எங்கு நோக்கினும் சாதி. பிறந்த
குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் முன் சாதியை புகுத்திவிடுவார்களோ என பயமாக உள்ளது.
அந்தளவுக்கு நடந்து முடிந்த நாடாளமன்ற தேர்தலில் சாதி பார்த்தார்கள் வாக்காளர்கள்.
சாதி எத்தனை வீரியமானது என்பதை புரியவைத்தது. வடாற்காடு தென்னாற்காடு மாவட்டங்களில்
சாதி தீர்மானிக்கும் சக்தியாக உயர்ந்துள்ளது. சாதியை இரண்டாம் பட்சமாக வைத்துவிட்டு
தேர்தலை எதிர் நோக்கிய பகுதிகள் இவை. இன்று சாதி வேட்பாளருக்கு காவடி தூக்குகிறார்கள்.
என் சாதிக்காரன் என கொண்டாடுகிறார்கள். சாதி பார்க்காத பகுதிகளிலேயே இந்த நிலை என்றால்
சாதியை முன்னிறுத்தும் பகுதிகள் இதைவிட மோசமாக உள்ளது.
பெரியவர்களை விட இளைஞர்களை
குறிவைத்து தங்களது அரசியலை வளர்க்கின்றன சாதிக்கட்சிகள். பாட்டாளி மக்கள் கட்சி அடிப்படையிலேயே
சாதிக்கட்சி. விடுதலை சிறுத்தைகளும் அப்படியே. இந்த இரண்டு கட்சிகளும் வடாற்காடு, தென்னாற்காடு
மாவட்டங்களில் பலமாக உள்ள தங்களது சாதி மக்களிடம் அரசியல் பலத்தை உயர்த்திக்கொள்ள எடுக்கப்பட்ட
சாதிய ஆதரவுகள், வன்முறைகள், ஊக்குவிப்பு தேர்தலில் எதிரொலிக்கின்றன.
தருமபுரி கலவரம் வன்னியர்களை
சாதி வெறியர்களாக சித்தரித்தது. அரசியல் கட்சிகள் உட்பட அனைவரும் பாமக மீது பாய்ந்தனர்.
மரக்காணம் கலவரத்தில் வன்னியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். அப்போதும் பாமக (மறைமுகமாக
வன்னியர்கள்) வை கண்டித்தனர். கலவரத்தை உருவாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாரும்
கண்டிக்கவில்லை. இது வன்னியர்களை ஒன்றிணைத்துவிட்டது என்றே எண்ணத்தோன்றுகிறது. அதை
தேர்தல் களத்தில் உணர முடிந்தது. இந்த தேர்தல் வன்னியர்களை ஒற்றுமையாக பாமக பக்கம்
திருப்பிவிட்டது என்பதை வன்னிய கிராமங்களில் காண முடிந்தது. 30 வயதுக்குள் உள்ள இளைய
சமுதாயத்தினர் தங்களது சாதியை தூக்கி பிடிப்பதில் முன்னணியில் நிற்பதை காண முடிந்தது.
சில இளைஞர்களிடம் இதுப்பற்றி
கேட்டபோது, தலித் பாதிக்கப்பட்டா எல்லாரும் குரல் கொடுக்கறாங்க. வன்னியன் பாதிக்கப்பட்டால்
யாரும் குரல் கொடுக்கறதில்ல. அதுக்கு காரணம் நாங்க ஒற்றுமையா இல்லாதது தான். அதனால
தான் ராமதாஸ் கையை வலுப்படுத்தறோம். இருக்கறதுல அவர் பவர்க்கு வரமுடியும். அவர் மட்டும்
தான் வன்னியனை அடிச்சா அடிக்கறவனை வெட்டுன்னு சொல்றாரு. இது வன்முறையா தெரியுது. அதையே
தலித் சொன்னா போராட்டம்ன்னு சொல்றாங்க இது என்னங்க நியாயம் என கேட்டார்கள். இந்த கேள்வியையே
நாம் சந்தித்த 90 சதவித இளைஞர்கள் கேட்கிறார்கள். இது படித்தவனிடம் அதிகமாக உள்ளது
என்பது கூடுதல் அதிர்ச்சி.
இதையா பெரியார் விரும்பினார்?
வர்ணாசிரம் மக்களை சாதிகளால்
பிரித்தது. அந்த சாதிகளை மோதவும் வைத்து பிரித்தாளின. அரசியல், அதிகார அமைப்புகள் முதல்
எங்கும் சாதி தான். திராவிட மாநிலங்கள் என அழைக்கப்படும் கர்நாடகா, கேரளா, ஆந்திராவில்
சாதிகளின் பேயாட்டம் தான். தமிழகம் அதில் விதிவிலக்காக இருந்தது. இங்கு யார் ஆள வேண்டும்
என்பதை சாதிகள் என்றும் தீர்மானித்ததில்லை. குடும்ப விவகாரத்தில் சாதியை பார்க்கும்
மக்கள் அரசியலில் சாதி பார்க்காமல் தான் இருந்துவந்தனர். தமிழகத்தில் தன் பெயருக்கு
பின்னால் சாதி பெயரை பட்டப்பெயராக போட்டுக்கொள்வது 80 சதவிதம் இல்லாமல் இருந்தது. இந்திய
அரசியல்வாதிகளைப்போல் தமிழக அரசியல்வாதிகள் தன் பெயருக்கு பின்னால் சாதி போட்டுக்கொள்வதில்லை.
நிச்சயம் அதற்கு பெரியாரும், திராவிட இயக்கத்தவரும் தான் காரணம்.
தென்மாவட்டங்களில் இமானுவேல்சேகரன்,
முத்துராமலிங்கதேவர் சாதியை வளர்த்தார்கள் என்றால் வடமாவட்டங்களில் ராமசாமிபடையாச்சி
உட்பட பலர் சாதியை வளர்த்தார்கள். தென்மாநிலங்கள் அளவுக்கு அரசியலில் சாதி துவேஷம்
வடமாவட்டங்களில் இல்லை. ஒரு காலத்தில் வடமாவட்டங்கள் சாதி கலவர பகுதியாக இருந்த்து
காலப்போக்கில் அது மாறியது. வன்னியர் சங்கம் இடஒதுக்கீடு பிரச்சனைக்காக பெரும் போராட்டத்தை
முன்னெடுத்தபோது வடமாவட்டங்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக வன்னியர்கள் இருந்தாலும்
ராமதாஸ்க்கு பிரச்சனையின் அடிப்படையில் ஆதரவு தந்தார்களே தவிர அரசியல் ரீதியாக ஆதரவு
தரவில்லை. வன்னியர்கள் மட்டுமல்ல முதலியார்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும்மே தங்களது
சாதிக்கட்சிகளுக்கு பிரச்சனையின் அடிப்படையில் ஆதரவு தந்தார்களே தவிர அரசியல் ரீதியாக
ஆதரவு தந்தனர். இதனாலே அதிகாரம் வேண்டி கூட்டணிகளுக்கு போனார். கூட்டணி மாறியதால் மாபெரும்
சரிவுக்கு பின் சாதிய வன்மத்தை மீண்டும் உருவாக்கினார். இதற்கு ராமதாஸ் மட்டும் காரணமல்ல.
பிற அரசியல் கட்சிகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் ஒரு காரணம்.
கடந்த காலங்களை போல் இப்போது
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் பெருமளவு குறைந்துள்ளது. இதற்கு தாழ்த்தப்பட்ட
மக்களின் விழிப்புணர்வு, அரசியல் கட்சிகளின் ஆதரவு, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சட்ட
பாதுகாப்பு, எழுத்துலகம் மற்றும் அறிவுசார் கருத்தாளர்களின் ஆதரவு போன்றவையே காரணம். ஆனாலும்........
தாழ்த்தப்பட்ட சாதியிலும் அதிகாரத்தை
தவறாக பயன்படுத்துபவர்கள் உள்ளனர். பிற சாதியினரின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள
வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை தங்களுக்கு பிடிக்காத பிற சாதியினர் மீது ஏவுவது, சாதியை
காட்டி மிரட்டுவது, சாதியை ஒழிக்க மற்ற சாதி பெண்களை கற்பழி எனச்சொல்வது பிற சாதியினரை
கொந்தளிக்க வைத்தது. சமூகத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி வந்தன. இதனை கண்டிக்க வேண்டிய
அரசியல் கட்சி தலைவர்கள் கண்டிப்பதில்லை. ஓட்டுக்காக அவர்களின் தவறுகளை கண்டும் காணாமல்
போனது பிற சாதி மக்களை கோபம் கொள்ள வைத்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பிற சாதியினர்
கோபம் கொண்டாலும் எதிர்க்க முடியாமல் இருந்தனர். வடமாவட்டங்களில் பெரும் சாதியாக உள்ள
வன்னியர்கள் இதனை எதிர்த்தபோது கலவரங்களாக மாறின. அப்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
கிடைத்த பாதுகாப்பு, அதிகார வர்கத்தின் கைகள் தங்களுக்காக நீளவில்லை என்பதால் தங்களுக்கான
பாதுகாப்பு, தனக்கான அரசியல் அதிகாரம் தேவை என்பதாலே ராமதாஸ் பின்னால் அணி திரண்டுள்ளான்.
கடந்த காலங்களில் பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவு தந்தவன் தற்போது என் சாதிக்காரன்
அதிகாரத்துக்கு வரட்டும் என்னை அவன் காப்பான் என்கிறான். இது ஆபத்தானது.
இது மரமாக வளரும் முன் வெட்டி
எறியவேண்டும். சாதி கட்சிகளுக்கு அதிகாரம் போவது என்பது தமிழகத்தை
அமைதி மாநிலமாகயில்லாமல் கலவர மாநிலமாக மாற்றிவிடும். அதிகாரத்துக்கு போட்டிப்போடும்
திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சாதி கட்சிகளை வளர விடாமல் தவறுகளின்
அடிப்படையில் மேல்சாதி, கீழ்சாதி என பார்க்காமல் நடவடிக்கை
எடுக்க வேண்டும். வாக்குக்காக ஒரு சாதியை தூக்கி விடுவது மற்றொரு சாதியை கைவிடுவது
என்பது தொடர்ந்தால் சாதிகளின் ஆதிக்கம் தேர்தல்களில் மட்டுமல்ல சமூகத்திலும் அதிகமாகிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக