சனி, டிசம்பர் 19, 2015

இளையராஜாவுக்காக “பொங்கும்” ரசிகர்களே..........






அனிரூத் இசையமைப்பில், சிம்பு எழுதி பாடிய அந்த பீப் பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. சிம்புவுக்கு எதிராக கடும் விமர்சனமும், போராட்டமும் நடத்தப்படுகிறது.

பெண்களை போகபொருளாக பார்ப்பது என்பது சினிமாவில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. பெண்களை காக்க வந்த நாயகனாக பொதுவெளியில் தன்னை காட்டிக்கொண்ட அதே எம்.ஜி.ஆர் தான் சினிமாவில் அரைகுறை ஆடைகளுடன் ஆடி, பாடி மகிழ்ந்தார். இப்போது அரசியலுக்கு வா தலைவா என அழைக்கும் ரஜினி கூட பெண்களை பெரும்பாலும் எல்லா படத்திலும் வசனங்கள் வழியாக மட்டம் தட்டும் வேலையை செய்கிறார். இன்றைய குட்டி நாயகர்கள் பற்றி சொல்லவே வேண்டாம், வில்லன்களிடம் பெண்கள் என் கண்கள் ஆபத்துன்னா பார்த்துக்கிட்டு இருக்கமாட்டன் என  வசனம் பேசுபவர்கள் கதாநாயகியை டூ பீஸ் ஆடையுடன் ஆடவும், ஓடவும் வைக்கிறார்கள் திரையில்.

அந்த வகையில் தான் நடிகர் சிம்பு அனிரூத் ஜோடி. புரியாத வார்த்தைகளை போட்டு பாட்டு எழுதி குவிக்கின்றனர் தனுஷ்சும், அவரது போட்டியாளரான சிம்புவும். அதற்கு இசையமைக்கிறேன் பேர்வழி என இம்சை செய்கிறார் அனிரூத். இதையும் கைதட்டி ரசித்து அவர்களை உச்சானி கொம்பில் சினிமா உலகம் மட்டும்மல்ல இளைஞர்கள் உலகம் உட்கார வைப்பதால் நாம் என்ன எழுதினாலும் அது இலக்கியம், எப்படி இசையத்தாலும் அது காவியம் என நினைக்கிறார்கள். அப்படி அவர்கள் நினைத்து எழுதி, வெளியானது தான் சிம்புவின் பீப் சாங். கேட்டால் நான் பாத்ரூம்மில் பாடுவேன் அது என் உரிமை என்கிறார். எனக்கு தெரியாது என நழுவுகிறார் அனிரூத்.

இதற்கு பெண்கள் மட்டும்மல்ல பல தரப்பில் இருந்து கண்டனங்கள் வருகின்றன. இதுப்பற்றி ஒரு இசையமைப்பாளராக உங்கள் கருத்து என்ன என இசைஞானியிடம் ஒரு செய்தியாளர் கேட்க, உனக்கு அறிவிருக்கா என செய்தியாளரிடம் கேட்டு தன் இசைஞானத்தை காட்டியுள்ளார் இசைஞானி.

இசையை பாமர மக்களிடம் கொண்டு சேர்த்தவர் இளையராஜா. அவர் இசையமைத்த பாடல்களை முனுமுனுக்காத வாய்கள் இல்லை எனலாம். இசைக்காக பிறந்தவர் எனச்சொல்லும் அளவுக்கு அதோடு ஒன்றிப்போய்வுள்ளார். அதனால் தான் அவரை இசைஞானி என்கிறோம். அப்படிப்பட்ட இசைஞானியிடம் சமூகத்தில் எதிர்ப்பு சம்பாதித்துள்ள ஒரு பாடல் பற்றி கேள்வி கேட்ட செய்தியாளரிடம், உனக்கு அறிவிருக்கா என கேட்பது எந்த விதத்தில் சரி?.

இந்த விவகாரத்தை செய்தி சேனல்களில் பார்த்த இசைஞானி ரசிகர்கள் செய்தியாளரை சமூக தளங்களில் பாய்ந்து பிராண்டுகிறார்கள். அவர் எவ்வளவு பெரிய ஆள், அவரிடம் போய் போயும், போயும் பீப் பாடல் பற்றி கருத்து கேட்கலாமா என்றும், எந்த இடத்தில் எப்படிப்பட்ட கேள்வி கேட்கிறிர்கள் இது திசை திருப்பும் செயல் என்றும், மீடியாக்காரன்களே உங்களால் ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்க முடியுமா என பொங்குகிறார்கள்.

தமிழகத்தில் பீப் பாடல்க்கு எதிராக போராட்டம், சில தலைவர்களின் கண்டன அறிக்கை என வெளியாகிறது. அந்த நேரத்தில், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு வந்த இளையராஜா விழா முடிந்தபின் அதுப்பற்றி காத்திருந்த செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்துவிட்டு கிளம்பும்போது, பீப்சாங் பற்றி கருத்துகேட்கிறார். உடனே கோபத்தில் அனலாக உனக்கு அறிவிருக்கா?, எங்க வந்து என்ன கேட்கிற?, உனக்கு அறிவிருக்குன்னு எந்த அறிவ வச்சி கண்டுபிடிச்ச?, எங்கிட்ட கேள்வி கேட்க உனக்கு என்ன..........( அதாவது அறிவு அல்லது தகுதியிருக்குன்னு சொல்ல வந்திருக்கலாம் என்பது என் யூகம் ) என கோபத்தை காட்டுகிறார்கள். இதை இளையராஜாவின் ரசிகர்கள், கலைஞனுக்கேயுள்ள கர்வத்தில் அப்படி கோபத்தை காட்டினார் என்கிறார்கள். இசைஞானி பேசியது கர்வம்மல்ல என்பதே என் பார்வை.

அந்த செய்தியாளர் கேட்ககூடாதா இடத்தில் அந்த கேள்வி கேட்கவில்லை. அதோடு, ஒரு பாடல் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை பற்றி அந்த துறையின் மேதையிடம் கருத்து கேட்கிறார். அவர் கருத்து கூறலாம், கூறாமல் போகலாம். அது அவருடைய உரிமை. கருத்து கேட்பவர் மீது கோபத்தை காட்டுவது ஜனநாயகம்மா?. கேள்வி கேட்ட செய்தியாளரை பார்த்து, தூக்கி அடிச்சிருவன் பார்த்துக்க என சொன்ன விஜயகாந்த்தை காய்ச்சி எடுத்தவர்கள் இளையராஜா என்றதும் இளையராஜா பேசியது சரி என்கிறார்கள்.

இளையராஜா புனிதமானவராக அவரது ரசிக பக்தர்கள் சிலும்புகிறார்கள். இளையராஜா பீப் பாடலை விட கொஞ்சம் குறைவாக பல கொச்சையான பாடல்களுக்கு இசையமைத்தவர் தான். அதை நீங்கள் கேட்டவர்கள் தான் அதனால் அவரிடம் கருத்து கேட்பது தவறில்லை.

ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்க முடியாதவர்கள் இசைஞானியிடம் கேள்வி கேட்கிறார்கள் என கொச்சையாக மீடியாவை, செய்தியாளர்களை ஏசுகிறார்கள். அதிகாரவர்க்கத்தை பார்த்து மீடியா மட்டும்மல்ல சமூகத்துக்காக பேசும் சமூகத்தில் ஒருவரான நீங்களும் தான் பதுங்குகிறீர்கள். வாட்ஸ்அப்பில் ஜெ பேசியது பற்றி பொங்கியது உண்டா?, எங்களை ஏன் வந்து சந்திக்கவில்லை என போராட்டம் நடத்தியது உண்டா?, என் அடிப்படை பிரச்சனைகளை ஏன் தீர்க்கவில்லையென ஒரு எம்.எல்.ஏவை முற்றுகையிட முடிந்துள்ளதா?, எம்.எல்.ஏ வேண்டாம் கவுன்சிலரை நிற்க வைத்து கேள்வி கேட்க முடியாதவர்கள் தான் இப்போது செய்தியாளர்களை பார்த்து பொங்குகிறார்கள்.


நீங்கள் தான் அரசாங்கத்தை பற்றி கேள்வி கேட்க வேண்டும் என ஊடகத்தை, செய்தியாளரை பார்த்து சொல்பவர்கள் எத்தனை பேர் அந்த நிறுவனம் அரசாங்கத்தின் அதிகார கோர கரங்களால் பாதிக்கப்பட்டால் ஓடிவந்து உதவுகிறீர்கள் என உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்க்கலாம். சாதாரண பொதுமக்கள் நீங்கள் அதிகாரத்தை கண்டு பயப்படும் போது, ஒரு நிறுவனத்தை நடத்துபவர்கள், அதிகார குவியலை வைத்துள்ள, அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்களை கண்டு பயப்படத்தான் செய்வார்கள். பயம்மில்லாத ஒரு சதவித பத்திரிக்கை குறிப்பாக நக்கீரன் அதிகாரவர்க்கத்தை கேள்வி கேட்கிறது. அதனால் பலப்பல துன்பங்களை இன்றுவரை அனுபவித்து வருகிறார்கள்.

அதற்காக அதிகாரவர்க்கத்திடம் பற்றி கேள்வி கேட்ககூடாதுயென்பதல்ல என் வாதம்.  கேள்வி கேட்க வேண்டும். கேள்வி கேட்கும் முன் செய்தியாளர் தம்மை தகுதி படுத்திக்கொள்ள வேண்டும். அதை பல செய்தியாளர்கள் செய்வதேயில்லை என்பதே என் கருத்து. ஒரு பிரபலத்தை சந்திக்க செல்லும்போது அவர்களை பற்றி அறிந்திருக்க வேண்டும், அவர்களது முந்தைய பேட்டிகளை படித்திருக்க வேண்டும், அவர்களிடம் என்ன மாதிரியான கேள்விகளை கேட்டால் சரியாக இருக்கும் என்ற அடிப்படை கொஞ்சம் கூடயில்லாமல் தான் பெரும்பான்மை செய்தியாளர்கள் இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரியது. தொலைக்காட்சிகளில் நேர்காணல் நடத்துபவர்கள் கூட அப்படித்தான் இருக்கிறார்கள்.

இன்று ஊடகம் பெருத்துவிட்டது. கட்சிகள், பெரு நிறுவனங்கள், அமைப்புகள் எல்லாம் தொலைக்காட்சி தொடங்கி நடத்துகின்றன. அவர்களுக்கு செய்திப்பற்றி அக்கறையில்லை. தங்களது ஊடகங்கள் வழியாக தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். இதனால் செய்தியாளரின் தகுதியை பார்ப்பதில்லை. வேலைக்கு ஆள் வேண்டும் அவ்வளவே.

இன்றைய செய்தியாளர்களுக்கு மூத்தவர்கள் வழிக்காட்டல் தேவையாகவுள்ளது. ஆனால், வழிகாட்டும் மூத்தவர்களை மதியாத தன்மை அதிகம் உள்ள துறையும் ஊடகம் தான். ஒருவர் புதியதாக வந்து பேனா பிடித்ததும், மைக் கையில் வாங்கியதும் ஒவ்வொருவருக்கும் நாம் தான் உலகத்தில் பெரிய ஆள் என்கிற எண்ணம் வந்துவிடுகிறது. இதனால் கற்க மறந்துவிடுகின்றனர். கற்றது கை அளவு, கல்லாதது உலகளவு என்பதை மறந்துவிடுகின்றனர்.

ஜெயலலிதாவிடம் இப்படி கேள்வி கேட்கமுடியும்மா? என பலர் சமூக வலைத்தளத்தில் பொங்கல் வைக்கிறார்கள். எடக்குமடக்கான கேள்வி கேட்பதிலும் செய்தியாளர்களுக்கு பெரும் சங்கடங்கள் உள்ளன. ஒரு செய்தியாளரின் சந்திப்பில் மருத்துவர் ராமதாஸ்சிடம், அவர் மகன் பற்றிய ஊழல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. கோபத்தோடு எழுந்து போனார். அதன்பின் நடக்கும் செய்தியாளர் சந்திப்புக்கு அந்த செய்தியாளரை அழைப்பதேயில்லை. இப்படி ஏதாவது கேள்வி கேட்பார்கள், ( கேட்க போறதில்ல அது வேற விஷயம் ) தம்மால் சரியாக பதில் சொல்ல முடியாது என்பதால் தான் அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் செய்தியாளர்களை சந்திப்பதில்லை ஜெ. அதோடு, தன்னை, தன் உடன்பிறவா சகோதரியை, அவரது தலைமையிலான ஆட்சி அவலங்களை எழுதும் நக்கீரன் படும் பாட்டை தமிழக ஊடகங்கள் காணாததல்ல, தேசிய ஆங்கில சேனல் நெறியாளர் கரன்தப்பர் கடந்த கால அதிமுக ஆட்சியின்போது, ஜெவிடம் பல சிக்கலான கேள்விகளை கேட்க, அதன்பின் அந்த சேனல் தமிழகத்தில் பட்டபாடு பெரியது. இதனால் தான் செய்தியாளர்களும், தொலைக்காட்சிகளும் ஜெ என்றால் பம்முவது. அதிகார பலம்மில்லாதவர்களிடம் எடக்கு மடக்கு கேள்விகள் எகிறும்.

இளையராஜா பக்தர்கள் மட்டும்மல்ல சமூகத்தில் பலரும் சொல்வது மீடியாவின் போக்கு மாற வேண்டும் என கூறுவதில் மாற்று கருத்துயில்லை. அதற்காக இளையராஜா பேசசியது சரியென ஆகிவிடாது.


5 கருத்துகள்:

  1. எம்ஜிஆர்ல் இருந்து சிம்புவரை பெண்களை போகபொருளாக பாவித்ததை சொல்லிய நல்லபதிவு.
    இளையராஜாவில் நான் தவறை காணவில்லை.

    பதிலளிநீக்கு
  2. from Oneindiatamil.com



    முன்னாள் முதல்வர் ஜானகி எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்தில் சடலமாகக் கிடக்கிறார். அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், அழுதபடி மலர் மாலை வைத்துவிட்டு வெளியில் வர, அப்போதுதான் காமிரா வாங்கியிருந்த ஒரு நாளிதழ் புகைப்படக்காரர், 'சார் சார்.. அந்த மாலையை எடுத்து இன்னொரு வாட்டி போடுற மாதிரி போஸ் கொடுங்க சார்... ' என்று கேட்க, எப்படி ரியாக்ட் பண்ணுவதென்றே தெரியாமல் கடுப்புடன் காரை நோக்கிப் போனார் திருநாவுக்கரசர். தா. பாண்டியன் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவரை பேட்டி எடுக்க வந்த பெண் நிருபர் 'உங்க பேர் என்ன சார்' என்று கேட்ட பேட்டியை ஆரம்பித்திருக்கிறார். தன்னை யார் என்றே தெரியாத நிருபருக்கு பேட்டி கொடுக்க வேண்டுமா என்று கோபத்தில் எழுந்த வந்து விட்டாராம் தா.பா. அது ஒரு எப்எம் ரேடியோ நிகழ்ச்சி. அமரர் எம்எஸ்வியை ஒரு பெண் பேட்டி காண்கிறார். "எம்எஸ்வி சார்... உங்க பேரு, உங்க பேக்ரவுண்ட் பத்தி நீங்களே சொல்லுங்களேன்," என்று கூற... "என்னப் பத்தி நான் என்ன சொல்றது... என்னை யாருன்னு கூட உனக்குத் தெரியாதாம்மா?" என்று வேதனையுடன் திருப்பிக் கேட்கிறார். இதே போல் மனோரமா மரணமடைந்த போது அவருக்கு மலர் வளையம் வைக்கக்கூட விஐபிகளை போக விடாமல் அவர்கள் தலையில் கேமாரவை இடித்து தள்ளினர். இன்னொரு விஐபி மாலை வைத்து விட்டு திரும்பினார் "சார்... வயர் கட் ஆகி விட்டது. மறுபடியும் மாலையை வைங்க," என்று அதட்டல் போட்டதும்... எல்லை மீறலின் உச்சம். இப்போது தொலைக்காட்சி மீடியாக்களுக்கு வரும் 'கத்துக்குட்டி' நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள் பண்ணும் கேலிக் கூத்து இவையெல்லாம். எந்தக் கேள்வியை எப்போது கேட்க வேண்டும், யாரிடம் கேட்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச நாகரீகம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். இது பல காலமாகவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. காரணம், அலுவலக நெருக்கடி, நடைமுறை யதார்த்தம் என்று பல காரணங்கள் சொல்வார்கள். ஆனால் அவை ஏற்கத்தக்கதல்ல. மழை வெள்ளத்தால் சென்னை மயிரிழையில் உயிர் தப்பியிருக்கும் இந்த நேரத்தில், தத்தளித்த பல ஆயிரம் மக்களை தன்னார்வலர்கள் பலரும் தாங்களாகவே முன் வந்து உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியிருக்கிறார்கள். குப்பைகளை அகற்றி நோய் பரவாமல் தடுத்திருக்கிறார்கள். பல லட்சம் செலவு செய்து உணவு அளித்திருக்கிறார்கள். மழை வெள்ளம் வடிந்த பிறகு அந்த உதவும் உள்ளங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. கனத்த மனதோடு பாதிக்கப்பட்டவர்கள் கூடியிருந்த அந்த நிகழ்ச்சியில் ஒரு டிவி நிருபர் ‘சிம்பு எழுதிய பீப் சாங் பற்றி உங்க கருத்து என்ன?' என்று இளையராஜாவிடம் கேட்டு எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார்.

    பதிலளிநீக்கு
  3. அங்கிருந்த பத்திரிகையாளர்கள் பலரும் இந்த முதிர்ச்சியற்ற செயலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீடுகள், உறவுகள், உடமைகள் என்று அனைத்தையும் இழந்து நிற்கும் அபலைகளுக்கு ஆறுதல் கூற வந்த இடத்தில் ஒரு மரியாதைக்குரிய மனிதரிடம் இந்த கேள்வியை கேட்ககூடாது என்கிற குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாதவர்களை பணியில் வைத்திருப்பது அந்த டிவிக்கு வந்த சோதனை. அப்படியென்றால் இந்த கேள்வியை கேட்கவே கூடாது என்று அர்த்தமல்ல. இந்த இடத்தில் கேட்கக்கூடாது என்பது பக்குவப்பட்ட பத்திரிகையாளருக்கு தெரியும். தனியே இசைஞானியிடம் பேட்டிக்கு நேரம் வாங்கிகொண்டு போய் கேட்க வேண்டும். அப்படியொன்றும் திறவாத இரும்புக் கதவுகள் இல்லை அவருடைய ஸ்டுடியோவில். இங்கு கேட்பது சாவு வீட்டில் சாப்பாடு கேட்டு சண்டை போடுவது போன்ற மோசமான செயல். மைக்கை நீட்டுவது மட்டும் பத்திரிகையாளரின் வேலை அல்ல. உதவிக்கு கையும் நீட்ட வேண்டும் இதை புதிதாக வந்து மீடியாக்களில் பணியாற்றுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்! யாரையும் கேள்வி கேட்கலாம் என்ற மாபெரும் சலுகை மீடியாக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அந்த சலுகையை பொறுப்பற்ற முடியில் பயன்படுத்தப் பார்த்தால், 'அறிவிருக்கா' மட்டுமல்ல... இன்னும் பல மோசமான எதிர்வினைகளை மீடியா உலகம் எதிர்கொள்ள நேரும். அந்தக் கேள்வியை அந்த நிருபர் கேட்ட முறையும், அதற்கு இளையராஜா எதிர்வினையாற்றிய பிறகு, அந்த நிருபர் காட்டிய எகத்தாளமும்... நிச்சயம் இது பத்திரிகை தர்மமன்று. கல்லூரியின் குட்டிச் சுவற்றில் அமர்ந்தபடி போகிற வருகிற பெண்களை வம்புக்கிழுக்கும் பொறுக்கித்தனத்துக்கு சற்றும் சளைத்ததல்ல! இந்தக் கேள்வியை இவர்கள் கேட்டிருக்க வேண்டியது மாண்புமிகு தமிழக முதல்வரிடம். ஒரு பெண்ணான உங்கள் ஆட்சியில் இப்படி கேவலமான பாடல்கள் வருகின்றனவே... டாஸ்மாக் எதிர்ப்பு பாடல் பாடிய கோவனை கைது செய்த உங்களால், இந்த மாதிரி பீப் பாடல்களை எப்படி அனுமதிக்க முடிகிறது... இவர்கள் மீது நடவடிக்கை என்று என்று கேட்டிருக்க வேண்டும். அவர் பிரஸ் மீட் வைக்காவிட்டாலும், போயஸ் தோட்டத்திலோ, தலைமைச் செயலகத்திலோ மறித்து நிற்க வைத்துக் கேட்டிருக்க வேண்டும். 'தில்' இருக்கா... ராஜா கேட்ட மாதிரி அதற்கான அறிவிருக்கா இந்த நிருபர்களுக்கு? அட, குறைந்தபட்சம், புகார்களை வாங்கிக் கொண்ட பிறகும் மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல் துறை அதிகாரிகளிடம்? ம்ஹூம்! மழை வெள்ளம் மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. மாநிலத்துக்கே மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு முகமாக நின்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள மீடியாக்காரர்கள், வெற்றுப் பரபரப்புக்காக கண்டபடி கேட்பது, தங்கள் தான்தோன்றித்தனத்தையே ஒரு செய்தியாக்கி குளிர்காய்வது போன்றவை உண்மையிலேயே அநாகரீம்தான். ஆளாளுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்காமல், மீடியா தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது!

    Thanks: Oneindiatamil.com

    பதிலளிநீக்கு
  4. https://m.facebook.com/story.php?story_fbid=10153740325463632&id=618258631

    பதிலளிநீக்கு
  5. அய்யா வணக்கம்,
    விமர்சனங்களுக்கு விலக்கு பெற்றவர் யாரும் இல்லை. அது ராஜாவோ அல்லது பிச்சைக்காரனோ. எனக்கும் இசை ஞானியுடம் பல கருத்து பேதங்கள் உண்டு. (அவர் பெயரிட்டு சொல்லாததன் காரணம், அபிமானம் அல்ல.., அவர் மேல் கொண்ட அறிவில்லாத மரியாதையும் அல்ல.)

    இடம்,பொருள்,ஏவல். என்று கேட்டிருப்பீர்கள்...
    நமக்கு தெரிந்தவரோ..? தெரியாதவரோ..! நம்மைக்கண்டு ஒரு வணக்கம் வைத்து விட்டு செல்லும் போது நாம் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் பதில் வணக்கம் வைப்பதுதானே நம் பண்பாடு. அந்த வணக்கம் வைக்கும் நபர் எந்த சூழலில் இருந்தாலும் நாம் அவரை ஏற்றுக்கொள்வது சரியா?.. அல்லது நீ யார் எனக்கு எதுக்கு வணக்கம் வைக்குற என எதிர் கேள்வி கேட்டு கேள்விகளால் அவரை ஏற்றிக் 'கொல்வது' சரியா?!..

    நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ! இல்லையோ. ஒரு திருமண வீட்டில் போய் தாலி கட்டும் நேரத்தில் அந்த மணப்பெண்ணை பார்த்து நீ எப்போ தாலியை இறக்க போகிறாய் எனக்கேட்பதும்..,
    துக்க வீட்டில் போய் இவன் போனா என்ன உனக்கு எத்தனையோ பேர் காத்திருக்கான் என்று சொல்வதும் சரிதானா?..

    நான் இங்கு யாருக்கும் வக்காலத்து வாங்க வரவில்லை.

    அந்த ஊடக மேதையை படத்தில் பார்த்தாலே தெரிகிறது ஏதோ பெரிய தவறை ராஜா செய்து விட்டது போலவும் அதைத்தான் கண்டு பிடித்து விட்டது போலவும் ஒரு எகத்தாளமான சிரிப்புடன் நிற்பதை கவனிக்க யாருக்கும் பொறுமை இல்லையே அய்யா.

    அதுதான் இரு கோட்டு தத்துவம் எனும் தந்திரம்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறார்களோ? இல்லையோ!

    பாதிப்புகளிலிருந்து திசை திருப்ப வேண்டும் எனும் அவர்கள் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றுவிட்டது என்பதுதானே உண்மை.

    இதில் நீங்களும் நானும் சிக்கிக்கொண்டதுமே உண்மை..

    வாழ்க ஜனநாயகம்..

    பதிலளிநீக்கு