செவ்வாய், டிசம்பர் 08, 2015

காப்பாற்ற வராத அரசாங்கத்தை மறக்காதீர்கள் மக்களே...............






நூற்றுக்கணக்கான உயிர்கள், ஆயிரக்கணக்கான வீடுகள், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் செய்யப்பட்ட பயிர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் அனைத்தும் அடித்துக்கொண்டு போய்விட்டது. தமிழகத்தின் தலைநகரம் சென்னை, அதன் அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளுவர், கொஞ்சம் தொலைவில் உள்ள கடலூர் மாவட்டங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. இங்கு வாழும் லட்ச கணக்கான மக்கள் நிர்கதியாய் நிற்கிறார்கள்.

அதிகமான மழை பெய்ததால் இந்த பேரிழப்பு என ஒற்றை வார்த்தையில் விவகாரத்தை முடிக்க பார்க்கிறார் சென்னையில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கும் தமிழக முதல்வராகவுள்ள ஜெ.

இந்த இழப்பை நாம் தடுத்திருக்க முடியும் ஆனால் தமிழகரசு இதனை கண்டுக்கொள்ளவில்லை என குற்றம்சாட்டுகிறார்கள் தென்னிந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இஸ்ரோ போன்ற மையங்களின் உயர் அதிகாரிகள். கடந்த அக்டோபர் மாதம்மே, டிசம்பர் முதல்வாரத்தில் மழை கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை செய்ததாக கூறுகிறார்கள். அதற்கான கடிதங்களும் வெளியாகியுள்ளது. இதற்கு எந்த பதிலையும் இதுவரை தமிழகரசின் சார்பில் வெளியிடப்படவில்லை. ஆனால், என் வரிப்பணம் எங்கே சென்றது என கேள்வி எழுப்பிய நடிகர் கமல்ஹாசனுக்கு, மறுநாளே 6 பக்க அளவுக்கு மறுப்பு தெரிவிக்கிறார் ( மறுப்பு என்பதை விட மிரட்டுகிறார் ) முன்னால் முதல்வரும், ஜெ அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் உள்ள ஓ.பி.எஸ்.


மழை காலத்தில் தான் மீட்பு பணிகளில் ஈடுபட முடியவில்லை, நிவாரணப்பணிகளில் ஈடுபடமுடியாது என்றால் மழை விட்டபின் எந்தளவுக்கு அரசின் சார்பில் மீட்புப்பணி, நிவாரணப்பணி நடைபெற்றது என்றால் தன்னார்வலர்கள் செய்த பணிகளில் 30 சதவித பணியை கூட அரசாங்கம் செய்யவில்லை. தன்னார்வலர்கள் செய்ய முடியாத பணியான மின்சாரம் சீரமைப்பபை அரசாங்கம் செய்துள்ளது அதை தாண்டி ஒன்றும் பெரியதாக செய்யவில்லை. ஏதாவது செய்துள்ளதா என அறிய முயன்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதை குற்றம் சொல்ல வேண்டும்மே என சொல்லவில்லை. அரசின் துறைகள் தங்களை தேடி வரவில்லை உதவவில்லை என்பதால் தான் மூத்த அமைச்சர் நத்தம் விஸ்வாதன், சென்னை மேயர் சைதை.துரைசாமி, அதிமுக மா.செ வெற்றிவேலை அடித்து உதைத்து மக்கள் அனுப்பினர். வசைபேச்சுக்கு சொந்தக்கார அமைச்சரான வளர்மதியை விரட்டி அடிக்கிறார்கள் மக்கள். அப்படியும் நாங்கள் அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என அறிக்கை தருகிறார் ஜெயலலிதா.

அவரின் அடிமை கூட்டங்கள், தன்னார்வலர்கள் செய்து வரும் உதவி பொருட்களில் தங்கள் தலைவியான ஜெவின் புகைப்படத்தை அச்சடித்து கொண்டு வந்து ஒட்டுகிறார்கள், சென்னையில் உள்ள அதிமுக கவுன்சிலர்கள் தங்களுக்கு பங்கு வேண்டும் என கேட்டு மிரட்டுகிறார்கள். கடலூரில் உதவி செய்ய போன வண்டிகளை மடக்கி தங்களிடம் பொருட்களை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என ஆளும்கட்சியான அதிமுக, பாமக, அதிமுக கூட்டணியில் உள்ள வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியின் குண்டர்கள் மிரட்டுகிறார்கள், அடிக்கிறார்கள் என காவல்நிலையம் போய் புகார் கூறி பாதுகாப்புக்கு வாங்கள் என சில தன்னார்வலர்கள் கேட்டபோது, பல காவல்நிலையங்களில் தலைக்கு ஆயிரம் தந்தால் வந்து பாதுகாப்பு தருகிறோம் எனச்சொல்லியுள்ளார்கள். இதுதான் அரசு இயந்திரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உதவி செய்ய வரும் தன்னார்வலர்கள், குழுக்களுக்கு தரும் பாதுகாப்பு.

இந்த நிகழ்வின் மூலம் அறியமுடிந்தது, ஜெயலலிதா அரசாங்கத்திடம் ஒருங்கிணைப்பு கிடையாது, அரசு ஊழியர்களை வேலை வாங்க தெரியாதவர் ஜெயலலிதா என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனை தென்மண்டல இராணுவ அதிகாரியே வேதனையும் வெளிப்படையாக பேசியுள்ளார். இராணுவம், பேரிடர் மீட்புக்குழு சென்னை வந்து காத்திருக்கிறது. எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் எனச்சொல்ல, வழிக்காட்டக்கூட மாநில அரசின் அதிகாரிகள் வரவில்லை. 10 மணி நேரம் காக்க வைக்கப்பட்டோம் என்றார்.

இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டபின்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகள் ஒரு முதல்வரிடம் இருந்து வரவேண்டும். வரவில்லை. ஆனால் மியாட் மருத்துவமனையில் அந்த மருத்துவமனையின் அலட்சியத்தால் மருத்துவமனையின் உயர் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுயிருந்த 18 பேர் இறந்த விவகாரத்தில், அமைச்சர்கள், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், அந்த மருத்துவமனைக்கு சாதகமாக பேசிய பேச்சு இன்னமும் ஜீரணித்துக்கொள்ள முடியாத பேச்சு.

செயலற்ற ஆட்சியை கேள்விக்கேட்டால், அதிமுகவினரின் அராஜகத்தை எதிர்த்து சமூகவளைத்தளங்களில் எழுதினால், பாய்ந்தோடி போய் ஆளைபிடித்து வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறது ஜெயலலிதாவின் செல்லப்பிள்கைளான காக்கி அடிமைகள்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் கூட, மக்கள் கதறலை பொருட்படுத்தாமல் இந்த அவலத்துக்கு காரணம் ஆட்சியில் உள்ள ஜெயலலிதா தான் காரணம் என்பதை மறுத்து, ஆட்சியில் உள்ள ஜெவை மயிர் அளவுக்கு கூட விமர்சிக்க மறுத்து, நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும், ஆட்சியில் உள்ள மம்மி டம்மியாக்க கூடாது என நடுநிலை வேடம் போட்டுக்கொண்டு கண்ணும் கருத்துமாக வேலை செய்கிறார்கள்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு செய்யவேண்டிய அடிப்படை உதவிகள் செய்யக்கூட தாமதம் செய்யும் ஜெயலலிதா அரசாங்கத்தின் இந்த செயல்பாடு அதிர்ச்சியை தருகிறது. வரும் உதவிகளை பெறவும் மறுக்கிறது. கர்நாடகா அரசாங்கம், 5 கோடி ரூபாய் தமிழகத்துக்கு நிவாரண நிதியாக அறிவித்தார். அந்த தொகையை தமிழகரசிடம் தர, தமிழகரசின் வங்கி கணக்கு எண் கேட்டு கர்நாடகா நிதித்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது, யாரும்மே எண் தரவில்லை என வெளிப்படையாக பேட்டி தந்தார்கள். ஏன் இத்தனை பாரபட்சம். இது எல்லாருக்கும் தெரிந்தது தான். 


கடந்த 1991-96 காலக்கட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில், கடந்த 2014ல் கீழ்நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து, முதல்வர் பதவியை பறித்து கர்நாடகா சிறையில் அடைத்து வைத்தது. அதன்பின் உயர்நீதிமன்றத்தில் வாங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் மீண்டும் முதல்வரானார் ஜெ. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா நடத்திவருகிறது. அதனாலே தனது தனிப்பட்ட ஈகோவால் கர்நாடகா அரசு தரும் நிதியை வாங்க மறுக்கிறார் முதல்வராகவுள்ள ஜெ.

தனிப்பட்ட ஈகோவை ஆட்சி நிர்வாகத்தில் காட்டும் முதல்வர் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதன்படி ஜெ தண்டிக்கப்பட வேண்டியவர். சட்டம் தண்டிக்காமல் விடலாம். மக்கள் மன்றத்தில் நிச்சயம் தண்டிக்கப்படுவார். ஏன் எனில் ஓட்டு என்கிற ஆயுதம் பாதிக்கப்பட்ட, நிர்கதியாய் நிற்கும் மக்களிடம் தான் உள்ளது.  

2 கருத்துகள்:

  1. பிரமாதம்! புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள்.
    ஆனால் நம் ஜனங்கள் தேர்தல் சமயத்தில் இவற்றை எல்லாம் மறந்து விடுவார்களே! இலவசம் என்ற மாயையில் விழுந்து விடுவார்களே. வேதனையிலும் வேதனை.

    பதிலளிநீக்கு
  2. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு