புதன், ஏப்ரல் 06, 2016

மக்கள் விருப்பத்துக்கு எதிராக மாறினால் கட்சிகள் காணாமல்போகும்.சமீபத்தில் அரசியல் ஆய்வாளர்களுடனான கலந்துரையாடலில் நான் சொன்னது தான். மக்களின் எதிர்பார்ப்புக்கு, அவர்கள் விரும்பியதற்க்கு எதிராக எது நடந்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்கள் நினைப்பது போல் நடந்தால் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள், இல்லையேல் தூக்கி போட்டு அழித்துவிடுவார்கள். கடந்த கால தேர்தல்களின் போது மதிமுக, பாமகவை இப்படி காலி செய்த மக்கள் இந்த தேர்தலில் தேமுதிகவை காலி செய்யவுள்ளார்கள்.

பொடா சட்டத்தின் கீழ் ஜெவால் சட்டத்துக்கு புறம்பாக சிறையில் அடைக்கப்பட்ட வை.கோ, கலைஞர் அழைக்கிறார் வருகிறேன் என ஓராண்டுக்கு பின் பிணையில் வெளியே வந்தார். 2004 நாடாளமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து நான்கு இடங்களில் நின்று வெற்றி பெற்றது மதிமுக. 2006 சட்டமன்ற தேர்தல், திமுகவுடன் கூட்டணியில் இருந்தவர் அதிக சீட்க்கும் 40 கோடிக்கு ஆசைப்பட்டு அதிமுகவுக்கு செல்கிறார் என தமிழக ஏடுகள் கிசுகிசுத்தபோது, மக்கள் நம்பவில்லை. மக்கள் மட்டும்மல்ல வை.கோவின் தாயாரே, என் மகன் அப்படி செய்யமாட்டான் என்றார். அவர் பேட்டி அச்சாகி வந்த பேப்பர் மை காய்வதற்க்குள் வை.கோ அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார். நான் அறிந்தவரையில் மக்கள் மனதில் இருந்து வை.கோ நீங்கியது அப்போதுதான். காரணம், மக்கள் வை.கோவை நம்பினார்கள், வை.கோ ஏமாற்றினார். மக்களை ஏமாற்றிய வை.கோவை மக்கள் புறக்கணித்தார்கள். அதனால் தான் இன்று அவர் கட்சி ஒரு வார்டு கவுன்சிலராக கூட ஜெயிக்க முடியாத அளவுக்கு பலமிழந்து போனது.

இன்று பாமக தனித்து நிற்கும் முடிவை அன்புமணி எடுக்க காரணம், முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக அல்ல. தன் கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார், வன்னிய மக்களே அந்த கட்சியை புறக்கணித்ததால் மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடிக்க நினைக்கிறார். அதனால் தான் தனித்து நிற்கிறேன் என்கிறார். மக்கள் மனதில் இருந்து பாமக விலக காரணம், 2004 நாடாளமன்ற தேர்தல், 2006 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்தது பாமக. 2004ல் பாமக 6 தொகுதிகளில் நின்றதாக நினைவு. ராமதாஸ் – நடிகர் ரஜினியின் தனிப்பட்ட மோதலில் அந்த தேர்தலில் பாமக தோற்க வேண்டும் என ரஜினி வாய்ஸ் தந்தார். ஆனால் அந்த வாய்ஸ் எடுபடாமல் பாமக வெற்றி பெற்றது. அதே பாமக, 2009 நாடாளமன்ற தேர்தலில் 7 சீட் தருகிறார்கள் என அதிமுக கூட்டணிக்கு போக முடிவு செய்துள்ளது என்ற செய்தி வெளியானபோது, கூட்டணி மாறினால் ராமதாஸ்க்கு, மக்கள் மத்தியில் பெரும் சரிவு ஏற்படும் என்றார்கள், அதை அவரும் ஏற்றுக்கொள்ளவில்லை, அவரது கட்சியினரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்தது பாமக. அது நின்ற 7 இடங்களிலும் தோல்வி. அதே ராமதாஸ் 2011ல் மீண்டும் திமுக கூட்டணிக்கு போகிறார் என தகவல் பரவியது. ராமதாஸ் போனால் மக்கள் மத்தியில் இன்னும் இமேஜ் காலியாகிவிடும் என்றார்கள். அதை அவர் ஏற்றுக்கொள்ளாமல் திமுகவோடு கூட்டணி வைத்தார் சரிவை சந்தித்தார்.


மதிமுக, பாமக என்றில்லை திமுகவும் மக்கள் நினைத்ததுக்கு மாறாக ஒரு முடிவு எடுக்க அதற்கும் தண்டனை தந்தார்கள். 2011 சட்டமன்ற தேர்தலில், திமுக தோற்கும் என மக்கள் நம்பினார்கள். ஆனால் பெரிய அளவிலான சரிவை கொடுத்ததுக்கு முக்கிய காரணம், 2ஜியோ, குறுநில மன்னர்களோ காரணமல்ல. காங்கிரஸ்க்கு 63 இடங்களை தந்ததை தான் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கட்சி தலைவர்களை விட தொண்டர்கள் குறைவான காங்கிரஸ் கட்சிக்கு இத்தனை இடங்களா என மக்கள் அதிர்ந்தார்கள் அதனால் தான் பெரும் தோல்வியை திமுகவுக்கு தந்தார்கள்.

பத்திரிக்கையாளர்களிடமும், மீடியா மைக் முன்பும் வந்து யார் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என மக்கள் தங்களது கருத்துக்களை கூற மாட்டார்கள். ஆனால், யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் முடிவு செய்து வைத்துக்கொண்டு இருப்பார்கள். அதை கட்சிகள் தான் உள் வாங்கிக்கொள்ள வேண்டும். மக்கள் நினைப்பதற்கு மாறாக கட்சி தலைமை முடிவு எடுக்கும் போது, தங்கள் மனதில் இருந்து அந்த கட்சியை தூக்கி வீசிவிடுவார்கள்.

இந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அப்படி ஒரு தப்பை செய்துவிட்டது.  

திமுகவுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்கும் என பலமுறை வாக்களித்த 80 வயது பெருசு முதல் முதல் முறை வாக்களிக்க போகும் 18 வயது சிறுசு வரை நம்பினார்கள். அந்த நம்பிக்கையை தேமுதிக ஏமாற்றியது. ஏமாற்றியது மட்டும்மல்லாமல், நான் தான் கிங் என்றதை மக்கள் காமெடியாக தான் பார்த்தார்கள். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வேறு யாராலும் இப்போதைக்கு தமிழகத்தில் முதல்வராக முடியாது என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக. இதை நான் தான் அடுத்த கிங் என்பவரும், கிங் மேக்கர்களுக்கு புரியாமல் இருக்கலாம், மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் கிங் என்பரை கேலியாக பார்க்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டு காலத்தில் ஆளும்கட்சியாகவுள்ள அதிமுக மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி உருவாகியுள்ளது. அதிமுகவை எதிர்க்கும் சக்தி இப்போதுக்கு திமுகவுக்கு மட்டும்மே உள்ளது என்பதாலே திமுக கூட்டணி பலம் பெற வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதோடு, அதிமுகவால் பாதிக்கப்பட்ட தேமுதிக திமுகவோடு சேர்ந்தால் மட்டும்மே ஆளும்கட்சியான அதிமுகவை வீழ்த்த முடியும் என மக்கள் நம்பினார்கள்.

ஆனால், அந்த நம்பிக்கைக்கு மாறாக, மக்கள் நலக்கூட்டணியோடு தேமுதிக கூட்டு என்றதை கம்யூனிஸ்ட்டுகளும், மதிமுகவினர் வேண்டுமானால் கொண்டாடியிருக்கலாம். தேமுதிக தொண்டர்கள் அதை விரும்பவில்லை. அதைவிட முக்கியம் மக்கள் விரும்பவில்லை. மநகூவையே விரும்பாத மக்கள் தேமுதிக அந்த கூட்டணியில் இணைந்ததை பரிதாபமாக தான் பார்க்கிறார்கள். விஜயகாந்த் கட்சி காலி என்பதை பிற கட்சிகள் பேசவில்லை. மக்கள் பேசினார்கள். அவர்கள் பேச காரணம், கள எதார்த்தம் அவர்களுக்கு தான் தெரியும்.

விஜயகாந்த்துடன் கூட்டணி வைக்க திமுக பண பேரம் பேசியது என வை.கோ வெளிப்படையாக குற்றம்சாட்டினார். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தில் அமைக்கும் கூட்டணிக்கு பின்னால் உள்ள பேரம் மக்களுக்கும் நன்றாக தெரியும். பேரம் பற்றி மக்களுக்கு கவலையில்லை. அவர்களுக்கு தேவை தாங்கள் நினைப்பது நடக்க வேண்டும். அதுவே அவர்களது கவலை. அது நடக்காதபோது அவர்கள் யாராகயிருந்தாலும் தூக்கிவீசிவிடுவார்கள்.

மதிமுக, பாமக வரிசையில் தேமுதிக இணைந்துள்ளது.................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக