திங்கள், செப்டம்பர் 20, 2010

மலராத மறுமலர்ச்சி திமுக.





அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 15ந்தேதி அண்ணாவின் பூமியான காஞ்சிபுரத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மாநாடு நடத்தியது. தமிழகம் முழுவதிலிரும்மிருந்து மதிமுக தொண்டர்கள் காஞ்சிபுரம் வந்திருந்தனர். பிரமாண்ட பொதுக்கூட்டம் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அங்கு திரண்ட கூட்டத்தை கண்டு நடுநிலையாளர்கள் அதிர்ந்து போயினர். காரணம் இன்றைய சூழ்நிலையில் நேற்று முளைத்த கட்சிகள் முதல் சாதாரண ஜாதி, லட்டர் பேட் கட்சிகள் கூட பொதுக்கூட்டம் என்றால் குறைந்தது 3 ஆயிரம் பேரையாவது திரட்டுகிறார்கள்.

ஆனால் கட்சி ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆன கட்சி, மத்திய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி சுகம் பெற்ற கட்சியின் ஒரு மிக முக்கிய கூட்டத்திற்க்கு வந்திருந்த கூட்டம் வெறும் 15 ஆயிரத்துக்குள் தான் என்பது வேதனைப்பட வேண்டிய விவகாரமாகியிருக்கிறது.
1994ல் மதிமுக என்ற கட்சி உருவானபோது நடத்திய முதல் கூட்டத்தில் கூடிய கூட்டம் திமுகவை அசைத்து பார்ப்பவையாகயிருந்தது. அந்த கூட்டம் எங்கே போனது? எதனால் இந்த சரிவு?.

உள்ளுர் வரலாறு முதல் உலக வரலாறு வரை விரல் நுனியில் வைத்திருப்பவர் வை.கோ. மாற்றான் தோட்டத்தின் மல்லிகையும் மணக்கும் என்பதை போல வை.கோ வை எதிரியாக நினைத்த திமுகவின் தீவிர தொண்டன் கூட வை.கோ பேச்சு என்றால் மயங்குவான். அந்தளவுக்கு பேச்சு மன்னன்.

கறுப்பு துண்டை இழுத்துவிட்டுக்கொண்டு அவர் பேசும் அனல் பேச்சு மயக்க வைக்கும். விடுதலை புலிகளை ஆதரித்து பேசினார் என பொடா சட்டத்தில் 19 மாதம் சிறையில் துன்பப்பட்ட வை.கோவை வெளியே வர வைத்த திமுக தலைவர் கலைஞர், 2004 ஆம் ஆண்டு பாராளமன்ற பொது தேர்தலில் மதிமுகவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு 4 இடங்களை தந்து தமிழகம் முழுவதும் புழல் வேக பிரச்சாரத்தி;ற்க்கு இந்த புலி தலைவரை அனுப்பிவைத்தார்.

ஊர் தோறும் பவனி சென்று அப்போதைய முதல்வாரன ஜெயலலிதாவை, அவரால் பொடா சட்டத்தில் தள்ளப்பட்டு சிறையில் தான் பட்ட துன்பத்தை பொதுமக்களிடம் விளக்கினார். ஜெயலலிதா தமிழக மக்களை அழிக்க வந்த சாத்தான் என வர்ணித்து பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40என வென்றது. 

அந்த வெற்றியில் குறிப்பிட தக்க பங்கு வை.கோவின் பேச்சை சாரும். அந்த வெற்றியின் போதை குறைவதற்க்குள் அடுத்து வந்த 2006 சட்டமன்ற தேர்தலில் வை.கோ அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். கலைஞர் மதிமுகவை அழிக்க பார்க்கிறார். அதனால் தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறேன் என காரணம் சொன்னார்.

பக்கத்து வீட்டுக்காரன் புகார் தந்தாலே அவனை ஜென்ம விரோதியாக பார்க்கும் இந்த உலகில் 19 மாதம் பொடா சிறை வாசம் ஜெயலலிதாவால் அனுபவித்தவர் அந்த நினைவுகள் நீங்கும் முன்பே மறப்போம், மன்னிப்போம் எனச்சொல்லிவிட்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்ததையும், ஜெவுடன் ஜாலியாக சிரித்து பேசியதையும் அதற்க்கு அவர் தந்த விளக்கத்தையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களின் எண்ணம் தேர்தல் முடிவில் தெரிந்தது. அதிமுக கூட்டணியில் 36 இடங்களில் நின்ற மதிமுகாவால் 6 இடங்களில் தான் வெல்ல முடிந்தது. அப்போதே புரிந்து போனது மதிமுகவின் சரிவு. 

தோல்வியிலும் தன்னை மாற்றிக்கொள்ளாத வை.கோ, எங்கு எதனால் இந்த சரிவு என ஆராயாமல் தன் விவேகத்தை நம்பாமல் முன்பை விட அதிகமான கோபத்தோடு களமிறங்கினார். அரசியல்வாதிக்கு தேவை விவேகம் தானே தவிர வேகமும், கோபமும்மல்ல என்பதை அரசியல் கட்சி தலைவரான பின்பும் புரிந்துக்கொள்ள தவறிவிட்டார்.

எதிர் கட்சிகள் மீதான விமர்சனம் என்பதை தாண்டி தனிப்பட்ட தாக்குதல்களை அதிகமாக வைத்ததை அவரின் பேச்சை ரசிக்கும் நடுநிலையாளர்கள் மட்டுமல்ல அவரின் கட்சியினரால் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காலப்போக்கில் அதிமுகவின் பேச்சாளர் போல் பேசியதை அவரின் கட்சி மேல் மட்ட தலைவர்கள் உட்பட யாரும் ரசிக்கவில்லை.

வை.கோவின் நடவடிக்கை பிடிக்காமல் அவரிடம் தொண்டர்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தியவர்களை ஒதுக்கினார் வை.கோ. இந்த ஒதுக்கலை அறிந்து திமுக விரித்த வலையில் விழுந்தனர் வை.கோவுக்கு இடதும் வலதுமாகயிருந்த செஞ்சி.ராமச்சந்திரன், எல்.கணேசன், கண்ணப்பன், ராமகிருஷ்ணன் போன்றோர். ஆந்த வலையில் விழுந்தவர்களை தக்க வைக்கும் திறன்யில்லாமல் போய்விட்டது வை.கோவுக்கு. இது மதிமுகவின் அடித்தளத்தையே இல்லாமல் செய்துவிட்டது.

1992ன் இறுதியில் திமுக தலைவர் கருணாநிதியை கொல்ல பாக்கிறார் என உளவுத்துறை கிளப்பி விட்ட தகவலால் திமுக தலைமையால் வெளியேற்றபட்ட வை.கோவை பல மா.செகள் ஆதரித்தனர். அப்போது திமுகவில் கலைஞர் கருணாநிதியின் தளபதிகளாகயிருந்த செஞ்சிராமச்சந்திரன், எல்.கணேசன், கண்ணப்பன் போன்றோர் மிக முக்கியமானவர்கள். மதிமுக வளர இவர்கள் எந்தளவுக்கு பாடுபட்டார்கள் என்பது மற்றவர்களை விட வை.கேவுக்கு தெரியும். ஆனால் தன்னால் தான் கட்சி தனக்கு பின்னால் தான் தொண்டர்கள் என தப்பு கணக்கு போட்டு அவர்களை வெளியே விட்டார் இன்று அதன் பலனை அறுவடை செய்கிறார். 



2009 பாராளமன்ற தேர்தலின் போது ஈழ போர் பற்றி பேச முடியாத கூட்டணியில் மாட்டிக்கொண்டு அவரின் கருத்தை வெளிப்படையாக சொல்லக்கூட முடியாத, போராட முடியாத இடத்திற்க்கு போய்விட்டார். வை.கோவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவரின் பேச்சாற்றல் என்றால் அவர் கட்சி அதன் பின் உயிர்ப்போடுயிருந்தது அவர் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைபுலிகளை கட்சி கொள்கையாகவே வைத்து ஆதரித்ததால் தான்.

அதனால் தான் தமிழகத்தில் இருந்த ஈழ உணர்வாளர்கள் அவர் பின்னால் அணி திரண்டனர். ஆனால் அதைக்கூட சரியாக கடை பிடிக்க முடியவில்லை என்ற கருத்து தற்போது மதிமுக தொண்டர்களிடையே நிலவுவது வேதனைக்குரியது. காஞ்சிபுரம் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய வை.கோ, ஈழம் தொடர்பான கருத்துகளில் அடக்கியே வாசித்தது அவர்களை மனம் நோக வைத்துள்ளது.

முதலில் அதிமுகவில் தன் பேச்சை அடகு வைத்தவர். தற்போது கட்சியின் கொள்கைகளையும் அடகு வைத்துவிட்டார். இதனால் மதிமுக பெற்ற பலன், கட்சி தளபதிகள். முக்கியஸ்தர்கள், கட்சியின் அங்கீகாரம் போன்றவை பறிபோனது தான். 

வரும் சட்டமன்ற தேர்தலில் கடந்த தேர்தலில் கடந்த தேர்தலில் பெற்றதை போல இந்த முறையும் சீட் வாங்க வேண்டும் அதற்க்கு தன் கட்சியின் பலத்தை காட்டினால் தான் சரியாக வரும் என முடிவு செய்தே கட்சி மாநாட்டை நடத்தினார். ஆனால் அது தோல்வியில் முடிந்து விட்டது.

வரும் தேர்தலில் மதிமுகவுக்கு அதிமுக தலைமை 20 சீட் தந்தாலே அதிகம். கருணாநிதி மதிமுகவை அழிக்க பார்த்தார் என குற்றம் சாட்டினார். ஆனால் ஜெவோ, வை.கோவின் கோபத்தை வைத்து அந்த கட்சியை காலி டப்பாவாக மாற்றி விட்டார். இனி அவரின் எண்ணம் போல் தான் மதிமுக செயல்பட்டாக வேண்டிய நிலைமை என்பது கவலைக்குரியது.

தமிழக வரலாற்றில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மலராமல் போய்விட்டது பரிதாபத்திற்க்குரியது.

1 கருத்து:

  1. இங்கு பல கட்சிகளிடம் எந்த கொள்கையும் இல்லை. இருப்பினும் வைகோவிடம் இருந்த கொள்கைகளை தொடர்ந்து ஜெவிடம் அடகு வைத்து இருப்பதால் அவருக்கு சரிவு மட்டுமே. ஈழ போர் சமயம், கொள்கைக்காக ஜெவை விட்டு வெளியே வந்து தனியாக இருந்து தமிழ் உணர்வாளர்களை ஒன்று சேர்த்திருந்தால் அவரின் நிலையே வேறு. ஈழ போர் வேறு மாதிரி சென்று இருக்கும். நீங்கள் சொன்ன வரிகள் அற்புதம். விவேகம் வேண்டும் வைகோவிற்கு. வெட்டி பேசும், உணர்ச்சி பேசும் அல்ல.

    பதிலளிநீக்கு