செவ்வாய், செப்டம்பர் 20, 2016

ராம்குமார் நல்லவனா? கெட்டவனா ?.




சென்னையில் படுகொலை செய்யப்பட்ட விப்ரோ நிறுவன பணியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டபோது, மீடியாக்கள் ஒட்டுமொத்தமாக அலறியது. சில நாள் இடைவெளிக்கு பின் ஒரு வீடியோ பதிவு என மெல்ல மெல்ல தகவல்களை பரப்பிய காவல்துறை பின்னர் ஒருநாள் இரவு கழுத்தறுப்பட்ட நிலையில் ராம்குமார் என்கிற இளைஞனை காட்டி இவன் தான் கொலைக்காரன். ஒரு தலைக்காதலால் கொலை செய்தான் என்றது. மீடியாக்களும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு விவாதம் நடத்தியது, குற்றவாளி எனச்சொல்லி தீர்ப்பு எழுதியது. 

தமிழக மீடியாக்களுக்கு புலனாய்வு என்பது அத்துப்போய் பலகாலமாகிவிட்டது. காவல்துறை சொல்வதை எந்த காலத்திலும் அப்படியே நம்பக்கூடாது என்கிற பாடத்தை கூட படிக்காமல் வந்ததோடு மைக்கை தூக்கிக்கொண்டு காவல்துறை சொல்வதை தாங்கள் கண்டுபிடித்தது போல் ஒப்பிக்கிறார்கள்.

ராம்குமார் எதனால் கழுத்தை அறுத்துக்கொண்டான் என்கிற கேள்வியை எழுப்பவேயில்லை. அவன் தான் கொலைக்காரன் என்பதற்கான வலுவான காரணத்தை இதுவரை காவல்துறை தரப்பில் சொல்லவேயில்லை. அதுப்பற்றி எந்த மீடியாவும் கேள்வி எழுப்பவில்லை. அவசர அவசரமாக இந்த வழக்கை முடிப்பதிலேயே காவல்துறை இருந்தது, காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வரான ஜெவும் அதற்கு உதவியாக இருந்தார்.
ராம்குமார் சிறைக்குள் போனதும் இப்போது மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்துக்கொண்டான் என்கிறது சிறைத்துறை. இதை பாமரன் கூட நம்பவில்லை. இதற்கு நிச்சயமாக முறையான விசாரணை வேண்டும். கொலைகார அரசாங்கத்திடம் அதை கேட்பது முட்டாள்தனம்.

ராம்குமார் தவறு செய்திருந்தால், அதை நிறுபிக்க வேண்டியது காவல்துறை கடமை, தண்டனை தருவது நீதித்துறை கடமை. ஆனால் ராம்குமார்க்கு காவல்துறையே தண்டனை தந்து நீதிபரிபாலனை விவகாரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.

இந்த தண்டனை வழியாக தெரிவது என்னவென்றால் ராம்குமார் இறந்துவிட்டான் இந்த வழக்கு முடிந்தது, இனி யாரும் அதைப்பற்றி பேசக்கூடாது என்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் மக்களுக்கு விடை தெரியாத பல கேள்விகள் உள்ளன. அதிகாரவர்க்கத்துக்கு இந்த கேள்விக்கான பதில்கள் தெரியும். அதை எந்த காலத்திலும் யாரும் பதில் சொல்லப்போவதில்லை. ஏன் எனில் பேய்கள் அரசாள்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக