வெள்ளி, டிசம்பர் 15, 2017

சாதி வெறியனே……



இந்த கட்டுரையை படித்துவிட்டு தலைப்பில் உள்ள வார்த்தையை எனக்கு பட்டமாக தருவீர்கள் என தெரிந்தே தான் நானே அந்த பட்டத்தை எனக்கு தந்தபின் எழுதுகிறேன். அதனால் இன்னும் வேறு பட்டம் தர விரும்புகிறவர்கள் மட்டும் இதை படிக்கவும். மற்றவர்கள் கடந்து போகவும்.

காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்ட சங்கர் – கௌசல்யா இளம் ஜோடியை கௌசல்யா குடும்பத்தினர் சாதி கவுரவத்துக்காக சங்கரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர், கௌசல்யாவையும் வெட்டிவிட்டே சென்றது அந்த கொலை கும்பல். கௌசல்யா குடும்பம், சாதி வெறிக்கொண்ட கூலிப்படைக்கு மரணதண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம். இந்த தண்டனையை பெரும்பான்மை முகநூல் சமூகம் கொண்டாடுகிறது. மரணதண்டனையை எப்போதும் எல்லா சமயங்களிலும் எதிர்ப்பவர்கள், இந்த விவகாரத்திலும் எதிர்த்தபோது சாதிவெறி என முகநூல் சமூகம் முத்திரை குத்துவதை காண முடிகிறது.

ஒருக்கருத்தை முன்வைத்தால் அவர் மீது சாதிவெறியன் என முத்திரை குத்துவது என்பது அருவறுக்கதக்கது. இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துயிருக்கும். அது சரியா தவறா என்பதை பகுத்தாய்வு செய்ய வேண்டும். ( முழுக்க முழுக்க சாதிவெறி பதிவு கருத்துக்களை இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளகூடாது ) ஒன்றை நாம் இங்கு சுலபமாக மறத்தைவிடுகிறோம். இங்கு ஒவ்வொருவர் பின்னாலும் ஒரு சாதி முத்திரையிருக்கிறது. சாதியை உண்மையாகவே எதிர்ப்பவராக இருந்தாலும் அவர்களை சாதி அடையாளத்துக்குள் அடைக்க ஒரு பெரும் கூட்டம்மே சுற்றியுள்ளது. அதனால் கருத்தை வாங்கிக்கொள்ள வேண்டும்.

இங்கு சாதிகளை, உயர்சாதி, இடைச்சாதி, கீழ்சாதி என பிரித்துவைத்துள்ளார்கள். கீழ்சாதியென்பது ஒடுக்கப்பட்ட சாதி. பலப்பல விவகாரங்களில் உயர்சாதி, இடைச்சாதி ஒன்றாகவேயிருக்கும். அந்த இரு தரப்பு சாதியினர்கள் காதலிப்பார்கள், திருமணம் செய்துக்கொண்டு உயர்சாதி பிம்பத்தை இடைச்சாதியும் கடைப்பிடிக்கும் பெரியளவில் பிரச்சனையில்லாமல் கூடி கும்மியடிப்பார்கள். இந்த இரண்டு தரப்பும்மே ஒன்றில் உறுதியாக இருக்கும், அது கீழ்சாதி என்கிற ஒடுக்கப்பட்ட சாதியை எட்டி உதைப்பார்கள், பொருளாதாரம் தவிர்த்து வேறு எந்த விதத்திலும் உறவு வைத்துக்கொள்ளகூடாது என அறுவாலோடு திரிவார்கள். அதற்கு காரணம் அந்த இரண்டு தரப்பினருக்கும் தனக்கு கீழ் ஒருசாதியிருக்க வேண்டும் என்கிற ஆண்ட பரம்பரை என்கிற திமிர்.

இந்த திமிர் ஏதோ உயர்சாதியாக காட்டிக்கொள்பவர்களுக்கும், இடைநிலை சாதியினருக்கு மட்டும் கிடையாது. ஒடுக்கப்பட்ட சாதியினர்களுக்குள்ளும் உள்ளது. அதாவது, ஆண்கள் தனக்கு கீழ் பெண் ஒருவள் அடிமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறானோ அப்படித்தான் இதுவும். தன் சாதிக்கு கீழ் ஒரு சாதி இருக்க வேண்டும் என விரும்புவது.

பாப்பான் என் சாதியே உயர்ந்த சாதி என்பான். முதலியார் எனக்கு கீழ் சாதிகள் உள்ளது என்பான். இப்படி வன்னியர், செட்டியார், நாயுடு, கள்ளர், மறவர், கவுண்டர் என ஒவ்வொரு சாதியும் தனக்கு கீழ் ஒரு சாதி இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். மேற்கண்ட சாதிகள் தலித்தை கீழ்சாதியென ஒதுக்கி ஊருக்கு வெளியே வைத்துள்ளன. அந்த சாதியினர் பாதிக்கப்படும்போது அவர்களுக்காக இந்த சமூகத்தில் பெரும் குரல்கள் எழுகின்றன, போராடுகின்றன. ஆனால், அந்த தலித் சாதியினரே தனக்கு கீழ் அருந்ததியர் என ஒரு சாதியிருக்கிறது என பெருமை பேசுகிறார்கள் என்பது இங்கு புரட்சி பேசும் எத்தனை பேருக்கு தெரியும்.

ஒடுக்கப்பட்ட சாதியாகவுள்ள தலித்கள், அருந்ததியர் சாதியினரை தன் சாதியை விட கீழ் சாதியாக நினைக்கிறார்கள். அருந்ததி மக்கள், நரிக்குறவ சாதியினரை தன் சாதிக்கு கீழாக நினைக்கிறார்கள். உயர்சாதி, இடைநிலை சாதியினர் தலித் சாதியினரை நடத்துவதை போல, இவர்கள் அருந்ததியினரை, நரிக்குறவர்களையும் நடத்துகிறார்கள். தலித் சாதியினர் தன்னைவிட உயர்ந்த சாதியில் அல்லது தன் சாதியில் தான் பெண் எடுக்க வேண்டும், மாப்பிள்ளை வேண்டும், காதலிக்க வேண்டும் என விரும்புகிறார்களே தவிர கீழ்சாதியில் இருந்து பெண் எடுப்பதோ, கொடுப்பதோ, காதலை ஏற்றுக்கொள்வதோ கிடையாது. உயர்நிலை, இடைநிலை சாதி பெண்கள், தலித் சாதியினரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டால் எப்படி கொலை செய்யப்படுகிறார்களோ, அதற்கு குறைவில்லாமல் தலித் – அருந்ததியர் – நரிக்குறவர் சாதிகளுக்குள்ளும் நடக்கிறது. முற்போக்கு பேசுபவர்கள், சாதிக்கு எதிராக பேசுபவர்கள் யாரும் இதை தீர்க்க முன்வரவில்லை, ஏன் பேசக்கூட மறுக்கின்றனர். தலித்தால் பாதிக்கப்படும் அருந்ததியர், நரிக்குறவர் பிரச்சனைகள் பெரும் கவனம் பெருவதில்லை. அதற்கு காரணம் எண்ணிக்கையில் அவர்கள் குறைவானவர்கள், கல்வியறிவற்றவர்கள், பெரும் அரசியல் பலம்மில்லாதவர்கள்.

மற்றொரு காரணம், சுயசாதி பற்று. இங்கு சாதிக்கு எதிராக பேசுபவர்களுக்கும் அந்த பற்று உண்டு. சாதி அடையாளத்துக்குள் சிக்காதவர்கள் சுயசாதிக்கு ஒரு பிரச்சனையென வரும்போது இதயத்தின் ஓரத்தில் தன்சாதி மீது ஒரு பற்று வந்துவிடுகிறது. இங்கு நேர்மையான முதலமைச்சராக ஆட்சி நடத்தியவர் என புகழப்படும் காமராஜராக்கே தன் நாடார் சாதி மீது பாசம்மிருந்தது. அவர் மட்டும்மல்ல இன்றைய ராமதாஸ், திருமாவளன், கொங்கு ஈஸ்வரன், தேவர் கருணாஸ் உட்பட எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும்.

உயர்சாதி, இடைநிலை சாதியினரால் பாதிக்கப்படும் மக்களும், அவர்களுக்காக குரல் கொடுக்கும் முற்போக்காளர்கள் அருந்ததி சமூகத்தினருக்காகவும், நரிக்குறவ சாதியினருக்காக குரல் கொடுப்பதில்லை. சாதி பிரச்சனையென வரும்போது நான் தலித் பக்கம்மிருந்து மட்டும் தான் பேசுவேன் என்பது சாதிக்கு எதிரானதல்ல…. அது சாதிக்கானது. சாதிக்கு எதிரானது என்றால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு சாதிக்காகவும் பேச வேண்டும். அதே வேகம் அருந்ததி மக்களுக்காகவும், நரிக்குறவ சாதியினருக்காகவும் இருக்க வேண்டும்.

நீ என்னை எந்த சாதியாக வேண்டுமானாலும் முத்திரை குத்திக்கொள், ஆனால் நான் எல்லோரும் சகோதரர்கள் என்கிற மனப்பாங்கில் இருப்பேன் என யாரும் முடிவு செய்து இருப்பதில்லை. தலித் சாதிக்காக குரல் கொடுக்கும் முற்போக்காளர்கள், சாதியற்றவர்களாக காட்டிக்கொள்பவர்கள் அனைவரும் நாம் அனைவரும் சகோதரர்கள் என முடிவு பிரச்சனையை அனுகினால் சாதி பிரச்சனையில் வருங்காலத்தில் நிச்சயம் மாற்றம் வரும். இல்லையேல் காலம் முழுக்க சாதிக்கு எதிராக போராடிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.


3 கருத்துகள்:

  1. சரியான கருத்துதான். சாதி இல்லை என்பவர்களுக்க் தன சாதிமேல் உள்ள ஈடுபாட்டை நான் நிறைய நண்பர்களிடம் கண்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  2. //கொலை கும்பல். கௌசல்யா குடும்பம், சாதி வெறிக்கொண்ட கூலிப்படைக்கு மரணதண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம். இந்த தண்டனையை பெரும்பான்மை முகநூல் சமூகம் கொண்டாடுகிறது. மரணதண்டனையை எப்போதும் எல்லா சமயங்களிலும் எதிர்ப்பவர்கள், இந்த விவகாரத்திலும் எதிர்த்தபோது சாதிவெறி என முகநூல் சமூகம் முத்திரை குத்துவதை காண முடிகிறது//

    கௌசல்யாவின் அப்பாவுக்கு தண்டண கிடைத்ததை நானும் வரவேற்கிறேன். மரண தண்டணைக்காகவல்ல.
    ஜாதிவெறி பிடித்து தனது மகளின் கணவரை கொன்றவர்களுக்கு நீதி கிடைத்து, அவரை போன்ற பல ஜாதிவெறியர்களுக்கு ஒரு சரியான எச்சரிக்கை என்பதிற்காக.2014 பின் ஒருவருக்கு மட்டுமே இந்தியாவில் மரணதண்டணை நிறைவேற்றபட்டுள்ளது.குற்றம் செய்த கௌசல்யாவின் அப்பாவுக்கும்,கூலிப்படைக்கும் மரணதண்டணை கிடைக்கும் சந்தர்பம் இந்தியாவில் இல்லை. மரணதண்டணை முறை இந்தியாவில் இருந்து அகற்றபட வேண்டும்.
    //மரணதண்டனையை எப்போதும் எல்லா சமயங்களிலும் எதிர்ப்பவர்கள், இந்த விவகாரத்திலும் எதிர்த்தபோது சாதிவெறி என முகநூல் சமூகம் முத்திரை குத்துவதை காண முடிகிறது.//
    இந்த விவகாரத்தில் அப்பாவிற்கு பிடிக்காதவரை, ஜாதி பார்க்காம திருமணம் செய்த கௌசல்யாவிற்கு சரியான தண்டணை கொடுத்த நல்லவருக்கு எல்லாம் தண்டணையா என்கின்ற ஜாதி வெறி கருத்துக்களையே பார்க்க முடிகிறது. மரண தண்டணையை மட்டும் எதிர்த்து கருத்து எதுவுமே நான் காணவில்லை. facebook நான் பார்பதில்லை.
    பொதுவாக தமிழர்களுக்கு தங்களை விட கீழ் நிலையில் ஒருவரை வைத்து தாங்கள் அடக்கி ஆளவேண்டும்,அதை பேசி பெருமை பேச வேண்டும் என்ற தீய விருப்புக்கள் உண்டு என்பது உண்மை.
    ஜாதி கட்சி நடத்தும் திருமாவளன் ராமதாஸ் போன்றவர்களை தமிழர்கள் ஆதரிக்க கூடாது.

    பதிலளிநீக்கு