தும் திமுக நினைத்தால் போரை நிறுத்தியிருக்கலாம், மத்திய அரசின் ஆட்சியை கவிழ்த்து இருக்கலாம் என நெடுமாறன், வை.கோ, சீமான் போன்றவர்கள் பேசினார்கள். 2009 பாராளமன்ற தேர்தல் முடிவு ஈழப்பிரச்சனை ஓட்டாகாது என்பதை உணர்ந்து கலைஞர் பாரமுகமாவே இருந்தார்.
2011 சட்டமன்ற தேர்தலின் போது திமுகவே ஈழமக்கள் கொல்லப்பட காரணம் என பேசியும், எழுதினர். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என பேசினர். திமுகவின் படு தோல்விக்கு அதுவும் ஒரு காரணமானது. தோல்விக்கு பின்னும் வை.கோ, நெடுமாறன், சீமான், தமிழ்தேசியவாதிகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. அதிமுக எதுவும் செய்யவில்லை என்றாலும் அதை விமர்ச்சிக்கவில்லை. திமுகவையே குற்றம் சாட்டினர். மக்களிடம்மிருந்து குறிப்பாக இளைய சமுதாயத்திடம்மிருந்து தங்களை அந்நியப்படுத்த முயல்கிறார்கள் என்பதை உணர்ந்தே திமுக தங்களது ஈழ நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்தது. மீண்டும் ஒரு வலிமையான போராட்ட களத்துக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டது.
திமுகவை மீண்டும் ஈழத்தமிழர்கள் மீது கரிசணை கொள்ள வைக்க நிச்சயம் 20 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது இதற்கு இங்குள்ள சில ஈழ ஆதரவு அமைப்புகளே காரணம்.
திமுக மீண்டும் டெசோவை உயிர்பித்தது. திமுக தலைவர் கலைஞர், திராவிட கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பேரா.சுப.வீரபாண்டியன் உறுப்பினராக்கி ஈழ விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என ஆலோசித்தனர். டெசோ சார்பில் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பது என முடிவு செய்தனர். போராட்டங்களை நடத்த தொடங்கினர். பிற நாட்டு தூதரகங்களுக்கு சென்று ஈழப்பிரச்சனையில் ஈழ மக்களுக்கு ஆதரவாக அந்த நாடுகள் செயல்பட வேண்டும் என கேட்டு கோரிக்கை மனு தருவது, ஐ.நா அவைக்கு சென்று அதன் பிரதிநிதிகளிடம் மனு தருவது என தங்களது முதல் கட்ட பணியை தொடங்கினர்.
இந்திய ஒன்றியத்தின் நாடாளமன்றத்தில் பெரும் கட்சிகளான பி.ஜே.பி, கம்யூனிஸ்ட்டுகள், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உட்பட எல்லா கட்சிகளும் காங்கிரஸ் அரசாங்கத்தை கேள்வி கேட்டும், இலங்கையை தண்டிக்க வேண்டும் என்றும், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை மாற்ற வேண்டும் என உறுதியான குரலில் பேசின, தொடர்ந்து குரல் கொடுக்க தொடங்கியுள்ளன. ஈழ மக்கள் பிரச்சனை நாடாளமன்றத்தில் ஒரு நீண்ட விவாதத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு காரணம் டெசோ அல்லது திமுக என குறிப்பிட்டால் அது மிகையில்லை.
இந்த நேரத்தில் சேனல் 4, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் மகன் கொல்லப்பட்ட படங்கள், போர்குற்ற ஆவணப்படம் போன்றவைகளை வெளியிட்டன. அதனையும் கையில் எடுத்துக்கொண்டது. டெசோ அமைப்பின் சார்பில் இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டது. இலங்கையின் போர் குற்றத்தை விசாரிக்க வேண்டும்மென அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழக கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன.
இந்திய ஒன்றியத்தின் நாடாளமன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரியுங்கள் என திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி.சிவா, திருமாவளவன் போன்றோர் பேசிய பேச்சு மனித நேயம் உள்ள மனிதர்களின் மனதை நிச்சயம் உருக்கியிருக்கும். தப்பை மறைக்காதீர்கள் என கேட்டுக்கொண்டார்கள். இதில் அதிமுக, மதிமுகவின் பேச்சையும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்திய ஒன்றியத்தின் தலைநகரம் டெல்லியில் டெசோ அமைப்பு கூட்டம் நடத்தி பிற மாநில கட்சியினரை வரவைத்து ஈழத்தமிழர்களுக்காக நாங்கள் இருக்கிறோம், தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என காட்டியது. கூட்டத்தில் போர்குற்ற ஆவண வீடியோவை போட்டு காட்டியது. வை.கோ, நெடுமாறனால் சாதிக்க முடியாததை டெசோ சாதித்தது.
ஆளும்கட்சியான திமுக நினைத்திருந்தால் போர் நின்றுயிருக்கும்மா ?.
2009 போர் காலத்தில் மேற்குலக நாடுகளில் வாழும் ஈழ தமிழர்கள் இன அழிப்பை தடுக்ககோரி பெரும் போராட்டங்கள் நடந்தின. இந்தியாவில் தமிழகத்தை தவிர்த்து வேறு எங்கும் போராட்டம் நடக்கவில்லை. அந்த எழுச்சியையும் இந்திய – தமிழக உளவு பிரிவுகள் நசுக்க செய்தன. ஒரு கட்டத்துக்கு மேல் சில நெருக்கடிகள், சில தூதுக்களால் ஈழத்தமிழர் விவகாரத்தில் முதல்வராக இருந்த கலைஞர் இறங்க முயன்றபோது, கருணாநிதி விடுதலைப்புலிகளை காப்பாற்ற முயல்கிறார், ஆளும்கட்சி போராட்டம் நடத்தகூடாது என ஜெ எதிர்த்தார். அதேபோல் கலைஞரை சந்தித்த காங்கிரஸ் மைய அரசின் மூத்த அமைச்சர்கள், இராஜதந்திரிகள், சர்வதேச பிரச்சனைகள், பிற நாடுகளின் உதவிகள் பற்றி பட்டியல் போட்டு இந்தியா இல்லையென்றாலும் இலங்கை போர் நடத்தும், இலங்கையோடு இந்தியா முரண்பட முடியாது அதில் பல வெளியுறவு சிக்கல்கள் உள்ளன என விவரித்ததை நீண்ட அரசியல் அனுபவம் உள்ள கலைஞரால் புரிந்துக்கொள்ள முடிந்தது. (வெளியுறவு விவகாரம் பற்றி புரிந்துக்கொள்ள நிச்சயம் பன்னாட்டு அரசியல், பொருளாதாரம் அறிந்திருக்க வேண்டும்). இது வை.கோ, நெடுமாறன் போன்றவர்களுக்கு தெரியும். இருந்தும் அவர்கள் காங்கிரஸ்சை விட திமுக மீது குற்றச்சாட்டு வைக்க காரணம் பேட்டை அரசியல்க்காக.
அதிகாரத்தில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற தப்பான அபிப்பராயத்தில் உள்ளனர் மக்கள். அது அவர்கள் மீதான குற்றமல்ல. அறியாமை. ஆனால் அந்த அறியாமையை பயன்படுத்தி திமுக மீது குற்றச்சாட்டை சில குட்டி அரசியல் கட்சிகள் வைக்க உணர்ச்சி பூர்வமான அந்த குற்றச்சாட்டை மக்கள் நம்பினர். இலங்கைக்கு எல்லா உதவிகளையும் செய்து போரை நடத்திய இந்தியா நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம், காங்கிரஸ்சோடு திமுக துணை நின்றது. திமுக தான் போரை நடத்தியது என விதவிதமான குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டே வருகின்றன. அவர்களுக்கு வெளியுறவு கொள்கைகளை பற்றி தெரியவில்லை என்பதே அர்த்தம்.
மாநிலத்தை ஆளும் பொறுப்புகளில் உள்ளவர்களால் திமுக என்றள்ள தீவிர ஈழ ஆதரவளரான நெடுமாறன் முதல்வராக, மைய அரசில் கூட்டணி அமைச்சரவையில் இருந்தாலும் இலங்கை விவகாரத்தில் இந்தியா தமிழ் மக்களுக்கு ஆதரவான முடிவு எடுக்க வேண்டும் என நிர்பந்திக்கலாமே தவிர உத்தரவிட முடியாது. மைய அரசின் அனுமதியில்லாமல் ஒரு மாநில முதல்வரோ, மைய அமைச்சரோ பிற நாடுகளில் சென்று ஈழத்துக்கு ஆதரவும் திரட்ட முடியாது. உதவவும் முடியாது. மாநில முதல்வர்களால் இராணுவம், வெளியுறவுத்துறை போன்ற சில முக்கிய அமைச்சுகளில் ஆதிக்கம் செலுத்த முடியாது. அது மைய அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பது. மீறி தலையிட்டால் மாநிலங்களின் ஆட்சிக்கே ஆபத்தை கொண்டு வரும். ஒவ்வொரு நாட்டுடனும் எப்படி உறவு வைத்திருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய உயர் மட்ட அந்தஸ்திலான பொருளாதார, பாதுகாப்பு, வெளியுறவு, அரசியல் துறையை சேர்ந்த குழுவை அரசு வைத்துள்ளது. இராஜதந்திரிகள் எனப்படும் இவர்கள் பிறநாடுகளுடன் தன் நாட்டுக்கு உள்ள பொருளாதார, இராணுவ, அரசியல் நட்புகளை கொண்டே முடிவு எடுத்து கொள்கைகளை வகுப்பார்கள். அதன்படி நடப்பார்கள். மாநில அரசுகளின், மக்களின் நெருக்கடி பெரும்பாலும் அதில் எடுபடாது.
அயலுறவுக்கொள்கை.
நேரு கொண்டு வந்தது அணி சேராக்கொள்கை. அதில் முக்கியமானது, பிற நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதும் அடக்கம். பாகிஸ்தான் - வங்கதேச பிரச்சனையில் பிரதமராக இருந்த இந்திரா தலையிட்ட பின் அது காற்றில் பறக்கவிடப்பட்டது. அதன்பின், இந்தியா இலங்கை விவகாரத்தில் தலையிட்டது. அதற்கு காரணம், பழா.நெடுமாறன், ஈழ தமிழர்கள் நினைப்பது போல் இலங்கையை உடைத்து ஈழத்தை ஏற்படுத்தி தருவதற்காக அல்ல. அன்றைய நிலையில் உலகம் அமெரிக்கா, ரஷ்யா என்ற இரண்டு நாடுகளின் வல்லாதிக்க போட்டியில் சிக்கியிருந்தது. இந்தியாவை சுற்றியுள்ள சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்றவையும் அமெரிக்க ஆதரவு நிலை எடுத்துயிருந்தன. குட்டி நாடான இலங்கையும் அமெரிக்கா ஆதரவு நிலை எடுத்துயிருந்தது. இலங்கையில் அமெரிக்க இராணுவம் தளம் அமைக்க இடம் கொடுக்க சம்மதித்துயிருந்தது. அப்படி நடந்தால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்வி குறியாகும் என எண்ணி இலங்கையை மிரட்ட இராஜதந்திர, உளவு அமைப்புகளை பயன்படுத்தினார் இந்திரா. போராளிகளை ஊக்குவித்தார், அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றியும் பெற்றார். இந்திராவுக்கு ஈழம் அமைத்து தருவதில் ஆர்வம் இல்லை என்பதே இந்திய இராஜதந்திரிகள் மற்றும் உளவுதுறைகளின் குறிப்பு.
பிரதமர் இந்திரா படுகொலை, ரஷ்யா சிதைவு, இந்தியாவின் அமெரிக்க பாசம் போன்றவை இராஜதந்திரத்தில் ஓட்டை விழுந்தது. அதே நேரத்தில் அடுத்த பிரதமராக வந்த இராஜிவ் வெளிவிவகாரத்தில் சொதப்ப ஈழப்பிரச்சனை பெரும் சிக்கலை சந்தித்தது. இராஜிவ் படுகொலையை விடுதலைப்புலிகள் செய்தார்கள் என முடிவு எடுக்கப்பட்டு ஈழ விவகாரத்தில் இந்திய ஆட்சியாளர்கள் உளவுத்துறையை முடுக்கிவிட்டார்கள். ஈழ கனவையே சிதைப்பதையே நோக்கமாக கொண்டு நீண்ட கால செயல்திட்டத்தில் செயல்பட்டார்கள் உளவு அமைப்பினர். வாய்ப்புகளும் உளவு அமைப்புகளுக்கு தாராளமாக இருந்தது.
உளவு நிறுவனங்களின் விளையாட்டு.
இராஜிவ் கொலையால் தமிழகத்தில் படுமோசமான ஆதரவு வீழ்ச்சியை சந்தித்தார்கள் புலிகள். ‘அதிக’ ஆதரவு தந்த எம்.ஜீ.ஆர் இறந்து போயிருந்தார், புலிகளை ஜென்ம விரோதியாக பார்க்கும் அதிமுக தலைவியாக, முதல்வராக ஜெ இருந்தது வீழ்ச்சியிலும் வீழ்ச்சி. தமிழகத்தில் ( இந்தியாவில் ) புலிகளுக்கு தடை. திமுகவின் ஆதரவு இழப்பு, மக்கள் ஆதரவு இல்லாமை போன்றவை அரசியல் ரீதியாக ஒரு வெற்றிடத்தை புலிகளுக்கு ஏற்படுத்தியது. அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாதபடி செய்தார்கள் உளவு அமைப்பினர். வை.கோபால்சாமியை திமுகவில் இருந்து பிரித்தது, ஈழ ஆதரவு அமைப்புகளை உடைத்தது என உள்நாட்டில் செய்தது. வெளிநாடுகளில் புலம் பெயர் தமிழர் அமைப்புகளை உடைத்தனர்.
அதன்பின் அவர்கள் பார்வை ஈழ களத்துக்கு மாறியது. அதேநேரத்தில் தாயகத்தில் தமிழர் பகுதியில் பெரும் நிலப்பரப்பில் ஆட்சி செய்தனர் விடுதலைப்புலிகள். வெளிநாட்டு இராஜத்திர வட்டாரங்களில் புலம் பெயர் ஈழத்தமிழர்கள், ஆன்டன்பாலசிங்கம், தமிழ்செல்வன் போன்றவர்கள் வைத்திருந்த உறவு அவர்களை கம்பீரமாக இருக்க வைத்தது. விடுதலைப்புலிகள் அமைப்பை உடைக்கும் முயற்சியை இந்திய - இலங்கை புலனாய்வு அமைப்புகள் திட்டமிட்டு செய்தது. கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணாவை பிரித்தனர். அவனை கேரளாவில் தங்க வைத்திருந்தார்கள். ( அப்போது மத்தியில் மாநிலத்தில் யார் ஆட்சி என்பதை வை.கோ, நெடுமாறனிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். ) இயக்கத்தில் தன் உளவு அமைப்பினர் புகுந்துயிருந்தனர்.
1997ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தை உலக பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்தது அமெரிக்கா. அதன் பின்னணியில் இருந்து இந்தியா. 2000 த்தில் அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின் இனத்துக்காக போராடும் போராளிகளையும் தீவிரவாத பட்டியலில் சேர்த்தது அமெரிக்கா. ஏற்கனவே அந்த பட்டியலில் இருந்த புலிகள் அமைப்பை தீவிரமாக கண்காணித்து அழிக்க துணை போனது. இதில் இந்திய இராஜதந்திரம் அதிகம் உதவின. இலங்கை அதிபராக இருந்த ரனில்விக்ரமசிங்கே, உலக நாடுகளின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்களிடம், விடுதலைப்புலிகள் தீவிரவாத அமைப்பு என்ற பிரச்சாரத்தை செய்தார். இந்தியா மற்றும் அமெரிக்காவின் தடை உத்தரவுகளை காரணம் காட்டி பிற நாடுகளுடன் பேச ஒவ்வொரு நாடும் விடுதலைப்புலிகளை கறுப்பு பட்டியலில் சேர்த்து தடை செய்தது.
உலக நாடுகளின் தடை, அமைப்பை உடைத்தது போன்றவற்றால் அதிர்ச்சியாகி இரண்டாவது முறையாக ரனில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, எதிர் வேட்பாளராக நின்ற இராஜபக்சே மனித உரிமை ஆர்வலர் என முடிவு செய்து புலிகள் தேர்தலில் இராஜபக்சேவை ஆதரித்தனர். ஆனால் அவனே கொத்து குண்டுகளோடு வருவான் என எதிர்பார்க்கவில்லை. விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராஜபக்சே போர் தொடுத்தபோது உலக நாடுகளின் ஆதரவை பெற வேண்டிய முக்கிய பொறுப்பில் இருந்த தமிழ்செல்வன், ஆன்டன்பாலசிங்கம் போன்றோர் அடுத்தடுத்து இறந்தது புலிகளை பலவீனமடைய செய்தது.
பல நாடுகளின் உளவுத்துறைகள் இந்தியா வழியாக இலங்கைக்கு உதவின. உலக வல்லரசுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் இந்தியா, க்யூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆயுதங்களோடும், ஆதரவோடும் விடுதலைப்புலிகள் மீது போர் தொடுத்தனர். இங்கு ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும் இந்தியா இதில் தலையிடாமல் இருந்தாலும் போர் நடந்திருக்கும். காரணம் இந்தியாவை தவிர்த்து வேறு ரூட்டிலும் வெளியுறவு உறவை வளர்த்துக்கொண்டது இலங்கை. சீனா அதற்கு பெரும் உதவியாக இருந்தது.
போர் முடிந்தபின் உதவிக்கு பிரிதிபலன் ஒவ்வொரு நாடும் எதிர்பார்க்கும் அதன்படி இலங்கையில் அதிக உதவி செய்த சீனா பெரும் வேலைகளை செய்கிறது. அடுத்து ஜப்பான், ரஷ்யாவும் செய்கிறது, இந்தியாவும் சில பணிகளை செய்கிறது. அமெரிக்கா தன் பங்குக்கு கேட்கிறது அதன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததாலும், சீனாவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதால் இலங்கையை ஐ.நா சபை மூலம் மிரட்ட தொடங்கியுள்ளது அமெரிக்கா. நுணுக்கமாக பார்த்தால் இதன் பின்னால் உள்ள அரசியல் தெரியும்.
இந்தியாவின் பயம் இலங்கை மட்டுமல்ல….
ஈழத்தை ஒருபோதும் இந்திய ஆட்சி அதிகார மையத்தினர் ஆதரிக்கமாட்டார்கள். அதற்கு காரணம், தமிழகம் பிரிந்து போகும் என்ற ஐயம்மில்லை. ஈழம் தனிநாடாக்க சர்வதேச அரங்கில் இந்தியா முயற்சித்தால் காஷ்மீரை தனி நாடாக்க பாகிஸ்தான் முயலும், அருணாச்சல பிரதேசத்தை தனிநாடாக்க சீனா முயலும், இந்த வரிசையில், பஞ்சாப், அசாம், சிக்கிம், நாகாலந்து மாநிலங்களில் நடக்கும் தனிநாடு கோரிக்கை அதிகமாகும். இங்குள்ள பல குழுக்கள் தனிநாட்டுக்காக பல ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தியும், அரசியல் ரீதியாகவும் போராடி வருகின்றன. அதற்கு உதவ சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற தேசங்கள் தயாராக உள்ளன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கையை பிரிக்க வேறு நாடு முயன்று இந்தியா ஆதரித்தாலும் பிரச்சனை. இந்தியாவில் இருந்து பிரிந்து தனிநாடாக முயலும் முயற்சிக்கும் இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டிய கட்டயாத்துக்கு ஆளாகும். இதுபோன்ற பிரச்சனைகளால் இந்தியா ஈழத்தை நிச்சயமாக ஆதரிக்காது. இது தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் அறிந்ததே.
20 ஆண்டுகளில் இந்தியா சின்னாபின்னமாகிவிடும் என ஒரிரு ஆண்டுகளுக்கு முன் ஒரு அறிக்கை தயாரித்தது சீனா. அதற்கு வழி ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது இந்திய அரசு.
தமிழகத்தில்………
தமிழகத்தில் அரசியலுக்காக ஈழம் பயன்படுகிறது. 1990களுக்கு பின் பிறந்தவர்களே இன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் இவர்களுக்கு ஈழ விவகாரம் பற்றி நிச்சயம் 90 சதவிதம் தெரியவில்லை. அவர்களுக்கு தெரிந்து 2009 போர் களமும், இழப்பும் தான். 2009ல் மவுனமாக இருந்த திமுக இவர்களுக்கு துரோகியாக தெரிகிறது. ஈழத்தை வைத்து அரசியல் பேசிய வை.கோ, நெடுமாறன், சீமான் போன்றோர் நம்பகமானவர்களாக தெரிகிறார்கள். ஜெ ஈழத்தை காக்க வந்த ரட்சகராக்க பார்க்கிறார்கள். பழைய வரலாறு அவர்களுக்கு தெரியாது என்பதே இது சாட்சி.
காங்கிரஸ் போனால் பி.ஜே.பி வரும் அவர்கள் ஈழம் அமைத்து தருவார்கள் என்கிறார்கள். 2004வரை பி.ஜே.பி ஈழத்துக்கு எதிராக இலங்கைக்கு செய்த உதவிகள் பற்றி முன்னால் பிரதமர் வாஜ்பாயின் நண்பரான வை.கோவுக்கு நன்கு தெரியும்.
2009ல் போராடியதைப்போல இப்போதும் சாலைக்கு வந்து போராடுகிறார்கள், உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால், எதுக்காக போராடுகிறோம். இது எவ்வளவு பெரிய இனப்போராட்டம் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. விளம்பரத்துக்காக நடக்கும் போராட்டங்களாக நடத்தப்படுகின்றன.
அயல் தேசங்களின் பார்வை.
அமெரிக்கா, நியூசிலாந்து, ஐரோப்பிய நாடுகள் போன்ற பல நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இராஜதந்திர ரீதியான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதனால் தான் போராட்டங்கள், இராஜதந்திரம் மூலம் தன் இனம் அழிக்கப்பட்டு, அடிமைப்பட்டு வாழ்வதை ஒவ்வொரு நாட்டின் இராஜதந்திரிகளுக்கும் தெரியப்படுத்துகிறார்கள். எங்களுக்கு தனி நாடு வேண்டும் என கேட்கிறார்கள், உரிமை கேட்கிறார்கள், சுதந்திரமாக வாழ ஆசைப்படுவதை கேட்கிறார்கள். அது நடக்க நிச்சயம் நீண்ட நாட்களாகும் என அவர்களுக்கு தெரியும் இருந்தும் முயற்சியை தொடங்கியுள்ளார்கள்.
போர் குற்றம் தொடர்பாக ஐ.நாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்மே இலங்கைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. எந்த சர்வதேச நாடும் தமிழ் மக்களுக்கு உதவவில்லை. இருந்தும் இந்த தீர்மானத்தை ஆதரிக்க காரணம் படிப்படியாக எமக்கான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
தாங்கள் போய் உதவி கேட்கும் நாடுகள் எல்லாம் இந்தியாவின் நண்பர்கள், இலங்கை சிங்கள அரசு தன் இனத்தை அழித்தபோது அவர்களுக்கு ஆதரவும், ஆயுதமும், பாதுகாப்பும் தந்தவர்கள் என்பதை நன்கிறந்தவர்கள் இருந்தும் அவர்கள் அந்நாடுகளோடு உறவாட காரணம் தங்களது இராஜதந்திர கொள்கை மூலம் அவர்களை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் தான்.
அவர்கள் உலகத்தை நன்கறிந்து வைத்துள்ளார்கள். உலகத்தின் ஒவ்வொரு நாடும் சுயநலமாகவே சிந்திக்கின்றன. பிற நாட்டுடன் உறவுக்கொண்டால் தனக்கு அதனால் என்ன லாபம் என யோசிக்கின்றன. பிற நாட்டு மக்களுக்காக எந்த நாட்டின் அதிகாரமும் சிந்திப்பதில்லை, உதவுவதில்லை. பிற நாட்டு மக்களுக்காக யோசிப்பது சக மக்கள் தானே தவிர வேறுயாரும்மில்லை.
விரிவாக விளக்கமாக உண்மையாகவும் மிகவும் அருமையாக இருந்தது கட்டுரை நன்றி
பதிலளிநீக்கு//திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருமாவளவன் போன்றோர் பேசிய பேச்சு மனித நேயம் உள்ள மனிதர்களின் மனதை நிச்சயம் உருக்கியிருக்கும்.//
பதிலளிநீக்குபோரில் இறந்த தமிழர்களின் பிணங்கள் அழுகிய மணம் நீங்க முன்னாலே மகிந்த ராஜபக்சவுடன் கனிமொழியும், டி.ஆர்.பாலுவும், திருமாவளவனும் சிரித்து மகிழ்ந்து விருந்துண்டு இலங்கை ஜனாதிபதிக்கு பொன்னாடையும் போர்த்திப் பாராட்டியதை அவரிடமிருந்து பரிசுப் பொருட்களையும் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் தாய்த்தமிழ்நாட்டுக்குத் திரும்பியதை மட்டும் குறிப்பிட மறந்து விட்டீர்களே. அந்த விஜயத்தின் நோக்கம் என்ன என்பதையும் விளக்குவீர்களா?
http://www.slnewsonline.net/Tamil_Nadu_MP_greet_Mahinda_Rajapaksa_Oct_2009.jpg
@ viyasan, பாலு, கனிமொழி, திருமாவளவன் போன்றோர் அங்கிருந்த நாட்களில் சாப்பிடாமல் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விட்டு வர வேண்டும் என்கிறிர்களா?. இல்லை ராஜபக்சேவை பார்த்ததும் கத்தியை எடுத்து குத்த வேண்டும் என சொல்கிறிர்களா ?. அந்த குழுவை அனுப்பியது இந்திய அரசு. அவர்களை வழி நடத்தியது முழுக்க முழுக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள். ஒரு நாட்டுக்கு விசாரணைக்கு செல்லும் குழு அந்த நாட்டு அதிபரையோ அல்லது வெளியுறவு அமைச்சரை சந்திப்பது என்பது நடைமுறை. என்ன பிரச்சனைகள் இருந்தாலும் இரு நாட்டை சேர்ந்தவர்கள் சந்திக்கும் போது இரு தரப்பும் மரியாதை செய்வது என்பது உலக மரபு. அங்கு நடந்தது அது தான். பரிசு வாங்கினார் என்கிறிர்களே அது என்ன பரிசு என்று சொல்லுங்களேன். நான் பதில் தருகிறேன்.
நீக்குசந்திப்பை உலக மகா குற்றம் போல் சித்தரிப்பவர்களுக்கு ஒரு கேள்வி புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் பலர் ராஜபக்சே, கோத்தபயேவை சந்தித்து பேசினார்களே அவர்கள் எல்லாம் துரோகிகளா ?.
திமுகவை போன்ற ஒரு ஊழல் கட்சி உலகில் இல்லை.
பதிலளிநீக்குஇதலயே தெரியுது உங்க உலக அறிவு.
நீக்குவெகு சிரத்தையோடு எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இது.. திமுகவின் கடந்த கால செயல்பாடுகளையும், பொதுவான வெளியுறவுக் கொள்கைகளையும் உணர்ச்சிவசப்படாமல்உரிய கோணத்தில் விவரிக்கிறது. திமுக சார்பு நிலையுடன் எழுதப்பட்டிருக்கும் கட்டுரை என்ற எண்ணம் மேலிட படித்தால், இக்கட்டுரையில் பொதிந்திருக்கும் உண்மைத் தன்மையை உணர்ந்திட முடியாது. திமுகவும் ஒரு அரசியல் கட்சிதான். ஆனால், மற்ற கட்சிகளைக் காட்டிலும் அதனிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அதனாலேயே குற்றம் சுமத்தியபடி இருக்கிறார்கள். கருணாநிதி அவரது நெஞ்சுக்கு நீதி எதுவோ அதைச் செய்கிறார். அதைப் பிளந்து பார்த்து அவரவர் கோணத்தில் விமர்சிப்பவர்கள், தனக்குள்ளே ஊடுருவி பார்ப்பதில்லை என்பதே நிஜம். கருணாநிதி முதற்கொண்டு எல்லா அரசியல் தலைவர்களிடமும் ஈழ விஷயத்தில் குறை காண முடியும் என்பதே உண்மை.
பதிலளிநீக்குதோழமைக்கு, உங்களது கருத்தை படித்தேன். நீங்கள் குறிப்பிட்டதைப்போல மற்ற கட்சிகளை விட திமுகவிடம் அதிகம் எதிர்பார்த்தார்கள் என்பது உண்மை. திமுக செய்ய தவறியது என்பதும் உண்மை. ஏன் செய்ய முடியவில்லை என்பதை ஆராய வேண்டும். அதை யாரும் இங்கு செய்ய தயாராகயில்லை. ஈழப்பிரச்சனையை தங்களது அரசியல் லாபத்துக்காகவே பல அரசியல் கட்சிகளும் பயன்படுத்துகிறார்கள். அவர்களே திமுகவை குற்றம் சாட்டி வருகிறார்கள். தாங்கள் செய்த குற்றங்களையும், தவறுகளையும் திமுக மீது சுமத்தி வருகிறார்கள்.
பதிலளிநீக்குமிகவும் உண்மையாக ஆய்வு செய்து எழுதப்பட்ட பதிவு,
பதிலளிநீக்குஉண்மை அதிகம் இருந்தது,
நண்பர்கள் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்துக்கொண்டேன்.
ஈழப்பிரச்சினையில் தெளிவற்ற நிலையில் குறைகாண்போர் அனைவரும் தெரிந்து தெளிவுபெற வேண்டிய பதிவு.கட்டுரையில் உங்கள் அறிவின் ஆழமும் உழைப்பும் தெரிகிறது. வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு