வியாழன், செப்டம்பர் 16, 2010

சிறைக்கம்பிக்குள் கலைஞர்கள்.

சிறை என்றால் கொடூரமானவர்களின் கொட்டடி, திருந்தாதவர்களை திருத்தும் இடம் என அனைவரும் எண்ணிக்கொண்டுருப்பார்கள். ஒருவிதத்தில் அதுவும் உண்மை தான். ஆனால் சிறைபட்டவர்கள் எல்லோரும் தவறு செய்யவே பிறக்கிறோம் என எண்ணி பிறந்தவர்கள்யில்லை. ஏதோ ஒரு சூழ்நிலையில் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்தவர்கள் தான் அதிகம்.

அவர்கள் யாரையும் கொலைகாரர்களாகவே, ரவுடிகளாகவோ பார்ப்பதில்லை வேலூர் மத்திய சிறை நிர்வாகம். மனிதர்களாக பார்த்து அவர்களை அடிக்காமல்,
உதைக்காமல் நல்வழிப்படுத்த முயற்சிக்கிறது. அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வந்து பல கவிஞர்களை, ஓவியர்களை, படிப்பாளிகளை, தொழில் கலைஞர்களை உருவாக்கிவருகிறது.

157 ஏக்கர் பரப்பளவில் 150 ஆண்டுகள் பழமையான வேலூர் மத்திய சிறையில் தான் இந்த ஆச்சர்யம். சிறைவளாகத்துக்குள் ஒரு குற்றவாளி வருகிறான் என்றால் அவனிடம் கேட்கப்படும் முதல் கேள்வி கையெழுத்து போட தெரியுமா? என்ன படிச்சிருக்க? என்ற கேள்வி தான்.

படிக்கலயா? சரி, நாளையிலயிருந்து ஸ்கூல் போகணும். 10வது படிச்சியிருக்கியா மேல ஏதாவது ஒரு டிகிரி படி என சிறைக்கு வருபவர்களுக்கு கல்வி பற்றி போதித்ததன் விளைவு... தற்போது இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைகழகம் மூலமாக எம்.பி.ஏ 6 பேர், பி.சி.ஏ செகன்ட் இயர் 13 பேர், சி.எப்.என் என்கிற 6 மாத கோர்ஸ் 13 நபர்கள், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகம் மூலமாக முதலாமாண்டில் எம்.பி.ஏ 6 பேர், எம்.ஏ தமிழ் 3 பேர், பி.ஏ வரலாறு 25 பேர். தமிழ்நாடு ஸ்டேட் போர்டு மூலமாக 8வது 40 பேர், 10வது 04 பேர், ஆக்சிலியம் காலேஜ் மூலமாக சி.ஐ.எம்.எஸ்ங்கற சர்டிப்கெட் கோர்ஸ் 5 பேர், டி.டீ.பி ஆப்ரேட்டர்க்கான பட்டயப்பயிற்சி 10 பேர் என கல்வி கற்று வருகிறார்கள் கைதிகள்.

இவர்களுக்கு கற்றுதர ஊரிஸ், அக்சீலியம் கல்லூரிகளின் பேராசிரியர்கள் சிறைக்கே வந்து பாடம் எடுக்கிறார்கள். 8வது முதல் 10 வரையிலான மாணவர்களுக்கு டிகிரி முடித்த கைதிகள் பாடம் எடுக்கின்றனர். இந்த சிறை கல்விக் கூடத்திற்க்கு எம்.சி.ஏ படிக்கும் தூக்கு தண்டனை கைதி பேரறிவாளன் தான் மாஸ்டர்.

இவர் தன்னுடன், பாபு, சென்னையன், அசோக், மோகன், சொக்கலிங்கம் என டிகிரி படித்தவர்களை துணைக்கு வைத்துக்கொண்டு பாடம் எடுக்கிறார். கொலை வழக்கில் தண்டனை பெற்ற மயிலாடுதுறை செந்தில்குமாரும், எம்.எஸ்.சி, எம்.எட், எம்.பி.எல் முடித்து எம்.பி.ஏ படிக்கும் ஆயுள் தண்டனை கைதி அருர் சென்னாமூர்த்தியும் ஐ.ஏ.எஸ் படிக்க சிறை கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்க அவரும் இவர்களின் ஆர்வத்தை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

இன்றைய நவயுகத்தில் கம்யூட்டரின் அவசியம் பற்றியும், உலகமே கம்ப்யூட்டர் மையமாகி வருவது பற்றியும் அறிந்து... அதற்கு ஏற்றாற்போல் இண்டர்நெட் இல்லாத கம்ப்யூட்டர் பயிற்சி மையமும் சிறையில் செயல்படுகிறது.

கற்பதில் மட்டுமல்ல... கவிதை எழுதுவதிலும் சிறந்து விளங்குகிறார்கள். சிறையில் நடக்கும் பொங்கல் விழா, தீபாவளி விழா மற்றும் கலை விழாக்களில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்பது இவர்கள் எழுதி தள்ளும் கவிதைகள் தான். கவி ரசம் சொட்டும்,

அருமையான மனிதாபிமான, ஐக்கூ கவிதைகளை எழுதி குவிக்கிறார்கள்.

உலக பொது மறையான திருக்குறளின் 1330 குறளை எப்படி மாற்றி, மாற்றி கேட்டாலும் மனப்பாடமாக சொல்லும் ஆற்றலை சிறைக்கு வந்து கற்றுள்ளார் முனுசாமி. கவிஞர்கள் மட்டுமல்ல ரவிவர்மாக்களும் இருக்கிறார்கள்.

ஒவியம் வரைவது, சிலைகள் செய்வதிலும் தங்களது கை திறனை காட்டும் இவர்கள் வரைவதற்கோ, சிலை செய்வதற்கோ எந்த விதமான பொருட்களும் சிறையில் கிடைக்காத நிலையில் குளிக்க தரும் சோப்பில் வேஸ்டாகவும் துகள்களை சேர்த்து வைத்து விநாயகர் சிலை, அம்மன் சிலை, தாய்மையை போற்றும் பெண்மையின் சிலைகளை தத்ருபமாக வடித்துள்ளார் 52 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள நாகேந்திரன் என்ற இளைஞர். சிலைகள் மட்டுமல்ல பல வகையான ஒவியங்களை வரைந்து பார்ப்பவர்களை அதன் பால் ஈர்த்து விடுகிறார்.

யாரை பார்த்தாலும் அவர்களை அப்படியே அச்சு அசலாக வரையும் அவரின் திறமை அவருக்கே சிறைக்கு வந்தபின் தான் தெரிந்துள்ளது. மரம் போன்ற ஒரே ஓவியத்தில் இந்திய தலைவர்கள் முகங்களை காட்சியமைத்து தன் தூரிகை திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்.

வேலூர் ரோட்டரி க்ளப் மூலமாக 10 தையல் மிஷின்களை இலவசமா பெற்று, லயன்ஸ் க்ளப் மூலமாக தையல் பயிற்சி தந்துவருகிறார்கள். தற்போது 50 பேருக்கும் மேல் தையல் கற்றுக்கொண்டு எல்லா விதமான ஆடைகளையும் தைக்கும் கலைஞர்களாக உருவாகி வருகிறார்கள்.

சுலபமான வேலை என்பதால் பல கைதிகள் தையல் கற்றுக்கொண்டு வித்தியாசமான டிசைன்களை உருவாக்கி தைக்கிறார்கள் இந்த கைதி உடையில் உள்ள இந்த தையல் கலைஞர்கள். தற்போது ஆர்வமுள்ள கைதிகளை 30 பிரிவுகளாக பிரித்து தையல் கலைஞர்களாக உருவாக்கிவருகிறார்கள்.

அதுமட்டுமல்ல வேலூர் சிறையில் உள்ள கைதிகளின் காலணி தயாரிக்கும் கை திறனை கண்டு தீயணைப்பு துறை, காவல்துறை, வனத்துறையில் புதுசாக சேர்பவர்களுக்கு புது சூ ( காலணி ) தர 50 ஆயிரம் ஷீ க்கான ஆர்டர் இவர்களிடம் தந்துள்ளது அரசு. இங்கு பணி செய்யும் கைதிக்கு தோராயமாக மாதத்திற்கு 2000 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கிறார்கள்.

அந்த பணத்தை கொண்டு வழக்கு செலவு, பசங்க படிப்பு செலவுக்கு என பயன்படுத்திக்கொள்கிறார்கள். விடுதலையாகி போகிறவர்கள் புதுசாக வாழ ஒரு தொழிலை கற்று தந்த சந்தோஷத்தில் மேலும் ஊக்கமடைந்து காலணி தயாரிப்பு பிரிவின் டெக்னிக்கல் பிரிவு இன்சார்ஜ்ஜாக பணியாற்றுகிறார்கள் பாஸ்கர், கோபிநாதன், குமார் ஆகியோர்.


மெழுகு வத்தி தயாரிக்க, மருத்துவமனைகளுக்கு பேண்டேஜ் தயாரிக்க, புக்ஸ் பைண்டிங் செய்ய, ஆபிஸ் ஃபேடுங்க செய்வதில் தங்களது கை வண்ணத்தை இதற்கான தொழிலை கற்ற கைதி கலைஞர்கள் காட்ட அதில் ஈர்த்து போன அரசு அரசு அலுவலக ஃபேட் தயாரித்து வழங்க 5லட்சம் ஃபேட் க்கு ஆர்டர் தந்துள்ளது.


இதுமட்டுமில்லை சுற்று சூழலை காக்க தங்களால் ஆனா முயற்சியாக வேலூர் ரோட்டாரி க்ளப் மூலம் 10 ஆயிரம் மரக்கன்றுகளை வாங்கி சிறையில் நட முயற்சியெடுத்து 3 ஆயிரம் மரக்கன்றுகளை தற்போது நட்டுள்ளனர் இயற்கையின் மீது காதல் கொண்ட கைதிகள்.


இதுப்பற்றி வேலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் சேகரிடம் பேசியபோது, பிறக்கும் போது எல்லாருமே நல்லவர்கள் தான். வளர்ப்பு, சூழ்நிலைகள் தான் ஒருத்தரை குற்றவாளியாக மாத்துது. சிறை தண்டனை பெற்று உள்ளே வந்து அவுங்க செய்ததை நினைத்து தினம் தினம் அழும் போது மனிதனா பிறந்த எனக்கெல்லாம் ரொம்ப கஸ்டம்.


அப்படி சிறை தண்டனை பெற்று பல ஆண்டுகளா உள்ள இருக்கறவங்க மனம் உடைஞ்சி வாழ்க்கைய வெறுத்துவிட கூடாதுன்னு தான் அவுங்களுக்கு எதில் இன்ட்ரஸ்டோ அதில் அவர்களை ஈடுபடுத்துகிறோம். அப்படி ஈடுபடுத்தும் போது தான் பல கலைஞர்கள் தங்களோட திறமை தங்களுக்கே தெரியாம தெரிஞ்சிக்கிட்டாங்க.

அப்படி திறமையான கலைஞர்களை ஊக்குவிக்கறோம். தன்னோட கலையை ஒருத்தர் பாராட்டும் போது அவனுக்கு கிடைக்கிற சந்தோஷம் அளவிட முடியாதது. இதனால அவன் இன்னும் சாதனை புரிய துடிக்கிறான். சாதிக்க துடிப்பவர்களுக்குள்ள போட்டிகள் நடத்தி பரிசுகள் தருகிறோம்.


வேலை செய்றவங்களுக்கான கூலியும் தருறோம். அதை அவுங்க குடும்பத்தார் யாராவது பாக்க வர்றப்ப பணத்தை தந்து பசங்கள படிக்க வைன்னு சொல்லும் போது அவுங்க முகத்துல ஒரு சின்ன சந்தோசம் தெரியுமே அது தாங்க எங்களுக்கும் சந்தோஷம்.

ஒரு கைதியோட மனசை மாற்றி அவனை ஒரு மனிதனா மாற்றி திருத்தி அனுப்புகிறவனை வேதனைப்படுத்துவது இந்த சமுகம் தான். ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்து சிறைக்கு வந்தவனை ஜெயிலுக்கு போனவன், ஜெயிலுக்கு போனவன்னு பேசும் போதும், அவனுக்கு எந்த வேலையும் தராம சமுகம் புறக்கணிக்கும் போது மீண்டும் தப்பு பண்ண தூண்டுகிறது.

தமிழ்நாட்டிலேயே வேலூர் சிறைய கல்வியில், ஒழுக்கத்தில், சுற்றுச்சூழலில் முதல் இடத்துக்கு கொண்டு வந்து இலக்கியத்தில், கல்வியில், ஓவியத்தில், தொழிலில் கலைஞர்கள் உருவாக்குவது தான் எங்களோட குறிக்கோள் அது விரைவில் நிறைவேறும் என்று நம்கிறோம் என்கிறார்.

திருத்த முடியாதவர்களை எங்களால் திருத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் கைதிகளை கலைஞர்களாக உருவாக்கும் முயற்சசியில் உள்ள வேலூர் மத்திய சிறை நிர்வாகத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.


-ராஜ்ப்ரியன்

நன்றி - நக்கீரன் இணையதளம் நந்தவனம் பகுதியில் வெளிவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக