வியாழன், மார்ச் 07, 2013

போராளியாகவே வாழ்ந்து மறைந்த சாவேஸ்.



லத்தின் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபர் சாவேஸ்.  1954ல் வெனிசுலாவில் உள்ள பாரினாசு என்ற இடத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே அமெரிக்க எதிர்ப்புணர்வை மனதில் கொண்டவர். 

இராணுவ கல்லூரியில் சேர்ந்து படித்தவர் அங்கேயே இராணுவ அதிகாரியாக 1975ல் பணியில் சேர்ந்தார். பணியில் இருக்கும்போதே வெனிசுலா அரசு அமெரிக்காவின் அடிவருடியாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வெனிசுலா மக்கள் விடுதலை இராணுவம் என்ற ரகசிய இயக்கத்தை தொடங்கினார். கி.பி 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் வெனிசுலாவில் வாழ்ந்த ஈக்குவல் ஜமேரா, சிமோன் பொலிவர், சிமோன் ரோட்கிரிஸ் என்ற மூன்று வரலாற்று வீரர்களின் வாழ்க்கை, போராட்ட வரலாறுகளால் ஈர்க்கப்பட்டே புரட்சி இயக்கத்தை தொடங்கினார். இராணுவத்தில் அவருக்கு ஆதரவும் கிடைத்தது. 

1992ல் இராணுவத்தில் இருந்தபடி புரட்சி ஏற்பாடு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. புரட்சி நசுக்கப்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் சிறையில் வாடினர் அதில் சர்வேஸ்சும் ஒருவர். 1992லேயே மற்றொரு புரட்சி முயற்சி நடைபெற்று தோல்வியை தழுவியது. இரண்டாண்டு சிறையில் இருந்த சாவேஸ் சிறையில் உதித்த திட்டப்படி ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். 

ஐந்தாம் குடியரசின் இயக்கம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இராணுவ தளபதியாக இருந்து அரசியல்வாதியாக மாறினார். மக்கள் இந்த இயக்கத்தை தூக்கி வைத்து கொண்டாடினர். விளைவு 1998ல் அதிபராக வெற்றி பெற்றார். 1998ல் முதல்முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் கன்னத்தில் அடிப்பதை போன்று அதன் தவறுகளை, கொள்கைகளை வெளிப்படையாக சாடினார். இதனால் இவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்டில் பதவி காலியானது. 

2000ல் நடந்த தேர்தலில் மீண்டும் சாவேஸ்சே அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் கண்ணை நீண்ட பல வருடங்களாக உறுத்தும் க்யூபா அதிபர் பிடல்காஸ்ட்ரோவுடன் நட்பு பாராட்டினார். சோசலிசாத்தை தென் அமெரிக்கா நாடுகளில் பரப்ப முயன்றார். இது அமெரிக்காவை ஆத்திரப்படுத்தியது. 

வெனிசுலாவில் கச்சா எண்ணெய் வளம் அதிகம். அதை அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகள் அதை சுரண்டிக்கொண்டு இருந்தன. முதலில் இதற்கு தான் தடை விதித்தார். இவைகளால் கோபமான அமெரிக்கா அதிபர் ஜார்ஜ்புஷ், சாவேஸ் கஞ்சா கடத்தல்காரன், தீவிரவாதி என வசைப்பாடினார். 

அதற்கு பதிலடியாக 2006ல் உலக தலைவர்கள் கூடியிருந்த ஐ.நா அவையில் அமெரிக்க அதிபர் புஷ்சை சாத்தான் என்றார் சாவேஸ். உலக சர்வாதிகார நாடாhன அமெரிக்காவின் அதிபரை, நாட்டாமையை சாத்தான் என அழைக்கும் தைரியம் யாருக்கும் வராது. சாவேஸ் அழைத்தார். அமெரிக்க அடிவருடி நாடுகள் இதனை கண்டித்து மன்னிப்பு கேட்க கூறின. அதனை புறந்தள்ளினார். பேசியது பேசியது தான் என்றார். 

2012ல் நான்காவது முறையாக மீண்டும் வெனிசுலா மக்களால் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 13 ஆண்டுகள் வெனிசுலா அதிபராக இருந்தவர் தன்னுடைய சோசலிச கொள்கையை விரிவுப்படுத்தினார்.

அதேநேரத்தில், அவர் உடலில் புற்றுநோய் பரவதொடங்கியது. க்யூபாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனக்கான கேன்சர் கட்டியை அகற்றிக்கொள்ள தொடர்ந்து மூன்று முறை ஆப்ரேஷன் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் தான் தகவல் க்யூபாவில் இருந்து வெனிசுலா வந்தார் சாவேஸ். துணை அதிபர் நிக்கோலஸ் மதுரோவ், சாவேஸ் நம்மை விட்டு நாம் யாரும் விரும்பாத இடத்துக்கு சென்றுவிட்டார் என 2013 மார்ச் 5 ந்தேதி அறிவித்தபோது உலக சோசலிசவாதிகள் கண்ணீர் விட்டனர். வெனிசுலா மட்டுமல்ல தென் அமெரிக்காவின் பல நாடுகள் துக்கத்தில் உள்ளன. 

உலகின் பிரபலமான ஆங்கில ஏடுகளான டைம், ஸ்டேட்ஸ்மென் போன்ற பத்திரிக்கைகள் உலகின் மிக முக்கியமான, மக்கள் விரும்பும் தலைவர்கள் 100 பேரில் இவரும் ஒருவர் என அறிவித்தது. 21ஆம் நூற்றாண்டில் சோசலிசவாதியாக அறியப்பட்டவர். இன்று நம்மிடம்மில்லை. ஆனால் அவர் விதைத்த விதை நிச்சயம் மரமாக வளரும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக