திங்கள், ஏப்ரல் 11, 2016

புரட்சிபுயல் தொண்டர்களை மிஞ்சிய காம்ரேட்டுகள்………..முகநூல், டுவிட்டர் போன்றவற்றறில் சில ஆண்டுகளாக இயங்கி வருகிறேன். தேர்தல் காலங்களில் இணையத்தில் இயங்கும் மதிமுக தொண்டர்களை பார்த்தால் பாவமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். இப்போது மதிமுகவோடு மக்கள் நலக்கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தொண்டர்களை பார்க்கும் போது அதிலும் குறிப்பாக இடதுசாரிகளுக்காக எழுதுபவர்களை காணும்போது அதிர்ச்சியாகவே இருக்கிறது.

மதிமுகவின் வளர்ச்சி என்பது 2000த்திலேயே முடிந்துவிட்டது. அதன்பின் அது தேய்பிறையாகிவிட்டது என்பது அக்கட்சி தலைவரான வைகோவுக்கே நன்கு தெரியும். அதிலும் 2006க்கு பின் வைகோ தேர்தல் களத்தில் செல்லாக்காசு என்ற நிலைக்கு போனதோடு, அந்த கட்சியில் தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான பேரூராட்சிகளில் ஒருயிடத்தில் கூட வெற்றி பெற முடியாது. பேரூராட்சி தலைவர்க்கே அந்த நிலை என்றால் நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்குள் நான் போகவில்லை. அதுதான் மதிமுகவின் நிலை. இருந்தும் அவர் பின்னால் இப்போதும் இருக்கும் தொண்டர்கள் மட்டும், புரட்சிபுயல் தான் அடுத்த முதல்வர் என்கிற ரீதியிலேயே இணையத்தில் வம்பளக்கிறார்கள், அளந்துக்கொண்டே இருப்பதை கண்டு ஆச்சர்யமாக இருக்கும். தொடர் அவதானிப்புக்கு பின் தான் புரிந்தது அவர்கள் தொண்டர்களல்ல, அடிமைகள் என்று.  

கடந்த 2014 நாடாளமன்ற தேர்தலின் போது பாஜக தலைமையில் தேமுதிக, பாமக, தேமுதிக, புதியதலைமுறை தொலைக்காட்சி பாரிவேந்தர், முதலியார் கட்சி ஏ.சி.சண்முகம் உட்பட இன்னும் சிலர் இணைந்து அமைத்த கூட்டணி, தமிழகத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என பிரச்சாரம் செய்தார்கள். அதிலும் வை.கோ ஒன்னரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறார், அவர் தான் அடுத்த அமைச்சர் என்றெல்லாம் எழுதினார்கள் இணையத்தில் இயங்கும் மதிமுக தொண்டர்கள். அதோடு, 25 தொகுதிகளை பிடிக்க போகிறோம் என எழுதினார்கள். அதை படிக்கும்போதுயெல்லாம் சிரிப்பதா, அழுவதா என தெரியாமல் இருந்தேன். அப்போது நண்பர்களிடம் நான் சொன்னது இதுதான் இரண்டு இடங்களில் ஜெயித்தால் பெரிய விஷயம்மென்று.

அந்த தேர்தல் முடிவு வருவதற்க்குள் மதிமுகவுக்காக இணையத்தில் இயங்குபவர்கள் எழுதிய எழுத்தை கண்டபோது, மக்களை சந்திக்கிறார்கள், அப்படியும் கள நிலவரம் தெரியாமல் எப்படி இவர்களால் வெற்றி, வெற்றி, மாபெரும் வெற்றி என எழுத முடிகிறது என நினைப்பதுண்டு. அதிலும் நீண்ட பழுத்த அனுபவம் கொண்ட பத்திரிக்கையாளர்கள் அப்போது இனி தமிழ்நாட்டில் வை.கோ தான் என எழுதினார்கள். நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும் நாடாளமன்ற தேர்தல் முடிவு, தமிழகத்தில் பாஜக கூட்டணி தமிழகத்தில் புஸ்வானம் என காட்டியது. தமிழகத்தில் இரண்டு இடங்களில் அதுவும் மதமும், சாதி பற்றும் இருந்ததால் பொன்னரும், அன்புமணியும் ஜெயித்தார்கள், அவ்வளவு தான் அந்த கூட்டணியால் செய்ய முடிந்தது.

இதோ இப்போது நடைபெறுவுள்ள 2016 சட்டமன்ற தேர்தலில் முதலில் மதிமுக, விசிக, சி.பி.எம், சி.பி.ஐ இணைந்து ஏற்படுத்திய மக்கள் நலக்கூட்டணி தான் தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று அணி, நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என மீண்டும் இணையத்தில் இறங்கி அலம்பல் செய்தார்கள் மதிமுகவினர். அந்த கூட்டணியில் தேமுதிகவும், இப்போது தமாக வாசனும் இணைந்தபின், மதிமுகவினரை விட இடதுசாரிகள் பூரித்து கொண்டாடுவதை காணும்போது, க்யூபாவை மீட்ட பிடல்காஸ்ட்ரோ கூட இப்படி கொண்டாடியிருக்கமாட்டாரே என எண்ண தோன்றுகிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் இப்போதே ஆட்சி கட்டிலில் அமர்ந்ததுபோலவே பூரிக்கிறார்கள் தமிழக கம்யூனிஸ்ட்கள். அதிலும் ஏப்ரல் 10ந்தேதி மாமண்டூரில் நடந்த தேமுதிக – மநகூ மாநாட்டை பிரமிப்பாக பேசுகிறார்கள். அந்த மாநாட்டுக்கு வந்ததே 15 ஆயிரம் பேர் தான் என்கிறார்கள் விசிக்கள். அப்படிப்பட்ட மாநாட்டை பிரமாண்டம் என்கிறார்கள். இடதுசாரிகளுக்கு 500 பேரும், வை.கோவுக்கு 1000 பேரும், விசிகாவுக்கு 2000 பேர் வந்தாலே அது பிரமாண்ட தான். அதனால் அவர்கள் பூரிப்பதில் அர்த்தம்மிருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் சிலர் சிலாகிப்பதை தான் எப்படி என புரிந்துக்கொள்ள முடியவில்லை. பத்திரிக்கை நண்பர்களே, நாடாளமன்ற தேர்தலில் தேமுதிக, பாமக, பாஜக, மதிமுக, சின்ன சின்ன இயக்கங்கள் நடத்தும் பெரும் கோட்டீஸ்வரர்கள் இருந்தபோதே அந்த கூட்டணியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது தேமுதிக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்கள், தமாக உள்ள கூட்டணியை பெரிய வெற்றி கூட்டணி என சிலாகிக்கிறிர்களே எந்த அடிப்படையில் அப்படி புகழ்கிறிர்கள் என விளக்கினால் நன்றாக இருக்கும்.

மதிமுக தலைவர் மற்றும் தொண்டர்களை மிஞ்சி இணையத்தில் சலம்பும் இடதுசாரிகளே, நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள், மேடையில் உட்கார இடம்மில்லாமல் தவித்தோம் என நீங்கள் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம், ஆனால் உங்கள் கூட்டணியிடம் பூத்தில் உட்கார தொண்டர்கள் கிடையாது என்பதே எதார்த்தம். அதை தேமுதிக, விசிக தொண்டர்கள் நன்றாக உணர்ந்து வைத்துள்ளார்கள். அவர்களை போல் இருக்க பழகிக்கொள்ளுங்கள். எதார்த்தத்தை பேசுங்கள், ஏன் எனில் மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக