திங்கள், பிப்ரவரி 15, 2016

ஊழல் வழக்கில் இருந்து காத்துக்கொள்ள மிரண்டு ஓடிய எம்.ஜி.ஆர்.


தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் பொற்காலம், ஏழைகளுக்காக ஆட்சி நடத்தியவர் என புலங்காகிதம் அடைபவர்கள் பலர். ஆனால், எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் எம்.ஜி.ஆர்க்கு தெரிந்தும், அவரே முன்னின்று நடத்திய ஊழல்கள் பல. அவைகளை திட்டமிட்டே மறைத்து வருகிறார்கள். ஆதாரபூர்வமாக பல ஊழல்கள் வெளிவந்தாலும் அவை அப்படிறே மறக்கடிக்கப்பட்டன. புத்த பிரானின் வாரிசாக அவரை கட்டமைக்கிறார்கள். 32 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ஒரு ஊழல் வழக்கின் தீர்ப்பு எம்.ஜி.ஆர் முகமுடியை கிழிக்கிறது. இன்றைய இளைய சமூகம் அறிந்துக்கொள்ள......

1982 ஆம் ஆண்டு தமிழகத்தில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சி. அந்த ஆட்சியில் ஆர்.எம்.வீரப்பன், காளிமுத்து போன்றவர்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்தார்கள். அந்த அமைச்சரவையில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக காளிமுத்து இருந்தார். தனது வேளாண்மைதுறை நிதியை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்வதாகவும், அதற்கு கைமாறாக அவர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டுமென ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு 82-83களில் வேளாண்மை துறை நிதியை வங்கிகளில் முதலீடு செய்கிறார்.  

காளிமுத்துவின் சிபாரிசின் பேரில் அவரது நண்பர்கள் ராபின் மெயின், சூரியக்குமார், சாகுல் அமீது, சோமசுந்தரம், பசில்சாம் உள்ளிட்ட சிலர் ஒன்றரை லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை லாரி மற்றும் டிராக்டர்கள் வாங்குவதற்கு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். கடன் பெற்றவர்கள் வாகனங்கள் வாங்கிவிட்டோம் என ஆவணங்களை வங்கிகளில் சமர்பித்துள்ளனர். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல 15 லாரி மற்றும் டிராக்டர்கள் வாங்கியுள்ளனர். கடன் பெற்றவர்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணை தொகைய செலுத்தவில்லை. வாகனங்களை பறிமுதல் செய்ய முயன்றபோது, அவர்கள் தந்த ஆவணங்கள் போலி என தெரியவந்தது வங்கி அதிகாரிகளுக்கு. வங்கிகள் சார்பில் மத்திய புலனாய்வு துறையான சிபிஐயிடம் புகார் செய்தனர்.
 
1984ல் வழக்கு பதிவு செய்து விசாரிக்க தொடங்கியது சிபிஐ. முன்னாள் அமைச்சர் காளிமுத்து, அவரது உதவியாளர் மாணிக்கம், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ராபின் மெயின், சூரியக் குமார், சாகுல் அமீது, பேசில் சாமுவேல், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 6 பேர், வாகன மதிப்பீட்டாளர்கள் 4 பேர் உள்ளிட்ட 32 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். மோசடி, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

1985 அக்டோபர் மாதம் ராபின் மெயின் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார். அவர் அப்போது அமைச்சராக இருந்த காளிமுத்துவின் நண்பர் என்பதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது. இப்படி ஒரு புகார் கிளம்ப காரணம், அப்போது அதிமுக வின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா தான் என குற்றச்சாட்டினார் காளிமுத்து. 

இரண்டாவது முறையாக கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் நியமித்த தருனம்மது. அதற்கு கட்சியில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதை பயன்படுத்திக்கொண்ட காளிமுத்து, தமிழகத்தில் திராவிட கட்சியின் அதிகாரத்தை முடிவுக்கொண்டு வர ஜெயலலிதா மத்திய காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளார், அதன் ஒரு பகுதியாக தான் அதிமுக மீது குற்றச்சாட்டுகளை சுமத்த இந்த பிரச்சனை கிளப்பப்பட்டது, இதற்கு பின்னணியில் இருந்து தகவல்களை எடுத்து தந்தவர் ஜெயலலிதா தான் என்றும், மேலும் இந்த வழக்கு தொடர்பாக னது உதவியாளர் மாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரி ஒருவர், மூன்று மாதங்களில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற இந்திரா காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவை தமிழக முதல்வராக்கவும் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்ற தகவலை கூறினார். 


இதைக்கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, காளிமுத்து என இருவரையும் வரவைத்து விசாரித்தார். கற்பனையாக காளிமுத்து குற்றச்சாட்டுகளை சொல்லிக்கிட்டு இருக்கார் என மறுத்துள்ளார் ஜெயலலிதா. நான் அவரது அரசியல் எதிர்காலத்துக்கு சவாலாக இருப்பேன் என்றே என்னை இந்த விவகாரத்தில் மாட்டவைக்க திட்டுள்ளார் ஜெயலலிதா என்றுள்ளார். 

இந்த பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் வேறு பல பிரச்சனைகள் மற்றும் அமைச்சர் காளிமுத்து மீதான ஊழல், மோசடி வழக்கால் எதிர்கட்சியாக இருந்த திமுகவின் நெருக்கடியால் இதிலிருந்து தப்பிக்க 1985 அக்டோபர் 28-ம் தேதி எம்.ஜி.ஆர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை தந்தனர். இதனால் இருவரின் மோதல் தற்காலிகமாக ஒரு முடிவுக்கு வந்தது.  

அந்த நேரம், சிபிஐ தனக்கு எதிராக சிறையில் உள்ள ராபின்மெயினிடம் வாக்குமூலம் பெற சிபிஐ முயற்சிப்பதாக எம்.ஜி.ஆரிடம் வந்து கதறினார் காளிமுத்து. காளிமுத்துவுக்கு குறிவைப்பவர்கள், அடுத்து தன்னிடம் வருவார்கள் என தெரிந்து, தன்னையும், தனது அமைச்சரவை சகாவை காப்பாற்ற முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும், சட்ட அமைச்சர் பொன்னையனும் காவல்நிலைய லாக்-அப் நிலவரம் அறிவதாக கூறி ராபின்மெயின் அடைக்கப்பட்டுயிருந்த எழும்பூர் காவல் நிலையத்துக்குச் சென்றனர். ராபின்மெயினை எம்.ஜி.ஆர் மிரட்டியதாக எதிர்கட்சிகள் புகார் கூறின. மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசிடம் பேசி அந்த லஞ்ச வழக்கில் இருந்து தன்னை மட்டும் காத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.

1984-ல் சி.பி.ஐ பொருளாதார குற்றப்பிரிவினரால் தொடரப்பட்ட இந்த வழக்கில் 1987-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதே ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தார். அவருக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அதுவரை ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவந்த காளிமுத்து, ஜெயலலிதா தரப்பில் ஐக்கியமானார். பின்னர் அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.ஆனார். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பிரச்சனையில் காளிமுத்து திமுகவுக்கு திரும்பினார். மீண்டும் அதிமுகவுக்கே வந்தார். 2001-ல் சட்டப்பேரவை சபாநாயகராக்கினார் ஜெயலலிதா. 

2005-ல் ராபின்மெயின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு காளிமுத்துவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அப்போது, காளிமுத்து பதவி விலக வேண்டும் என வலுவான எதிர்ப்புக் குரல் உருவானது. ஆனால், சபாநாயகர் பதவியை காளிமுத்து ராஜினாமா செய்யத்தேவையில்லை என முதல்வராக இருந்த ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்தார். வழக்கில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக பின்னர் காளிமுத்து மாரடைப்பில் இறந்தார்.

 1987ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 96 சாட்சிகள் விசாரிக்கப்பட்டபின் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016 ஜனவரி 29ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த காளிமுத்து உட்பட 16 பேர் வழக்கு நடத்து கொண்டிருக்கும்போதே இறந்துவிட்டதால் தற்போது உயிருடன் உள்ள 16 பேர் மீது வழக்கு நடைபெற்றது. 16 பேரில் 11 பேர் நிரபராதிகள், 5 பேர் குற்றவாளிகள் என சென்னை சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்ற நீதிபதி வெங்கடசாமி தீர்ப்பு வழங்கினார். காளிமுத்து நண்பர் ராபின் மெயின், சூரியக்குமார், சோமசுந்தரம், சாகுல் அமீது, பாசில் சாம் ஆகியோர் 7 ஆண்டு முதல் 2 ஆண்டு வரை தண்டனை பெற்றுள்ளனர். இவர்களுக்கு மொத்தம் ஒரு கோடியே 65 லட்சத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

1 கருத்து:

  1. எம்ஜிஆர் ஒரு வள்ளல்தான் இந்த கையால் "எடுத்து" அந்தக்கையால் கொடுத்தவர்தான் .அனால் எங்கிருந்து எடுத்தார் என்பதுதான் கேள்வி .எம்ஜிஆரை பகைத தவர்கள் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி நீடிக்கமுடியாது இது வரலாறு .எம்ஜிஆரின் ஆட்சியில் அமைசசர்கள் கல்வி முதலாளியானதும் ,சாராய முதலாளிகள் ஆனதும் வரலாறு .கருணாநிதி கொள்கை மிக்கவர் என்பதும் ஜெயலலிதா நிர்வாக திறமைமிக்கவர் என்பதும்
    கேலிக்கு உரியதோ அதேபோல்தான் எம் ஜி ஆறும் .

    பதிலளிநீக்கு