செவ்வாய், டிசம்பர் 06, 2016

தயக்கத்தை உடை......... தலைநிமிர்....... பகுதி 2டந்த வார பகுதியில் பகுதி - 1 கீழ்க்கண்ட கேள்விகளோடு அந்த கட்டுரையை முடித்திருந்தேன்.

நகர்ப்புற இளைஞர்களை விட கிராமப்புற இளைஞர்கள் தகுதி குறைவானவர்களா?, பொறியியல் படித்த கிராமப்புற இளைஞர்கள் பெரும் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாததன் காரணம்மென்ன?, கிராமப்புற இளைஞர்கள் அதிக தயக்கத்தோடு நேர்காணலை சந்திப்பதற்கான காரணம் என்ன?, படித்த இளைஞர்களை எதை வைத்து நகரம் –கிராமம் என பிரிக்கிறார்கள்?. கிராமப்புற இளையோர்களின் தயக்கத்தை, பயத்தை போக்குவது எப்படி ?. கிராமப்புற இளைஞர்கள் சாதிக்கவே முடியாதா ?. இந்த கேள்விக்கான பதிலை பார்த்துவிடுவோம்..........

நகர்ப்புற இளைஞர்களை விட கிராமப்புற இளைஞர்கள் தகுதி குறைவானவர்களா?,

புற்றீசல் போல் இன்று கிராமத்துக்கு கிராமம் கல்லூரிகள் பெருகிவிட்டன. பொறியியல் கல்லூரிகளுக்கு மவுசு குறைந்துவிட்டது என்றதும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அதற்கும் இறங்கு முகம் என்றதும் இப்போது, கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. நகரம் – கிராமம் என நீக்கமற நிறைந்துள்ள கல்லூரிகளை தேர்வு செய்யும் போது, நகர்ப்புறத்தில் உள்ள இளைஞர்கள் மேற்படிப்புக்கு எது சிறந்தது என விசாரித்து போய் சேர்க்கிறார்கள், சேர்க்கப்படுகிறார்கள். அதற்கு பல வாய்ப்புகள் அவர்கள் முன்வுள்ளது. கிராமப்புறத்திலோ, நமக்கு பக்கத்திலேயே காலேஜ் வந்துடுச்சி என அங்கே சேர்க்கப்படுகிறார்கள்.

நகர்ப்புறங்களில் இயல்பிலேயே இருக்கும் உஷார் தன்மை அவர்களை கல்லூரிகளில் அதிகம் கற்க வைக்கிறது. கிராமப்புற மாணவர்களிடம் இருக்கும் நம்பகத்தன்மை அவர்களை கல்லூரியில் எது கற்று தந்தாலும் அதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்கிறது. வாத்தியார் பொய் சொல்லமாட்டார் என கிராமப்புறங்களில் ஓர் நம்பிக்கை. நகர்ப்புற கல்லூரிகள், தங்களது பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை திறமையானவர்களை கண்டறிந்து தேர்வு செய்கிறது, கிராமப்புறத்தை மையமாக வைத்து தொடங்கப்பட்ட கல்லூரிகள் திறமை குறைந்தவர்களை வைத்து பாடம் நடத்துகிறது.

இங்குயிருந்து தான் அதிகரிக்கிறது கிராமப்புற இளைஞர்களின் தயக்கம். இயல்பிலேயே தயக்கத்தோடு கல்லூரிக்கு வருபவனிடம் தயக்கத்தை, பயத்தை உடைக்கும் இடமாக கல்லூரிகள் இருப்பதில்லை. இங்கும் அவனை அழுத்தியே வைத்திருப்பது. அவன் படித்து முடித்ததும் வேலைக்கு எனச்செல்லும் போது அந்த தயக்கம் இன்னும் அதிகரிக்கிறது.

படித்த கிராமப்புற இளைஞர்கள் பெரும் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாததன் காரணம்மென்ன?, கிராமப்புற இளைஞர்கள் அதிக தயக்கத்தோடு நேர்காணலை ஏன் சந்திக்கிறார்கள் ?,

பெரும் நிறுவனத்தின் நேர்காணல்க்கு ஒரு நகர்ப்புற இளைஞனும், கிராமப்புற இளைஞனும் செல்லும்போது, நகர்ப்புற இளைஞனின் நடை, நுனி நாக்கு ஆங்கிலம் போன்றவற்றை கவனிக்கும் கிராமப்புற இளைஞன் நிலை குலைந்து போகிறான். நகர்ப்புற இளைஞனை காணும்போதே இவுங்களோட நாம எங்க போட்டிப்போடறது என மனதுக்குள் போராட தொடங்கிவிடுகிறார்கள். அந்த போராட்டம் தரும் பதட்டம் நேர்காணல் நடத்துபவரின் முன் வெளிப்பட்டுவிடுகிறது. இதுதான் அவர்களை பின்னுக்கு தள்ளிவிடுகிறது. பெரும் நிறுவனங்களில் முண்டாசுப்பட்டி போன்ற கிராமங்களில் இருந்து படித்தவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் போகுவதன் காரணம். அதோடு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், எனக்கு அ, ஆ கற்றவன் தான் வேண்டும். அது கற்காதவனை நான் ஏன் எடுக்க வேண்டும் என நினைக்கிறது.

படித்த இளைஞர்களை எதை வைத்து இவன் நகரம் – அவன் கிராமம் என பிரிக்கிறார்கள்?.

நடை, உடை, பேச்சு தான் ஒருவரை அடையாளப்படுத்துகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவுக்குள் பேன்ட் – சண்டை நுழைந்து, இன்று தமிழகத்தில் வேட்டி அணிந்தால் கிறுக்கனாக பார்க்கும் நிலை தான் இருக்கிறது. 2 நூற்றாண்டாக நாம் பேன்ட்-சட்டை அணிந்தாலும் நகர்ப்புறவாசிகள் அணியும் அந்த பேன்ட் சட்டைக்கும், கிராமப்புற பின்னணியில் வாழ்பவர்கள் போடும் பேன்ட் – சட்டைக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. பேன்ட் – சட்டை போட்டால் செருப்போ, சூவோ போடவேண்டும் என தெரியாத பாமர மக்கள் அதிகம் உள்ளது கிராமப்புறத்தில் தான். அப்படிப்பட்ட கிராமப்புற பின்னணியை கொண்டவர் கல்லூரிக்குள் நுழைந்தாலும், மேற்படிப்பு படித்துவிட்டு வேலைக்கு மெட்ரோ நகரங்களுக்குள் நுழைந்தாலும் அவனது ஆடை நேர்த்தி அவனை காட்டிக்கொடுத்துவிடுகிறது.

அதற்கடுத்து ஒருவருடைய பேச்சு. என்னதான் பெரிய படிப்பு படித்தாலும் நகர்புற இளைஞர்களின் மொழி உச்சரிப்புக்கும், கிராமப்புற இளைஞர்கள் மொழி உச்சரிப்புக்கும் பலமடங்கு வித்தியாசம் உண்டு. இதுதான் நகர்ப்புறம் – கிராமப்புறம் என அடையாளப்படுத்துகின்றன.
 

கிராமப்புற இளையோர்களின் தயக்கத்தை, பயத்தை போக்குவது எப்படி?. கிராமப்புற இளைஞர்கள் சாதிக்கவே முடியாதா ?.

பயம், தயக்கம் என்பது நகரம் – கிராமம் என இருதரப்புக்கும் இருக்கும். நகர்ப்புற இளையோர்கள் அதை அணுகுவதற்கு சிறு வயதில் இருந்தே, பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் வழியாக பழகிக்கொள்கிறார்கள். அந்த வாய்ப்பு கிராமப்புற இளையோர்களுக்கு குறைவு. முதல் கட்டுரையில் குறிப்பிட்டது போல, கிராமப்புற இளைஞன் இப்போதுதான் மேலே வருகிறான். எங்கே தவறு நடந்துவிடும்மோ என்ற பயத்திலேயே பயணம் செய்கிறான். நகர்ப்புற இளைஞன் தவறு நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் என செயல்படுகிறான் அவ்வளவு தான்.

தவறு என்பது திருத்தமுடியாததல்ல, தவறு செய்தால் தான் கற்றுக்கொள்ள முடியும். இதை கிராமப்புற இளையோர் அறிந்துக்கொண்டாலே வெகுவேகமாக நகர்ப்புற இளைஞர்களோடு போட்டிபோட முடியும்.

நகர்ப்புற இளைஞர்கள் சறுக்கினால் சோர்ந்துபோய்விடுவார்கள். கிராமப்புற இளைஞன் சறுக்கினால் கவலைப்படமாட்டான். அதற்கு உதாரணம் கூறி இந்த கட்டுரையை முடிக்கிறேன். கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் உள்ளது அந்த குக்கிராமம். 34 வயதான அந்த இளைஞனை 5 வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன். கல்லூரிக்கு சென்றும் சரியாக படிப்பு வரவில்லையென படிப்பை விட்டுவிட்டு பெங்களுருக்கு கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலைக்கு சென்றார். வேலை கத்துக்கொண்டுவந்தபோது, ஒரு தீபாவளிக்கு சொந்த ஊருக்கு அங்கிருந்து பைக்கில் வந்துக்கொண்டு இருந்தார். இரவு பயணம் ஊருக்கு மிக அருகில் வரும்போது எதிரே வந்த ஒரு லாரி மோதிவிட்டு போய்விட்டது. உடலெல்லாம் காயம், அதோடு அவரது இடது கால் முட்டிக்கு மேல் கட்டாகி துண்டாகி கீழே விழுந்தது. வலியால் கத்தி கூச்சல் போட்டும் இரவு நேரம் யாரும் அந்தப்பக்கம் வரவில்லை. அந்த வலியிலும், இரவில் தனது கால் கட்டானதை தேடி எடுத்து தன் அருகே வைத்துக்கொண்டார். கீழே விழுந்த தனது செல்போனை தேடி எடுத்து ஊரில் உள்ள குடும்பத்தார்க்கு போன் செய்து வரச்சொல்ல அவர்கள் வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். இருந்தும் நீண்ட நேரமானதால் காலை ஒன்று சேர்க்க முடியவில்லை. 6 மாதத்துக்கு மேலானது அவரது உடல் சீராக. ஒத்த காலை வைத்துக்கொண்டு என்ன செய்வது, உறவினர்கள் ஒதுக்கினார்கள் கலங்கவில்லை. ஒற்றைக்காலோடு மீண்டும் பெங்களுரூ பயணம், ஒற்றை காலோடு வேலை செய்ய கற்றுக்கொண்டார். வேலை, வேலை.......... ஊரில் வீடு கட்டினார். ஒரு தங்கைக்கு திருமணம் செய்து வைத்தார், தம்பியை படிக்கவைத்தார். இவரின் தன்னம்பிக்கையை பார்த்து பட்டதாரி பெண் காதலிக்க, ஒருகால்யில்லையே என தயங்கியவரை விடாப்பிடியாக காதலிக்க வைத்து திருமணம் செய்துக்கொண்டார். இதுதான் கிராமப்புற இளைஞனின் தன்னம்பிக்கை. மனதில் தைரியம் அதிகம் உள்ளவர்கள் கிராமப்புற இளைஞர்கள். அவர்களால் சாதிக்க முடியும். அதற்கு ஊக்கசக்தி தான் தேவை.

பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், கற்றோர் ஊக்குவித்தால் போதும் பெரும் சாதனைகளை செய்வார்கள் கிராமப்புற இளையோர்களும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக